Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும்

புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும்

  • PDF

மேடைக்கு ஏற்ப ஆட்டம். ஆட்களுக்கு ஏற்ப அரசியல். போலிக் கம்யூனிசத்தின்  புதுவிசைக்கு ஏற்ப பேட்டி. அரசு – புலிக்கு எதிராக, அரசியல் நீக்கம் செய்த விமர்சனங்கள். ஏகாதிபத்திய நிலைக்கு ஏற்ப தாளம். இதுவே சுசீந்திரன் முதல் பலரின் இன்றைய அரசியல் கூட. மக்கள் அரசியலை முன்னிறுத்தி, அதற்காக எந்த முன்முயற்சியும் பொதுவில் கிடையாது. இதற்கு எதிராகத்தான் பயணிக்கின்றனர். 

 

உதாரணமாக சுசீந்திரன் ஆசிரியராக உள்ள உயிர்நிழல் சஞ்சிகையின் மற்றொரு ஆசிரியரான லக்சுமி 'தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணல்" என்ற தலைப்பிலான பேட்டியை மொழி பெயர்ப்பு செய்கின்றார். உயிர்நிழல் மற்றொரு ஆசியரான பிரதீபன் முன்னின்று நடத்தும், புகலி இணையத்தில் இது வெளிவருகின்றது.

 

வரதராஜப்பெருமாள் கடைந்தெடுத்த இந்தியக் கைக்கூலி. இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பின் போது, கூலிப்படை தலைவனாக இருந்தவன். இன்றும் றோவின் பராமரிப்பில், இந்தியாவில் உள்ளவன். அவனின் கட்சி இலங்கைப் பேரினவாத அரசின் துணையுடன்,  வடக்கு கிழக்கில் ஆட்டம் போடுகின்றது. அவனை "தோழன்" என்று அழைத்து, மீண்டும் அறிமுகப்படுத்தும் அரசியல் அசிங்கம் தான், இன்று எங்கும் விரவிக் கிடக்கின்றது.  மக்கள் அரசியலை முன்னிறுத்தி செயல்பட மறுக்கின்ற, வர்க்கக் கண்ணோட்டதை அடிப்படையாக முன்னிறுத்தி அணுக மறுக்கின்றனர். இப்படி அரசு மற்றும் புலி எதிர்ப்பு தளம் கூட மக்களுக்காக செயற்படவில்லை.

 

இவர்கள் அண்மையில் நடத்திய கூட்டம் ஒன்றில் சிவலிங்கம் என்ற கூத்தாடியை முன்னிறுத்துகின்றனர். பேரினவாத இனவழிப்பு யுத்தத்தை நடத்த, தீர்வுப்பொதி என்ற மந்திரத்தை புலம்பெயர் புலியல்லாத தளத்தில் இவர் மூலம்தான் பேரினவாதம் ஓதுவித்தது. அதுமட்டுமல்ல இந்திய றோவின் கூலிக்குழுவான ஈ.என்.டி.எல்.எவ் வானொலியான ரீ.பீ.சீயில், இவர்தான் அரசியல் ஆய்வாளர். இலங்கை அரசின் கூலிக்குழுவான ஈ.பி.டி.பி வானொலியில், இன்றையநிலை தொடர்பாக இவர்தான் ஆய்வுக் கட்டுரை எழுதி வாசிப்பவர். இப்படி எல்லோரும் ஒரு புள்ளியில் சந்திக்;கின்றனர். மக்கள்விரோத அரசியல் விபச்சாரத்தில், எல்லோரும் கூடுகின்றனர். 

 

அரசியல் நீக்கம் செய்த விமர்சனங்கள் மூலம், படுபிற்போக்கான மக்கள் விரோதிகளுடன் கூடி பயணிக்கவே முனைகின்றது.

 

கடந்தகாலத்தில் புலியல்லாத புகலிட இலக்கியத்தில் அரசியல் நீக்கம் செய்தவர்கள், மக்கள் விரோதமான ஒரு அரசியலையே செய்தனர். இப்படி புலிகளின் மக்கள்விரோத அரசியல் மட்டும், மக்களை இந்த நிலைக்கு கொண்டு வரவில்லை, மறு தளத்திலும் இதுதான் நடந்தது. அதை யாரும் மூடிமறைக்க முடியாது.

 

சுசீந்திரன் கூறியதைப் பாருங்கள். 'இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும் என்ற மனோ நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். உயிரோடு எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணியபடிதான் அங்கு ஒவ்வொரு மனிதனும் தவிச்சிக்கிட்டு இருக்கிறான்." மக்களைக் கொன்று குவித்தவன் வந்து எங்களைக் காப்பாற்றுவான் என்று சொல்வது தான், இவர்கள் பூச்சுற்றிய கள்ள அரசியல்.

 

மக்களை சுற்றிவளைத்து அவர்கள் வாழ்ந்த பிரதேசம் எங்கும் குண்டு போட்டவர்கள் யார்?  இப்படி மக்களை அங்கு வாழமுடியாத ஒரு நிலையை உருவாக்கிவிட்டு, நடத்திய பேரினவாத இனவழிப்புக் கூத்தை, இந்த பொம்மலாட்டப் பேர்வழி 'இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும்" என்று மக்கள் ஏங்குவதாக கூறுவது, இவன் எங்கே யாருடன் நிற்கின்றான் என்பதைக் காட்டுகின்றது. மக்களை இந்த யுத்தசூழலுக்குள் சிக்கவைத்து, அதை அரசியலாக்குகின்ற பேரினவாத நிலைக்கும், இந்த பொம்மலாட்ட பேர்வழியின் நிலைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இதை இனவழிப்பல்ல என்று கூறி, புலி அழிப்பாக காட்ட முனைந்தவன், 'இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும் என்ற மனோ நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர்" என்று கூறி, இதை "மீட்பு" நடவடிக்கையாக காட்ட முனைகின்றான். பேரினவாதமும், சுசீந்திரனும், இதைச் சொல்லிய விதம் தான் இங்கு வேறு.

 

பாருங்கள் அவனின் பேரினவாத தர்க்கத்தை. 'இராணுவம் தாக்கிய போது புலிகள் மக்களையும் தம்முடன் கொண்டு சென்றனர்." என்கின்றான். இது தவறானது. இதைத்தான் பேரினவாதமும்  கூறுகின்றது. உண்மையில் பேரினவாதம் மக்கள் மேல் செய்த தாக்குதல் மூலம் தான், மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். இதையே புலி தனக்கு இசைவாக பயன்படுத்தியது. அது முத்தி முதிரும் வரை, இதில் புலி மக்கள் முரண்பாடு மேலெழவில்லை. இராணுவம் தான் மக்கள் குடியிருப்பு மேல் கனரக ஆயுதம் மூலம் தாக்கியழித்தனர். அவர்களை புலியின் பின் ஓடவைத்தனர். இதனால் தான் மக்கள் அகதியானார்கள். இந்த நெருக்கடியில்தான், யுத்தப் பணயக் கைதியாக அவர்கள் மாற்றப்பட்டனர். புலிகள் மக்களை தம்முடன் கொண்டு சென்றனர் என்பது, யுத்தக் குற்றவாளிகளின் இனவழிப்பு யுத்தத்தை மறுக்கின்ற பேரினவாத அரசியலாகும்.

 

இவர் கூறுகின்ற அரசியல் என்ன? சரணடைவு. 'இன்றைக்கு செய்ய வேண்டியது சரணடைதல். தங்களிடம் இருக்கிற கேடர்சையும் மக்களையும் காப்பாத்த வேண்டுமெனச் சொன்னால் ஏதோ ஒருவகையில் சரணடைதலைத் தவிர வேறுவழியில்லை. அல்லாது விசும்புக்கும் வீம்புக்கும் போராடுவது இந்த மக்களையும் கேடர்களையும் பலி கொடுப்பதாகவே அமையும்." மக்களை விடுவித்து போராடும்படி கோருவதற்கு பதில், தன்னைப் போல் ஒரு துரோகத்தைச் செய்யக் கோருகின்றார். சரணடைந்தவர்களுக்கு என்ன நடத்தது என்பதை இன்று நாம் பார்க்கின்றோம். இதைவிட போராடி மடிவது மேலானது. சரணடைவு நாயைப்போல் வாழ்தல் அல்லது கீழ்த்தரமான மரணம் என்பதை இங்கு நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்; இதைத் தான் இவர் மக்கள் பெயரால் முன்வைக்கின்றார். இதையே பேரினவாத அரசும் கோரியது. இதில் எந்த வேறுபாடும் கிடையாது.

 

இந்த பொம்மலாட்ட பேர்வழியின் அரசியல் என்ன? 'சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றிற்கு இலங்கை மக்களை தயார்படுத்த வேண்டியக் கடமை எல்லோர் முன்னாலும் வைக்கப்பட்டுள்ளது." இப்படி அரசியல் கடமை பற்றிப் பிதற்றும் ஏகாதிபத்திய தன்னார்வ அரசியல், தமிழ் சிங்கள மக்களை ஜக்கியப்படுத்தும் சுயநிர்ணய அரசியலை மறுதலிக்கின்றனர். மக்கள் தாம் சுயநிர்ணயமாக வாழ்வதற்கான ஜனநாயக அடிப்படையை மறுத்து, 'சமஸ்டி அடிப்படையிலான தீர்வு" என்கின்றனர்.  மக்களுக்கு வெளியில், சிலர்  மக்களின் தலையில் தீர்வை அரைக்க முனைகின்றனர், திணிக்க முனைகின்றனர். போராட்டத்தையும், யுத்தத்தையும் திணிதத்து போன்று, தீர்வைத் திணிக்க முனைகின்றனர். இதைத்தான் இவர், அனைவரினதும்; 'கடமை" என்கின்றார்.

 

மனிதனுக்கு எதிராக இழைக்கும் குற்றத்தை, அரசுக்கு சார்பாக மூடிமறைக்க முன்வைப்பதைப் பாருங்கள்;.  'இப்பொழுது சர்வதேச சமூகமும், உதவும் நிறுவனங்களும் இந்த முகாம்களின் கண்காணிப்பையும் பராமரிப்பையும் தமது கைகளில் தரும்படி கோருகின்றன. முகாம்களுக்குள்ளும் ஆட்கடத்தல், காணாமல் போதல், தற்கொலை மாதிரியான விடயங்களும் சமயங்களில் நடக்கின்றன. இவை சிலநேரங்களில் மிகைப்படுத்தப்பட்டு பயங்கரச் செய்திகளாகி வெளிநாடுகளுக்கு வந்துகொண்டுள்ளன." இனவழிப்பு களையெடுப்பாக மாறி நிற்கின்றது. அங்கு ஊடக சுதந்திரம் கிடையாது. சிவில் அமைப்பு கிடையாது. சர்வதேச கண்காணிப்பு கிடையாது. சுதந்திரமாக நடமாடும் உரிமை கிடையாது. எழுத்து, பேச்சு, கருத்துச் சுதந்திரம் கிடையாது. இவை எல்லாம் ஏன்? எதற்கு?  போர்க்குற்றங்கள் முதல் அங்கு நடக்கின்ற மனிதவிரோத பாசிச செயலை மூடிமறைக்க எடுக்கும் தற்காப்புத்தான். பாசிசம் விரிவாகி வருகின்றது. இந்த நிலையில் இதை 'மிகைப்படுத்தப்பட்ட பயங்கரச் செய்தி" என்று கூறும் இவர் யாருடன் நிற்கின்றார்! மக்களுடனா எனின், இல்லை.

 

மக்களுடன் நிற்க முடியாத, இந்த மக்களுக்கு நிகழ்வதை சொல்ல முடியாத இவர்கள், 'மிகைப்படுத்தப்பட்ட பயங்கரச் செய்தி" என்பது பிழைப்புக்கேற்ற கடைந்தெடுத்த பொறுக்கித்தனம்.

 

தம்மையும் தம் பிழைப்புத்தனத்தையும் தக்கவைக்க, புலிகளைச் சொல்லிப் பிழைக்கின்றனர். அதைப் பாருங்கள்  'போராட வெளிக்கிட்ட மாற்றுக் கருத்துள்ள - இன்னும் சொன்னால் இடதுசாரித்தன்மை கொண்ட இயக்கங்கள் யாவும் புலிகளால் அழிக்கப்பட்டன. மிதவாதப்போக்குள்ள அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் கொல்லப்பட்டார்கள். சிறு துரும்பாயினும் அதை அழித்ததுதான் வரலாறு" என்று சொல்லும் நீங்கள் மட்டும், என்ன செய்தீர்கள்.  கடந்த 20 வருடமாக இதை நீங்கள் அழிக்கவில்லையா!? நீங்கள் புலம்பெயர் இலக்கியத்தின் பெயரில் செய்தது இதைத்தான். இதற்கு வெளியில் உங்கள் அரசியல் வரலாறு என்ன? எதை முன்னிறுத்தினீர்கள்? எதை மறுத்தீர்கள்?

 

புலிகள் எதைத் செய்தார்களோ, அதையே நீங்கள் புலம்பெயர் இலக்கியத்தின் பெயரில் செய்தீர்கள். செய்தவிதம் தான் வித்தியாசம். மற்றும்படி மக்களை நம்பி நீங்களும் அவர்களும்  எதையும் செய்தது கிடையாது. மக்களுடன் மக்கள் அரசியலுக்காக நின்றது கிடையாது. இதுதான், கடந்த 20 வருடமாக நீங்கள் சொறிந்து கொண்டிருந்த வரலாறு.

 

இப்படி மக்கள் அரசியலை சார்ந்து நிற்கத் தயாரற்ற ஏகாதிபத்திய தன்னார்வ அரசியலைப் பாருங்கள்;. 'சிறுபான்மை இனங்களின் நலன் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வை பார்க்கவேண்டிய கட்டாயமில்லை. அரசியல் தீர்வால் பெரும்பான்மைக்கு ஏற்படக் கூடிய லாபங்கள் என்ன என்ற அடிப்படையில்கூட பார்க்கலாம்." என்கின்றனர். மக்களின் உரிமை சார்ந்து ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில் மக்களை அணிதிரட்ட தயாரற்றவர்கள், அந்த அடிப்படையில் பிரச்சனையை மக்கள் மூலம் தீர்க்க மறுக்கின்றனர். மாறாக லாபம், நட்டம், சலுகை, நன்மை, தீமை என்று மக்களை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கும் தன்னார்வ அரசியல் வழியை கொண்டு, சொறிநாய்கள் போல் அலைகின்றனர். இவரின் 'சர்வதேச வலைப்பின்னல்" என்ற மக்கள்விரோத சதி அரசியல் 'தென்இலங்கை மக்களை ஒரு அரசியல் தீர்வை நோக்கி தயார்படுத்துவது"  என்ற பெயரில் திரிகின்றனர்.  'இதற்கு எங்களுக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு, தாராளமாகவே இருக்கிறது." என்கின்றார். புலிகள் மக்களை நம்பி போராடாது, மூன்றாம் தரப்பின் பின் எப்படி அழிந்தனரோ, அதையே இவர்கள் தீர்வுப்பொதி பெயரால் கடைவிரிக்கின்றனர். இதன்பெயரால், ஊரான் பணத்தை கொள்ளையடித்து கொடுக்கும் தன்னார்வ நிதியில், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் தாராளமாகவே உலகம் சுற்றும் வாலிபனாக ஊர்சுற்றி திரிகின்றனர்.

 

இப்படி மக்களுக்கு மக்கள் பெயரால் குழிபறிக்க 'பல்வேறு புதிய குழுக்களை சர்வதேச மட்டத்தில் உருவாக்கமுடியும். சர்வதேச நிபுணர்களின் குழுவைக்கூட அமைக்கலாம்." என்கின்றார். மக்களின் ஜனநாயக் கோரிக்கைக்கு கூட, அரசியலை முன்வைத்து போராடுவதை மறுக்கின்ற, சர்வதேச தன்னார்வ ஏஜண்டாக இருக்க முனைகின்றனர்.

 

இப்படிப்பட்ட இவரின் அரசியல் இலங்கை அரசை ஏகாதிபத்திய தன்னார்வ  நிலையில் நின்று விமர்சிப்பதற்க அப்பால், மக்கள் அரசியல் அடிப்படையைக் கொண்டதல்ல. ஏகாதிபத்திய தன்னார்வ நிலையில் நின்று அரசை விமர்சிப்பதன் மூலம், மக்கள் விரோத  அரசை பாதுகாப்பதுதான். இந்த அரசியல் எல்லையில் தமது பொம்மலாட்டத்தை நடத்திக் காட்டுகின்றனர்.

 

புதுவிசை கேட்ட நேரடியான கேள்விக்கு அவர் சொன்ன பதிலைப்பாருங்கள்.

'ஆதவன்:

இலங்கை தமிழ்ச்சமூகத்திற்குள் சாதி வகிக்கும் பங்கு குறித்து இரண்டு சர்வதேச மாநாடுகளை நடத்தியுள்ளது இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி. ஆனால் புலிகள் தலையெடுத்தபின், சாதிப் பிரச்சனையே கட்டோடு ஒழிந்துவிட்டதாகவும், புலி எதிர்ப்பை பரப்புவதற்காகவே சாதியம் தலைதூக்கிவிட்டதாக சொல்லி தலித்தியம் பேசக் கிளம்பியிருக்கிறார்கள் என்றும் இதற்கு பின்புலத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறதே?" 

 

என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. மாறாக புலிகள் அப்படி சொல்வதாக சொல்லி நழுவும் அதேநேரம் 'தலித்துகள் பிரச்னை அடிப்படையில் ஒன்றுபடுவதையும், தலித் என்பதால் என்னென்ன பிரச்னைகளை எதிர் கொள்கிறோம் என்று சொல்வதையும் பெரும்பான்மை சமூகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இருந்து பார்க்கமுடியாது. ஒடுக்கப்பட்டவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்றால் அதுதான் நிஜம்." என்கின்றார்.

 

சாதியம் என்ற சமூக ஒடுக்கு முறை, தலித் மக்கள் பிரச்சனையாக உள்ளது. இதனால், அவர்கள் பெயரால் செய்வது எல்லாம் சரியாகிவிடுமா? தமிழர் பெயரால் புலிகள் எதைச் செய்தனரோ, அதைத்தான் தலித் பெயரால் இவர்கள் செய்கின்றனர். இதை உருவாக்கிய ஒரு சிலர், பேரினவாத அரச ஏஜண்டுகள். தலித் முன்னணி அரசுக்கு எதிரானதல்ல, ஆதரவானது. ஆனால் புலிக்கு எதிரானது. இந்த யுத்தத்தை மனதார ஆதரித்தது. புலி ஒழிப்பாக அதைப் பார்த்தது. இனவழிப்பாக ஏற்றுக்கொண்டது கூட கிடையாது.

 

அந்த வகையில் சுசீந்திரன் அதை பாதுகாக்கின்றார். தமிழ்மக்கள் என்ற அரசியல் அடிப்படையை புலிகள் தகர்த்தனர் என்பது எவ்வளவு உண்மையோ, அதையே இவர்களும் செய்தனர், செய்கின்றனர். தலித் மக்களை சார்ந்து நிற்கும், எந்த தலித் அரசியலும் இவர்கள் பின் கிடையாது.

 

அனைத்துத் தளத்திலும் அரசியல் நீக்கம் செய்த மக்கள் விரோத அரசியலை முன்தள்ளும் புதியபோக்குகள், களைகட்டி நிற்கின்றது. இதை இனம் கண்டு போராட வேண்டியதும், அதை புறந்தள்ளி மக்களுக்காக மக்களுடன் நிற்கும் அரசியலை முன்னிறுத்துவது அவசியமானதும், அவசரமானதுமாகும்.

 

பி.இரயாகரன்
30.05.2009
 

Last Updated on Saturday, 30 May 2009 11:00