Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் நோர்வே இலக்கிய சந்திப்பில், பாசிச முகமெடுத்தாடிய மகிந்தா

நோர்வே இலக்கிய சந்திப்பில், பாசிச முகமெடுத்தாடிய மகிந்தா

  • PDF

புலத்து இலக்கியச்சந்திப்பு இம்முறை மகிந்தா அரசின் "ஜனநாயகத்" தூண்களின் துணையுடன், அதன் பாசிசப் பல்லவியுடன் தான் அரங்கேறியது. "ஜனநாயகத்தை" புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறும் கூட்டத்தின் கும்மியடிப்புடன் தான், இம்முறை இலக்கியச் சந்திப்பு என்னும் "ஜனநாயகம்" புழுத்தது. மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் "ஜனநாயக பேர்வழிகள்", ஜனநாயகத்தின் பெயரில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் தமக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரி, அதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தையே மறுத்தவர்கள்.

 

இவை எல்லாவற்றையும் மூடிமறைக்க, அனைத்துக்கும் "ஜனநாயகம்" என்று சொந்த மூகமுடியை முன்னிறுத்துகின்றனர். எல்லாவிதமான மனித விரோதங்களையும் கூட, நாம் ஒன்றாக கூடிப்பேசுவது தான் "ஜனநாயகம்" என்ற நிலைக்குள், ஜனநாயகத்தை தரம் தாழ்த்திவிடுகின்றனர், "ஜனநாயகம்" பற்றி பிரமை பிடித்தவர்கள்.

 

வர்க்க சமூக அமைப்பில் அதாவது ஆளும் வர்க்கமும் ஆளப்படும் வர்க்கமும் ஒன்றாக கூடி அமர்ந்து ஒன்றாக பேசுவது தான், "ஜனநாயகம்" என்ற அரசியல் இழிநிலைக்குள் மாற்று அரசியல் தளம் தன்னைத்தான் சொறிந்துகொள்கின்றது. 

மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்த மறுக்கின்ற ஆளும் வர்க்கத்துடன் கூடிய அரசியல் எல்லையில் தான் "ஜனநாயகம்" என்கின்றனர். தனக்கு மட்டும் தான், தன் கருத்துக்கு மட்டும் தான், என்று கூறியும் கூடியும் "ஜனநாயகம்" பேசுகின்றனர். இதற்குள் ஆளும் வர்க்கத்துடன் கூடிய, வலதுசாரிய கும்பலுடன் கூடிய, ஒரு அரசியல் கூத்தடிப்பை நியாயப்படுத்துகின்றனர்.

 

தன் கருத்தை மக்களிடம் சொல்ல வக்கற்றவர்கள், அதை மக்களிடம் மட்டும்தான் சொல்லவேண்டும் என்று அரசியல் ரீதியாக உணராதவர்கள்;, மக்களிடம் தம் கருத்தை சொல்லும் வழியை உருவாக்க முனையாதவர்கள், ஆளும் வர்க்கத்தின் வலதுசாரிய மேடை போய் அமர்கின்றனர். அவர்களுக்கு தம் கருத்தைச் சொல்ல முனைகின்றனர். இந்த அரசியல் வெட்கக்கேட்டை "ஜனநாயகம்" என்கின்றனர். இப்படி எந்த மேடை கிடைத்தாலும், அதை "ஜனநாயகமாக"காட்டி அதில் ஆடப்போகின்றனர்.

 

இப்படி அங்கு கூடும் ஆளும் வர்க்க வலதுசாரிய மக்கள் விரோத அரசியல் மேடையில், தனக்குமட்டுமான "ஜனநாயகத்தின்" மூலம், தனக்கு தானே கூச்சல் போடுகின்றனர். அந்த மேடையில் முன் அமர்ந்திருக்கம் நபர்கள், யாரும் இதை கேட்பது கிடையாது. ஏனெனின்; அவர்கள் அனைவரும், முன்கூட்டியே  மக்கள் விரோத கருத்துக்களைக் கொண்டவர்கள்.  அனைவரும் பரஸ்பரம் மக்கள்விரோதிகளாக தமக்குள் தாம் அறியப்பட்டவர்கள். இதற்குள் தாம் பேசுவதை "ஜனநாயகம்" என்கின்றனர். இதையும், இந்த மனித விரோத செயலையும் அரங்கேற்றும் அரங்கம் தான், இந்த மாதிரியான இலக்கிய சந்திப்புக்கள்.

 

மக்களுக்கான அரசியலை வைத்து ஒரு இலக்கியக் கூட்டத்தைக் கூட்ட முடியாதவர்கள் எடுக்கும் தீர்மானம் வெறும் கண்துடைப்பு மூலம் மற்றவர்களை ஏமாற்றுவதற்கான அடிப்படையைக் கொண்டது. இப்படி இம்முறை மகிந்தா ஆறுமுகத்தை எடுத்தாட, அவை இவர்களின் தீர்மானமாகியது. அதைப் பார்போம். இங்கு ( ) அடையாளத்தில் உள்ளவை, எமது குறிப்புகள்.

 

"1. இலங்கை முழுவதும் தொடரும் மனித உரிமை மீறல்களை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுவதுடன், ஜனநாயகம், மனித உரிமைகள், சிறுபான்மை இன மக்களின் அடிப்படை அரசியல் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

 

(யாருக்கு மக்களுக்கா!? உங்களைப் போன்ற அரசியல் பொறுக்கிகளுக்கா!? மக்களுக்கு என்றால் எப்படி? சிறுபான்மை இனத்தின் உரிமையை, மகிந்தாவின் மடியில் படுத்துக் கிடந்தா  பெறுவது!? சொல்லுங்கள் எப்படி என்று?) 

 

2. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான முழுமையான அதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். இதன் முதற்கட்டமாக ஏலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் உடனடியாக கையளிக்கப்படவேண்டும்.

 

(என்ன ரவுடி பிள்ளையானுக்கா! அதிகாரம் இல்லாது கூலிக் கும்பலாக இருக்கும் இவர்கள், சிறு குழந்தைகளை குதறுகின்றனர். இதை மூடிமறைக்க அதிகாரம் வேண்டுமாம். இந்த கூட்டத்தை வழிநடத்துவதில் பிள்ளையானின் முக்கிய ஆலோசகர் முன்னின்றதுடன், இந்த தீர்மானத்தை முன்வைத்தவர் அவர்)

 

3. இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள், மலையக மக்கள் தலித் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவுசெய்யப்படுவதுடன் அவர்களின் சமூக இருப்புக்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

 

(அரசின் தயவில் நின்று சமூக ஒடுக்குமுறைகளை தீர்க்க கோருவது, தங்களுக்குரிய  எலும்பை பகிரக் கோருவது தான். தமக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரியவர்கள், இன்று தமக்கான எலும்பை இதன் மூலம் கோருகின்றனர்.)

 

4. அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்படுவதுடன், அம்மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதும், அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமான நடமாட்டத்துக்கானதுமான உத்தரவாதத்தையும் வழிவகைகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

 

("ஜனநாயகத்தின் பெயரில்; இதை நியாயப்படுத்தியவர்கள், அதைக் கண்டிக்கவில்லை. இதன் மூலம் இனக் களையெடுப்பு நடத்த, அரசியல் அங்கீகாரம். அவர்கள் குடியிருந்த மண்ணை அன்னியனுக்கு விற்க, எந்த ஆட்சேபனையுமில்லை. "உத்தரவாதத்தையும் வழிவகைகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்" என்று இதைச்செய்யும் அரசிடம், உருக்கமான வேண்டுகோள்;)  

 

5. மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும்.

 

(பாவம் மலையக மக்கள். பணவீக்கத்தை ஏற்படுத்தி நோட்டை அடித்து அற்ப சலுகையாக சம்பளத்தை அரசே இடைக்கிடை உயர்த்தி கொடுக்கும் நிலையில், சும்மா கண் துடைப்புக்கு வேண்டுகோள். சுரண்டும் மலையக மக்களின் வாழ்வு சார்ந்த போராட்டத்தை மறுக்கும் வக்கிரம் தான், இப்படி கூலியை உயர்த்து என்று தீர்மானமாகின்றது.

 

6. இலங்கையில் கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துடனும் கூடிய உரிமையை பாதுகாப்பதுடன் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடரும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்."

 

(இதை செய்பவனை அரசியல் ரீதியாக ஆதரித்துக்கொண்டு, அதை "ஜனநாயகம்" என்று பீற்றிக்கொண்டு, இப்படி அரசியல் நாடகமாடுகின்றனர். மக்களுக்கு சுதந்திரமில்லை, ஜனநாயகமில்லை, தமக்கு மட்டும் "சுதந்திரத்தை ஜனநாயகத்தைக்" கோரியவர்கள் தமக்கு மட்டுமே இவற்றை இதன் மூலம் கோருகின்றனர்.)   

 

இதைத் தான் இந்த இலக்கிய சந்திப்பு தன் தீர்மானமாக எடுத்தது. அரசிடம் தாம் நியாயமான கோரிக்கை வைப்பதாக காட்ட, இதுவொரு கண்துடைப்புத் தீர்மானங்கள். இந்தத் தீர்மானத்தின் சாரத்தை, அரசுடன் இயங்கும் துரோகக் குழுக்கள் முதல் ஏகாதிபத்தியங்கள் வரை இன்று வைக்கின்றன. அரசும் கூட, தான் இதை காலப்போக்கில் நடைமுறைப்படுத்தப் போவதாகத்தான் கூறுகின்றது. இப்படியிருக்க, மகிந்தாவின் மூகமுடியை தாங்கள் தரித்து, அவர்கள் தீர்மானத்தையே இப்படி கடைவிரித்துள்ளனர்.

 

தங்கள் சொந்த அரசியல் நடத்தைகள் மூலமும், இந்த தீர்மானங்கள் மூலமும், இந்த இலக்கியச்சந்திப்பு திட்டமிட்டு அரசுக்கு சார்பாக மக்களுக்கு மறுத்தது எதை.

 

1. இலங்கை அரசு பாசிச அரசு என்பதையும், மக்கள் விரோத அரசு என்பதையும் மறுதலித்தது. மக்களை இந்த பாசிச "ஜனநாயகத்துக்கு" அடங்கி வாழக் கோரியது.

 

2. இனவாதத்தை அடிப்படையாக கொண்டதே, சிங்கள பேரினவாத அரசு என்பதை இந்த இலக்கியச் சந்திப்பு மறுதலித்துள்ளது. சிங்கள இனவாதத்தை கொண்ட அரசை இனவாதமல்லாத அனைத்து மக்கள் அரசாக காட்டியது. 

 

3.தேசிய இனப்பிரச்சனையை சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை மறுத்தலித்தனர். மாறாக இனவாத அடிப்படையில் தீர்க்கக் கோரினர்.

 

4. மக்களுக்கு எதிரான அனைத்து போர்க்குற்றங்களும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதை மறுத்தலித்தனர். மாறாக மக்கள் மேல் போர்க்குற்றம் நடைபெறவில்லை என்றும், யுத்தத்தை "ஜனநாயக" யுத்தமாகவும் காட்டினர்.

 

5. "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்" , "கிழக்கில் உதயம்" என்ற பெயரில், நாட்டை அன்னியனுக்கு தாரை வார்ப்பதை இந்த இலக்கிய சந்திப்பு நியாயப்படுத்தியது. மக்களின் சொந்த வாழ்விடங்களை அரசு, அந்த மக்கள் அல்லாத சுரண்டல் கும்பலிடம் கொடுப்பதை அங்கீகரித்தனர். 

 

6. இலங்கை வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், தமக்குள் ஒன்றிணைந்து தங்கள் உரிமைக்காக போராடுவதை மறுதலித்தனர். மாறாக மக்கள் விரோதிகள், தாம் தமக்குள்  கூடிக் கூத்தாடுவதை கோரினர்.

 

7. சமூக ஒடுக்குமுறைகளை களைவதற்காக, மக்களை திரட்டி போராடுவதற்கு பதில் தமக்கு சலுகையை வழங்கக் கோரினர்

 

8. மக்களை இனக் களையெடுப்பு செய்யும் தடுப்பு முகாங்களின் இருப்பை நியாயப்படுத்தினர். களையெடுப்பை புலியாக காட்டி நியாயப்படுத்தினர்.

 

இப்படி பல மக்கள் விரோத செயலை தங்கள் தீர்மானங்கள் மூலம் நியாயப்படுத்துகின்றனர். மக்கள் சந்திக்கின்ற நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும் திசைதிருப்பும் வண்ணம், அவர்கள் மீது இழைத்த இழைக்கின்ற குற்றங்களை கண்துடைக்கும் வண்ணம், அவர்களின் வாழ்வுக்கு எதிரான தீர்மானங்களை அரங்கேற்றினர். மக்களை அடக்கியாளும்  ஆளும் வர்க்க பிரதிநிதிகளான வலதுசாரிகள், தங்கள் கண்துடைப்பு தீர்மானங்கள் மூலம் மக்களை அடிமையாக வைத்திருக்கவே முனைகின்றனர். இதைத் தாண்டி இந்த இலக்கிய சந்திப்பு எதையும் முன்வைக்கவில்லை.  

 

பி.இரயாகரன்
07.07.2009
      

Last Updated on Tuesday, 07 July 2009 18:42