Wed04172024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் குசேலன் குபேரனான கதை

குசேலன் குபேரனான கதை

  • PDF

சி.பி.எம். என்பது ஒரு கட்சியல்ல; அதுவொரு முதலாளித்துவக் கம்பெனி. கம்பெனி என்றால் அதற்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கும். ஆண்டுதோறும் சொத்து விவரங்களைத் தணிக்கை செய்து, வருமான வரி அலுவலகத்துக்குச் சட்டப்படி தாக்கல் செய்யும். சி.பி.எம். கம்பெனியும் இப்படி ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து வருகிறது. கடந்த 2006 மார்ச் 31ஆம் தேதி முடிய உள்ள நிதியாண்டில் சி.பி.எம். கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77.27 கோடிகளாகும்.

 

இழப்பதற்கு ஏதுமில்லாத தொழிலாளி வர்க்கத்தின் கட்சி; பஞ்சைப் பராரிகளின் கட்சி; சொத்துடமை முறையை ஒழித்து சோசலிசத்தைப் படைக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் கட்சி இப்படிப்பட்ட கட்சிக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை. முதலாளித்துவ கம்பெனிகளின் சொத்து நாள்தோறும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பல்கிப் பெருகுவதைப் போல, சி.பி.எம். கம்பெனியின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.


சி.பி.எம். கம்பெனி தாக்கல் செய்துள்ள கணக்கு விவரங்களின்படியே, 2002 மார்ச்சில் அதன் சொத்து மதிப்பு ரூ. 38.4 கோடி. நான்காண்டுகளில் இச்சொத்து இருமடங்காக அதிகரித்துள்ளது. கட்சிக்கு நன்கொடைகள் மூலமாகவும் உறுப்பினர்கள் கட்சிக்கு மாதந்தோறும் செலுத்தும் தொகை (லெவி) மூலமாகவும் இப்படி சொத்து அதிகரித்துள்ளதாக சி.பி.எம். கம்பெனி கணக்கு காட்டுகிறது.


200102 நிதியாண்டில் இக்கம்பெனிக்கு நன்கொடை மூலம் கிடைத்த தொகை ரூ. 8.69 கோடி. இது 200405 இல் ரூ. 12.89 கோடியாக உயர்ந்தது. 200506இல் இது திடீரென ரூ. 17.89 கோடியாகியுள்ளது. அதாவது, நான்காண்டு காலத்தில் நன்கொடை வரவு இருமடங்காக அதிகரிக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் இக்கட்சிக்கு அள்ளிக் கொடுத்துள்ளார்களாம்! இதுவொருபுறமிருக்க, கட்சி உறுப்பினர்கள் கட்சிக்கு மாதந்தோறும் செலுத்தும் தொகை (லெவி) மூலமாகவும் சி.பி.எம். கம்பெனியின் சொத்து அதிகரித்துள்ளது. 200102 நிதியாண்டில் கட்சிக்கு லெவி மூலமாகக் கிடைத்தத் தொகை ரூ. 6.17 கோடி. 200506 இல் இது ஏறத்தாழ மூன்று மடங்கு — அதாவது, ரூ. 16.77 கோடியாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, 2005 மார்ச் 31ஆம் தேதியிலிருந்து 2006 மார்ச் 31ஆம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில் லெவி வருவாய் 30% அதிகரித்துள்ளது.


இப்படி லெவி வருவாய் அதிகரிக்கிறது என்றால், சி.பி.எம். கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் சி.பி.எம். கட்சி ஆவணங்களின்படி, 2004 முதல் 2006 வரையிலான காலத்தில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 13% தான் அதிகரித்துள்ளது. அப்படியிருக்க லெவி வருவாய் அதிகரித்தது எப்படி?


கட்சியானது, கட்சி உறுப்பினர்களுக்கான லெவி தொகையை உயர்த்தியிருந்தால், லெவி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அண்மைக்காலங்களில் கட்சியானது அப்படி லெவித் தொகையை அதிகரித்துள்ளதாக எந்த அறிவிப்பும் செய்யவில்லை. அப்படியிருக்க, கட்சிக்கு லெவி மூலம் கிடைக்கும் தொகை அதிகரித்தது எப்படி? தொழிலாளிகள் விவசாயிகள் ஆகிய வர்க்கங்களிலிருந்து அல்லாமல், நடுத்தரகுட்டி முதலாளித்துவ வர்க்கங்களிலிருந்து வந்தவர்கள் சி.பி.எம் கட்சிக்குள் அதிகரித்திருப்பதாலேயே, கட்சிக்கு லெவி வருவாயும் அதிகரித்துள்ளது.


தொழிலாளிகள் விவசாயிகள் என்றால் அவர்களுக்கு வருமானம் குறைவு. இதனால் அவர்கள் கட்சிக்குச் செலுத்தும் லெவித் தொகையும் குறைவான அளவில்தான் இருக்கும். இதற்கு மாறாக, நடுத்தர வர்க்கத்தினர், சிறுமுதலாளிகள், ஒப்பந்தக்காரர்கள், கந்துவட்டிக்காரர்கள் முதலானோர் சி.பி.எம். கட்சிக்குள் அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாலேயே, வருமானம் அதிகமுள்ள அவர்கள் செலுத்தும் லெவித் தொகையும் உயர்ந்து, மொத்தத்தில் கட்சியின் லெவி வருவாய் அதிகரித்துள்ளது. சி.பி.எம். கட்சியின் லெவி வருவாய் கணக்கு விபரமே, அக்கட்சியின் வர்க்கத் தன்மையை நிரூபித்துக் காட்டுகிறது.


சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டி, வருமான வரி அலுவலகத்துக்கு தாக்கல் செய்வதற்கென்று ஒரு கணக்கு; பல்வேறு பினாமி பெயரில் சொத்துக்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு தனியாக ஒரு கருப்புப் பணக்கணக்கு என்று முதலாளித்துவக் கம்பெனிகள் மோசடி செய்வது வாடிக்கை. சி.பி.எம். என்பதும் அத்தகையதொரு கம்பெனி அல்லவா? அதனால்தான், எங்களிடம் ரூ. 77.27 கோடி சொத்து மட்டும்தான் இருக்கிறது என்று வருமானவரி அலுவலகத்துக்கு ஒரு கணக்கு காட்டி விட்டார்கள். மற்ற சொத்து விவரங்களை திறமையாக மூடி மறைத்து வருகிறார்கள்.


கேரளாவில், கிறித்துவ திருச்சபைகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய கோடீசுவர நிறுவனம் சி.பி.எம். கம்பெனி தான் என்று ஏற்கெனவே பத்திரிகைகள் அம்பப்படுத்தியுள்ளன. "கைரளி'' தொலைக்காட்சி அலைவரிசை, மலப்புரம் மாவட்டத்தில் ஐந்து நட்சத்திர மருத்துவமனை, தலைச்சேரியில் ஒரு பேரங்காடி (ஹைப்பர் மார்க்கெட்), தகவல்தொழில்நுட்ப மையம், ஆயிரக்கணக்கான கூட்டுறவுச் சங்கங்களின் சொத்துக்கள், பெருநகரங்களில் வீட்டுமனைகள், இதுதவிர கண்ணனூர் மாவட்டத்தில் உலகத் தரமிக்க பலகோடி செலவிலான தண்ணீர் விளையாட்டு கேளிக்கைப் பூங்கா என கோடீசுவர கம்பெனியாக சி.பி.எம். கட்சி வளர்ந்துள்ளது. கேரளாவில் மட்டும் சி.பி.எம். கம்பெனியின் சொத்து மதிப்பு ரூ. 4,000 கோடிகளுக்கும் மேலாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. கேரளாவில் சி.பி.எம்.இன் உள்ளூர் கட்சிக் கமிட்டிகள் கூட பல கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டுள்ளன. கேரளாவில் அச்சுதானந்தன் கோஷ்டிக்கும் பினாரயி விஜயன் கோஷ்டிக்குமிடையே இச்சொத்துக்களை அனுபவிப்பதற்காகவே குழுச் சண்டைகள் பகிரங்கமாக நடக்கின்றன.


இதுதவிர, தலைநகர் டெல்லியில் கூட சி.பி.எம். கம்பெனி அண்மையில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது. ஏற்கெனவே டெல்லியின் கோலே மார்க்கெட் பகுதியில் பலகோடி மதிப்பிலான அடுக்குமாடி கட்டிடமான கட்சி அலுவலகத்தை (ஏ.கே.ஜி. பவன்) சி.பி.எம் கம்பெனி வைத்துள்ளது. இதுதவிர, ரவுஸ் அவென்யூ பகுதியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்துக்கென பல கோடி மதிப்பிலான அடுக்குமாடி கட்டிடத்தையும் வைத்துள்ளது. இவையும் போதாதென்று, அண்மையில் தீனதயாள் சதுக்கம் பகுதியில் 2850 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தை வாங்கியுள்ளது. இது ரூ. 4550 கோடி மதிப்புடையது.


முதலாளிகள் சூறையாடுவதற்கு மட்டுமின்றி, ஓட்டுக் கட்சிகளும் பொறுக்கித் தின்பதற்கு ஏராளமான வாய்ப்புகளையும் சட்டரீதியான ஏற்பாடுகளையும் நாடாளுமன்ற மோசடி ஜனநாயகம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. அரசு சட்ட விதிகளின்படி, ஒரு ஓட்டுக் கட்சி 50 முதல் 100 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தால், ஒரு ஏக்கர் (ஏறத்தாழ 4000 சதுர மீட்டர்) அரசாங்க நிலத்தை சலுகை விலையில் பெற முடியும். சி.பி.எம். கட்சியிடம் போதுமான அளவுக்கு எம்.பி.க்கள் உள்ளதால் டெல்லி தீனதயாள் சதுக்கத்திலுள்ள 2850 சதுரமீட்டர் பரப்பளவுள்ள நிலத்தை ரூ. 60 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. உண்மையில் இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 4550 கோடிகள் என்றும், காங்கிரசு கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து சி.பி.எம். கட்சியினர் காரியத்தைச் சாதித்துக் கொண்டுள்ளார்கள் என்றும் டெல்லி பத்திரிகைகளே உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளன.


இப்படி கட்சியே கோடீசுவர கம்பெனியாகி விட்ட பிறகு, அக்கட்சி நிறுத்தும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பலரும் இலட்சாதிபதிகளாக கோடீசுவரர்களாகவே வலம் வருகிறார்கள். கர்நாடகத்தில் குல்பர்கா தொகுதியில் போட்டியிடும் மாருதி மனபடா என்ற சி.பி.எம். வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 20 இலட்சமாம்! கடந்த நான்காண்டுகளில் இவரது சொத்து மதிப்பு 7393% அதிகரித்துள்ளது என்று வேட்பாளர்களின் முகவிலாசத்தை அம்மாநிலப் பத்திரிகைகளே அம்பலப்படுத்தியுள்ளன.


கோடீசுவர முதலாளித்துவக் கம்பெனிகள் தமது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொண்டு ஆதிக்கம் செய்ய குண்டர் படைகளைக் கட்டியமைத்துக் கொண்டு போராடும் உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றன. அதேபோல கோடீசுவர சி.பி.எம். கம்பெனியும் குண்டர்படையைக் கட்டியமைத்துள்ளது. சிங்கூர் நந்திகிராம் மட்டுமல்ல; அண்மையில் லால்காரில் உழைக்கும் மக்கள் மீது அது நடத்தி வரும் தாக்குதல்களே இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகிறது.


இப்படி கோடீசுவரர்களையும், குண்டர்கள் கிரிமினல்களையும், பிழைப்புவாதிகளையும் அணிகளாகக் கொண்டுள்ள கோடீசுவர சி.பி.எம். கட்சி, ஏழை மக்களுக்குப் பாடுபட்டு புரட்சி செய்யப் போகிறதாம்! நீங்களும் ஒரு முதலாளித்துவ காம்ரேடாக கோடீஸ்வர கம்யூனிஸ்டாக விரும்பினால், சி.பி.எம். கம்பெனியில் சேர்ந்து புர்ர்ரட்சி செய்யலாம். இத்துரோகக் கும்பலை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான மகத்தான புரட்சிப் போரில் பங்கேற்க விரும்பினால், நீங்கள் உண்மையான கம்யூனிசப் புரட்சியாளர்களுடன் அணிவகுக்கலாம்.


நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?


· குமார்

 

Last Updated on Sunday, 17 May 2009 06:53