Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!

டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!

  • PDF

தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர்.

ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. (இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிறார்கள்.

அதிலொன்றுதான் சச்சினின் இருபதாண்டு கிரிக்கெட் வாழ்க்கை. ஊடகங்கள் இதையே பல்வேறாக வியந்தோதி மாய்ந்து மாய்ந்து எழுதின, காட்டின. இந்த ஒளிவட்ட அத்தியாத்திற்கு ஏதாவது பேட்டி கொடுக்க வேண்டுமென்ற சடங்குப்படி சச்சின் சில வாக்கியங்களை கடமைக்காக உதிர்த்தார். அதிலொன்றும் புதுமையில்லை. “நான் மராட்டியன் என்பதற்கு பெருமைப்படுகிறேன், ஆனால் முதலில் நான் இந்தியன், மும்பை மாநகரம் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானது” இவைதான் நட்சத்திர நாயகன் உதிர்த்த தத்துவ முத்துக்கள். காலணாவுக்கு பிரயோசனமில்லாத இந்த வாக்கியங்களை பயங்கரமான அரசியல் சவடால்களாக ஊடகங்கள் கட்டியமைத்தன. அதற்கு உகந்த விதத்தில் காலாவதியான கிழட்டு நரி பால்தாக்கரே சில கருத்துக்களை சச்சினுக்கு எதிராக உதிர்த்தார்.

சச்சின் டென்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி“சச்சின் தேவையில்லாமல் ஆடுகளத்திலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார். மராட்டியர்களுக்கு சொந்தமான மும்பையை இந்தியர்களுக்கு என்று சொன்னதால் அவர் மராட்டிய இதயங்களில் ரன் அவுட்டாகி விட்டார். மும்பையை பெறுவதற்காக 105 மராட்டியர்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். அந்தப் போராட்டம் நடைபெறும்போது அவர் பிறக்கக்கூட இல்லை.” இவைதான் வேலைவெட்டியில்லாத கிழடு பால்தாக்கரே சொன்ன பதிலடி.

இதை வைத்து சச்சின் மதவெறி, இனவெறி அமைப்புகளுக்கு எதிராக பெரும் போர் நடத்துவது போன்று ஊடகங்கள் பில்டப் கொடுத்தன. இந்த பில்டப்பில் மாதவராஜூம் சரண்டராகி நாயகனுக்கு தாங்கமுடியாத பாராட்டு பத்திரங்களை அள்ளி வீசுகிறார். வேறு எந்தப் பதிவர்களெல்லாம் இந்த ஜோடனையில் மனதை பறிகொடுத்தார்களோ தெரியவில்லை. அது என்னவோ போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், நமக்கும் எல்லா பிரச்சினைகளிலும் மலையளவு வேறுபாடு இயல்பாகவே வருகிறது. போகட்டும். விசயத்திற்கு வருவோம்.

பால்தாக்கரேவின் சிவசேனா இயக்கம் தனது ‘வரலாற்றுக்’ கடமைகளை முடித்துவிட்டு, அதாவது இனவெறி, மதவெறிக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்து, இப்போது சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து அய்யோ பாவம் என நாதியற்று கிடக்கிறது. பிரிந்து போன மருமகன் ராஜ்தாக்கரே சம்சா விற்கும் பீகாரி மக்களை மிருகத்தனமாக அடித்து தான்தான் மராட்டியர்களின் சேம்பியன் என சில சில்லறைகளை வைத்து காட்டிக்கொண்டார். அதன் தொடர்ச்சிதான் சட்டசபையில் இந்தியில் பதவிப்பிராமணம் எடுத்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபுஆஷ்மியைத் தாக்கி ரகளை செய்தது.

வளர்த்த கடா மார்பில் பாய்வது ஒரு புறம் என்றால் எந்த இனவெறியை வைத்து அரசியல் ஆதாயம் செய்தோமோ அதையே மருமகப்பிள்ளை அப்பட்டமாக போட்டிக்கு செய்வதை தாக்கரேவால் தாங்கமுடியவில்லை. இனவாதம் மராட்டியத்தில் இனிமேலும் எடுபடாது என்றாலும் அதற்கும் போட்டி என வந்து விட்ட பிறகு தாக்கரேவும் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. இச்சூழலில்தான் டெண்டுல்கரின் ஒண்ணுமில்லாத விசயத்திற்கு தாக்கரே பதிலடி கொடுத்து தான்தான் மராட்டியர்களின் நாட்டாமை என காட்டுவதற்கு முயன்றார்.

70களில் மும்பையில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை முறியடிக்க காங்கிரசாலும், முதலாளிகளாலும் வளர்த்து விடப்பட்ட இனவெறி சிவசேனா இப்போது முதலாளிகளுக்கு தேவைப்படவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் தங்கள் செயல்பாடுகளால் முதலாளித்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்தகும் நிலைமைக்கு முன்னேறியிருக்கிறார்கள். இதுபோக  மராட்டிய மக்களும் பெரும்பான்மையாக இனவெறிக்கு  முன்பு போல ஆதரவு தருவதில்லை. இப்படி ஒரு சூழலில்தான் தாக்கரே எதாவது அவ்வப்போது பேசி நானும் உள்ளேன் ஐயா என்று காட்ட வேண்டியிருக்கிறது.

ஆனால் டெண்டுல்கரின் சூழலோ வேறுமாதிரி. கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தால் பிரபலமான அவரை முதலாளிகள் இந்திய அளவில் ஒருவெற்றிகரமான பிராண்டாக மாற்றி விட்டு ஆதாயம் பார்த்துவிட்டார்கள். சச்சினுக்கும் கிரிக்கெட் மூலம் வந்த வருவாயை விட விளம்பரங்கள் மூலம் வந்த வருவாய்தான் பல நூறு கோடிகள் இருக்கும். இப்படி தன்னை ஒரு பில்லியனராக மாற்றியது இந்திய அளவிலான சந்தை என்பதும் அவருக்கு புரியாத ஒன்றல்ல. அதனால்தான் தான் முதலில் இந்தியன் அப்புறம்தான் மாரட்டியன் என்று அவர் சொல்கிறார். அவரது இந்தியப் பற்றின் பின்னே ஒளிந்திருப்பது இந்தியாவின் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு.

காரணம் அவருக்கு மாபெரும் வருவாய் அளித்தது மராட்டிய இனமல்ல, இந்திய மக்கள். இந்திய அளவிலான புகழே அவரது பிராண்டு மதிப்பை பல மடங்கு உயர்த்தியது. இந்திய அளவிலான ரசிகர்களின் செல்வாக்கே சச்சினது மதிப்பை முதலாளிகளின் உலகத்தில் கொண்டு போய்சேர்த்தது. அவரது உடலில், உடையில் எல்லா பன்னாட்டு நிறுவனங்களது முத்திரையும் உள்ளன. அவர்   பெப்சிக்கும், அடிடாசுக்கும் மாய்ந்து மாய்ந்து போஸ் கொடுப்பதன் பொருள் என்ன?

மற்றபடி இந்த நாட்டின் ஜீவாதாரமான பிரச்சினைகள் எதற்கும் அவரிடமிருந்து ஒரு சொல் கூட அல்லது ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்ததில்லை. முக்கியமான பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட அவரது திருமணத்தின் வி.ஐ.பியே பால்தாக்கரேவின் குடும்பத்தினர்தான். அதற்கு முன்னர்தான் மும்பையில் பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று சிவசேனா பெரும் கலவரத்தை முடித்திருந்தது. அந்த அநீதிக்காக கோபம் கொண்டிருந்தால் தாக்கரேவை எப்படி தனது திருமணத்திற்கு அழைத்திருக்க முடியும்? அப்போது மட்டுமல்ல பாபர்மசூதி இடிப்பை பற்றியோ, குஜராத் இனப்படுகொலை பற்றியோ, அல்லது விதர்பாவில் கொத்து கொத்தாய் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பற்றிய இந்த இந்திய தேசபக்தர் ஒரு சொல் கூட சொல்லாதது மட்டுமல்ல அந்தக்காலங்களில் பன்னாட்டு முத்திரைகளுடன் கூடிய தனது உடையில் அகமதாபாத்திலும், மும்பையிலும் பவுண்டரி, சிக்சர்கள் அடித்து தனது நாயக இமேஜை கூட்டிக் கொண்டிருந்தார்.

இதுதான் டெண்டுல்கரின் தேசபக்தி எனும்போது அதை காறி உமிழ்வதை விடுத்து அவருக்கு புகழாரம் சூட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை. டெண்டுல்கர் தனது வருவாய்க்கு விசுவாசமாக இருக்கிறார். அது முதலாளிகளின் கைக்குள் இருக்கும் இந்தியாவின் தேசபக்தி. மாறாக இந்திய மக்களின் இரத்தமும், சதையுமாய் இருக்கும் இந்திய மக்களது வாழக்கையோடு தொடர்புள்ள தேசபக்தியல்ல.

இந்துமதவெறியை எதிர்த்து எத்தனை அமைப்புகள், தனிநபர்கள் போராடி வருகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் இல்லாத விளம்பரம் ஒரு வாக்கியத்தை சொன்ன சச்சினுக்கு கிடைக்கிறது என்றால் இந்த நாட்டில் இந்துமதவெறியர்கள் யாரும் வெல்ல முடியாது என்றே அர்த்தம். ஏற்கனவே தோற்றிருக்கும் தாக்கரேவுக்கு எதிராக மாபெரும் போராளியாய் டெண்டுல்கரை நிறுத்துவதிலிருந்தே ஊடகங்களின் யோக்கியதை தெரிகிறதல்லவா? ஊடகங்களுக்கும் விளம்பரங்களின் வழி வரும் வருவாய்க்கு சச்சினும் காரணாமாக இருக்கிறார் என்பதால் அப்படி தாங்கமுடியாத அளவிற்கு சச்சினே வெட்கப்படுமளவுக்கு ஊதிப்பெருக்குகிறார்கள்.

டெண்டுல்கரை வைத்துத்தான் இந்திய தேசபக்தி அளவிடப்படும் என்றால் இந்தியாவை எந்த ‘கடவுளாலும்’ காப்பாற்ற முடியாது.

 

http://www.vinavu.com/2009/11/18/sachin-tendulkar/

Last Updated on Wednesday, 18 November 2009 06:51