Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

  • PDF

சமீப ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் வானுயர்ந்த கட்டிடங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. காங்கிரீட் காடுகளின் கட்டிடங்களுக்கு ரெடிமேடான காங்கிரீட் கலவையை சுமந்தவாறு செல்லும் லாரிகளை பலரும் பார்த்திருக்கலாம். எழிலான கட்டிடங்களை ரசிக்கும் நம் கண்களுக்கு இந்த லாரிகளின் ஓட்டுநர்கள் படும் இன்னல்கள் தெரியாது. உழைத்து தேய்ந்து வதங்கும் இந்த தொழிலாளர்களின் உழைப்பில்தான் பளபளக்கும் கட்டிடங்கள் வளருகின்றன.

சென்னை, கேளம்பாக்கத்தின் அருகில் இருக்கும் கிராமம் தையூர். இங்கு ரே மிக்ஸ் (Ray mix) எனும் காங்கிரீட் கலவை நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் முதலாளி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ். இவரும், இவரது இரண்டு சகோதரர்களும் பூந்தமல்லி, வல்லக்கோட்டை என மூன்று இடங்களில் காங்கிரீட் கலவை நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

சிவந்த கண்கள் கவனிக்கட்டும்தையூரில் இருக்கும் காங்கிரீட் கலவை நிறுவனத்தில் கலவையை தயார் செய்வதற்கு 80 தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஒரிசா, பீகாரைச் சேர்ந்தவர்கள். அங்கேயே தங்கி, உண்டு இரவு பகல் என  24 மணிநேர ஷிப்டை முடித்தால் அவர்களுக்கு கிடைக்கும் கூலி 250 ரூபாய். இப்படி குறைந்த கூலிக்கு கடுமுழைப்பு தேவைப்படும் வேலைகள் அனைத்திலும் இம்மாநில தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். இப்போது சென்னை முழுவதும் நிலைமை இதுதான்.

தயார் செய்யப்படும் காங்கீரிட் கலவையை லாரிகளில் கொண்டு செல்வதற்கு நாற்பது ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்களும் பகல், இரவு என 24 மணிநேர வேலை செய்யவேண்டும். ஊதியம் ரூ.550. இப்படி மாதத்தில் பதினைந்து நாட்கள் வேலைசெய்தால் சுமார் 7,500 ரூபாய் கிடைக்கும். இவர்களும் தினக்கூலி அடிப்படையில்தான் வேலை செய்கிறார்கள். மாதசம்பளம், பி.எஃப், காப்பீடு, மருத்துவம், இ.எஸ்.ஐ என எந்த உரிமைகளும் இவர்களுக்கில்லை. 24மணிநேர ஷிப்டில் இவர்கள் குறைந்தது பத்து லோடுகள் அடிக்கவேண்டும். ஒரு லோடின் விலை 20.000 ரூபாய். இதில் இலாபம் பாதிக்கு மேல் இருக்கும்.

காங்கிரீட் கலவையை தயார் செய்து மூன்று மணிநேரத்திற்குள் அது பயன்படுத்தப்பட வேண்டும். அந்நேரத்தை தாண்டிவிட்டால் அது காலாவதியான கலவையாகிவிடும். இதனால் ஓட்டுநர்கள் எவ்வளவு நெருக்கடியிலும் பதட்டத்திலும் வண்டிகளை ஓட்டவேண்டியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை மூன்று மணிநேரத்தை தாண்டிவிட்டால் அந்தக்கலவையை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அதில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி அதை மீண்டும் தயார் செய்வது முதலாளியின் தந்திரம். இப்படி தயாரிக்கப் படும் கலவையில் உண்மையான உறுதி இருக்காது. மேலும் காங்கிரீட் கலவையில் கூட சிமெண்டோடு கருங்கல் தூசி கலவையை கலந்து போர்ஜரி செய்வதும் பிரான்சிஸின் வழக்கம். இப்படிப்பட்ட மோசடிக் கலவைதான் இந்தக் கம்பெனியிலிருந்து கல்பாக்கம் அணுமின்நிலைய வேலைகளுக்கும், பல மேம்பாலங்களுக்கும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

நாற்பது ஓட்டுநர்களில் பாதிப்பேர் பிரான்சிஸின் ஊர் மற்றும் அவரது சாதியை ( நாடார்)  சேர்ந்தவர்கள். சாதிக்காரன் என்ற பெயரில் ஆட்களை ஊரிலிருந்து கொண்டு வந்து இறக்கி, அவர்களை மாடு போல வேலைவாங்குவது பொதுவில் எல்லா தமிழ் முதலாளிகளுக்கும் வழக்கம்தான். இதற்கு நாடார் முதலாளிகளும் விதிவிலக்கல்ல. மேலும் இந்த முதலாளி எல்லா தொழிலாளிகளையும் அநாகரீக மொழியில்தான் அதட்டி வேலைவாங்குவான். யாராவது தெரியாமல் தவறிழைத்தால் கூட உடனே அண்ணாநகரில் இருக்கும் நிறுவன அலுவலகத்திற்கு வரச்சொல்வது வழக்கம். அங்கே அந்த தொழிலாளிக்கு பெல்ட்டால் அடிகிடைக்கும். ஒரு தொழிலாளி அண்ணாநகருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றாலே பெரும்பீதி கிளம்பும்.

இத்தகைய அடக்குமுறை சிறையில் ஓட்டுநராக இருக்கும் தோழர் வெங்கட்ராமன் ஜேப்பியார் கல்லூரி ஓட்டுநர் போராட்டத்தில் வேலையிழந்து வந்தவர். இவர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஓட்டுநர் சங்க நிர்வாக குழுவில் இருப்பவர். பலநாட்கள் அந்த நாற்பது ஓட்டுநர்களிடமும் தொழிற்சங்கத்தின் அவசியத்தை புரியவைக்க போராடி வந்தார். ஆனால் பிரான்சிஸின் அடக்குமுறைக்கு அஞ்சிய தொழிலாளிகள் இந்த முயற்சிக்கு ஆதரவு தரவில்லை.

இறுதியில் முதலாளிக்கு தெரியாமல் இரகசியமாகவாவது தொழிற்சங்கத்தை கட்டலாம் என்றதும் பாதி ஓட்டுநர்கள் அரை மனதோடு முன்வந்தனர். இந்நிலையில் முதலாளியின் சுயசாதி, ஊரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் மூலமாக இந்த தொழிற்சங்க முயற்சி பிரான்சிஸ்ஸின் காதுகளுக்கு சென்றவுடனே, 24.10.09 அன்று நான்கு ஓட்டுநர்களை வேலைநீக்கம் செய்கிறான். அன்றுதான் சங்கம் ஆரம்பிப்பதாக இருந்தது. தொழிற்சங்கம் உதயமாகும் அன்றே முதலாளியின் காட்டுதர்பாரை காட்ட நினைத்தான் பிரான்சிஸ். ஆனால் இந்த அடக்குமுறை தொழிலாளர்களை அஞ்சி ஓடுமாறு செய்யவில்லை.

இதுநாள் வரையிலும் மந்தைகளைப்போல அடிமையாக இருந்த தொழிலாளர்கள் முதன்முறையாக சினம் கொண்டு இந்த அநீதியை தட்டிக் கேட்டனர். தன்னிடம் பெல்ட்டால் அடிபடும் மந்தைகள் இப்போது கூட்டமாக வந்து எதிர்த்துப் பேசுகிறதே என்று உறுமிய பிரான்சிஸ் மேலும் மொத்தம் 25 தொழிலாளிகளை பணிநீக்கம் செய்கிறான். மிச்சமுள்ள தொழிலாளிகள் பிரான்சிஸின் சாதி, சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டும் தொழிற்சங்க முயற்சிகளுக்கு முன்வரவில்லை.

இப்படி சனிக்கிழமை வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கத்தை முறையாக ஆரம்பித்து நிர்வாகக் குழுவை தெரிவு செய்து போராட முடிவு செய்கின்றனர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் இந்த சங்கத்தின் போராட்டத்தை முன்நின்று நடத்துகிறார்.

26.10.09 திங்களன்று நிறுவனத்தின் வாயிலில் மறியல் போராட்டம்.  அடாவடி முதலாளியின் கண் முன்னாலேயே நிறுவனத்தின் கதவுகளை இழுத்து மூடுகின்றனர் தொழிலாளர்கள். உள்ளே இருக்கும் வடமாநில தொழிலாளிகளோ பீதியில் உறைந்து போய் வேடிக்கை பார்க்கின்றனர்.

முதலாளியின் அழைப்பின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசு படை உடன் வருகிறது. மறியலில் வெற்றிவேல் செழியன் மற்றும் பு.ஜ.தொ.முவின் வாகன ஓட்டுநர் சங்கத்தின் ஐந்து தோழர்களும் அடக்கம். இவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கேயே வேலைபார்க்கும் ஓட்டுநர்கள். மறியல் என்பது தங்களது தொழிற்சங்க உரிமை என வாதிட்ட தொழிலாளர்களை சிலமணிநேர விவாதம், தள்ளுமுள்ளுக்குப் பின் இறுதியில் கைது செய்கிறது போலீசு.

மொத்தம் 21பேர் மீது 147, 294B,342, 352 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்திலும், சிறையிலும் தொழிலாளிகளிடம் அவர்களது சாதியைக் கேட்டபோது “நாங்கள் தொழிலாளிகள், எங்களுக்கு சாதி கிடையாது. சொல்லவும் மாட்டோம்” என்று அவர்கள் போராடி நிலைநாட்டியிருக்கின்றனர்.  தொழிலாளிகளை ஒன்றுபடுத்தும்  வலிமையான வர்க்க அடையாளம் இருக்கும் போது பிளவு படுத்தும் சாதி எதற்கு என்று பேசிய தொழிலாளிகளை  போலீசு, சிறை அதிகாரிகள் முதன் முறையாகப் பார்த்தார்கள்.  இறுதியில் சாதியில்லாமலே அவர்களுடைய பெயர்களைப் பதிந்தார்கள்.

சங்கத்தில் சேரத் தயங்கிய தொழிலாளிகள் பிரான்சிஸின் ஊரையும், சாதியையும் சேர்ந்தவர்கள். சங்கத்தில் சேர்ந்தவர்களுக்கோ சாதி மயக்கம் இல்லை. இந்த கைது, வழக்கு, சிறை இவற்றையெல்லாம்  தொழிலாளிகள் முன்னர் கண்டதில்லை. காணாத வரைதானே அச்சம். கண்டபின் முன்னிலும் வேகமாய் போராட முடிவு செய்திருக்கின்றனர். தற்போது இரண்டு நாட்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்திருக்கும் அந்த தொழிலாளிகள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து வருகின்றனர். பிரசுரம், சுவரொட்டி, தெருமுனைக்கூட்டம், மக்களிடம் பிரச்சாரம் என போராட்டம் சூடுபிடிக்கிறது. வேலையிழந்தாலும், வருமானமிழந்தாலும் இந்த தொழிலாளிகள் வர்க்க உணர்வு என்ற அற்புதத்தை உணர்ந்து பெற்றிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்வுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் வசந்தத்தை கொண்டுவரும்.

தமிழ் சினிமா பண்ணையாரைப் போல தொழிலாளிகளை அச்சுறுத்தி ஆதிக்கம் செய்து பிரான்சிஸ், தன் வாழ்நாளில் முதன்முறை அச்சத்தை அனுபவித்திருக்க வேண்டும். தற்போது தனது ஊர்க்கார தொழிலாளிகள், லைசன்சு இல்லாத கிளீனர்களை வைத்து சில லாரிகளை இயக்கி வருகிறான். வெகுவிரைவில் இந்த சாதி அபிமானத்தில் இருந்து அந்த தொழிலாளிகளும் விடுபடுவார்கள். சாதி அபிமானத்தைத் துறந்து ஏற்கனவே ஒருவர் சங்கத்தில் சேர்ந்து விட்டார். இனிவரும் நாட்களில் பிரான்சிஸின் தர்பாருக்கு முடிவுரை எழுதப்படும்.

தொழிற்சங்கம் ஆரம்பித்த அன்றே போராட்டம், கைது, சிறை என ஆகிவிட்ட போதிலும் அந்த தொழிலாளிகள் அஞ்சவில்லை. தொழிற்சங்கமாக இணைந்த பின்னர்தான் தங்களது பலத்தை மட்டுமின்றி, சுயமரியாதையையும்  தொழிலாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த வலிமைதான் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் வல்லமையை அவர்களுக்குத் தந்திருக்கிறது.

சாதி, மொழி, இனம் கடந்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையை, இந்தியிலும், ஒரியாவிலும், தமிழிலும் எழும்பவிருக்கும் போராட்ட முழக்கங்களை விரைவிலேயே அந்த முதலாளி கேட்கவேண்டியிருக்கும். மொழி புரியாவிட்டாலும் அந்த முழக்கங்களின் பொருள் முதலாளிக்கு நிச்சயம் புரியும். புரிய வைப்பார்கள் தொழிலாளர்கள்.

ஆனால் கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?

போராடும் தொழிலாளர்களுக்கு வினவு சார்பில்  புரட்சிகர வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

 

http://www.vinavu.com/2009/10/29/union-in-a-day/

Last Updated on Thursday, 29 October 2009 07:09