இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள்.
மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது.
சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை.
இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.
எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார்.
அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும்.
இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும்.