Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலிகள் முற்போக்கான சட்டங்களையம், திட்டங்களையும் கொண்ட இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 2

புலிகள் முற்போக்கான சட்டங்களையம், திட்டங்களையும் கொண்ட இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 2

  • PDF

புலிகள் தமக்குள் சாதி பார்க்கவில்லை, ஆணாதிக்கத்தை கையாள்வதில்லை, முதலாளித்துவ உறவைப் பேணுவதில்லை, பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிப்பதில்லை, எனவே அதை அவர்கள் மேல் குற்றம்சாட்ட முடியாது. "யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது." இதுதான் யமுனாவின் "மார்க்சிய" ஆய்வு.

 

இதை நியாயப்படுத்த, இவரைப்போல் அரசியல் ஒழுக்கக்கேட்டையே அரசியலாகக் கொண்ட பச்சோந்தியான "ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி' யை துணைக்கு அழைக்கின்றார். சமூக எதார்த்தம் மீதான விமர்சன நடைமுறையில், மார்க்சியமல்லாத புலிப் பாசிச தேசியத்தை தொழுத ஒரு மார்க்சிய விரோதியான சிவத்தம்பியின் துணையுடன், தன் முற்போக்கு கட்டுரையைத் தொடங்குகின்றார். இப்படி அண்ணன் தம்பியாக சேர்ந்து புலியை முற்போக்காகக் காட்டி  பாதுகாக்க, கா.சிவத்தம்பியை கூட்டுக்கு அழைக்கின்றார். பாவம் கா.சிவத்தம்பி, "மாமனிதன்" பட்டத்தை எதிர்பார்த்து, கடைசிகாலத்தை புலி உச்சாடணம் செய்துகொண்டு கிடந்தவர். இதற்கு மேல் அவரின் "மார்க்சிய", எதார்த்தம், இயங்கிய சமூகம் மீது எந்த சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியது கிடையாது. இவர்களுடன் காலச்சுவடும், சேரனும் கூட்டுச் சேர்ந்தால், புலியின் மனிதவிரோத வரலாற்றை முற்போக்காக காட்டிவிடலாம். இந்தியாவின் முதுகு சொறிந்து கிடக்கும் இலக்கிய பிழைப்புவாதிகள் மூலம், விரும்பியவாறு எதையும் எப்படியும் திரித்துவிடலாம் என்று பலர் நினைக்கின்றனர். இதைத்தான் இன்று இக்கூட்டம் அரங்கேற்ற முனைகின்றனர். இதற்கு புலியெதிர்ப்பு பேசும் எதிர்தரப்பின் முதுகு சொறிவாளர்களை, தமக்கு ஏற்ப தொட்டுக்கொண்டு பயன்படுத்துகின்றனர்.   

  

யமுனா ராஜேந்திரன் முன்னிறுத்திய சாதிய ஆய்வு, விடுதலைப் புலிகள் யார்? என்று கேள்விக்கு பதிலளிப்பதில்லை. புலிகள் மேல், மக்களைச் சார்ந்து நிற்கின்ற நடைமுறை ரீதியான ஒரு விமர்சன முறையே இவர்களிடம் கிடையாது. புலிகள் யார்? இந்தக் கேள்விதான், புலியின் சாதிய யாழ் மேலாதிக்க கட்டுமானத்தை துலாபரமாக அம்பலமாக்குகின்றது. விடுதலைப் புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கமாக இருந்தால், அதன் தேசியக் கடமை என்ன? இதற்கு இவர்கள் யாரும் விமர்சன நடைமுறை ஊடாக பதிலளிப்பதில்லை. புலிக்கு வாலாட்டி நக்கியவர்கள். எதார்த்த நடைமுறை மீது விமர்சனம்  செய்ய தங்கள் பச்சோந்தித்தனமான நடைமுறையில், தங்களை ஒளித்துக் கொள்கின்றனர். புலிக்குப் பின், தாவிப் பதுங்கிக் கொள்கின்றனர். கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, இந்த "அறிவு" ஜென்மங்கள் செய்தது இதைத்தான்.

 

தேசிய விடுதலை என்பது என்ன? தேசத்தில் வாழும் மக்கள் மேலான சகல ஒடுக்குமுறைகளையும், குறிப்பாக நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளை களையப் போராடுவது தான் தேசியம். அதாவது குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவத்தை நிறுவுவதற்காக போராடுவது தான் தேசியம். இதற்கு வெளியில் தேசியத்துக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது.

 

இதையா புலிகள் செய்தார்கள்! இல்லையே. சிங்கள இன மேலாதிக்க ஒடுக்குமுறையையும், இதற்கு துணை நின்று இனத்தின் தேசியக் கூறுகளை அழிக்கும் ஏகாதிபத்தியத்தையும், எதிர்கொண்டு தேசியத்துக்காக போராடும் போதுதான், அது தேசியமாகும். நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளான சாதியம், ஆணாதிக்கம், குறுகிய பிரதேசவாதப் பிளவுகள், உற்பத்தி உறவுகள்.. என்று அனைத்தையும் சமூகத்தில் இருந்து களையமுனையாத தேசியம், என்றும் தேசியமேயல்ல. 

 

புலிகள் இதையா செய்தார்கள்? இல்லை. இதை செய்யாத புலிகள், அதை இறுகிய ஒரு வடிவில் பாசிசம் மூலம் பாதுகாத்த புலிகள், ஒரு தேசிய விடுதலை இயக்கமல்ல. யமுனா ராஜேந்திரன் சாதியத்தைப் பாதுகாக்க, புலிகளை தேசிய இயக்கமாக காட்டி கட்டமைத்த விமர்சன அடிப்படையே, இப்படித் தலைகீழாகத் தகர்ந்து போகின்றது.

 

புலிகளின் வர்க்க அரசியல் என்பது, தேசியமல்ல. மாறாக தரகு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்யும் வண்ணம் நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகளுடன் சமரசம் செய்து கொண்டு, தேசியத்தையே மறுத்தவர்கள் தான் புலிகள். தேசியத்தை கோரியவர்களையும், அந்த அரசியலையும் புலிகள் படுகொலை செய்தே அழித்தனர். இதன் மூலம் இயல்பாகவே பாசிசத்தையும் மாபியாத்தனத்தையும் தம் நடைமுறை சார்ந்த ஒரு அரசியல் கொள்கையாக்கினர். இந்த அடிப்படையில் இருந்துதான், அனைத்து நடைமுறைகளும்;, சட்டங்களும் உருவாக்கபட்டது.

 

புலிகளின் சட்டங்களோ சடங்குத்தனமாவை. புலிகளின் திட்டத்தைப் போன்றது. புலியின் திட்டமோ  "சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்கின்றது. நாளை யமுனா இதைக்காட்டி புலியை "மார்க்சிய" இயக்கம் என்றால், நாம் வாயைப் பிளந்து கேட்க வேண்டும் என்று நினைக்கின்றார்.

 

புலியை முற்போக்காக நியாயப்படுத்த புலியின் சட்டங்களைக் காட்டுகின்றார்.  "எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரையிலும் சாதி-நிலம்-பெண்ணொடுக்குமுறை தொடர்பாக உள்ளுர் மத்தியஸ்த குழுக்களின் உதவியுடன் வழக்குகளைக் கவனித்து வந்த விடுதலைப் புலிகள், 1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக நெறிகளையும் உருவாக்குகிறார்கள். சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள்" இதன் மூலம், புலிகள் சாதி பார்ப்பதில்லை என்று, எமக்கு நிறுவிக் காட்ட முனைகின்றார் யமுனா.

 

இதையொத்த புலிகளின் திட்டம் "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும் ஆட்சியாக அமையும்" என்றவர்கள் தான் புலிகள்;. மேலும் அதில் "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல்முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் விட்டார்களா இல்லை, "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்றார்கள். ஆனால் உண்மையில் இதை கோரியவர்களை துரோகி என்றவர்கள் புலிகள். ஏன் படுகொலை செய்தனர். இப்படி புலிகளின் சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றி பிழைக்க போடப்பட்டவைதான்;. அதைத்தான் யமுனா, இன்று தூக்கிக்காட்டி முற்போக்கு என்கின்றார். 

 

இவரைப்போல் புலியின் வலது பாசிசத்தை நியாயப்படுத்த பாலசிங்கம் 'தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் பாலசிங்கம் நியாயப்படுத்தினார்." என்று, அவரின் மனைவி அடல் பாலசிங்கம் தெளிவாகவே குறிப்பிடுகின்றார். புலித் திட்டங்கள், சட்டங்கள் உண்மையானவையல்ல என்று, பாலசிங்கம் சுயவாக்கு மூலம் அளிப்பதைப் பாருங்கள். எம்.ஜி.ஆர் பற்றி எழுதிய போது "நீங்கள் ஏழைகளின் துயர்துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்" என்றார்.

 

இப்படி எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்துக் காட்டி, மக்களை வாழ்வில் ஏமாற்றினார். நாங்கள் போராட்டத்தில் நடித்து, நடைமுறையில் ஏமாற்றுகின்றோம் என்கின்றார். இப்படித்தான் புலிகள் காலகாலமாக மக்களை ஏமாற்றினர். அதை தூக்கிவைத்து, யமுனா அதோ பார் நட்சத்திரம் என்று கூறி, குழந்தைக்கு உணவூட்ட முனைகின்றார். இப்படி எழுதினால் அவருக்கு பணம் கிடைக்கும். எழுத்துக்கு பணம் வாங்கி எழுதுபவராச்சே. ஒரு கொள்கைக்காக எழுதுபவரல்ல அவர். புலிகளின் சட்டங்கள், திட்டங்கள் இது எப்படியிருந்தாலும், அது எழுதி ஏமற்றுபவர்களுக்கு மட்டும் உதவும். நடைமுறையில் உள்ளவர்களுக்கு அல்ல.

 

பி.இரயாகரன்
13.08.2009
தொடரும்

Last Updated on Friday, 14 August 2009 07:04