இறந்த ஒருவரை இறக்கவில்லை என்று கூறுவது, ஒரு சமூகம் தன் பகுத்தறிவைக் கூட இழந்து நிற்கின்றது என்பதே அர்த்தமாகும். இப்படி இறக்கவில்லை என்பது ஆகப் பெரும்பான்மையிடம் உளவியல் சார்ந்த நோயாக இருப்பதைக் நாம் காணமுடியும். சிறுபான்மையிடம் இது பிழைப்பு சார்ந்தது. பினாமி சொத்துச் சார்ந்த அரசியல் மோசடி.
இப்படி பிழைப்பு சார்ந்த அரசியல் மோசடிக் கும்பல், இந்த உளவியல் நோயைக் கொண்டே வாழ முனைகின்றது. மக்கள் பெயரால் தான் சுரண்டியதை தனதாக்கி அதைக் காப்பாற்றவும், அதைக் கொண்டு அது வாழவும் முனைகின்றது. இதற்கு தலைவர் உயிருடன் இருப்பதாக காட்ட வேண்டியுள்ளது. அதாவது பூசாரி எப்படி இல்லாத கடவுளை இருப்பதாக கூறி, பக்தனை ஏமாற்றி பிழைப்பது போன்றதுதான் இதுவும்.
இங்கு மனிதனின் சொந்த பகுத்தறிவுக்கு இடமில்லை. பிரபாகரனை இருப்பதாக கூறுபவர்கள், அவரை உலகறிய காட்டிவிடுவது தானே அறிவுபூர்வமானதாக இருக்கும். இதற்கு வெளியில் எந்த உண்மையும் கிடையாது. போலியான எந்த தர்க்கமும், உண்மையானதாக காட்டும் எந்த போலி முயற்சியும், எதையும் உண்மையாக்கிவிடாது.
தலைவர் உயிருடன் இருப்பதாக கூறுபவன் யார்? அவன் முன் என்ன ஆதாரமுள்ளது? அவனின் தர்க்கத்தின் சாhரம் என்ன? அனைத்தும் அவன் சார்ந்த கற்பனையே. தனிப்பட்ட வெறும் நம்பிக்கை. பிரபாகரனை தாம் உயிருடன் சந்தித்ததாக யாரும் கூறவில்லை. புலிகள் என்று கூறும் சர்வதேச புலி மாபியாக்கள் தவிர, மற்றைய புலிகள் அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை. சர்வதேச புலி மாபியாக்கள் மட்டும், தலைவர் இறந்துவிட்டார் என்கின்றனர்.
உயிருடன் இருப்பதாக கூறுபவர்கள் வைக்கும் தர்க்கத்தின் சாரமோ, விசித்திரமானது. பேரினவாத அரசு சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்ற குற்றத்தை மறைக்க விரும்புகின்றது. தாம் எந்த நிலையில் இப்படிச் செய்தோம் என்ற குற்றத்தை மூடிமறைக்க முனைந்தது. இந்த முரண்பாட்டை வைத்துத்தான், தலைவர் உயிருடன் உள்ளார் என்போர் தர்க்கம் செய்கின்றனர். இங்கு அரசு தன் குற்றத்தை மூடிமறைக்க செய்த மோசடியைக் கொண்டு, மற்றொரு மோசடியை புலிகள் அரங்கேற்ற முனைகின்றனர். விசித்திரமான வக்கிரமான குற்றவாளிகள்.
பேரினவாதம் மக்களைக் கொன்றதுடன், சரணடைந்தவர்களையும் கொன்றது. இந்த யுத்தக் குற்றத்தை, அங்கிருந்த மக்கள் அறிவார்கள். அதை மூடிமறைக்க, அந்த மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்துள்ளது. அங்கு செல்ல வெளிநாட்டு தன்னார்வக் குழுக்களுக்கு தடை. எதிர்க்கட்சிக்கு தடை. தங்கள் நாய்களுக்கு மட்டும் அனுமதி. தன்னார்வக் குழுக்களின் வாகனங்கள் உட்செல்லத் தடை. காரணம் அவர்களை கண்காணிக்கும் பிரிவு, வாகனத்தைப் பின்தொடர முடியாது. குற்றங்களை உலகறியா வண்ணம் தடுக்க, வாகனம் உட் செல்லத்தடை. இப்படி அரச பாசிசம் தன்னை மூடிமறைக்கத்தான் முரண்பாட்டுடன் இயங்குகின்றது.
இப்படி அரச முரண்பாடுகளை வைத்து தலைவரின் சரணடைவை மறுக்க முனைகின்றனர். தலைவர் இறக்கவில்லை என்கின்றனர். இப்படி மக்களுக்கு உண்மை தெரியாத வண்ணம், மோசடி செய்ய முனைகின்றனர்.
1. பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூற முனைபவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன?
2. சரணடைந்த பிரபாகரனை வீரமரணமடைந்ததாக கூறுபவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன?
இரண்டு பிரிவும் மக்கள் நலனை முன்னிறுத்தி இதைச் சொல்லவில்லை. மக்களை ஏமாற்றி மோசடி செய்து பிழைக்கவே, இந்தக் கூத்தை அரங்கேற்றுகின்றனர்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூற முனைபவர்கள் யார்?
புலிகளின் பினாமிச் சொத்தை உள்ளுர்pல் வைத்திருந்தவர்கள். மக்களிடம் பணம் திரட்டியவர்கள். எந்த உழைப்பிலும் ஈடுபடாது, அமைப்பின் பெயரால் தின்றவர்கள். இந்தியாவில் புலிப்பினாமிய தமிழ்தேசியம் பேசிப் பிழைத்த கூட்டம்.
இவர்கள் தங்கள் வாழ்வை தக்கவைக்க, அவர்களுக்கு தலைவர் தேவைப்படுகின்றார். இவர்கள் நாட்டுக்கு நாடு பிரிந்து இருந்தபோதும், தமக்குள் பிரிந்து கிடந்த போதும், இவர்களின் குறுகிய நலன்கள் தலைவரை உயிருடன் இருப்பதாக காட்ட முனைகின்றது.
இவர்களுடன் மோதும் சர்வதேச மாபியா புலிகளிடம் இருந்து புலிப் பினாமிச் சொத்தைப் பாதுகாக்க, தலைவரை உயிருடன் வைத்திருப்பது இவர்களுக்கு அவசியம். அவரின்றி சொத்தைக் கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பதுதான், தலைவரை உயிருடன் இருக்கவைக்கும் மர்மம்.
இதன் மூலம் சரணடைந்த தலைவரின் மரணத்தையும், அந்த அரசியலையும் மூடிமறைத்து தொடர்ந்து மக்களை ஏமாற்றி சுற்றி பிழைக்க முடியும். தொடர்ந்து வசூல் செய்ய முடியும்.
தமிழ்நாட்டில் புலிப் பினாமி அரசியல் செய்யும் கும்பல், தலைவரின் பெயரில் தொடர்ந்து அரசியலில் நக்கமுடியும். இப்படி தொடர்கிறது இவர்களது கனவுகள்.
சரணடைந்த பிரபாகரனை வீரமரணமடைந்தாக கூறுபர்கள் யார்?
உள்ளுர் புலிப்பினாமிச் சொத்தைக் கைப்பற்ற விரும்பும், புலிகளின் சர்வதேச மாபியாக் கும்பல். தலைவரின் மரணத்தைக் காட்டி, உள்ளுர் அதிகாரத்தை பெற முனைகின்றனர். இதன் மூலம், உள்ளுர் புலிப்பினாமிகளின் சொத்தை அவர்கள் அபகரிக்க முனைகின்றனர்.
இப்படி மரணத்தை வைத்து, இவர்களுக்குள் சொத்துப் போராட்டம். இதில் வேடிக்கை என்ன வென்றால், சரணடைந்து மரணித்தவரை, வீரமரணம் அடைந்தாக கூறுவது தான். இதில் இப்படியும் மோசடி.
இதன் மூலம் சரணடைவைச் சுற்றி இயங்கிய துரோக அரசியல் முதல் தாங்கள் காட்டிக் கொடுத்த துரோகம் வரை, அனைத்தையும் இவர்கள் மூடிமறைக்க முனைகின்றனர்.
பகுத்தறிவை மறுக்கும் மனநோய்
மக்களை மந்தையாக வளர்த்தவர்கள் புலிகள். பகுத்தறிவுள்ள மனிதனை மந்தையாக்க, அவனின் புலனுறுப்பை சுயமற்ற ஒன்றாக மாற்றிவிடுகின்றனர். மாட்டு வண்டிலை ஓட்டும் நபரின் அசைவுக்கு ஏற்ப, அவரின் சத்தத்துக்கு ஏற்ப, மாடுகள் செயற்படும்.
இப்படி அறிவிழந்து, சுயசிந்தனை இழந்து, மனநோயாளியாக்கியவர்களையே, புலிகள் தம் பின்னால் வைத்துள்ளனர். அந்த மனநோயாளிகளை கிள்ளினால் சிரிக்கும், முறுக்கினால் நக்கும். இப்படி உருவாக்கப்பட்டவர்கள் தான், புலிகளின் பின்னால் உள்ளவர்கள்.
மக்கள் நலன் சார்ந்த எந்த உணர்வும் இங்கு இவர்களிடம் கிடையாது. மக்களை புலிகள் ஒடுக்கிய போது கூட, அதை எதிர்க்காதவன், எப்படி மக்களுக்காக புலியுடன் போய் நிற்க முடியும்;. மனநோய் அனைத்தையும் ஆட்டிப்படைக்கின்றது.
வெறும் நம்பிக்கை, கற்பனையான புனைவு, பிரமைகள் சார்ந்த பொய்கள் என்று, போலியான ஒரு உளவியல் உலகத்தில் வாழ்கின்றனர். எப்படி மரணத்தை நம்பவில்லையோ, அப்படி தலைவரின் சரணடைவையும் நம்ப மறுக்கின்றனர். இப்படி கற்பனையான உலகத்தில் வாழ்கின்ற மனநோயாளிகள் தான் இவர்கள்.
தமிழ் மக்கள் தப்பியோடாத வண்ணம் சுட்ட புலிகள், ஏன் சரணடைய முடியாது!? மக்களை பேரினவாதத்திடம் பலிகொடுத்தவர்கள், ஏன் தம்மைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள்!? மககள் விரோத அரசியலையும், அடக்குமுறையையும் அரசியலாக கொண்டு மக்களை அடக்கியாண்டவர்கள், ஏன் உயிர்ப்பிச்சை கேட்ட மண்டியிடமாட்டார்கள்!? துரோக அரசியலைத் தவிர, புலியிடம் வேறு எதுவும் இருக்கவில்லை.
பி.இரயாகரன்
19.06.2009