Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ரமாபாய் நகர் துப்பாக்கிச்சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை !

ரமாபாய் நகர் துப்பாக்கிச்சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை !

  • PDF

ஜூலை 11, 1997 இந்த நாளை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களால் மறக்கவே முடியாது. இந்து மதவெறி பா.ஜ.க.சிவசேனா கூட்டணி மகாராஷ்டிர மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த காலமது.

 அன்று அம்மாநிலத் தலைநகர் மும்பயில், காட்கோபர் என்ற பகுதியில் உள்ள மாதா ரமாபாய் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் மீது மும்பய் போலீசைச் சேர்ந்த ரிசர்வ் படையணி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட பத்து தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டனர்; 26 பேர் படுகாயமுற்றனர்.


இந்து மதவெறிக் கும்பல் ஆட்சியிலிருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு “யாரோ” சில சமூக விரோத சக்திகள் அக்காலனியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தினர். ஆதிக்க சாதி திமிர் பிடித்த அக்கிரிமினல்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ரமாபாய் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமைக்காகப் போராட்டத்தில் இறங்குவதை இந்து மதவெறிக் கும்பலால் சகித்துக் கொள்ள முடியுமா? சட்டம்ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்போராட்டத்தை ஒடுக்கியது, இந்து மதவெறிக் கூட்டணி அரசு.


இச்சம்பவம் நடந்து முடிந்து ஏறத்தாழ 12 ஆண்டுகள் கழித்து, மே 7, 2009 அன்று அத்துப்பாக்கிச் ‹ட்டைத் தலைமையேற்று நடத்திய துணை ஆய்வாளர் மனோகர் கதமுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை அப்போலீசு பயங்கரவாதிக்குப் பெற்றுத் தரத் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. போலீசுக்கு எதிராக, காக்கிச் சட்டை கிரிமினல்களைக் காப்பாற்ற முயன்ற அரசு இயந்திரத்துக்கு எதிராகச் சாமானிய மக்கள், அதிலும் தாழ்த்தப்பட்டோர் போராடி வெற்றி பெறுவது எளிதான ஒன்றா?


இந்த அரசு பயங்கரவாத படுகொலையை விசாரித்த குண்டேவர் கமிசன், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி போலீசு அவிழ்த்துவிட்ட அண்டப் புளுகுகளை ஏற்றுக் கொள்ள மறுத்த்தோடு, போலீசார் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப் பரிந்துரைத்தது. எனினும், இவ்வழக்கைப் பதிவு செய்வது, சாட்சியங்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுப் பதிவு செய்வது, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வது என இவ்வழக்கு தொடர்பான ஒவ்வொரு விசயத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது எனச் சுட்டிக் காட்டுகிறார், சிறப்பு அரசு வழக்குரைஞர் பி.ஜி. பன்ஸோட்.


வழக்கு விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, அரசு வழக்குரைஞரை நியமிப்பதற்கு நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, மகாராஷ்டிர அரசு. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த பொய் சாட்சியங்களை உருவாக்கும் கிரிமினல் வேலைகளில் போலீசு இறங்கியது. குறிப்பாக, போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்கள் பெட்ரோல் ஏற்றி வந்த டாங்கர் லாரி ஒன்றை எரித்துவிட முயன்றதாகவும், அது மட்டும் நடந்திருந்தால், ரமாபாய் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் எரிந்து சõம்பலாகியிருக்கும் என்றும் அதைத் தடுக்கவே உடனடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்றும் கடைசி வரை புளுகி வந்தது, போலீசு. இப்புளுகை நிரூபிக்க சிலர் பெட்ரோல் லாரி மீது ஏறி தீ வைக்க முயலுவதைப் போல ஒரு வீடியோ படத்தைத் தயாரித்து, அதனைப் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டுப் பலருக்கும் போட்டுக் காண்பித்தும் வந்தது.


பெட்ரோல் இல்லாத காலி டாங்கர் லாரியொன்றினை போலீசை ரமாபாய் நகருக்கு அருகே கொண்டுவந்து நிறுத்தி வைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியதை வழக்கு விசாரணையின்பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் நிரூபித்தனர். போராடிய தாழ்த்தப்பட்ட மக்களைப் போக்கிரிகள், பொறுக்கிகள், பொறுப்பில்லாதவரகள் என அவதூறு செய்து அவமானப்படுத்துவதை வழக்கு விசாரணை நெடுகிலும் வாடிக்கையாகக் கொண்டிருந்தது, போலீசு. எல்லாவற்றுக்கும் மேலாக, இத்துப்பாக்கிச் சூட்டில் பாதிப்படைந்தவர்கள் மீதே கலவரத்தில் ஈடுபட்டதாகப் பொய் வழக்குப் போட்டு மிரட்டிப் பார்த்தது, போலீசு. 


இத்தீர்ப்பை வரவேற்கும் அதே சமயம், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இத்தீர்ப்பு முழுமையான நியாயத்தை வழங்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். இத்துப்பாக்கிச் சூட்டைக் கொலை வழக்குக் குற்றப்பிரிவுகளின் கீழ் விசாரிக்க மறுத்துவிட்டது, நீதிமன்றம். ரமாபாய் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்ட விதத்தைத் தெரிந்து கொண்டால்தான், நீதிமன்றம் இழைத்துள்ள அநீதியைப் புரிந்துகொள்ள முடியும்.

 
ரமாபாய் நகரில் உள்ள அம்பேத்கர் சிலையை வணங்கிவிட்டு வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த கௌசல்யாபாய் அன்று (ஜூலை 11, 1997) காலை 6 மணிக்கு அம்பேத்கர் சிலையை வணங்க வந்தபொழுது, அச்சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்திருப்பதைக் கண்டு மனம் உடைந்து போனார். அவர் இந்த அக்கிரமத்தை உடனடியாக அருகிலுள்ள புறக் காவல் நிலையத்தில் புகாராகச் சொன்னார். அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டவுடனேயே ரமாபாய் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சாலை மறியலில் இறங்கினர். விசாரணைக்கு வந்த போலீசு அதிகாரிகள் 7.30 மணியளவில் செருப்பு மாலையை அகற்றினர். ரிசர்வ் போலீசு படை 7.45 மணியளவில் ரமாபாய் நகருக்கு 150 மீட்டர் தூரத்தில் குவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே, எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


நிராயுதபாணியாகப் போராடிக் கொண்டிருந்த அம்மக்களை அப்படியே கொன்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், போலீசு ஏறத்தாழ 15 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது. கொல்லப்பட்ட அனைவருமே தலையில், நெஞ்சில், வயிற்றில் குண்டடிப்பட்டு அதே இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்து போனார்கள். அம்பேத்கர் சிலைக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதை போலீசிடம் புகார் செய்த கௌசல்யாபாயும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ரோட்டில் வெடி வெடிக்கிறார்களோ என வேடிக்கை பார்க்க வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த 14 சிறுவன் தலையில் குண்டடிபட்டு இறந்து போனான். போலீசின் கொலைவெறியை நிரூபிப்பதற்கு இத்தடயங்களே போதுமானது. "சுட்டுக் கொல்” என மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவினால்தான், போலீசார் எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அச்சமயத்தில் செய்திகள் பரவிக் கிடந்தன. இத்துணை சாட்சியங்கள் இருந்தும் நீதிமன்றம் இதனைக் கொலைக் குற்றமாகக் கருதவில்லையென்றால், அதனின் உள்நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கித்தான் தீர வேண்டும்.


ரமாபாய் நகரத் தாழ்த்தப்பட்ட மக்கள் ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த துணை ஆய்வாளர் மனோகர் கதமுக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். இதுவொன்றும் அநியாயமான கோரிக்கையல்ல. நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்காக, அம்மோதலில் ஒன்பது பத்து போலீசார் உயிர் இழந்ததற்காக அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை விதிக்கலாம் என்றால், மனோகர் கதமுக்கு மட்டும் விதிக்கக் கூடாதா? அந்தக் கட்டிடத்தைவிட, அந்த போலீசுக்காரர்களின் உயிரைவிட தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் மலிவானதில்லையே!


ஆந்திராவைச் சேர்ந்த இரு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வறுமையின் காரணமாக ஒரு பேருந்தை வழிமறித்துக் கொள்ளையடிக்க முயன்றபொழுது, எதிர்பாராதவிதமாக நடந்துவிட்ட விபத்தால் அப்பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள் இறந்துவிட்டனர். அவ்விளைஞர்களின் அறியாமை, வறுமை ஆகிய காரணிகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்ட நீதிமன்றம் அவ்விளைஞர்களுக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஆனால், அதிகாரத் திமிரோடும், சாதித் திமிரோடும் நடந்த இக்கொலை வழக்கிலோ மனோகர் கதமுக்கு கருணை காட்டப்பட்டிருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லி அவருக்கு உத்தரவு போட்ட மேலதிகாரிகள், இந்து மதவெறிக் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் வழக்குக் கூண்டில் ஏறாமலேயே தப்பிவிட்டார்கள். நீதிமன்றம் இப்படி இக்குற்றவாளிகளிடம் கருணையோடு நடந்து கொண்டதற்கு மேல்சாதிப் பாசமும், வர்க்கப் பாசமுமன்றி வேறென்ன காரணமாக இருந்துவிட முடியும்?


கட்டுரையாளர்: குப்பன்

 

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,

Last Updated on Wednesday, 17 June 2009 05:37