Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் அகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு

அகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு

  • PDF

"நாம் இங்கே (பிரான்ஸில்) மிருகங்களைப் போல நடத்தப்படுகிறோம். ஆப்கானிஸ்தானில் எனக்கு அழகான வீடு ஒன்று இருந்தது. இங்கே எந்த வசதியுமற்ற கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தம். தாலிபான்கள் எனது தந்தையும், சகோதரனையும் கொலைசெய்தனர். தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினேன்.

 

ஆப்கானிய அகதிகள் தொழுகை நடத்தும் மசூதியாக பயன்படுத்திய கூடாரத்தையும் பிரெஞ்சுப் போலீசார் நிர்மூலமாக்கினார்கள். வழிபாட்டு ஸ்தலத்தின் புனிதம் குறித்து பிரஸ்தாபித்த போது, இஸ்லாமிற்கு இங்கே இடமில்லை என்றார்கள். எனக்கு இது மிகுந்த மனவேதனையைக்கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் எமது குடும்பம் அமெரிக்க இராணுவத்துடன் நல்லுறவு பேணி வந்துள்ளது. மேற்குலகம் பற்றிய எனது பிரமைகள் இன்றோடு தகர்ந்து போயின." இவ்வாறு கூறினார் முஹமட் கூசி என்ற 20 வயது அகதி.

பிரான்சின் துறைமுக நகரமான "கலே" யின் அருகில் நூற்றுக்கணக்கான அகதிகள் அமைத்திருந்த தற்காலிக கூடார முகாம்களை பிரெஞ்சுப் பொலிஸ் அப்புறப்படுத்தியது. பிரித்தானியா செல்ல விரும்பும் அகதிகள் பிரெஞ்சுக்கரையோரம் காத்திருக்கின்றனர். கடலைக் கடக்கும் காலம் வரும் வரை ஜங்கிள்" என்றழைக்கப்படும் தற்காலிக கூடார முகாம்களில் தங்கியிருந்தனர். இந்த அகதிகளில் பெரும்பான்மையானோர் ஆப்கானியர்கள். இஸ்லாமியரின் புனிதப் பண்டிகையான ரமழான் நோன்பின் இறுதி நாளன்று போலிஸ் முற்றுகையிட்டது. முகாம் இருந்த சுவடே தெரியாமல் கூடாரங்கள் யாவும் நிர்மூலமாக்கப்பட்டன. 278 அகதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அரைவாசிப் பேர் பராயமடையாத சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் சுற்றிவளைக்கப்பட்டதால் யாரும் தப்பிச் செல்லமுடியவில்லை. சில நிமிடங்களுக்குள் அனைத்து அகதிகளும் கைதுசெய்யப்பட்டனர். பிடிபட்ட அகதிகள் அனைவரும் தாம் திருப்பியனுப்பப்படுவோம் என அஞ்சுகின்றனர்.

"பலர் இப்போதும் இங்கிலாந்து பாலும் தேனும் ஆறாக ஓடும் நாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று நையாண்டி செய்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர், கலே முற்றுகையில் பிடிபட்ட எந்தவொரு அகதிக்கும் அரசியல் தஞ்சம் வழங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரு சிலருக்கு தஞ்சம் வழங்குவதாகவும், மிகுதியை சுயவிருப்பின் பேரில் திருப்பியனுப்ப போவதாகவும் பிரெஞ்சு குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படையினரை அனுப்பி யுத்தத்தை தொடர துடிக்கும் மேற்குலக நாடுகள், தமது நாட்டினுள் அடைக்கலம் கோரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஆப்கானிஸ்தான் மீது குண்டுபோடுபவர்கள், அங்கிருந்து உயிர் தப்பி வரும் அகதிகளை விரட்டியடிக்கின்றனர். மேற்குலகின் மனிதாபிமான முகமூடி கிழிந்து, அதன் கோரமான சுயரூபம் வெளித் தெரிகின்றது.

கலே அகதி முகாம் நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே.

 

Last Updated on Saturday, 17 October 2009 12:49