Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் இந்திய இராணுவமே ஈழத்தை விட்டு வெளியேறு

இந்திய இராணுவமே ஈழத்தை விட்டு வெளியேறு

  • PDF

""புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைந்தால் அவர்களுடைய உயிர்களையும், மக்களின் உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அனைவருமே வேரோடு அழித்து ஒழிக்கப்படுவார்கள்'' என்று இனப்படுகொலயைப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ராஜபக்சே, தற்போது இரண்டு நாள் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார். சிங்கள இராணுவத் தாக்குதலில் உற்றார் உறவினரை இழந்து அநாதையாகி, கை கால்களை இழந்து முடமாகி, சோறும் தண்ணீரும் இன்றி நடைபிணமாகித் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு ராஜபக்சே வழங்கியிருக்கும் வெளியேற்ற நோட்டீசுதான் இந்தப் போர் நிறுத்தம்.

 

ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் நடத்திவரும் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக மேலை நாட்டு அரசுகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் இந்தப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதேயன்றி கருணாநிதி கூறிக்கொள்வது போல இது இந்திய அரசின் தலையீட்டினால் நிகழ்ந்தது அல்ல

 

இந்திய அரசின் தலையீடு என்பது, சிங்கள அரசின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில்தான் இருந்து வருகிறது. புதுக் குடியிருப்பில் வீசப்பட்ட விசவாயுக்குண்டுகள் இந்திய இராணுவத்தால் சப்ளை செய்யப்பட்டவை என்பதுடன், இலங்கை இராணுவத்தின் 58 வது, 59வது படைப்பிரிவுகளில் பாதிப்பேர் இந்திய சிப்பாய்கள் என்பதும், தற்போது இலங்கை இராணுவத்தைக் களத்தில் நின்று வழிநடத்துவது இந்திய அதிகாரிகள் தான் என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

 

எனினும் இவையெல்லாம் இப்போதுதான் தெரியவந்துள்ள இரகசியங்கள் அல்ல. ஈழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் முன்னமே தெரிந்த உண்மைதான். ஈழத்தமிழர் பிரச்சினையை இலங்கையின் மீது மேலாதிக்கம் செய்யும் தனது நோக்கத்துக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்வது, தேசிய இன விடுதலையை நசுக்குவது என்ற அணுகுமுறையைத்தான் கடந்த 25 ஆண்டுகளாகவே இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஒரு வார்த்தையில் சொல்வதானால் அன்றும் இன்றும் இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களின் எதிரிதான்.

 

எனினும், நெடுமாறன், வைகோ முதலான ஈழ ஆதரவாளர்கள் ஈழ விடுதலையின் எதிரியான இந்திய அரசை, தொடர்ந்து நண்பனாகவே சித்தரித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை காங்கிரசு அரசை அவ்வாறு சித்தரித்து வேண்டுகோள் விடுத்தார்கள். இன்று காங்கிரசுக்கும் திமுகவுக்கும் மாற்றாக பா.ஜ.க வையும், அதிமுகவையும் வெற்றி பெறச்செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

 

தான் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் ஈழப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென்று அறிவித்திருக்கிறது பாரதிய ஜனதா. வாஜ்பாய்  ஆட்சிக் காலத்தில் புலிகளின் முற்றுகையில் யாழ் கோட்டைக்குள் சிக்கியிருந்த 40,000 சிங்கள இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்காக, இலங்கையில் தலையிட்ட பா.ஜ.க.வினர் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போமென்று கூறுவதும், அதை நம்புமாறும் பாரதிய ஜனதாவுக்கும் அதிமுக வுக்கும் வாக்களிக்குமாறும் மக்களை ஈழ ஆதரவாளர்கள் நம்பவைப்பதும் காணச்சகிக்க முடியாத துரோகங்கள்.

 

காஷ்மீர், வட கிழக்கிந்தியாவின் தேசிய இனங்கள் மீது இராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்திய அரசு, ஈழத் தமிழ் மக்களின் இன உரிமையை மட்டும் ஆதரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. எதிர்ப்பதற்கான காரணங்கள்தான் இருக்கின்றன. இலங்கையிலும் தெற்காசியப் பகுதியிலும் இந்திய ஆளும் வர்க்கங்கள் கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார, இராணுவ நலன்கள்தான் டில்லி ஆட்சியாளர்களை வழிநடத்துமேயன்றி, ஈழத்தமிழ் மக்களின் கண்ணீரோ, தமிழக மக்கள் அளிக்கும் வாக்குகளோ அல்ல. டில்லியில் எத்தகைய ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. இந்த உண்மையை நாம் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். "இந்திய இராணுவமே ஈழத்தை விட்டு வெளியேறு' என்று முழங்க வேண்டும்.

 

இலங்கைக்கு ஆசைப்பட்டால், தமிழகத்தை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தப் போராட்டத்தின் ஒரு படி. ஈழமக்களுக்காகத் தமிழகம் விடுத்த ஒருமனதான கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசை, நிராகரிக்கிறார்கள் தமிழ் மக்கள் என்று உணர்த்தும் ஒரு அடி.