Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வெடிவிபத்தல்ல, பச்சைப்படுகொலை

வெடிவிபத்தல்ல, பச்சைப்படுகொலை

  • PDF

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ஒன்றரை வயது குழந்தையோடு பெண்களும் பள்ளிச் சிறுவர்களும் கோரமாகக் கொல்லப்பட்ட துயரம் தாளாமல் மரண ஓலத்தில் துவண்டு கிடக்கிறது வடக்குப்பட்டி.

 

இறந்தவர்களில் 4 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. மற்றவர்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு வெந்து கரிக்கட்டையாகி கிடந்தனர். மாண்டவர் களைக் கட்டிப்பிடித்து அழுவதற்குக் கூட முடியாமல், உறவினர்கள் கதறியழுத காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையும் செங்கற்சுவரும் வெடித்துச் சிதறி தப்பியோடிவர்களைத் தாக்கியதால் தலை, கைகால்கள் என பிய்த்தெறியப்பட்டு பலர் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

துரைப்பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான இந்த வி.பி.எம். பட்டாசுத் தொழிற் சாலை, சிவகாசி பட்டாசுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பிரபலம் அடைந்துள்ளது. சாதாரண திருவிழா பட்டாசு மருந்து களுக்குப் பதிலாக, வீரியமிக்க அதிக ஒலியெ ழுப்பும் மருந்துகளைக் கொண்ட பட்டாசுகள் விதிமுறைகளை மீறி இங்கு தயாரிக்கப்படு கின்றன. தீபாவளி நெருங்குவதால், குறுகிய இடத்தில் இரவுபகலாக இங்கு பெருமளவுக்கு ப் பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாமல், குடிசைத் தொழில் போல பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

 

 வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், விவசாயிகள் வறுமை வேலையின்மையால் தத்தளிப்பதாலும் வடக்குப் பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வாழ்வளிப்பது இந்தப் பட்டாசு ஆலைதான். மக்களின் வறுமையைச் சாதகமாக்கிக் கொண்டு, எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி, இலாபவெறியோடு பட்டாசுகளை உற்பத்தி செய்து வந்துள்ளார், இந்த ஆலை முதலாளி. இதற்கு அதிகார வர்க்கமும் போலீசும் உரிய கப்பம் பெற்றுக் கொண்டு உடந்தையாக இருந்துள்ளன. எட்டு பெண்கள் மட்டுமின்றி, கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பள்ளிக்கூட மாணவர்கள் என்பதும், படுகாயமடைந்தவர்களில் கணிசமானோர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், சட்டமும் விதிகளும் எந்த அளவிற்கு இங்கே அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன என்பதற்குச் சாட்சியங்கள்.

 

வடக்குப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோரமான விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நடந்துள்ளது. சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியிலுள்ள கிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் கடந்த ஜூலை 20ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் கொல்லப்பட்டு 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சிவகாசியில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் 22 பேர் கொல்லப்பட்டு, 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்குப்பட்டி போலவே இங்கேயும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பரபரப்புச் செய்திகளும் விசாரணை நாடகங்களும் குறையவுமில்லை.

 

இப்பகுதிகளில், பாடுபட்டுப் பயிரிட்டாலும் உரியவிலை கிடைக்காமல் விவசாயிகள் போண்டியாவதால், வறுமையிலுள்ள விவசாயிகள், குழந்தைகள் உள்ளிட்டு தமது குடும்பத்தோடு வேறுவழியின்றி உயிருக்கே ஆபத்தான இத்தகைய தொழில்களில் ஈடுபடுகின்றனர். விபத்தும் உயிரிழப்புகளும் நடந்த பிறகும்கூட, ஊருக்கே சோறுபோடும் பட்டாசு ஆலையை மூடிவிடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர். விவசாயம் செய்ய வாய்ப்பு வசதிகளும் அரசாங்கத்தின் ஆதரவும் இருந்தால், இத்தகைய ஆபத்தான தொழில்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் அரசோ, ஏற்கெனவே விவசாயத்தைப் புறக்கணித்து வருவது போதாதென்று, விவசாயத்தை விட்டே விவசாயிகளை விரட்டியடிக்கும் தனியார்மயம் தாராளமயம்உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, பிழைக்க வழியின்றி விவசாயிகள் நாடோடிகளாக அலைவதும், பட்டாசு தயாரிப்பு, கல்குவாரி, பாதாள சாக்கடையில் மூழ்கி அடைப்புகளை நீக்குதல் முதலான பல ஆபத்தான வேலைகளை எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி செய்யுமாறு தள்ளப்படுவதும், விபத்துகளும் மரணங்களும் பெருகுவதும் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.

 

இந்த அடிப்படையான உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தொடரும் இத்தகைய விபத்துக்களைப் பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பதும், விதிமுறைகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கூப்பாடு போடுவதும், விசாரணை நாடகமாடுவதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமேயாகும். பிழைக்க வழியின்றி விவசாயிகளை வறுமைக்கும், ஆபத்தான தொழில்களுக்கும் தள்ளி உயிர்ப்பலி கேட்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதுதான், இத்தகைய கொடுமைகளுக்கு முடிவுகட்டக் கூடிய உண்மையான அரசியல் பணியாக, உண்மையான நிவாரணப் பணியாக இருக்க முடியும்.

 

-முத்தராசு

Last Updated on Wednesday, 02 September 2009 07:34