Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!

வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!

  • PDF

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளரும், பு.ஜ.தொ.ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிசியன்கள் சங்கத்தின் (சத்யபாமா கல்லூரி) செயலாளருமான தோழர் வெற்றிவேல் செழியன் சற்று முன்னர் நம்மை தொடர்பு கொண்டு இந்த செய்தியைக் கூறினார்.

 

ஜேப்பியார் கல்லூரியில் நிர்வாகத்தின் திமிரினால் விவேக் என்ற மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தை விளக்கி வினவில் ஒரு கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். அதன் இணைப்பாக ஜேப்பியார் கல்லூரிகளில் எமது தொழிற்சங்கம் கட்டிய அனுபவத்தை வாசகருக்கு அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டோம். இந்த கட்டுரை தோழர் துரை சண்முகம் தொழிலாளர்களை நேர்காணல் செய்து தொகுத்த கட்டுரையாகும்.

jepeyar2

வழக்கமாக வினவில் வரும் கட்டுரைகள் பல்வேறு இணையக்குழுமங்களில் மறு பிரசுரம் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் சில ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். அப்படி இந்தக் கட்டுரையும் யாகூ இணையக் குழுமம் ஒன்றில் இடம் பெற்று அது ஜேப்பியார் மற்றும் அவரது அடியாள் நிர்வாகத்தரப்பினரது கவனத்திற்கு போயிருக்கிறது. கூடுதலாக அவரது ரவுடி கேலிச்சித்திரத்தையும் ஜேப்பியார் பார்த்தாரா என்பது தெரியாது.

இப்படி இணையத்தின் வலிமையான வலைப்பின்னலால் தனது பெயர் நாறடிக்கப்படுவதைக் கண்டு சினமுற்ற ஜேப்பியார் நிர்வாகம் புதிய கலாச்சாரத்திற்கு பேட்டி அளித்த ஐந்து தொழிலாளர்கள் தோழர்கள் சங்கரன், உத்திராபதி, பரமன், ஜாகிர் உசேன் (ஓட்டுநர்கள்), சார்லஸ் (கிளினர்) முதலியோரை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது. சுயநிதிக்கல்லூரிகளில் கல்லா நிரம்பி வழியும் நேரத்தில் ஜேப்பியார் கல்லூரிகளில் ரெய்டு, கூடவே வினவின் உபயத்தில் இலவச பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து ஜேப்பியாரை கள் குடித்த குரங்காக மாற்றியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே இதே கல்லூரியில் தொழிற்சங்கம் கட்டினார் என்ற ‘குற்றத்திற்காக’ தோழர் வெற்றிவேல் செழியன் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அன்று தொடங்கிய போராட்டத்தின் நீண்ட வழியில் தற்போது மேலும் ஐந்து தொழிலாளிகள் பணிநீக்கம். ஆனால் இந்த திமிரான நடவடிக்கையால் அந்த தொழிலாளிகளும், தொழிற்சங்கமும் சோர்ந்து போய்விடவில்லை. இந்த வேலைநீக்கத்தால் அரண்டுபோய்விடவும் இல்லை. அவர்கள் இதை இன்னும் பரந்துபட்ட தொழிலாளிகள் மற்றும் மாணவர்களிடம் இந்த சர்வாதிகார நடவடிக்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள். கூடவே சட்டரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.

வினவின் வீச்சு காரணமாக ஐந்து தொழிலாளிகள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டது முதலில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த தொழிலாளிகளோ தங்கள் போராட்டத்திக்கு இந்த நடவடிக்கை மேலும் வலு சேர்க்கும் என உறுதியாக போராடுகிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாத இந்த தொழிலாளிகளின் போர்க்குணத்திற்கு வினவு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கீழே ஜேப்பியார் நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கிய உத்திரவை இணைத்துள்ளோம்.

பெறுநர்: திரு சங்கரன் ஓட்டுநர்

பொருள்: தாங்கள் புரிந்த தீயநடத்தைக்காக இன்று முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.

ஐயா,

தாங்கள் ஜேப்பியார் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறீர்கள். தாங்கள் நிர்வாகத்தைப் பற்றியும் தலைவர் பற்றியும் அவதூறாகவும், விசமத்தனமாகவும், மாசு கற்பிக்கும் கெட்டநோக்கத்துடன் திரு. துரை சண்முகம் என்பவருக்கு பேட்டியளித்து அந்த தவறான செய்திகள் சத்தியபாமா தொழிற்சங்கம் என்ற தலைப்பில் யாகு மெயில் இந்தியா என்ற இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது.

மேற்படி பேட்டியில் தாங்கள் ” என்னை ஒருத்தன் கேட்டான், நீ யூனியன்ல இருந்து என்ன சாதிச்சேன்னு? நான் கேட்டேன், நீ இல்லாம என்ன சாதிச்ச? அவன் சொன்னான், எங்களுக்கு சோறு உண்டு, நிர்வாகம் காசு தருதுன்னான். அதுக்க நான் உனக்கு மரியாதை உண்டா? போடா நாங்கள் யூனியன் அமைச்சு போராடியதால்தான் உன்னை தன்பக்கம் இழுக்க நிர்வாகம் காசு தருது. அதுகூட நாங்கள் வாங்கித் தந்த காசுதாண்டா என்று சொன்னேன. மூஞ்சியத் திருப்பிகிட்டு பேசமுடியாம போயிட்டான்” என்ற கூறியுள்ளீர்.

மேற்படி தங்களது செயலால் நிர்வாகம், நிர்வாகத் தலைவரின் நற்பெயருக்கு பொது மக்களிடம் களங்கம் ஏற்படுத்தியதோடு அல்லாமல் சக தொழிலளாகளிடையே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வைக்கும் செயலாகும். தங்களது இந்த செயல் 1946ஆம் ஆண்டு தொழில் நிறுவனங்கள் (நிலை ஆணைகள்) சட்டம் மற்றும் மாதிரி நிலை ஆணைகள் நிதி 16(y)படி தீய நடத்தையாகும். மேற்படி தீயநடத்தை விதி 17படி தண்டனைக்குரிய செயலாகும்.

எனவே தங்கள் மீது மேற்படி தீய நடத்தைக்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை இந்த அறிவிப்பு கிடைத்த மூன்று தினங்களில் சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தவறினால் இதில் தங்களுக்கு கூறிக்கொள்ள ஏதுமில்லையென கருதி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படி ஜேப்பியாரின் அடாவடித்தனத்தை எதிர்த்து தன்மானத்திற்காக போராடும் அந்த தொழிலாளர்களின் நடத்தை தீய நடத்தையாம். எனில் இந்த ‘தீய’ நடத்தையை தொழிலாளர்கள் முன்னிலும் அதிகமாய் வீரியமாய் செய்வார்கள். ஜேப்பியாரின் ரவுடி ஆட்சிக்கு முடிவுரை கட்டப்போகும் இந்த போராட்டத்தில் மாணவர்களும் இணைந்தால் அது தமிழகத்தில் சுயநிதிக்கல்லூரிகளின் கொட்டத்தை வீழ்த்தும் போராட்டத்தின் முன்னுரையாகவும் இருக்கும்.

ஜேப்பியாருக்கு சீற்றத்தை ஏற்படுத்திய அந்தக் கட்டுரை

ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !

http://www.vinavu.com/2009/06/23/j-p-r-strikes-back/

Last Updated on Tuesday, 23 June 2009 06:03