புலித்தலைமை முதல் புலிப்பினாமிய வலதுசாரி கும்பல் வரை, இதற்கான அரசியல் காரணத்தை தெரிந்து கொள்ள மறுக்கின்றது. தாமல்ல, பல காரணங்களைக் கற்பிக்க முனைகின்றது. தாங்கள் சரியாகவே இருந்ததாகவும், இருப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றது. இப்படி அவர்கள் தாங்கள் கற்பிக்கும் காரணங்கள் ஊடாக, தமது தவறான வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து நகர்த்த முனைகின்றனர். தாமல்லாத காரணம் தான், இந்த தோல்விக்கான காரணம் என்ற சொல்ல முனைகின்றனர்.
புலிகளுக்கு வெளியிலான புறநிலையான காரணங்கள் தான் புலியின் அழிவுக்குரிய யுத்தமாக மாறியது என்றால், அதற்கு அகநிலையான காரணமாக புலிகளே இருந்துள்ளனர். இங்கு புலிகளின் அகநிலைக் காரணங்கள் தான், இந்த யுத்தத்தை அவர்களுக்கு எதிரான முழு அழிவுக்கும் இட்டுச்சென்றது. இதை மறுதலிக்கும் வண்ணம், புலிப்பினாமிகள் தம் வலதுசாரிய அறிவிலித்தனத்துடன் புலம்புகின்றனர்.
1. பல நாடுகளின் இராணுவ உதவியை பேரினவாத அரசு பெற்றதாலும், தமக்கு எதிராக உலகம் தளுவிய சதிகளாலும் தான், புலிகள் தோற்றனர் என்கின்றனர். இதுவா காரணம்!?
இந்த வாதம் தமது சொந்த வலதுசாரிய பாசிசத் தவறுகளை நியாயப்படுத்த வைக்கின்ற தர்க்கம். உலகில் எந்த விடுதலைப் போராட்டமும், உலகம் தளுவிய தாக்குதலை எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். இதை எதிர்கொள்ள முடியாதவர்கள், சரியான விடுதலைப் போராட்டத்தை தம் பின்னால் உருவாக்கவில்லை என்பதுதான் அர்த்தம்.
உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் பல நாடுகளின் உதவியுடான யுத்தத்தையும், பன்நாட்டு படைகளையும் எதிர்த்துப் போராடி வென்று இருக்கின்றது, போராட்டத்தை நடத்துகின்றனர். இப்படி ஏகாதிபத்திய எதிர்ப்பை அவை தெளிவாக வைத்து, மக்களை அணிதிரட்டுகின்றது. புலியைப் போல் அவர்களை நட்பு சக்தியாக காட்டுவது கிடையாது. இதனால் மக்கள் அந்த யுத்தத்தை தாமே நடத்தவும், வெல்லவும் திடசங்கர்ப்பம் கொள்கின்றனர். எந்த படையையும், எந்த நவீன ஆயுதத்தையும், அவர்கள் துச்சமாக மதிக்கின்றனர். அதனால் அது இலகுவாக தோற்கடிப்கப்படுவதில்லை.
நேபாளம், கொலம்பியா.. என்ற பல நாடுகளில் இதை நாம் காணமுடியும். முன்பு வியட்நாம், சீனா, வடகொரியா, கம்பூச்சியா, யுக்கோசிலாவியா… என்ற பலநாடுகளை காணமுடியும்.
குறிப்பாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்திய படைகள், நவீன ஆயுதங்களுடன் நடத்துகின்ற யுத்தத்தில் ஏகாதிபத்தியம் வெல்ல முடியவில்லை. அவர்களுக்கு எதிராக போராடும் குழுக்கள், வலதுசாரிய அடிப்படைவாதத்தைக் கொண்டவைதான். அப்படியிருந்தும், வெல்ல முடியாமல் இருக்கக் காரணம், அவர்கள் மக்களுடனான தம் உறவை எதிர்நிலையில் வைக்காமை தான் காரணமாகும்.
எந்த நவீன படையையும், நவீன ஆயுதத்தையும் எதிர்கொள்ள மிக அவசியமானது, மக்களுடான ஜனநாயக உறவுகள் தான். நவீன ஆயுதங்கள் அல்ல. இதை புலிகள் மறுத்ததால், அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இப்படி எந்த உதவியும், எந்த நவீன ஆயுதமும், புலிகளின் இந்த தோல்விக்கு காரணமல்ல. இவை அதற்கு உதவிய வெறும் கருவிகள் தான், உணர்வுகள் அல்ல. மக்களின் உணர்வுகள் தான், புலியைத் தோற்கடித்தது. புலிகளின் நவீன ஆயுதங்கள், உணர்விழந்த சமூகத்தின் முன் எதற்கும் உதவாது போனது. மக்களை வெறுக்கும் புலி அரசியல் உணர்வு தான், புலிக்கு எதிரான மக்கள் உணர்வாகியது.
2. ருசியா, சீனா என்ற 'கம்யூனிச" பூதங்களின் உதவிதான், புலிகளுக்கு இந்த நிலைமை ஏற்பட காரணம் என்று கூறுகின்ற அறிவிலித்தனமான பிரச்சாரங்கள்.
இன்று யுத்தத்தை நடத்துவதோ இந்தியா. இப்படியிருக்க, இப்படியும் கூற முடிகின்றது. மறுபக்கத்தில் இன்று சீனாவுக்கு எதிரான மேற்கின் நிலைப்பாடும், இந்திய நிலைப்பாடும் கூட ஒரு புள்ளியில் சந்திக்தின்றது. இருந்தபோதும் இந்தியா புலியின் அழிவுவரையான யுத்தத்தை முன்நின்று நடத்துவதில் முனைப்பாக இருந்துள்ளது.
இப்படியிருக்க, ரூசியா, சீனா என்ற 'கம்யூனிச" பூதங்கள் இந்தியாவை மீறி இந்த யுத்தத்தை எப்படி நடத்த முடியும்!? இந்தியாவின் நலன்கள் தான், யுத்தத்தின் முடிவும் கூட.
இதற்குள் ருசியா சீனா உதவிகள் என்பது, உலகமயமாக்கலுக்கு உள்ளான முரண்பாட்டின் விளைவு. இந்த உதவி என்பது யுத்தத்தை வெல்லப் போதுமான காரணமல்ல. இவை எல்லாவற்றையும கடந்தது, இந்திய உதவி. இருந்தபோதும் புலியின் தோல்விக்கு காரணம் இவையல்ல, புலிகளேதான்.
புலிப்போராட்டம் தவறான வலதுசாரிய அரசியல் அடிப்படைகள் மீது கட்டியெழுப்பப்பட்டது. இது மக்களுக்கு எதிராக இருந்துள்ளது. இதைப் பாதுகாக்க தனிமனித சர்வாதிகாரத்தை வலதுசாரிய வர்க்க அடிப்படையில் மக்கள் மேல் திணித்தவர்கள் புலிகள். இந்த வகையில் பாசிச மாபியா வழியில், தம் அதிகாரத்தை மக்கள் மேல் நிறுவினர். இப்படி புலிகள் தம்மைத் தாமே, மக்களிடமிருந்து தோற்கடித்துக் கொண்டனர்.
இதை சொல்லி தம் தவறை திருத்த முடியாதவர்கள் தான், ருசியா, சீனா என்ற 'கம்யூனிச" பூதங்கள் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். எதற்காக!? தமது தவறை நிலைநிறுத்தி, இதையே தொடர்வதற்கு. தமது இந்த அரசியல் அவலத்தை உருவாக்கியவர்கள், இங்கு 'கம்யூனிசம்" பற்றிய எதிர்ப்பிரச்சாரத்தை இதற்குள் வாய்ப்பாக செய்வதும், அதே மக்கள் விரோத அரசியல்தான்.
இந்த இரு நாடும் கம்யூனிச நாடுகளல்ல. தமிழ் புலிப்பினாமிய வலதுசாரிய அறிவிலிகளுக்கு, தம் குருட்டு கண்ணாடிக்கு ஏற்ப இது கம்யூனிச நாடாகத் தெரிகின்றது.
இவ்விரண்டும் ஏகாதிபத்தியங்கள். உலகைச் சுரண்டி சூறையாட, மற்றைய ஏகாதிபத்தியங்களுடன்; போட்டியிடும் நாடுகள் இவை. ருசியா 1960 களிலும், சீனா 1980 களிலும் கம்யூனிசத்தை மறுத்த நாடுகள். உலகளவில் கம்யூனிஸ்ட்டுகள் இந்த காலகட்டத்தின் பின், அதை கம்ய+னிசமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அதை முதலாளித்துவமாக, ஏகாதிபத்தியமாக அம்பலப்படுத்தி போராடியவர்கள் தான் கம்ய+னிஸ்ட்டுகள்.
சீனாவும், ருசியாவும் இக்கால கட்டத்தின் பின், பழைய கம்யூனிச லேபலைப் பயன்படுத்தினர். போலியான தம் கம்யூனிச பதாகையைக் கொண்டே, அங்கு படிப்படியாக முதலாளித்துவத்தைப் புகுத்தியவர்கள். இந்த லேபலை 1990 களில் ருசியா களைந்தது. சீனா இன்னமும் அந்த லேபலைக் கொண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் மூலம் உலகளவில் மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்றது. இதன் மூலம் ஏகாதிபத்திய முரண்பாட்டில் சிக்கியுள்ள ஒரு போட்டி ஏகாதிபத்தியம் தான் சீனா.
இப்படி இருக்க புலிப்பினாமிகளும், வலதுசாரிகளும் அதை கம்யூனிசமாக காட்டுவது, மக்கள் விரோத உணர்வுடன் தான். இதன் மூலம் கம்யூனிச வெறுப்பினை, தம் சொந்த அறிவிலித்தனத்துடன் திணிப்பதாகும்;. 30 வருடமாக நீடித்த புலிப் பாசிசத்தின் இன்றைய அழிவுக்கான காரணத்தை, மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதே இவர்களின் இன்றைய அரசியலாகும். இதை தெரிந்து கொள்ளாத வண்ணம், அதை வேறு ஒன்றாக திரிந்து சமூகம் மீது திணிப்பதாகும்.
இல்லாத கம்யூனிசத்தை, ரூசியா, சீனா வடிவில் உள்ளதாக காட்டி, மேற்கு ஏகாதிபத்தியங்களின் பின் செல்லக் கோருவதாகும்.
சீனா, ருசியாவின் இலங்கைக்கான ஆயுத தளபாட விநியோகம், இந்தியா பாகிஸ்தான் செய்தது போன்ற ஒன்று. இவை பிராந்திய நலன்கள், ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்டது. மேற்கத்தைய நாடுகளின் நிதி உதவி இப்படிப்பட்டது தான். இவை அனைத்தும் சேர்ந்து தான், இலங்கை யுத்தத்தை வெற்றிகரமாக செய்ய முடிகின்றது. ஆனால் யுத்தத்தின் வெற்றியை தீர்மானித்தது இதுவல்ல. புலிகளின் வலதுசாரிய மக்கள் விரோத அரசியல் தான். அது மக்களுக்கு எதிரான உணர்வுடன் கொண்டிருந்த, கம்யூனிச வெறுப்புத்தான் அடிப்படையான காரணமாகும். கம்யூனிசம் மட்டும் தான், மக்களின் உரிமைக்காக போராடுகின்றது.
பி.இரயாகரன்
17.05.2009