Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் போலி ஜனநாயகம் பெற்றெடுத்த மன்னராட்சி

போலி ஜனநாயகம் பெற்றெடுத்த மன்னராட்சி

  • PDF

 உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல், பல்வேறு மொழி, இன, மத, சாதி, பிரதேச வேறு பாடுகளால் சூழப்பட்டிருக்கும் நாட்டில் நடக்கும் பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் என்றெல்லாம் இந்தியாவின் ஜனநாயக மாண்பைப் பார்த்து வெளி நாட்டினர் வியப்படைவதுண்டு.

 

 என்ன இருந்தாலும் ஜனநாயகமாயிற்றே! ஆனால் இந்த ஜனநாயகத்தின் மாண் பினை உள்ளிருந்து வேறு வழியில்லா மல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கொரு முறை நடக்கும் கூத்து.

 

இந்தக் கூத்தில் நவவிரசங்களும் காட்டாறாய் பெருக்கெடுத்து ஓடும். காலை எழுந்ததும் அனிச்சைச் செயலாகப் பல் துலக்குவது போல மக்களும் வாக்கெடுப்பு அன்று ஏதோ ஒரு விட முடியாத சடங்கை நிறைவேற்றுவது போல வாக்களித்து வருகின்றார்கள். முன்பு முத்திரை குத்தியவர்கள் இப்போது எந்திரத்தில் பொத்தானை அமுக்கிவிட்டு வருகிறார்கள். வாக்களிக்கும் முறை மட்டுமல்ல, வாக்கு வாங்கும் அரசியல் தலைவர்களது விபச்சாரமும் புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது.

 

நேற்று முளைத்த விஜயகாந்தோ, முந்தைய நாள் குதித்த தி.மு.க.வோ எல்லாக் கட்சிகளும் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்காணலில் கேட்கும் முக்கியமான கேள்வி என்ன? தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும். இதில் பலரும் நாலைந்து கோடிகளை இறைக்கலாம் என்று பேசியதைப் பார்த்து கருணாநிதியே வியப்படைந்து விட்டாராம். கோடிகளுக்குப் பதில் இலட்சங்களில் பதிலளித்த அனாமதேயங்களை கேப்டன் விரட்டி விட்டாராம். புரட்சித் தலைவியின் கட்சியில் மட்டும் கோடிகளோடு ஜாதகமும் பொருத்தமாக இருக்க வேண்டுமாம். ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு பத்துக் கோடி ரூபாயை அளித்து ஒரு மக்களவைத் தொகுதியை ஏலமெடுத்த கதையைப் பெருமையாக பத்திரிகைகளில் பீற்றியிருக்கிறார் ஒரு முதலாளி.

 

மக்களைவைத் தேர்தலில் உங்கள் தொகுதியில் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன செய்வதாகத் திட்டம் என்பதையோ, கடந்த காலத்தில் அவர்கள் செய்த சமூக சேவை என்னென்ன என்பதையோ எந்தக் கட்சியும் கேட்கவில்லை. கோடிகள்தான் தகுதி என்றால் இது ஜனநாயகமா இல்லை பணநாயகமா? தேர்தல் ஆணையத்தின் விதிப்படி ஒரு தொகுதியில் 25 இலட்சம்தான் செலவழிக்க முடியுமென்றாலும் எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களும் தலா பத்து கோடி செலவழிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இவ்வளவு காஸ்ட்லியாக செலவழித்து இந்த சமூக சேவை செய்ய வேண்டிய அவசியமென்ன?

 

சூத்திரம் ரொம்பவும் சுலபமானது. ஏதோ ஒரு கட்சி ஓரிரு தொகுதிகளை வென்று யாருக்கும் பெரும்பான்மையில்லாத பட்சத்தில் இவர்களுக்கு கொண்டாட் டம்தான். ஏதோ ஒரு இணை அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு செட்டிலாகிவிட்டால் இருக்கவே இருக்கிறது சுவிஸ் வங்கி. சுவிஸ் வங்கிகளில் இருக்கும் ஊழல் பணம் 25 இலட்சம் கோடியை இந்தியாவிற்கு மீட்டுத் தருவதாக பா.ஜ.க முழங்குகிறது. ஏன் இவர்கள் ஆட்சியிலிருந்த போது முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததின் மர்மம் என்ன? காங்கிரசு, பா.ஜ.க முதலான தேசியக் கட்சிகள் கருப்புப்பணம் வைத்திருக்கும் முதலாளிகளிடம் நன்கொடை வாங்கமாட்டோம் எனச் சவால் விட வேண்டியதுதானே?

 

இந்திய முதலாளிகள் நன்கொடை கொடுப்பதோடு பல அரசியல் கூட்டணிகளை உருவாக்கும் தரகர்களாகவும் செயல்படுகிறார்கள். பல இடங்களில் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வியுற இருக்கும் விஜயகாந்தின் தூதர்கள் டெல்லியில் காங்கிரசு நிர்வாகிகளைச் சந்திப்பதற்கு முகேஷ் அம்பானிதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தாராம். இதுபோக பல முதலாளிகள் மேலவையின் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். எல்லா தேசிய கட்சிகளிலும் இம் முதலாளிகளுக்கான தரகர்கள் முக்கியப் பொறுப்புக்களில் உள்ளனர். அமர்சிங், அருண் ஜேட்லி, பண்ருட்டி ராமச்சந்திரன், தயாநிதி மாறன், சந்திரபாபு நாயுடு எனப் பலரும் முதலாளிகளுக்கு நெருக்கமானவர்கள்தான்.

 

தேர்தலில் பணம் செலவழித்துத்தான் "சேவை' செய்ய முடியுமென்பது இருக்கட்டும். அதில் தெரிவாவதற்குக்கூட எந்தத் தகுதியும் தேவையில்லை என்பதே இந்த ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு சான்று பகரும். சென்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்காக மும்பை தொகுதியொன்றில் தெரிவான நடிகர் கோவிந்தா பெரும்பான்மை நாட்கள் பாராளுமன்றத்திற்கே செல்லவில்லையாம். தொகுதியிலும் அவர் தலை தென்படவில்லையென்பதால் இந்த அவப்பெயரை நீக்குவதற்காக நடிகை நக்மா இந்தத் தேர்தலில் காங்கிரசிடம் சீட்டு கேட்டாராம். உ.பி.யில் முலாயம் இன் சமாஜ்வாதி கட்சிக்காக ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, சஞ்சய் தத் போன்றோரெல்லாம் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பிணையில் இருக்கும் சஞ்சய் தத் போட்டியிடக் கூடாது என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்ததனால் முலாயம் கலங்கிப் போய் விட்டாராம். பா.ஜ.க.வில் தர்மேந்திரா, ஹேமமாலினி, வினோத் கன்னா, சத்ருகன் சின்ஹா முதலியோரெல்லாம் களமிறங்கக்கூடும். ஆந்திராவில் ரோஜா, விஜயசாந்தி, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர். என எல்லாரும் பிரச்சாரத்தில் முழுவீச்சாய் இறங்கியிருக்கிறார்கள். இதில் சிலர் வேட்பாளராகப் போட்டியிலும் இறங்கியிருக்கிறார்கள்.

 

தமிழ்நாட்டின் கதை நமக்குத் தெரியுமென்பதால் விவரிக்கத் தேவையில்லை. ஆனால் நாயகன் படத்தில் ஹீரோவாக நடித்த ஜே.கே.ரித்தீஷுக்கு தி.மு.க.வின் இராமநாதபுரம் வேட்பாளர் தகுதி கிடைத்திருக்கிறது. கந்து வட்டியில் பல கோடிகளைச் சம்பாதித்திருக்கும் இந்த நடிகர் தமது தொகுதி மட்டுமல்ல அருகிலுள்ள தொகுதிகளின் செலவுகளையும் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்திருக்கிறாராம். இப்படி மரத்தைச் சுற்றி, தொப்புளைச் சுற்றி டூயட் பாடும் ஜிகினாக்களெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினராக அவதரிப்பதைப் பார்க்கும்போதே நமது ஜனநாயகத்தின் அவலட்சணம் பளிச்செனத் தெரிகின்றது.

 

அடுத்து மன்னராட்சி போய் வந்த மக்களாட்சியில் எப்படி மன்னராட்சி மீண்டு வருகிறது என்பதைப் பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்பாவது வாரிசு அரசியல் பற்றி சில விமரிசனங்கள் ஊடகங்களில் எழுந்தன. அப்போது இலை மறைவு காய்மறைவாக இருந்த வாரிசு அரசியல் இப்போது நீக்கமற எல்லாக் கட்சிகளிலும் இருப்பதால் மக்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை . அரசியலே ஒரு நேர்த்தியான தொழிலாக மாறி வருவதால் தந்தையின் இடத்தில் தனயர்கள் இயல்பாகவே முடி சூடிக்கொள்கிறார்கள்.

 

விஜயகாந்த் கட்சியின் முக்கியப் பொறுப்புக்களிலும், முடிவுகளிலும் அவரது மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சதிஷூம் இடம் பெற்றிருக்கிறார்கள். காங்கிரசு தலைவர்களிடம் கூட்டணி வைப்பது குறித்து மைத்துனரும், அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது குறித்து மனைவியும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அதிலும் பணவிவகாரம்தான் முக்கியமாகப் பேசப்பட்டது. தி.மு.க.வில் அழகிரி, தயாநிதி மாறன் முதலானோர் எந்தத் தடையுமின்றி வேட்பாளராகியிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் மன்னார்குடி கும்பலின் குடும்பம் முடிவுகளை எடுக்கிறது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வைகோவின் மகன் வையாபுரி, முன்னாள் காங்கிரசு தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத், தங்கபாலுவின் மனைவி, இப்படி மேல்மட்டம் மட்டுமல்ல கீழ்மட்டத்திலிருக்கும் மாவட்டப் பிரமுகர்களின் வாரிசுகளும் இப்போதைய தேர்தலுக்கு வந்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செய லாளரான பெரியசாமியின் மகள் தமிழக அமைச்சரென்றால், மகனுக்கும் சீட் கேட்டிருக்கிறார் தந்தை. கொடுத்தால் குடும்பமே கட்சியை முழுங்கி விட்டதாக பேச்சுவருமென்று பெரியசாமியின் பினாமி ஒருவருக்கு சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

 

கேரளாவில் கொட்டை போட்ட பெருச்சாளியான கருணாகரனின் மகனும், மகளும் இப்போது முழுநேர அரசியலில் இருக்கிறார்கள். ஆந்திராவில் சிரஞ்சீவியின் சகோதரர்களும், மைத்துனர்களும் கட்சியைக் கட்டுப்படுத்துவதோடு தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். சந்திரபாபு நாயுடுவுக்காக என்.டி.ராமாராவ் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் தமது குடும்பத்தொழில் போல நினைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். மராட்டியத்தில் சரத்பவாரின் மகள் போட்டியிட, பால்தாக்கரே மகன் தந்தையின் ரிமோட் கண்ரோலரை வாங்கி சிவசேனாவை இயக்குகிறார். ஒரிசாவில் 90 களின் இறுதியில் பிஜூ பட்நாயக் இறந்து போக அவரது மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த நவீன் பட்நாயக் நாடு திரும்பி பிஜூ ஜனதா தள் ஆரம்பித்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக தொடர்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு ஒரியா மொழி கூட தெரியாதாம்.

 

இவை போக இந்தி பேசும் மாநிலங்கள் முழுவதிலும் முன்னாள் மன்னர்கள், ராணிகள், நிலப்பிரபுக்கள், முதலாளி களின் வாரிசுகள்தான் எல்லா கட்சிகளிலும் நிரம்பி வழிகிறார்கள். லாலுவின் மைத்துனர்கள், மனைவி, முலாயமின் மகன் எல்லாம் உ.பி, பீகார் அரசியலில் மையம் கொண்டுள்ள புதிய வாரிசுகள். சுய நிர்ணய உரிமைக்காக போராட்டம் நடக்கும் காஷ்மீரிலும் கூட தேசிய ஜன நாயகக்கட்சி எனும் பிழைப்புவாதக்கட்சியின் தலைமை ஷேக் அப்துல்ல அவரது மகன் பரூக் அப்துல்லா, இவரது மகன் ஓமர் பாரூக் என வாழையாடி வாழையாக தொடர்கிறது. ஓமருக்கும் கூட ஆரம்பத்தில் காஷ்மீர் மொழி தெரியாதாம். இந்த வாரிசு புராணத்தில் சி.பி.எம் கட்சியும் விதிவிலக்கல்ல. கோவை தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் சி.பி.எம் வேட்பாளர் முதுபெரும் தலைவர் ரமணியின் மருமகனாம்.

 

தாராளமயமாக்கத்தின் விளைவாக நாடும் மக்களும் ஒட்டச் சுரண்டப்பட்டாலும், இதன் ஆதாயத்தை பங்கு போடுபவர்களில் அரசியல் தலைவர்களும் உண்டு என்பதால் தனியார்மயத்திற்காக பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டைக் கவ்வுதற்கு இப்போது வாய்ப்பு அதிகம் என்பதால் வாரிசுகள் சராமாரியாக களமிறக்கி விடப்படுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சில ஆயிரம் கோடிகள் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பான முறையில் சுருட்டப்பட்டிருப்பதும், மு.க.அழகிரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதும், திருமங்கலத்தில் ஊரார் அனைவருக்கும் கறி விருந்து நடைபெற்றதும், இனி டெல்லி கறி விருந்துகளில் அண்ணன் அழகிரி கலக்கப் போவதும் வெவ்வேறு விசயங்கள் அல்ல.

 

இந்தத் தேர்தலில்தான் கொள்கைக்காக கூட்டணி என்பது அட்சர சுத்தமாக தூக்கியெறியப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் தேர்தல் என்றால் கூட்டணிக்கான ஆயத்தங்கள் எல்லாம் தேர்தலுக்கு சற்று காலம் முன்பே அதுவும் மேலோட்டமாக என்றாலும் ஏதாவது கொள்கையின் பெயரில் செய்யப்படும். தற்போதுதான் முதன்முதலாக தேர்தலுக்கு முந்தைய நாள்வரை கூட்டணிகள் உருவாகலாம், மாறலாம் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. பா.ம.கவை எடுத்துக் கொள்ளுங்கள், கடைசி நேரம் வரை காங்கிரசு, அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளிடமும் பேரம் நடத்தி இறுதியில் தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க.வை காங்கிரசுக் கூட்டணிக்கு கொண்டு வருவதாக பேரம் பேசப்பட்டு பா.ம.க, அ.தி.மு.க அணியில் இடம் பெற்றிருக்கிறது.

 

ஒரிசாவில் கிறித்தவ மக்களை வேட்டையாடிய சங்க பரிவார கும்பலோடு கூட்டணி வைத்துக் கொண்ட பிஜூ ஜனதா தளம் தொகுதிப் பங்கீடில் வந்த முரண்பாடு காரணமாக பா.ஜ.கவை விட்டு பிரிந்து விட்டது. அடுத்த நாளே சி.பி.எம்.மின் சீதாராம் எச்சூரி புவனேஸ்வரம் சென்று நவீன் பட்நாயக்கை பார்த்து மூன்றாவது அணியில் சேர்க்கிறார். கூடவே மதச்சார்பற்ற கட்சி என பாராட்டும் வேறு! இப்படி நாடெங்கும் கூட்டணி உரசல்களினால் உருவான இடைவெளியில் புகுந்து கொண்டுதான் போலிக் கம்யூனிஸ்டுகள் மூன்றாம் அணியை உருவாக்கினார்கள். இதனுடை ய ஆயுள் என்பது தேர்தல் முடியும் வரையிலும்தான். அதற்குப் பிறகு இந்தக் கட்சிகள் காங், பா.ஜ.க. இரண்டோடும் சேரலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை!

 

பார்ப்பன பாசிசத்தை கொள்கையாக வைத்திருக்கும் ஜெயலலிதாவும் மதச்சார்பற்றவர் என முத்திரை குத்தப்பட்டு சி.பி.எம்.மால் மூன்றாவது அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவரும் கடைசி நேரம் வரை காங் கூட்டணிக்கு முயன்று முடியவில்லை என்பதாலும், பா.ஜ.க.வுடன் சேர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பதாலும் மூன்றாவது கூட்டணிக்கு வேறு வழியின்றி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் மூன்றாவது கூட்டணிக்கு பிரதம வேட்பாளராக மாயாவதி இருக்கலாம் என்று பேசப்பட்ட போது, அந்த பதவிக்கு தானும் போட்டியிடுவதாக ஜெயா தெரிவித்ததால் நிலைமை மாறியது. தனது பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதால் மாயாவதி மூன்றாவது கூட்டணிக்கு வெளியே தனியே போட்டியிடுகிறார். இதே போல காங்கிரசு கூட்டணியில் இருக்கும் சரத்பவார் ஒரு மராட்டியர்தான் அதாவது தான்தான் பிரதமராக வரவேண்டுமென கூறியிருக்கிறார். சிவசேனாவும் இதேபோல கூறியிருக்கிறது. இதனால் பவாரும் மூன்றாவது கூட்டணியோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

 

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போதாது என்ற காரணத்தினால் உ.பி, பீகார், ஜார்க்கண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உடைந்திருக்கிறது. நான்காவது கூட்டணியாக அல்லது ஐ.மு.கூட்டணிக்குள் உள் கூட்டணியை லாலுவும், முலாயமும், பஸ்வானும் அமைத்திருக்கிறார்கள். இவர்கள் காங்கிரசு மட்டுமே ஐ.மு.கூட்டணி அல்ல என்று பேசிவருகிறார்கள்.

 

இப்படி எல்லாக் கூட்டணிகளும் சந்தர்ப்பவாதங்களாலும், பிழைப்புவாதத்தினாலும், பொறுக்கித்தின்னவும் பச்சையான முறையில் உருவாகியிருக்கின்றது. இதில் போலிக் கம்யூனிஸ்டுகள்தான் எல்லாப் பச்சோந்திகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் மாமா வேலையை விவஸ்தை இன்றி செய்கிறார்கள்.

 

உலக வங்கியின் அடியாள் என்று இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட்ட சந்தி ரபாபு நாயுடு இப்போது மூன்றாவது அணியில் இருக்கிறார். சென்ற தேர்தலில் தனித் தெலுங்கானாவை எதிர்த்த நாயுடு இப்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இவையெல்லாம் கொள்கைக்காக அல்ல கூட்டணி மூலம் வெற்றி வாய்ப்பை பலப்படுத்தும் தந்திரம்தான்.

 

மூன்றாம் அணி சார்பாக பிரதம வேட்பாளர்களுக்கான போட்டியில் மாயாவதி, ஜெயலலிதா, தேவகௌடா போன்றோரும் முதல் கூட்டணியில் மன்மோகன் சிங்கும், சரத்பவாரும், முதல் கூட்டணியின் உள் கூட்டணியில் லாலு, முலாயம், பஸ்வான் ஆகியோர் உள்ளனர். மேலும் மூன்றாவது கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில் மார்க்சிஸ்ட்டும் பதவியேற்பதில் குறியாக உள்ளனர். யாருக்கு பிரதமர் பதவி என்ற சண்டை காரணமாகவே மூன்றாம் அணிக்கு பிரதம வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

 

ஈழப்பிரச்சினையில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளிலும் உள்ளன. எனினும் கொள்கைகள் வற்றிப் போன இந்தத் தேர்தல் பாலைவனத்தில், தமிழகத்துக் கட்சிகள் மெல்லுவதற்கு ஒரு சூயிங்கமாகக் கிடைத்திருக்கிறது ஈழப் பிரச்சினை.

 

இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் பின்னுக்குப் போய் பிராந்தியக் கட்சிகள் முன்னுக்கு வந்திருப்பதாகவும் இது இந் தியாவின் பன்முகத் தன்மையை காண்பிப்பதாகவும் சில அறிவாளிகள் பேசி வருகின்றனர். தேசியக் கட்சிகளின் இடம் சுருங்கி வருவதென்னவோ உண்மை தான். இந்திய ஆளும் வர்க்கங்கள் உருவாக்க முனைந்த இந்திய தேசியத்தை, நாடாளுமன்ற அராஜகமே அரித்துத் தின்றுவிட்டது.

 

இந்திய தேசியக் கட்சிகள் தோல்வியடைந்ததை மொழி, தேசிய இனங்களின் வெற்றியாகவோ, ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் எல்லா பிராந்தியக் கட்சிகளும் தமக்கென சில சமூக அடித்தட்டுக்களை உருவாக்கிக் கொண்டு சில பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து தேசியக் கட்சிகளிடம் பேரம் பேசுகின்றன. அப்படிக் கிடைக்கும் அமைச்சர் பதவிகளை வைத்துக் கொண்டு ஆதாயத்தை அடைகின்றன. இதன் மூலம் தத்தம் சமூக அடித்தளங்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசி தமது கட்சியையே பிழைப்புவாதக் கட்சியாகப் பராமரிக்கின்றன.

 

எனவே இந்தியாவில் எவ்வளவு சாதிய, மத, மொழி, பிராந்திய வேறுபாடுகள் இருக்கின்றனவோ அவ்வளவு சந்தர்ப்பவாதங்கள் கட்சிகளாய் அவதரித்து இருக்கின்றன என்று சொல்லலாம். முன்பு நாட்டைக் கொள்ளையடிக்கும் உரிமை தேசியக் கட்சிகளுக்கு மட்டும் இருந்தது போய் இப்போது பிராந்தியக் கட்சிகளும் பங்கு கேட்கும் நிலைமை வந்திருக்கிறது.

 

தேர்தல் முடிந்து கூட்டணி பேரங்கள், குதிரை வியாபாரங்கள் எல்லாம் முழு வீச்சில் நடக்கும். நாடு இதுவரை கண்டறியாத திரைமறைவு சதிகள் அப்போது அரங்கேறும். சில சதுரங்க ஆட்டத்திற்கு பிறகு அரசாங்கம் உருவானாலும் அது குறு நில மன்னர்கள் ஆட்டிப் படைக்கும் அளவிலேயே இருக்கும். முக்கிய அல்லது பணம் கொழிக்கும் அமைச்சகங்களை கைப்பற்றுவதற்கு நாய்ச் சண்டையே நடக்கும். இப்படி தெளிவான சந்தர்ப்பவாதத்தையே வெளிப்படுத்தித்தான் இந்தத் தேர்தல் நடக்கிறது. காங்கிரசும், பா.ஜ.க.வும், இடது சாரிகள் உருவாக்க நினைக்கும் மூன்றாம் அணியும் தேர்தலுக்கு பின்னர் இத்தகைய சாக்கடை வியாபாரத்தின் வழியாகத்தான் ஆட்சியை அமைக்க முயலும்.

 

இந்திய ஜனநாயகத்தின் இந்த விரிவாக்கம், "பணநாயகமே ஜனநாயகம்' என்ற வெளிப்படையானதொரு விளக்கத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இனிமேலும் இதில் புனிதம் ஏதுமில்லை, ஒளிவுமறைவில்லை, வெட்கப்படவும் யாருக்கும் எதுவும் இல்லை. கூட்டணி தருமத்திற்கும், கூட்டுப் பங்குக் கம்பெனியின் தருமத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் அகன்று, ""கூட்டுப் பங்குக் கம்பெனியே கூட்டணி கூட்டணிக் கட்சிகள் எனப்படுவோர் பங்குதாரர்களே'' என்ற பேருண்மை நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயகம்.

 

எந்தத் தொழில் நிறுவனத்தில் யார் எவ்வளவு பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத இன்றைய தாராளமய காலகட்டத்தில், எந்தக் கூட்டணியை யார் ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள முடிகிறதே, அதுவே பெரிய சாதனை தான்.

 

எனவே இந்தப் பன்றித்தொழுவத்தில் அல்லது பங்குச்சந்தையில் நல்லதை தேடுவதும், மாற்றுக்களுக்காக ஏங்குவதும், இருப்பதில் பரவாயில்லை என திருப்தி அடைவதும் எந்த மாற்றங்களையும் தந்து விடாது. பச்சையான பிழைப்புவாதத்தையே தனது கொள்கையாக நெற்றியில் பொறித்துக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு முறையை தூக்கியெறியாமல் உண்மையான ஜனநாயகத்தை கொண்டுவர முடியாது.

 

சாத்தன்

 

Last Updated on Thursday, 16 July 2009 06:09