Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

  • PDF

இணையத்தில் சைபர்கிரைம் பற்றி தேடு பொறியில் வலைவிரித்தால் இலட்சக்கணக்கில் பக்கங்களும் படங்களும் கிடைக்கும். தமிழகத்தில் நடக்கும் குற்றங்களில் பீரோ புல்லிங், போலீசு-இன்கம்டாக்ஸ் வேடத்தில் வழிப்பறி, காக்காய் எச்சத்தை போட்டு குனியவைத்து பையை பறிப்பது, 500 நூறூரூபாய் தாளை போட்டு உங்களுடையதா என கவனத்தை திசைதிருப்பி வங்கியில் எடுத்த பணத்தை அபேஸ் பண்ணுவது,

கவரிங் நகை மோசடி, ரியல் எஸ்டேட் மோசடி, ஓடும் லாரியில் திருவது என எண்ணற்ற திருட்டு சாதனைகள் உள்ளன. இத்துடன் விபச்சாரம் என்பதும் செல்போன், மாருதி கார் வரை விரிந்திருக்கிறது. மற்றபடி செல்காமராவில் பாலியல் மோசடிகள் என்று தொழில்நுட்பம் உதவிய வகையில் வக்கிரங்கள் வகைதொகையில்லாமல் வளர்ந்திருக்கின்றன.

ஆக மண்ணில் நடக்கும் சாதாக் குற்றங்கள், பாலியல் வக்கிரங்களை மானிடரின் இணையத்தில் செய்தால் அதற்கென்று தனி மவுசா வந்து விடப்போகிறது? அப்படி ஒரு மவுசை உருவாக்குவதற்காக குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, பதிவுலகில் நொறுக்குத்தீனி எழுத்தில் கொடிகொட்டிப்பறக்கும் லக்கிலுக்கை, யுவகிருஷ்ணா என்ற பெயரில் மவுசின் உதவியால் சைபர் கிரைம் என்ற தொடரை எழுதப் பணித்திருக்கிறது. இதற்கு பதிவுலகில் பல அப்பாவிகள் வாழ்த்து வேறு தெரிவித்திருந்தார்கள். எல்லாம் நம்ம லக்கி சுஜாதா, சாருநிவேதிதா மாதிரி ஆகட்டும் என்ற நல்லெண்ணம்தான். நம்மைப் பொறுத்தவரை இதற்கு அனுதாபம் கூட தெரிவிப்பதற்கு லாயக்கானதில்லை.

குமுதம் ரிப்போர்ட்டர்: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

 

முதல் இரண்டு தொடரை படிக்கும்போதே லக்கியை கவனிக்க வேண்டுமென்று நினைத்து அப்புறம் சரி விட்டுத் தொலைப்போம் என்று மறந்த நேரத்தில் தனது பதினோராவது பாகத்தில் மீண்டும் பலான விசயத்தை  லக்கி தொட்டிருப்பதால் அதைப் பற்றி எழுதவில்லையென்றால் அந்த மகரகுழத்தாள் கூட மன்னிக்கமாட்டாள்!

லக்கியை வைத்து சைபர் கிரைமை எழுதுவதற்கு குமுதம் ஆசிரியர்களும், பின்னாளில் இந்த தொடரை நூலாக வெளியிட வாய்ப்புள்ள பதிப்பக ஓனரும் பாடத்திட்டத்தை தயார் செய்திருப்பார்கள் போலும். அதன்படி செக்ஸ் மேட்டரை தூக்கலாக காண்பித்து அதற்கு ஒரு ரிலீஃபாக பொருளாதார மோசடிகளையும் வைத்து எழுத தீர்மானித்திருப்பார்கள் என்று தெரிகிறது. இரண்டு தொடர்களுக்கு பின்னர் நைஜீரியா மோசடிகள் எல்லாம் எழுதப்பட்டாலும் அது வாசகர்களிடம் எடுபடவில்லையோ தெரியாது. பின்னே இலட்சத்திலும் கோடியிலும் நைஜீரியா பிளேடு கும்பலிடம் ஏமாறுவதற்கு கே.ஆர்.அதியமானது நண்பர்களாக இருக்கும் முதலாளிகளுக்குத்தானே வழியிருக்கிறது. எட்டு ரூபாய் ரிப்போர்ட்டரை வாங்கி மேயும் சாதரணர்களுக்கு அந்த போர்ஜரி வேலைகள் அவ்வளவு ருசிக்காது என்பதே அவர்களது பொருளாதார யதார்த்தம்.

ஆனால் இந்த சாதரணர்களை சுண்டி இழுக்கும் மகிமை சிட்டுகுருவி லேகிய சமாச்சாரங்களில்தானே இருக்கிறது? முதல் தொடரில் குற்றவாளிகள் என்றால் பிளேடு பக்கிரி போன்று இருக்கத் தேவையில்லை கோட்டு சூட்டு போட்டுக்கூட குற்றங்கள் செய்வார்கள் என்று ஆரம்பித்து அப்புறம் இணையத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் நடக்கும் மோசடிகளைப் பற்றி ஒரு பில்டப் கொடுத்துவிட்டு பிறகு சரியாக ‘மேட்டருக்கு’ வருகிறார் லக்கி.

திரிஷா குளியலறை சி.டி முதல் விசயம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டிய விசயத்தை முழு நீள நீலப்படமாக வருணிக்கிறார் லக்கி. வந்தாள், ஆடையைத் துறந்தாள், காமரா அலைகிறது என்று அந்த பொழிப்புரை படிப்பவர்களின் நாக்கில் அஜினோமோட்டோ கணக்காய் எச்சிலை ஊறவைத்து அப்புறம் திரிஷாவின் அம்மாவின் மறுப்பு அதுவும் அந்த வருண்ணைகளுக்கு பொருத்தமாய் திரிஷா அப்படி ஆடைகளை வீசமாட்டார், பாத்டப்பில்தான் குளிப்பார், அவரது பாடி லாங்குவேஜ் எனக்கு தெரியும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்கதிகளை கூறி எல்லாம் முடிந்த பிறகு இந்த சைபர் குற்றங்களை தடை செய்யமுடியாது, மார்ஃபிங் தொழில் நுட்பத்தில் தலையை வெட்டி மாற்றலாம் என எல்லாம் அட்சுரசுத்தமாய் காயத்ரி மந்திரம் போல ஓதப்படுகிறது. அப்புறம் இந்த சி.டி, மொபைல் வழியாக எப்படியெல்லாம் பரவியது என விளக்கி விட்டு அடுத்த மேட்டருக்கு போகிறார்.

அது சிம்பு, நயன்தாராவின் உதடைக் கவ்விய படமாம். அதையும் விலாவாரியாக விவரித்துவிட்டு நயன்தாரா இதைப் பற்றி சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டு முடித்து விட்டு மச்சான் சி.டிக்கு வருகிறார்.

இதில் நமீதா உடலமைப்பு கொண்ட பெண் இரு இளைஞர்களிடம் உறவு கொள்வது அரைமணி நேரம் ஓடுகிறதாம். நமீதா உடலமைப்பு ரசிகர்களுக்கு மனப்பாடமென்பதால் இந்த பெண்ணை நமீதா என்றே நம்புவார்கள் என கண்டுபிடிக்கிறார் லக்கி. இதைப்படித்து விட்டு உசிலம்பட்டியிலோ, மடிப்பாக்கத்திலோ மச்சான் சி.டி தேடி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்திருப்பார்கள் என்பது நிச்சயம். இத்தனைக்கும் பிறகும் இந்த படங்களை வெறிப்பதற்கு நாக்கை தொங்கப்போட்டு அலையும் ஆண்களின் வக்கிரத்தை மருந்துக்கு கூட லக்கி கண்டிக்கவில்லை. அவரது நோக்கமே இவற்றை அறியாதவருக்கு அறிமுகம் செய்வதுதான், போர்னோ கிரைமை அறிமுகம் செய்கிறோம் என்ற பெயரில் ஆவலை உண்டுபண்ணுவதுதான் எனும்போது என்ன செய்வது? மற்றபடி இதெல்லம் சைபர் குற்றங்கள் என அவர் பொத்தாம் பொதுவாக கண்டிக்காமல் இல்லை. தலைப்பில் ஒழுக்கம் குறித்த எச்சரிக்கை, உடலில் ஒழுக்க மீறலை ஆவலுடன் கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம். லக்கயின் இரட்டை வேடம் நன்றாகத்தான் பொருந்துகிறது!

இரண்டாவது தொடரில் செக்ஸ் ஆசைக்காக அலையும் மேட்டுகுடி ஆன்டிகள் என்று தூண்டில்போட்டு பணத்தை கறக்கும் கும்பலைப் பற்றி ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரித்து வாசகர்களை எச்சரிக்கிறார். படிப்பவர்கள் இது போன்ற தூண்டில் புழுக்களிடம் சிக்கக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். ஐயா லக்கி அவர்களே இந்த மேட்டுக்குடி நடுத்தர வயது பெண்களை பிரச்சினை இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் ஆண் மனதின் அலைபாயும் எண்ணங்களை பற்றி இலேசாகக் கூட இடித்துரைக்க தோணவில்லையே ஏன்?  பாலியல் ஒழுக்கத்தில் தனிப்பட்ட வாழ்வில் கற்பையும், பொதுவாழ்வில் விபச்சாரத்தையும் போற்றும் பார்ப்பனியத்தின் போலித்தனமான சமூக மதிப்பீடுகளை வைத்து காமத்தை இரகசிய உலகில் முடிவில்லாமல் ருசிக்க நினைக்கும் ஆண்களைப் பற்றியும் அவர்களது இரட்டை வேடத்தைப் பற்றியும் நோக்கினால்தானே இதில் பார்க்கும் குற்றவாளிகளை குறைந்த பட்சம் தமது பலவீனங்களை பரிசீலிக்க வைக்க முடியும்.

அதனால்தான் சொல்கிறோம் இந்த தொடர் சமூக ஆய்வல்ல, அதன் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் போர்னோதான் இதன் ஆன்மா. படிப்பவர்களின் மலிவான இச்சையை தொட்டுச் சொறிந்து பத்திரிகையின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் சீப்பான தந்திரம்தான் இந்த சைபர் கிரைம்.

இதன்பிறகு பொருளாதார மோசடிகள் பக்கம் திரும்பிய லக்கி திரும்பிய வேகத்திலேயே யூ டார்ன் அடித்து மீண்டும் போர்னோ பக்கம் வந்தரா, வரவழைக்கப்பட்டாரா என்பது தெரியாது. ஆனால் லக்கி என்ற சூப்பர் மார்க்கெட்டில் எது வேண்டுமென்று கோரினாலும் அந்த சூப்பர் மார்க்கட் திருப்தி செய்யும் என்ற உண்மை நமக்கு தெரியவேண்டும்.

பதினோராவது தொடரில் சபிதா பாபியின் படக்கதையை படம் பார்ப்பவர்களுக்குக் கூட போரடிக்காத விதத்தில் எழுதுகிறார் லக்கி. பாபி என்றால் இந்தியில் அண்ணியாம். இந்த இந்தி அண்ணி செக்சுக்காக ஏங்கி வீட்டுக்கு வரும் சேல்ஸ்மேன் முதலான இளைஞர்களை அனுபவிக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை காமிக்ஸ் படக்கதையாக வெளியிடப்பட்டு இந்தியாவில் பெரும் வெற்றி பெற்றதாம். உயிருள்ள போர்னோ படங்கள் மவுசைக் கிளிக்கினால் கொட்டும் நெட்டில் இந்த உயிரற்ற ஓவியங்கள் வெற்றி பெற்றது எப்படி என்ற ‘சமூக ஆய்வை’ லக்கி அருவருப்பின்றி விளக்குகிறார்.

நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.

போர்னோ தளங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு தடை இருப்பதால் வெளிநாடுகளில் வைத்து நடத்தப்படுகிறதாம். டாக்டர் பிரகாஷ் புழலில் இருந்தாலும் அவரது படங்கள் இன்னும் உயிர்வாழ்கிறது என ஒரு போனஸ் செய்தியையும் லக்கி வாசகருக்கு தருகிறார். அப்போதுதானே பிரகாஷ் தளத்தின் படங்கள வாசகர்கள் ஆவலுடன் தேட முடியும். பிறகு சபிதா தளம் தடை செய்யப்பட்ட பிறகு அதன் உரிமையாளர் வெளிஉலகிற்கு தெரியவர என எல்லா சங்கதிகளையும் மர்மங்களை கட்டவிழ்க்கும் சுவாரசியத்துடன் தருகிறார். ஆகா பாலுணர்வு காமிக்ஸ் படக்கதை கூட கிக்கைத் தரும் போல என இந்நேரம் லக்கியின் புண்ணியத்தில் பல நூறு கைகள் கூகிலில் சபிதாபாபியைத் தேடிக் கொண்டிருக்கும். அந்தக் காலத்தில் சாண்டில்யனின் வாழத்தண்டு தொடை கதாநாயகிகளை வேறு வழியின்றி ருசித்த பெரிசுகளைப்போல இன்றைய இளசுகளுக்கு சபிதா அண்ணி. இரண்டும் ஓவியம்தான் என்றாலும் ரசனை மாறவேயில்லையே.

மற்றபடி தானும் போர்னோவை கண்டிப்பதாக பதிவு செய்யும் சடங்கிற்காக அரபு நாடுகளில் போர்னோ சைட்டுக்களை தடை செய்திருப்பதை ஆச்சரியத்துடன் முன்மாதிரியாக குறிப்பிடுகிறார். ஆனால் மக்களுக்கு மட்டும் காமத்தடை விதித்த ஷேக்குகளின் மாளிகைககளில் உள்ள டிஷ் ஆண்டாடனாக்கள் டிரிபிள் எக்ஸ் சானல்களை 24 மணிநேரமும் வழிய விட்டுக்கொண்டுதானே இருக்கிறது. இதே அரபுஷேக்குகள்தான் தமது பணத்திமிரினால் சிறுமிகளை மணப்பது முதல் எல்லா வக்கிரங்களையும் அரங்கேற்றுவதில் முன்னணி வகிக்கிறார்கள். பணக்காரர்களுக்கு வக்கிரத்தின் எல்லா வகையும் அனுபவிக்கலாம், ஏழைகள் செய்தால் அவை குற்றமென்பதுதான் அரபு நாடுகளின் விதிமுறை. இதையும் தவறாக குறிப்பிடும் அளவுக்கு லக்கியின் சமூக அறிவு போர்னோ படத்திற்கு மேலே வரமாட்டேன் என்கிறது.

இப்படி இன்றைய இளையோர் உலகம் இன்பத்தில் நீடித்திருப்பதைத் தவிர வேறு நோக்கமில்லை என்று இந்த தொடரைப் பார்த்து இன்னும் என்னவெல்லாம் அறிமுகம் செய்வார் என்று காத்திருக்கும் இதயங்களை வைத்து ரிப்போர்ட்டரின் பிரதிகள் சில ஆயிரம் கூடியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதற்கிணையாக ஜூனியர் விகடனில் நிருபரின் டயரிக் குறிப்பு என்ற பெயரில் சினிமா போர்னோ கிசுகிசு நடையில் பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி நீயா, நானா என்ற போட்டியில் லக்கி ரிப்போர்ட்டரின் பங்கை வெட்கமின்றி நிறைவேற்றி வருகிறார்.

நண்பர்களே, பாலியல் மோசடிகள் அன்றாடம் கொலைகளிலும், அவலத்திலும் நடக்கும் நாட்டில் இந்த பிரச்சினைகளைப் பேசுவோர் உண்மையில் எதைப் பற்றி பேச வேண்டும்? கள்ள உறவுக்காக ஆத்திரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஆணையோ கொலை செய்வது கூட பிரச்சினை இல்லை. அதை கள்ளக்காதலுக்காக கொலை என்ற தலைப்பில் கதையை கொலை செய்ய முடியாத கோழை கள்ளக்காதல் ஆர்வலர்களிடம் கேவலமாக படிக்க வைக்கிறார்களே அந்த தினசரிகள்தான் குற்றவாளிகள். சினிமாவில் சதையைக் காட்டி, தொலைக்காட்சியில் கள்ளக்காதல் ஒன்றும் கடினமல்ல என்று நெடுந்தொடரில் கற்பித்து, இப்படி ஊடகங்கள் எல்லாம் இயல்பான காமத்தை பிரம்மாண்டமாக வெறியூட்டி அலைய வைக்கின்றன.

இதுவே மேற்கத்திய நாடுகளில் இன்னும் பல்வேறு வகைகளில் நடந்து வருகிறது. ஆக பாலியல் பிரச்சினை பற்றி அதில் கணத்தில் தடுமாறி பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ளும் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு ஒரு நியாயமான முயற்சி என்பதே இந்த ஊடகங்களை அம்பலப்படுத்துவதில்தான் ஆரம்பிக்க முடியும். மாறாக அந்த கயமைத்தனத்தில் இணைந்து கொண்டு சைபர் கிரைம் என்ற பெயரில் அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இணைய போர்னோக்களை கா(ர்)ம சிரத்தையுடன் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் லக்கி, ரிப்போர்ட்டரின் ஆணைக்கிணங்க ஊதியம் வாங்கிக்கொண்டு செய்கிறார். பெண்ணுடலை குதறி தின்னும் பண்டமாக கருதும் ஆணின் மனசாட்சியை இந்த தொடர் ஒருபோதும் உலுக்கப் போவதில்லை. மாறாக அப்படி வெறியுடன் தின்னுவதற்கு நூற்றுக்கணக்கான புதிய முறைகளை லக்கி பக்திப் பரவசத்துடன் அறிமுகம் செய்கிறார்.

சும்மா வெட்கப்படாதீங்க சார் என்று நடிகைகளின் அங்கங்களை தெரிவிக்கும் படங்கள் லக்கியின் பிரபலத்திற்கு ஒரு முக்கியமான காரணமென்றால் யாராவது அதை மறுக்க முடியுமா? அதை வெறும் நகைச்சுவை என்றே பலரும் கருதுகிறார்கள். இப்போது ரிப்போர்ட்டரில் லக்கியின் கைங்கரியத்தை பார்க்கும் போது இனிமேலும் அதை வெறும் நகைச்சுவை என்று கருத முடியாது. ஆனால் லக்கி அவர்களே! இப்படி ஒரு பெண்ணுடலை ஆணின் வக்கிரத்திற்கு இரையாக்குவதன் மூலம் நீங்கள் முழு பெண்ணினத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ்மொழி எனும் அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு பல வாசகிகள் பாசத்துடன் அண்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறீர்கள். அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி! SHAME ON YOU !!

http://www.vinavu.com/2009/07/27/lucky/

Last Updated on Monday, 27 July 2009 07:26