Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் "ஜிண்டாலை விரட்டியடிப்போம்! சுற்றச்சூழலை பாதுகாப்போம்!" – ம.உ.பா.மை

"ஜிண்டாலை விரட்டியடிப்போம்! சுற்றச்சூழலை பாதுகாப்போம்!" – ம.உ.பா.மை

  • PDF

ஒரிசா மாநிலத்தின் இரும்புக் கனிமங்களை வரைமுறையின்றிச் சூறையாடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவரும் "ஜிண்டால்'' எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம்,

தமிழகத்தின் திருவண்ணாமலை அருகேயுள்ள கவுத்தி வேடியப்பன் மலையின் இரும்புக் கனிமங்களையும் சூறையாடக் கிளம்பியுள்ளது. ஏற்கெனவே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, மக்களின் எதிர்ப்பு காரணமாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓட்டுக்காக இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இத்திட்டம் தொடரப்படுமா, இல்லையா என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்காத போதிலும், திரைமறைவில் இத்திட்டத்தைச் செயல்படுத்த காய்களை நகர்த்தி வருகிறது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, வேடியப்பன் மலையின் 52 கிராமங்களில் வாழும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை விரட்டியடித்துவிட்டு, மரங்களையும் புதர்க்காடுகளையும் அழித்து, மலைகளை உடைத்து ஆண்டுக்கு 10 லட்சம் டன் இரும்புத் தாதுவை ஜிண்டால் நிறுவனம் அள்ளிச் செல்ல தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரியமாக இம்மலைப் பகுதியில் வாழும் மக்களின் எதிர்கால வாழ்வு பறிக்கப்படும். மேலும், மலைகளை உடைப்பதால் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகளில் புழுதி படிந்து பயிர்கள் நாசமாகி, சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். இரும்புத் தாதுவைப் பிரித்தெடுக்கும் ஆலைக் கழிவுகளால் இவ்வட்டாரமே நாசமாகும். ஒப்பந்தப்படி, சாத்தனூர் அணையின் நீர் இத்திட்டத்துக்குத் திருப்பிவிடப்பட்டால், இவ்வட்டாரத்தின் விவசாயமே பொய்த்துப் போய், விவசாயிகள் வேலையிழந்து வாழ்விழக்க நேரிடும். திருவண்ணாமலை நகருக்குக் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும்.

 

காத்திருக்கும் இப்பேரபாயத்தை விளக்கி வேடியப்பன் மலைக்கிராம மக்களிடம் பிரச்சாரம் செய்த ம.உ.பா. மையம், உலகமயமாக்கலின் கீழ் மாநிலத்தின் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் தொடரும் இத்தகைய சூறையாடலை எதிர்த்தும், சுற்றுச் சூழலை நாசமாக்கி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்தும், கடந்த 24.7.09 அன்று திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடியோசையென முழக்கங்கள் எதிரொலிக்க, ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வேடியப்பன் மலைக் கிராம மக்களும் வழக்குரைஞர்களும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் ஊக்கமுடன் பங்கேற்று நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், ஜிண்டால் நிறுவனத்தை விரட்டியடிக்கும் போராட்டத்துக்கு ப் புதுரத்தம் பாய்ச்சி, புதிய நம்பிக்கையை விதைப்பதாக அமைந்தது. — பு.ஜ. செய்தியாளர்.