Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்

நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்

  • PDF

"தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்." - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக் கட்சியானது, ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய சிங்கள கட்சிகளிடமிருந்து பல அரசியல் கொள்கைகளை கற்றுக் கொண்டுள்ளது.

 தமிழீழ கோரிக்கை எழுந்த பிரிவினைக்கான காரணிகளை இனங்கண்டு அழித்து, இலங்கையில் ஒற்றையாட்சியை வலுப்படுத்துவதும், அந்தக் கட்சிகள் முன்வைத்த அரசியல் திட்டமாகும்.பல்வேறு தேசிய இனங்களின் நலன் பேணும், அல்லது பிராந்தியக் கட்சிகள் பிரிவினைவாத சக்திகளாக கருதி தடை செய்யப் படப்படும். அனைத்து இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட உள்ளன. இந்த பாசிச நடைமுறையின் பரிணாம வளர்ச்சியாக,ஒரே கட்சியின் (ளுசi டுயமெய குசநநனழஅ Pயசவல) சர்வாதிகார ஆட்சியின் கீழ் வருவதற்கான அறிகுறிகள் தற்போது தெரியவாரம்பிக்கின்றன.

 

சிங்கள இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய, மற்றும் ஜே.வி.பி. போன்றன இதுவரை காலமும், ஆயுதபாணி புலிகளையும், தமிழ்தேசிய கட்சிகளையும், (தமிழ்) "இனவெறி அமைப்புகள்" என்றே சித்தரித்து வந்துள்ளன.சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் வன்முறைச் சம்பவங்களை அதற்கு உதாரணமாக காட்டப்படுவது வழமை. இலங்கை பிரச்சினையைப் பொறுத்த வரை, தமிழ் ஊடகங்கள் என்றாலும், சிங்கள ஊடகங்கள் என்றாலும் பிரச்சாரத் தொனியில் அமைந்த, மிகைப் படுத்தப் பட்ட செய்திகளையே வெளியிட்டு வருகின்றன. பெரும்பான்மை தமிழர்கள் தமிழ் ஊடகங்கள் சொல்வதை தமது சொந்தக் கருத்தாக்கியுள்ளதைப் போல, சிங்களவர்களும் சிங்கள ஊடகங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றனர். சுருக்கமாக சொன்னால், தனது இனம் பாதிக்கப்படும் போது மட்டும் அவலக்குரல் எழுப்புவதும், மற்ற இனம் பாதிக்கப்பட்டால் அடக்கி வாசிப்பதும் வழமையாகி விட்டது. உலகில் எந்த நாட்டிலும், இனப்பிரச்சினை தீர்க்க முடியாத சிக்கலாக இழுபடுவதற்கு, இனப்பெருமிதம் சார்ந்த பிரச்சாரம் முக்கிய தடையாக உள்ளது.

 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புலிகள் சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதை சாட்டாக வைத்து தடை செய்யப்போவதாக கோத்தபாய காரணம் கூறியுள்ளார். அன்று த.தே.கூ. பெருமளவு கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதாக தேர்தல் சமயத்தில் முறைப்பாடுகள் வந்த போதும் அதனை விசாரிக்காத, அல்லது அந்தக் குற்றச்சாட்டுக்காக தேர்தலை இரத்து செய்யாத இலங்கை அரசு, தக்க தருணம் வரும் வரை காத்திருந்தது போல தெரிகின்றது. இது போன்றதே, த.தே.கூ. உறுப்பினர்களின் புலிகளுடன் தொடர்பு சம்பந்தமான குற்றச்சாட்டும். புலிகளுடனான தொடர்பை குற்றமாக காட்டி, அரசுக்கெதிரான எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட இருப்பதையே இது கோடி காட்டுகின்றது.

 

சமாதான பேச்சுவார்த்தை நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததை மறுப்பதற்கில்லை. இலங்கைத் தேர்தல்களில் கள்ள வாக்குப் போடுவதென்பது சர்வசாதாரணமாக அனைத்துக் கட்சிகளும் தெரிந்தே செய்யும் குற்றமாகும். இருப்பினும், பெருமளவு வட-கிழக்கு மாகாண தமிழ் மக்கள் த.தே.கூ. கட்சிக்கு தமது வாக்குகளை வழங்கியதையும் மறுப்பதற்கில்லை. த.தே.கூ. வெற்றி பெற்றால், புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சமாதானம் மலரும், என்பது அப்பாவி தமிழ் மக்களின் நப்பாசையாக இருந்தது. வட-கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சமாதானத்திற்கான அபிலாஷைகளை, புலிகள் பின்னர் புறக்கணித்து போருக்கு தயாரானது வேறு கதை.

 

சமாதான ஒப்பந்தத்தை பயன்படுத்தி, வட-கிழக்கு மாகாணத்தில் அரசியல் வேலை செய்த புலிகள், த.தே.கூ.ப்பிற்கு மக்கள் வாக்குப் போட வேண்டுமென்று பிரச்சாரம் செய்திருந்தனர். புலிகள் தம்மை எப்போதும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அமைப்பாக காட்டி வந்துள்ளனர். "சாத்வீக போராட்டங்களால் எந்தப் பலனும் இல்லை, ஆயுதப் போராட்டமே சிறந்தது" என்ற கோட்பாட்டின் படி நடந்து கொண்டனர். இலங்கை அரசு நடத்தும் தேர்தல்களில் பங்குபற்றுவது, அரசை வலுப்படுத்த உதவும் என்று சரியாகவே கணிப்பிட்டிருந்தனர். 1981 ம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்களை கூட சுட்டுக் கொன்று, தேர்தலை குழப்ப முயற்சித்தனர்.

 

பிற்காலத்தில், புலிகளால் துரோகக் குழுக்கள் என அழைக்கப்படுவோர் தேர்தலில் வென்று அதிகாரத்திற்கு வரத்தொடங்கினர். அரசும் இவர்களை தமிழர் பிரதிநிதிகளாக வெளி உலகிற்கு காட்டி வந்தது. தமது அரசியல் சார்ந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என்பதை, புலிகள் சற்று காலந் தாழ்த்தியே புரிந்து கொண்டனர். இந்திய இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த 1988 காலத்தில் நடந்த பொதுத் தேர்தலில்,தம்முடன் நட்புறவைப் பேணிய ஈரோஸ் உறுப்பினர்களின் தெரிவுக்கு புலிகள் மறைமுக ஆதரவு வழங்கினர்.

 

ஈரோஸ் அமைப்பினர் ஒரு காலத்தில் ஆயுதமேந்திய ஈழப்புரட்சி பற்றி பேசியவர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் போது, ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தவர்கள். த.தே.கூ. வைப் போலன்றி,சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இருந்தனர். இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகுபவர்கள், "ஈழம் கோரும் பிரிவினைவாதத்திற்கு எதிராக" சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி அரசாங்க அதிகாரிகள் கூட பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிப்பதில்லை என்று சத்தியப்பிரமாணம் எடுத்து விட்டு தான் பதவி நாற்காலியில் அமர வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் அன்று (ஈழத்திற்கு எதிரான) சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்து, பாராளுமன்ற பதவிகளை தியாகம் செய்தனர். கொள்கைக்காக பதவியை பறிகொடுத்த ஈரோஸ் உறுப்பினர் ஒருவர், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார். சுவிஸ் அரசு குறுகிய காலத்திலேயே அவருக்கு அகதி அந்தஸ்து கொடுத்து கௌரவித்தது.

 

தற்போதுள்ள த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழீழப் பிரிவினைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் எடுத்து விட்டு, பாராளுமன்றப் பதவியில் அமர்ந்திருந்ததை காரணமாக காட்டியே, அரச அடக்குமுறை சட்டம் அவர்கள் மேல் பாய வாய்ப்புள்ளது. இதே நேரம், வெளி நாடுகளுக்கு பயணம் செய்து தமிழீழ ஆதரவு பிரச்சாரம் செய்ததற்காக, ஏற்கனவே சில உறுப்பினர்கள் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். புலனாய்வுத்துறை பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவர்களது பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தது. அரச புலனாய்வுத்துறை இதற்கென பெரும் பிரயத்தனப்படத் தேவையில்லை. புலிகள் சார்பான ஊடகங்கள் பகிரங்கமாகவே இத்தகைய பேச்சுகளை ஒலிஃஒளி பரப்புகின்றன.

 

சமாதான பேச்சுவார்த்தையில் கூட்டாளியான இலங்கை அரசும், த.தே. கூ. பாராளுமன்றத்தில் புலிகளை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என எதிர்பார்த்தது. சர்வதேசமும் இதே காரணத்திற்காக கள்ள வாக்குகள் குறித்த முறைப்பாடுகளை புறக்கணித்தது. அரசும், புலிகளும் அதிகாரத்தை பங்குபோட்டுக் கொள்ள வேண்டும் என அவை எதிர்பார்த்தன. த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழத்தை அல்லது புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசி வந்த போதும், இலங்கை அரசு அப்போது அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹெல உறுமைய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் பிரிவினைவாத த.தே.கூ. உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தி வந்தன. அப்போதெல்லாம் த.தே.கூ.பின் பிரசன்னம் தனக்கு அவசியம் என்றே அரசு எண்ணியது. இதற்கு சர்வதேச அழுத்தம் காரணம், எனக் கூறுவதை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

 

ஆயுதமேந்தியுள்ள காரணத்திற்காக, அல்லது பயங்கரவாத செயல்களைப் புரிந்த காரணத்திற்காக, புலிகள் இயக்கத்தோடு அரசு பேச மறுத்தாலும், த.தே.கூ.வுடன் பேச மாட்டேன் என தட்டிக் கழிக்க முடியாது. பல நாடுகளின் பிரச்சினைகள் அரசியல் கட்சிகளின் மத்தியஸ்தத்தின் ஊடாக தான் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வட அயர்லாந்து பிரச்சினை தீர்க்கப்பட்ட விதம். தலைமறைவு ஆயுதக்குழுவான ஐ.ஆர்.ஏ., "சின் பெயின்" என்ற கட்சியை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க விட்டபோது, பிரிட்டிஷ் அரசால் தடை செய்ய முடியவில்லை.(இலங்கை அரசைப் போலவே, பிரிட்டிஷ் அரசும் பயங்கரவாத அமைப்புடன் பேசுவதில்லை என்ற கொள்கையை கொண்டிருந்தது.) இறுதியில் சின் பெயினுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்த பின்னர் தான், ஐ.ஆர்.ஏ. ஆயுதப் போராட்டத்தை கைவிட முன்வந்தது.

 

2002 ம் ஆண்டு முதல், இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலங்களில், இலங்கை சென்ற பிரிட்டிஷ், அயர்லாந்து இராஜதந்திரிகள் "வட-அயர்லாந்து தீர்வை" மேற்கோள் காட்டி பேசி வந்துள்ளனர். இப்போதும் சில இடதுசாரிகள் நேபால் தீர்வை உதாரணமாகக் காட்டும் போது, தமிழ் தேசியவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. எவராவது வட-அயர்லாந்து தீர்வை எடுத்துக் காட்டும் போது மட்டும், அவர்கள் அதேயளவு ஆக்ரோஷத்தோடு எதிர்ப்பதில்லை. இதற்கெல்லாம் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடு தான் காரணம்.

 

2002 ம் ஆண்டு, பிராபாகரனும், அன்றைய பிரதமர் ரணிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சம்பவத்தை வெளியிட்ட சண்டே டைம்ஸ் பத்திரிக்கை "னு-னயல" என்று தலைப்பிட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க-ஆங்கிலேய படைகள் பிரெஞ்சுக் கடற்கரையில் தரையிறங்கிய நிகழ்வே னு-னயல என அழைக்கப்படுகின்றது. அதற்குப் பின்னர் இறுதித் தீர்வு எட்டப்படும் காலம் தொடங்கி விட்டது எனக் குறிப்பிட, னு-னயல என்ற சொற்பதம் பாவிக்கப்படுகின்றது. இலங்கையின் மேற்குல சார்பு பத்திரிகையான சண்டே டைம்ஸ், இலங்கையின் இருபதாண்டு போரை எப்படியேனும் நிறுத்துவதென்று சர்வதேச நாடுகள் களமிறங்கி விட்டன என்பதை மறைமுகமாக தெரிவித்தது.

 

சமாதான காலத்தில், புலிகள் அமைப்பு த.தே.கூ.வின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை. புலிகளைத் தவிர வேறு எந்த தமிழ் அமைப்பிற்கும் பேச்சுவார்த்தை மேடைக்கு வருமாறு அழைப்பு விடப்படவில்லை. இது புலிகள் பெரிதும் விரும்பிய ஏக பிரதித்துவ கோட்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி. இருப்பினும், "பயணம் செய்ய ஹெலி காப்டர் தரவில்லை" என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகவெல்லாம் பேச்சுவார்த்தை தடைப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்.



நோர்வேயின் அனுசரணையாளர் எரிக் ஸொல்ஹைம் தனது விசனத்தை இவ்வாறு தெரிவித்தார்:"இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது சர்வதேச சமூகம் முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை இழந்தால், உலகின் பிற பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளை கவனிக்கப் போய் விடுவார்கள். தமிழரின் பிரச்சினை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு விடும்." இது ஒன்றும் எரிக் சொல்ஹைமின் தீர்க்கதரிசனம் அல்ல. உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்கும் என பாண்டித்தியம் பெற்ற மேலைநாட்டு ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைப் படி தான் மேற்கத்திய அரசுகள் செயல்படுகின்றன. ஒரு பிரச்சினையை முகாமைத்துவம் செய்வது சம்பந்தமாக, எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார்கள்.

 

த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களின் தேவைகள் குறித்து எப்போதாவது பேசியதாக எனக்கு நினைவில்லை. 2004 ம் ஆண்டு, சுனாமி அலைகள் தாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்த இயற்கை அனர்த்தத்தின் போதும், அண்மையில் மனிதப் பேரவலத்தை தோற்றுவித்த இனவழிப்பு யுத்ததின் போதும், தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தமது தொகுதி மக்களை சென்று பார்க்கவில்லை. அதற்கு மாறாக ஒரு குழுவினர் மேலைத்தேய நாடுகளிலும், இன்னொரு குழுவினர் இந்தியாவிலுமாக "லாபி"(டுழடிடில) வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த போது, ஏகாதிபத்தியத்திடம் தமிழீழத்தை யாசித்துக் கொண்டிருந்தார்கள்.

 

சுமார் இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், வைகுந்தவாசன் என்ற புலம்பெயர்ந்த ஈழத்து புத்திஜீவி ஒருவர், ஐ.நா.மன்றக் கூட்டத்தில் திடீரென நுழைந்து தமிழீழத்தின் பிரதிநிதியாக உரையாற்றினார். அப்போது இந்த "சர்வதேச ஸ்டண்ட்" புலிகளிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. "நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழம்" என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தனர். தாயகத்தில் போராடும் மக்களிடம் அந்நியப்பட்ட எந்தவொரு தமிழீழப் பிரகடனமும் செல்லாக்காசாகி விடும் என்று மிகச் சரியாகவே கணித்திருந்தனர். ஈழப் போரின் இறுதி முடிவும் தற்போது அதே போன்ற நிலையை தோற்றுவித்துள்ளமை ஒரு கசப்பான முரண்நகை.

 

ஈழத்தில் மக்கள் அடுத்த வேலை சாப்பாடு எப்படிக் கிடைக்கும் என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். அந்த மக்கள் உணவு,வீடு,வேலை என்று தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமக்கான அரசியல் தலைமையைப் பொறுத்த வரை, "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கென்ன", என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். தாயகத்தின் யதார்த்தத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட புலம்பெர்ந்த தமிழர்கள், மேலைத்தேய நகரத் தெருக்களில் தமிழீழம் வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் யாரும் ஈழம் சென்று போராடப் போவதில்லை. இலங்கை அரசோ, "ஈழம்" என்ற சொல்லையே அடுத்த தலைமுறை நினைத்துப் பார்க்க முடியாதவாறு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

http://kalaiy.blogspot.com/2009/06/blog-post_05.html

Last Updated on Friday, 05 June 2009 07:35