Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சரணடைந்து மரணித்த துரோகிகளும், இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும்

  • PDF

இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர். 

 

இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து மட்டும்தான், இந்தக் கொடுமைக்கு எதிராக குரல்கள் எழ முனைகின்றது. அவையும் மக்களுக்காக அல்ல, புலத்து புலி தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் தக்கவைக்கும் அதே துரோக அரசியலுக்காக. தமது கடந்தகால தவறுகளை திரும்பிப் பார்க்காத, அதே மக்கள்விரோத அரசியல். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டு நடத்திய அதே பாசிச அரசியல்.

 

இன்று பேரினவாதத்தின் திறந்தவெளிச் சிறைகளில் சிக்கியுள்ள மக்களை, இந்த அவலமான நிலைக்கு கொண்டு வந்தவர்கள் புலிகளே. புலிகள் இந்த மக்களை வதைத்து, அவர்களை படுகேவலமாக கொல்ல உதவியும், கொன்றும், இறுதியாக இன்று  இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இந்தப் புலிகள்தான். இதைப்பற்றி எந்த சுயவிமர்சனமுமற்ற நிலையில், மீளவும் அந்த மக்களை காட்டி, அதே மக்கள் விரோத அரசியல்.

 

இதற்கு பொய், புரட்டு, பித்தாலாட்டம், நடிப்பு, வேஷம் என்று எத்தனையோ கூத்துக்கள். இந்த நெருக்கடியில் இருந்து, அந்த மக்கள் சுயமாக சொந்தப் போராட்டவழிகளில் போராட உதவுவதற்கு பதில், தமது புலத்து பிழைப்புக்கேற்ற அரசியல் மூலம் அவர்களை பயன்படுத்துகின்றனர்.

 

இவர்கள் யுத்தத்தின் போது தமிழ் மக்களை பணயம் வைத்தவர்கள். அவர்களை பேரினவாதத்தின் துணையுடன் கொன்றவர்கள். இதில் இருந்த தப்ப முனைந்தவர்களையும் ஈவிரக்கமின்றி கொன்றவர்கள்.

 

இப்படி இவர்களின் சொந்த அரசியல் தேவைக்காக கொல்லப்பட்டவர்களைக் காட்டி, புலத்து புலிகள் ஏகாதிபத்திய தயவுக்கான ஒரு போராட்டத்தை நடத்தினர். இன்றும் அதே பாணியில், அதே போராட்டம். புரட்டு அரசியல் மூலம், அரசியல் பித்தலாட்டம். அன்று மக்களை பலியிட்டு நடத்திய போராட்டம், தம் தலைமையையே காட்டிக் கொடுக்கும் சரணடைவாக மாறியது.

 

எஞ்சிய புலித்தலைமை வீரமரணத்தையோ, தற்கொலையோ தேர்ந்தெடுக்கவில்லை. அது சரணடைவை தேர்ந்தெடுத்தது. அந்தச் சரணடைவு யாரிடம் என்பதில் தான், புலத்து புலியின் காட்டிக்கொடுப்பு, ஒரு திட்டமிட்ட சதியாக இருந்தது.

 

ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தம் தலைமையை நம்பி போராடி மடிந்தபோதும், அவர்களின் தியாக உணர்வு எல்லயைற்ற ஒன்றாக இருந்தது. இதற்கு மாறாகவே, எஞ்சிய தலைமையின் சரணடைவு நடந்தேறியது. இவர்களை நம்பி இறுதிவரை போராடி மடிந்த தியாகங்களை எல்லாம் காட்டிக்கொடுத்த, ஒரு துரோகமாக இது அமைந்திருந்தது. இவர்கள் தாம் எதை இலட்சியமாக கூறினரோ,  அதற்கு மறுதலையாக மரணத்தை தழுவினர். அதாவது இவர்கள் தாம் இறுதிவரை போராடி மடியமுவில்லை. தற்கொலை செய்து கொள்ளவுமில்லை.

 

தம்மை பாதுகாத்துக்கொள்ள, இலட்சகணக்கான மக்களை பணயம் வைத்து பல ஆயிரம் மக்களை கொல்ல உதவியவர்கள் இவர்கள். இறுதியாக அவர்கள் தாம் சுகபோகமாக வாழ்வதற்காக, அவர்கள் தேர்ந்தெடுத்த வழி துரோகச் சரணடைவு. அந்தத் துரோகம் அவர்களுக்கு துரோக அரசியல் வாழ்வை அழிக்கவில்லை, ஈனத்தனமான இழிவான மரணத்தையே இறுதியில் பரிசாக வழங்கியது.

 

இந்தச் சரணடைவு மூலமான துரோகமும், மரணமும் புலிச் சமூகத்தின் முன் ஒரு அதிர்வுதான்.  அவர்களை நம்பி தாம் கட்டியிருந்த பிரமையையும், உளவியலையும் இலகுவாக அவர்களால் கைவிட முடியவில்லை. இதைத்தான் புலத்துப் புலிகள் தமது பிழைப்புக்கு ஏற்ப, இன்று  பயன்படுத்துகின்றனர்.   

         

தலைவர் இறக்கவில்லை, இன்னமும் உயிருடன் உள்ளார் என்ற பொய் புரட்டுகள் மூலம், அதை மானசீகமான உளவியல் அதிர்ச்சி மூலம், நம்பிக்கை மூலம், நம்பவைக்க முனைகின்றனர். புலியின் மற்றத்தரப்பு தலைவரின் வீரமரணம் பற்றி கூறுகின்றது. இதற்குள் துரோகம் தியாகம் என்று ஆளுக்காள் முத்திரை குத்தி, இதைச் சரிசெய்ய முனைகின்றனர். இப்படி பொய் புரட்டு மூலம் கட்டும் நேர்மையற்ற அரசியல் தான், இன்று மண்ணில் வாழும் தமிழ் மக்கள் பற்றியும் கதைக்கின்றது. அடிப்படையில் நேர்மையற்ற, உண்மையற்ற தலைமை, புலத்து மக்களை ஏமாற்றிப் பிழைக்க முனைகின்றது.  

 

இதன் மூலம்

 

1. புலித் தலைமையை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்த தமது சொந்த அரசியல் சதியை மூடிமறைகின்றது. அதை ஒரு தரப்பின் மீது குற்றம் சாட்டி தப்பிக்க எத்தனிக்கின்றது.

 

2. இந்த மூன்றாம் தரப்பின் சதியையும், அதன் உண்மையான பக்கத்தையும் இனம் காட்டாது, அவர்கள் பின் மக்களை மீளவும் அழைத்து சென்று காட்டிக்கொடுக்க முனைகின்றது.

 

3. தலைமை போராடி மடிந்ததாக காட்டும் வீரமரணம், தலைமை செய்த துரோகத்தை மூடிமறைப்பதாகும். இதன் மூலம் தமது சொந்த துரோக அரசியலை பாதுகாக்க முனைவதாகும்;. தலைமை பற்றிய விம்பங்களை, புலத்து பிழைப்புக்கு ஏற்ப பூட்டிப் பாதுகாக்க முனைகின்றனர்.

 

4. தமிழ்மக்களை தவறான தமது துரோக அரசியலுக்கு ஏற்ப, மீளவும் வழிகாட்ட முனைகின்றது.

 

இப்படி துரோக அரசியல் முன்னிலைக்கு வருகின்றது. மறுபக்கத்தில் இந்த துரோகத்தின் பின் பேரினவாத பாசிச அரசியல் பூத்துக் குலுங்குகின்றது. இந்தத் துரோகத்தை, அந்த பேரினவாதப் பாசிசம் கையாண்ட விதம்,

 

1. மூன்றாம் தரப்பின் சதியுடன் தான், ஏமாற்றியே இந்த சதியிலான சரணடைவை அரங்கேறியது.

 

2. சரணடைந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றதன் மூலம், பேரினவாத பாசிச அரச பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டதே இந்த அரசு என்பதை, உலகறிய மறுபடியம் நிறுவியுள்ளது.

 

3. சரணடைந்தவர்களை சட்ட விசாரணைக்கு உள்ளாக்காமல் கொன்றதன் மூலம், தமது கடந்தகால நிகழ்கால குற்றங்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவருவதை இல்லாததாக்கியுள்ளது.

 

4. அவர்களை சதி மூலம் கொன்று உடலை அலங்கோலப்படுத்திக் காட்டியதன் மூலம், தமிழினத்தை அலங்கோலப்படுத்தி அவமானப்படுத்தினர். இதன் மூலம் தமிழன் ஒவ்வொருவனுக்னும் இதுதான் கதி என்ற மிரட்டுகின்றனர்.

 

இப்படி புலித் துரோக அரசியலும், பேரினவாத அரச பாசிசமும் சமாந்திரமாக மக்களுக்கு எதிராக செல்லுகின்றது. தமிழினம் இன்று எந்த மீட்சியுமற்ற புதிய சூழலில் சிக்கி தவிக்கின்றது.

 

பி.இரயாகரன்
01.06.2009


    

 

 

Last Updated on Sunday, 22 November 2009 08:35