Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை, சி.பி.எம்மின் புதிய சித்தாந்தம்.

கொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை, சி.பி.எம்மின் புதிய சித்தாந்தம்.

  • PDF

ஊழல் கறைபடியாத கட்சியாகக் காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, இப்போது "ஊழலுக்கு உடந்தையாக இரு! இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று தனது கட்சி யினரையே மிரட்டத் தொடங்கி விட்டது.

கேரள முதல்வரும், கேரள மாநில சி.பி.எம். கட்சி நிறுவனர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான அச்சுதானந்தனை அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) விலிருந்து நீக்கியதன் மூலம் இப்புதிய கொள்கையைச் செயல்படுத்தவும் கிளம்பி விட்டது.

 

கேரளத்தில் சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியும், அக்கட்சியின் மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியும் பதவிக்காகவு ம், சி.பி.எம் கட்சியின் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அனுபவிக்கும் அதிகாரத்துக்காகவும் தீராத நாய் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பினாரயி விஜயன் மீதான லாவலின் ஊழல் விவகாரம் வீதிக்கு வந்து நாறத் தொடங்கியதும், இந்த கோஷ்டி மோதல் உக்கிரமடைந்தது.

 

அதென்ன லாவலின் ஊழல்? கேரளாவில் 1996 முதல் 2001 வரை சி.பி.எம். முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான "இடது முன்னணி' ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துடன் மூன்று நீர்மின் திட்டங்களைச் சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போட்டார். இதில் ரூ. 390 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரசு கட்சியினர் குற்றம் சாட்டினர். 2001 முதல் 2006 வரையிலான காங்கிரசு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அப்போதைய காங்கிரசு முதல்வரான உம்மன் சாண்டி, இந்த ஊழலை மையப் புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) விசாரிக்கக் கோரி நடவடிக்கை எடுத்தார். மிகத் தாமதமாக மையப் புலனாய்வுத்துறை இப்போதுதான் பினாரயி விஜயன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால், இப்போது காங்கிரசு கூட்டணிக்குப் பதிலாக, இடது முன்னணி ஆட்சியில் உள்ளது. (பார்க்க: பதிய ஜனநாயகம், மார்ச் 2009).

 

காங்கிரசு மற்றும் மையப் புலனாய்வுத்துறையின் குற்றச் சாட்டுகளுக்கு பினாரயி விஜயனோ, சி.பி.எம். தலைமையோ இன்றுவரை விளக்கமளிக்கவில்லை. "தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க மைய அரசு பயன்படுத்தும் இன்னொரு ஆயுதம்தான் மையப் புலனாய்வுத் துறை'' என்று சாடும் சி.பி.எம். கட்சித் தலைமை, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கமுடைய அவதூறுகள் என்று எதிர்வாதம் செய்கிறது.

 

ஆனால், கேரள மாநில அரசின் கணக்கு தணிக்கைத் துறை, இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநில அரசுக்கு ரூ. 390 கோடி நட்டமேற்பட்டுள்ளதாக தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கேரள மாநில அரசின் ஊழல் தடுப்பு கண் காணிப்புத் துறை, எட்டு உயரதிகாரிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவரங்களைக் கொண்ட அறிக்கையை அச்சுதானந்தன் கட்சித் தலைமையிடம் கொடுத்து பினாரயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். ஆனாலும் கட்சி மட்டத்தில் கூட விசாரணை நடத்த சி.பி.எம். தலைமை முன்வரவில்லை. காங்கிரசும் மையப் புலனாய்வுத் துறையும் அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு செய்கின்றன என்றால், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான அச்சுதானந்தன், பினாரயி விஜயன் மீது புகார் கொடுத்திருப்பதும் கூட வெறும் அவதூறுதானா என்று சி.பி.எம். கட்சிக்குள்ளேயே கேள்வி எழும்பத் தொடங்கிய பின்னரும் கட்சித் தலைமை இது பற்றி விசாரணை நடத்த முன்வரவில்லை.

 

மாறாக, கடந்த பிப்ரவரியில் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தைக் கூட்டிய கட்சித் தலைமை, பினாரயி விஜயனை ஆதரித்து, கட்சியைக் காப்பாற்ற சமரசமாகப் போகுமாறு அச்சுதானந்தன் கோஷ்டியை எச்சரித்தது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பினாரயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மற்றும் கேரள மாநில சி.பி.எம். செயலாளர் பொறுப்புகளிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை என்று கட்சித் தலைமை அறிவித்தது. இதன்படி, பினாரயி விஜயன் மீது மையப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்க அனுமதி தரக்கூடாது என்று கேரள மாநில ஆளுநருக்கு "இடதுமுன்னணி' அமைச்சரவை பரிந்துரை செய்தது.

 

 ஆனால் ஆளுநரோ, அமைச்சரவையின் பரிந்துரையையும் மீறி பினாரயி விஜயன் உள்ளிட்டு இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரின் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மையப் புலனாய்வுத் துறைக்கு அனுமதியளித்தார். இதைத்தான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஆளுநர் காங்கிரசு கட்சிக்காரர் போலச் செயல்படுகிறார் என்றும் சி.பி.எம் கட்சித் தலைமை சாடுகிறது. அமைச்சரவையின் பரிந்துரையை மீறி ஆளுநர் இப்படி அனுமதி வழங்க அதிகாரம் கிடையாது என்று சட்டவாதம் பேசுகிறதே தவிர, எவ்வித ஊழலிலும் ஈடுபடவில்லை என்று அக்கட்சி நியாயவாதம் பேசவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் ஆளுநர் அனுமதியளித்ததும், கேரளாவிலும் தமிழகத்திலும் சி.பி.எம். கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஆனால், கேரள முதல்வர் அச்சதானந்தனோ ஆளுநரின் செயலை நியாயப்படுத்திப் பேசினார்.

 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சியான காங்கிரசு, லாவலின் ஊழல் விவகாரத்தை முன்னிறுத்தி போலி கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. மறுபுறம், அச்சு கோஷ்டி பினாரயி விஜயனின் ஊழலை அம்பலப்படுத்தி வந்ததோடு, தேர்தலின்போது உள்குத்து வேலையிலும் இறங்கியது. ஏற்கெனவே மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகச் செயல்படுத்தி மக்கள் நலத்திட்டங்களைப் புறக்கணித்து வந்ததால், "இடது முன்ணனி' ஆட்சியின் மீது கேரள மக்கள் அதிருப்தியடைந்திருந்தனர். இதோடு லாவலின் ஊழல் விவகாரமும் அம்பலப்பட்டதால் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போன சி.பி.எம். கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை கண்டிராத படுதோல்வியைச் சந்தித்தது.

 

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு சி.பி.எம். கட்சிதான் காரணம் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பரதன். சி.பி.எம். கட்சியோ, கட்சிக்குள் நிலவும் கோஷ்டி சண்டைதான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று கண்டுபிடித்து, கோஷ்டி சண்டைக்கு முடிவு கட்ட கடந்த ஜூலை 11 12 தேதிகளில் மத்திய கமிட்டி கூட்டத்தைக் கூட்டி, கோஷ்டிச் சண்டைக்கு மூலகாரணமான அச்சுதானந்தனை அரசியல் தலைமைக் குழுவிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. அதேசமயம், அவர் மாநில முதல்வராகத் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அறிவித்தது. ஆனால், ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பினாரயி விஜயன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை; விசாரணையுமில்லை. இதன்மூலம் ஊழல் பெருச்சாளிகள் சி.பி.எம். கட்சியில் தலைவராகலாம் என்ற புதிய மரபை உருவாக்கியுள்ளது.

 

சி.பி.எம். கட்சியை கோடீசுவரக் கட்சியாக மாற்றியமைத்து சாதனை படைத்தவர் என்பதால், ஊழலை மூடிமறைத்து பினாரயி விஜயனை சி.பி.எம். கட்சித் தலைமை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறது. மேலும், அரசாங்க சலுகைகள், சன்மானங்களைப் பொறுக்கித் தின்பதிலும், ஊழலிலும் பிழைப்புவாதத்திலும் சீரழித்து ஏறத்தாழ எல்லா மாவட்டக் கமிட்டிகளையும் அவர் தனது பிடியில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், கேரளாவில் சி.பி.எம் கட்சியே கலகலத்துப் போய் விடும் என்பதால், கோஷ்டிச் சண்டைக்கு முடிவு கட்டுவது என்ற பெயரில் பினாரயி விஜயன் கோஷ்டியை கட்சித் தலைமை ஆதரிக்கிறது. தற்போது மையப் புலனாய்வுத் துறையின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக கேரள சி.பி.எம். கட்சி நடத்தி வரும் இயக்கத்தையொட்டி வசூலிக்கப்பட்ட நன்கொடையில் விஜயன் கோஷ்டி ஊழல் செய்துள்ளதாக கட்சிக்குள்ளேயே புகார்கள் எழுந்துள்ள போதிலும், சி.பி.எம். தலைமை அது பற்றி பெயரளவுக்குக் கூட விசாரிக்க முன்வராமல் நழுவிக் கொள்கிறது.

 

இன்னொருபுறம், சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளரான பிரகாஷ் கரத் மீது மத்தியக் கமிட்டியில் பெரும்பான்மையாக உள்ள மே.வங்க கோஷ்டி அதிருப்தியில் உள்ளது. எனவே தனது தலைமையைத் தக்க வைத்துக் கொண்டு மே.வங்க தோஷ்டியைப் பணிய வைக்க, கேரள மாநிலத்தவரான கரத்துக்கு, தனக்கு ஆதரவாக கேரள கோஷ்டியைத் திரட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவேதான், பினாரயி விஜயன் கோஷ்டியை கரத் வெளிப்படையாக ஆதரிக்கிறார்.

 

மறுபுறம், ஊழலை எதிர்க்கும் நியாயவாதியாகக் காட்டிக் கொண்டு அனுதாபம் தேடும் அச்சுதானந்தனுக்கு ஊழலை எதிர்க்கும் யோக்கியதையே கிடையாது. சி.பி.எம். கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான அவர், இத்தனை காலமும் சி.பி.எம்.மின் எல்லா வண்ண சந்தர்ப்பவாதங்களையும் ஆதரித்து நின்றவர்தான். பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நியாயவுரிமையை மறுத்து, குறுகிய இனவெறி அரசியல் நடத்தி ஆதாயம் தேடும் சி.பி.எம்.மின் படுபிற்போக்கான முதல்வர்தான் அவர். 1998இல் நடந்த கேரள மாநில மாநாட்டின் போது, பினாரயி விஜயனோடு கோஷ்டி கட்டிக் கொண்டு லாரன்ஸ் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களை அவர் ஓரங்கட்டினார். ராகவன், கௌரியம்மாள் முதலான மூத்த தலைவர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற துணை நின்றார். சி.பி.எம். கட்சியை கோடீசுவர கட்சியாக மாற்றியமைத்த பினாரயி விஜயனின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒத்தூதினார். குருவை விஞ்சிய சீடனாக பினாரயி விஜயன் இப்போது வளர்ந்து விட்டதால், அவரை எதிர்த்து கோஷ்டி கட்டிக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்கிறார்.

 

பினாரயி விஜயனின் ஊழலுக்கு ஒத்தூதும் கட்சித் தலைமையை எதிர்த்து அவர் கலகம் செய்யவோ, அல்லது தனிக்கட்சி தொடங்கவோ முன்வரவில்லை. மக்கள் முன் இந்த ஊழலை அம்பலப்படுத்தி, மக்களைத் திரட்டிப் போராடவும் அவர் தயாராக இல்லை. மாறாக, கட்சி முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறிக் கொண்டு அடக்கி வாசிக்கிறார்.

 

இந்நிலையில், அச்சு கோஷ்டி மீது அனுதாபம் காட்டுவதற்கோ, ஊழல் எதிர்ப்புப் போராளியாகக் கருதுவதற்கோ அடிப்படையே கிடையாது. ஊழலையும் பாசிச அடக்குமுறையையும் நியாயப்படுத்தக் கிளம்பிவிட்ட சி.பி.எம். கட்சியை உழைக்கும் மக்கள் புறக்கணித்து முடமாக்குவதைத் தவிர, இனி வேறு வழியும் கிடையாது.

 

· தனபால்

 

Last Updated on Saturday, 29 August 2009 06:29