Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!

கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!

  • PDF

தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 16 அன்று கோவா மாநிலத்திலுள்ள முக்கியமான வர்த்தக நகரான மார்காவோவின் மையப் பகுதியில் இரு சக்கர வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்புக்குக் காரணமான சதிகாரர்கள் யார் என்பது இந்நேரம் தெரியாமல் போயிருந்தால், முசுலீம் தீவிரவாதிகளைக் குற்றஞ்சுமத்தி போலீசும்,தேசியப் பத்திரிகைகளும் "புலனாய்வு' நடத்தியிருப்பார்கள். கோவா சுற்றுலா மையம் என்பதால், இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பாகிஸ்தானின் சதி இது என மைய அரசும் சாமியாடியிருக்கும்.

எனினும், இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் ""விதி'' வேறு மாதிரி விளையாடிவிட்டது. அந்தக் குண்டு திடீரென வெடித்துவிட்டதால், அந்தக் குண்டைத் தமது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கடத்தி வந்த மால் குண்டா பாட்டீல், யோகேஷ் நாயக் என்ற இரு இளைஞர்களும் சம்பவம் நடந்த இடத்திலேயே படுகாயமடைந்து போலீசிடம் மாட்டிக் கொண்டனர். அந்த இரு இளைஞர்களும் சிகிச்சைப் பலனின்றி இறந்து போய்விட்டாலும், அவர்கள் இருவரும் ""சனாதன் சன்ஸ்தா'' என்ற இந்து மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியிருக்கிறது.

 

அந்த இளைஞர்கள் எதற்காகக் குண்டு வைக்க வந்தார்கள் என்பது குறித்துப் பல ஊகங்கள் கூறப்படுகின்றன. எனினும், இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதால், வேறு வழியின்றி அவ்வமைப்பின் ஆசிரமத்தைச் சோதனையிட்டுள்ள கோவா மற்றும் மகாராஷ்டிர மாநில போலீசார், அங்கு குண்டு தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சனாதன் சன்ஸ்தா, ஆசிரமம் என்ற பெயரில் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்திருப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், இச்சோதனையின்பொழுது, இக்கும்பல் கோவாவின் சங்கோலே நெடுஞ்சாலை வழியாக வெடிகுண்டுகளைக் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு, அக்குண்டுகள் வெடிப்பதற்கு முன்னதாகவே போலீசாரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

 

சனாதன் சன்ஸ்தா கோவாவை மையமாகக் கொண்டு இயங்கி வருவதோடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில நகரங்களிலும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதற்குக் கிளைகள் இருக்கின்றன; முசுலீம் வெறுப்பைக் கக்குவதற்காக தர்மசக்தி சேனா, இந்து ஜன ஜாக்ருதி சமிதி போன்ற சகோதர அமைப்புகளையும் நடத்தி வருகிறது. அறிவியல் அடிப்படையில் இந்து மதக் கருத்துக்களைப் போதிப்பதாக இந்த அமைப்பு கூறிவரும் பொய்யைப் பாமர மக்களைப் போலவே, புலனாய்வுப் போலீசும் இக்குண்டுவெடிப்பு நடைபெறும் வரை நம்பி வந்ததாகக் கூறப்படுவதுதான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது.

 

ஏனென்றால், கோவாவிற்கு அருகிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சில குண்டு வெடிப்புகளிலும், சில முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களிலும் சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்குப் பங்கு இருப்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிராவின் தானே நகரில் நடந்த ஒரு குண்டு வெடிப்புக்குப் பின், அம்மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப் படைப் பிரிவின் தலைவராக இருந்தவரும், கடந்த ஆண்டு முசுலீம் தீவீரவாதிகள் மும்பய் நகரைத் தாக்கியபொழுது, அவர்களுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டவருமான ஹேமந்த் கர்காரே சனாதன் சன்ஸ்தா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என கடந்த ஜூன் 2008லேயே அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.

 

கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிராவிலுள்ள மிரஜ் நகரில் முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடந்தது. முசுலீம்கள் மீது வெறுப்பை உமிழும் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, அவற்றை மிரஜ் எங்கும் விநியோகித்ததோடு, கடைகளை மூடச் சொல்லி ஒரு கும்பல் மிரட்டியதுதான் அக்கலவரத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்தது. அக்கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை கோவா குண்டு வெடிப்புக்குப் பின் முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ஆதாரங்களோடு அம்பலப்படுத்திச் செய்திகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, கோவா குண்டு வெடிப்பில் இறந்து போன மால் குண்டா பாட்டீல் மிரஜிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மற்றொரு நகரான சங்கிலியிலும் முசுலீம் எதிர்ப்புக் கலவரங்கள் நடந்தபோது, அந்நகரங்களில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் இப்பொழுது தெரிவித்துள்ளனர்.

 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தோஷ் பவார் என்றொரு நாடக இயக்குநர், மகாபாரதக் கதையை நவீன காலத்துக்கு ஏற்ப, ஒரு பீடா கடையை சொந்தமாக்கிக் கொள்ள இரண்டு நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் போடும் சண்டையாக மாற்றி, ""ஆம்ஹி பச்புடே'' என்ற பெயரில் நாடகமாக உருவாக்கியிருந்தார். இந்த நாடகத்தை நடத்தக் கூடாது என இந்து மதவெறி அமைப்புகள் அந்த இயக்குநரை மிரட்டி வந்தன. இதனையும் மீறி அந்நாடகம் மகாராஷ்டிராவின் தானேயிலும், வாஷியிலும் நடைபெற இருந்த சமயத்தில், அந் நாடகம் நடக்கவிருந்த இரண்டு அரங்குகளிலும் குண்டுகள் வெடித்தன. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நால்வரும் சனாதன் சன்ஸ்தாவின் சகோதர அமைப்பான இந்து ஜன ஜாக்ருதி சமிதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் குண்டு வைப்பதற்கான சகல வசதிகளையும் சனாதன் சன்ஸ்தா அமைப்புதான் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது என்பதும் ஏற்கெனவே மகாராஷ்டிரா போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இக்குண்டு வெடிப்புகளுக்கு முன்னதாக, பென் நகர நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மசூதியைக் குண்டு வைத்துத் தகர்க்க முயன்ற வழக்கிலும் இந்த நால்வருக்கும் தொடர்புண்டு என்பதும்; மகாராஷ்டிராவின் ரத்னகிரி பகுதியைச் சேர்ந்த ஒரு "இந்து'க் குடும்பம் கிறித்தவ மதத்திற்கு மாறியதற்காக, அவர்களது வீட்டில் குண்டு வைத்த வழக்கில் இந்த நான்கு இந்து பயங்கரவாதிகளுள் ஒருவனான மங்கேஷ் நிகம் என்பவனுக்குத் தொடர்பிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இக்கும்பல், பென் நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஒரு ஆற்றங்கரையிலும், சதாரா நகரிலும் ஜெலட்டின் குச்சிகள், குண்டுகளை வெடிக்கச் செய்வதற்குத் தேவையான மின்னணுச் சாதனங்களைப் பதுக்கி வைத்திருந்ததும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 2008இல் மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் மசூதிக்கு அருகே ஆர்.டி.எக்ஸ். இரகக் குண்டுகளை வெடிக்கச் செய்த பெண் துறவி பிரக்யா சிங்கிற்கும், சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்கும் இடையே ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முசுலீம் தீவிரவாத அமைப்புகள் குண்டு வெடிப்பு நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகப்பட்டாலே, குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் வாழும் ஏழை முசுலீம்களை போலீசு நிலையத்திற்கு இழுத்துப் போய், சட்டவிரோதக் காவலில் வைத்து விசாரிப்பதையும்; போதிய ஆதாரம் இல்லையென்றால் கூட, அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்பாவி முசுலீம் இளைஞர்கள் மீது பல்வேறு கருப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் போடுவதையும் எவ்விதத் தயக்கமுமின்றிச் செய்து வரும் அரசும் போலீசும், இக்குண்டு வெடிப்பு விவகாரத்தில் மிகவும் மென்மையாகவே நடந்து வருகின்றன.

 

சனாதன் சன்ஸ்தா பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்த பிறகும், அந்த அமைப்பைத் தடை செய்வதற்குப் போலீசும் அரசும் தயாராக இல்லை. சனாதன் சன்ஸ்தா அமைப்பு, தனக்குத் தேவையான வெடி மருந்துப் பொருட்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்துதான் கடத்தி வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.இன் சகோதர அமைப்பான பஜ்ரங் தள் மகாராஷ்டிராவிலுள்ள நாண்டேட் நகரில் நடத்திய குண்டு வெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருகிறது.

 

இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.க்கும் சனாதன் சன்ஸ்தாவுக்கும் இடையிலான உறவு பற்றி விசாரணை நடத்துவது குறித்து போலீசு அதிகாரிகள் பேசவே மறுக்கிறார்கள். மார்காவோ குண்டு வெடிப்பில் இறந்து போன இரண்டு இந்து தீவிரவாதிகளின் மீது வழக்கு போட்டுள்ள போலீசார், அவ்வமைப்பைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகள் மீது இதுவரை ஒரு பெட்டி கேஸைக்கூடப் பதியவில்லை.

 

இதுவொருபுறமிருக்க, கோவாவை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசில் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவாலிகர் குடும்பத்திற்கும் சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருவதும் தற்பொழுது நிரூபணமாகியிருக்கிறது. சுதின் தவாலிகரின் மனைவி ஜோதி தவாலிகர் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் பொறுப்பில் இருந்து வருவதை, அமைச்சரே இக்குண்டு வெடிப்புக்குப் பின் ஒப்புக் கொண்டுள்ளார். ஜோதி, நாடெங்கும் குண்டுவைப்பதற்கு ஆன செலவைத் தணிக்கை செய்து வந்தாரா, இல்லை ஆன்மீக அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைகளை எண்ணிக் கொண்டிருந் தாரா என்பதை போலீசார்தான் சொல்ல வேண்டும்.

 

மதச்சார்பின்மை பேசி வரும் காங்கிரசோ, சுதின் தவாலிகரைப் பதவி விலகும்படிக் கூற மறுத்து வருகிறது. அமைச்சரோ, சனாதன் சன்ஸ்தா அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் அம்பலமான பிறகும், அவ்வமைப்பு இந்து மதத்திற்காகவும், தேசிய கவுரவத்திற் காகவும் செயல்பட்டு வருவதாக நற்சான்றிதழ் அளித்துள்ளார். எனவே, போலீசார் நடத்தும் விசாரணை, பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்த கதையாக முடிந்து விடவும் வாய்ப்புண்டு.

 

முசுலீம் தீவிரவாத அமைப்புகள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருவதைப் போலவே, இந்து மதவெறி அமைப்புகளும் யோகா கற்றுக் கொடுக்கிறேன், மூச்சுப் பயிற்சி சொல்லிக் கொடுக்கிறேன் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு, பல்வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள்பிடிக்கும் வேலையைச் செய்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகள் முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களைத் தூண்டிவிட்டு நடத்தி, கும்பல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமின்றி, குண்டு வைத்துக் கொல்வது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன என்பதும் நிரூபணமாகி வருகிறது. குண்டு வைத்துப் பொதுமக்களைக் கொல்லும் முசுலீம் தீவிரவாதிகளைக் கருணையின்றித் தண்டிக்கக் கோரும் ""இந்து'' நடுத்தர வர்க்கம், குண்டு வைப்பது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்து மதவெறி பயங்கரவாதிகளையும் இரக்கமின்றித் தண்டிக்கக் கோர வேண்டும். அத்தகைய நடுநிலையான போராட்டங்கள் மூலம் மட்டும்தான், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருக்கும் இந்துமுசுலீம் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியும். ·

 

 செல்வம

 

Last Updated on Friday, 13 November 2009 06:58