Language Selection

இந்த அரசியல் கேள்வி, எமக்கு புலி முத்திரை குத்தி விலகிச் செல்லும் அரசியலாக வெளிப்படுகின்றது. இது இயங்கியலை புரிந்துகொள்ள முடியாத, அற்பத்தனமான இருப்புக்கான அரசியலாக மாறுகின்றது. எமக்கு புலி முத்திரை குத்துவது, உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாக இதை திரித்து புரட்டி அனைத்தும், இதை அரசியல் காழ்ப்புடன் அணுகுவதாகும்.

 

புலிகளை துரோகி என்ற சொல்லுக்குள் அடக்குவதும் கூட, ஒரு புலி அரசியல் தான். துரோகி, தியாகி என்ற சொற்களுக்குள் மொத்த அரசியலும் இயங்குவதில்லை. அரசியலில்லாத லும்பன்கள் தான், இதற்குள் இயங்குகின்றனர். புலிகளை துரோகி என்று ஒரு சொல்லுக்குள் மொட்டையாக அடக்கி, நாம் கருத்துச் சொல்ல முடியாது. அது இன்று உள்ளடகத்தில்  புலிகளினதும், புலியெதிர்ப்பு அரசியலினதும் அடிப்படைக் கூறாகும்.

 

புலிகள் இன்று துரோகம் செய்தால், என்ன நடக்கும்? இதை நாம் ஆராய்வோம்.   

 

1. புலித் தலைமை சரணடையாதும், துரோகத்தைச் செய்யாதும், மரணிக்கின்றனர். இதை எப்படி அரசியல் ரீதியாக நாம் மதிப்பிடுவது? 

 

30 வருடமாக புலிகள் தம் பாசிச மக்கள் விரோதப் போராட்டத்தையே, விடுதலைப் போராட்டமாக எம்மக்களுக்கு காட்டி வந்தனர். இன்று அது தன் இறுதிக்காலத்தில், சேடமிழுக்கின்றது. இந்த நிலையில் வலதுசாரிய பிற்போக்கு சக்திகளான புலிகள், இயல்பாக செய்யும் எந்தத் துரோகமும் அடுத்த 30 வருடத்துக்கு இதையே தமிழ்மக்களின் விடுதலை என்று சொல்லி ஏமாற்றும் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைக்கும். புலிகள் இதைச் செய்தால், அது மாபெரும் துரோகமாக மீள அமையும்.

 

புலிகள் கடந்தகாலத்தில் இழைத்த தவறுகள், துரோகங்கள் போல், இது புதிய வடிவில் ஒரு துரோகத்தை விடுதலையாக காட்டி நியாயப்படுத்தப்படும்;. இதைத்தான் ஏகாதிபத்தியங்கள் முதல் புலியெதிர்ப்பு கும்பல் வரை புலியிடம் கோருகின்றது. நாங்கள் இதற்கு மாறான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கின்றோம். புலிகள் அரசுடன் அல்லது ஏகாதிபத்தியத்திடம் சேர்ந்து எடுக்கும் எந்த ஒரு துரோகத்தையும் அங்கீகரிக்க முடியாது. அதை நாம் எதிர்க்கின்றோம். இன்று புலம்பெயர் சமூகத்தைக் கொண்டு புலிகள் நடத்தும் போராட்டம், கவுரமான ஒரு துரோகத்துக்கு ஏகாதிபத்தியத்தை அனுசரணையாக இருக்க வேண்டுகின்றனர்.

 

அவர்கள் கோசங்கள் முதல் அனைத்தும் இதற்குள் அடங்கும். இவை அனைத்தும், தமிழ் மக்களுக்கு எதிரானது. இந்த நெருக்கடிக்கு இது தீர்வல்ல என்றால், எது தீர்வு?  புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்வதுதான். இதை செய்யாத நிலையில், போராடி மடிவதுதான் உயர்ந்தபட்சம் தமிழ் மக்களுக்கு சார்பானது. இங்கு இதிலும் மேலும் மேலும் துரோகத்துக்கு பதில், போராடி மரணிப்பதையே நாம் மதிக்கின்றோம். போராடி மடிதல் என்ற, எம் நிலைப்பாட்டுடன் சில தோழர்கள் எம்முடன் முரண்படுகின்றனர். இதை இந்த இடத்தில் குறித்துக்கொள்கின்றோம்;. மீண்டும் இன்னும் மூன்று பத்தாண்டு துரோகத்துக்கு பதில், புதிய தவறுக்கு பதில், போராடிய எல்லையில் அவர்கள் இதை அப்படியே விட்டுச்செல்ல முனைகின்றனர். அந்த வகையில் இந்த மரணம் மக்களுக்கு சார்பானது. இதில் புலிகள் செய்யாத துரோகம், எதிரிக்கு சாதகமற்றது.

 

இதனால் தான் நாம்  ' தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள் "  ளில், மக்களை விடுவிக்கவும், போராட விரும்பாதவர்களை விடுவித்து, இறுதிவரை உங்கள் வழியில் போராடி மடியும்படியும் கோரினோம். புலிகள் தம் வலதுசாரிய பாசிச எல்லையில், மக்களை விடுவிக்கவில்லை. போராட விரும்பாதவர்களை விடுவிக்கவுமில்லை. இருந்தபோதும் தலைமை, ஒரு துரோகத்துக்கு பதில், அவர்களும் போராடி மரணிக்கின்றனர். இதை நாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அதை நாம் மக்கள் நலனில் இருந்து வரவேற்கின்றோம். புலிகள் இந்த வடிவில் இருப்பதைவிட, இல்லாது இருத்தல் அவசியமானது.

 

இது புலிகளின் கீழ்மட்டத்தில் போராடுபவர்களை குறித்து சொல்லவுமில்லை. அதேபோல் புலிகளை அழிக்கும் இலங்கை அரசின் ஆக்கரமிப்பையும், அழித்தொழிப்பையும் நாம் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. இங்கு எம் கருத்து, குறித்த சூழல் சார்ந்து, அதற்குள் எப்படி என்று அணுகுகின்றது.  

 

2. ஏகாதிபத்தியமும், இந்தியாவும், இலங்கையும் புலியை சரணடையக் கோருகின்றது. புலியெதிர்ப்பும் இதையே கோருகின்றது. இதை இன்று புலித் தலைமை மறுத்து, போராடியே மரணிக்கின்றனர். இதை நாம் எப்படி பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் அணுகுவது?

 

ஏகாதிபத்தியமும், இந்தியாவும், இலங்கையும், புலியெதிர்ப்பும், புலியிடம் துரோகத்தைச் செய்யக் கோருகின்றது. சரணடையக் கோருகின்றது. இதை புலிகள் செய்ய மறுக்கின்றார்கள். இதை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கின்றோமா!? இல்லை. நான் இதை பார்ப்பதால், உங்களிடமிருந்து இதில் முரண்படுகின்றேன். இதுதான் எமக்கு, புலி முத்திரை குத்தவைக்கின்றது.

 

புலிகள் ஏகாதிபத்தியத்திடம், இந்தியாவிடம், இலங்கையிடம் மண்டியிடும் துரோக அரசியல் அடிப்படையில் நடத்தும் போராட்டம், சாராம்சத்தில் ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவைதான். ஆனால் அதில் வெற்றிபெற முடியாது இருத்தல், மக்களுக்கு சார்பானது. புலிகள் இங்கு இலங்கை அரசுக்கு நிகராகவே, தன்னை அங்கீகரிக்க கோருகின்றது. இந்த முரண்பாட்டின் எல்லையில் நின்றுதான், அவர்கள் துரோகம் செய்யாது மரணிக்கின்றனர். தன்னை இலங்கை அரசுக்கு நிகராக அங்கீகரிக்க கோரும் புலிகளிடம், ஏகாதிபத்தியமோ துரோகமிழைத்து சரணடையக் கோருகின்றனர். இதை மறுத்துத்தான், புலித்தலைமையும் போராடி மடிகின்றது. இதைத்தான் தலை சாய்த்;து  நாம் மதிக்கின்றோம். இதை நாம் வேறுபடுத்திப் பார்க்கின்றோம்.

 

புலிகளின் இந்த மறுப்பும், போராட்டமும், மரணங்களும், ஏகாதிபத்தியத்துக்கும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் அரசியல் நெருக்கடியைக் கொடுக்கின்றது. இது ஒரு வலதுசாரிய முரண்பாடாக இருந்த போதும், ஏகாதிபத்தியம் முதல் இலங்கை வரையான சுரண்டும் வர்க்கத்தின் பொதுநலனுக்கு எதிராக உள்ளது. இந்த எல்லையில் இதை நிறுத்தித்தான், இதை சர்வதேசபாட்டாளி வர்க்கம் மதிப்பிடுகின்றது. புலிகள் துரோகமிழைத்தால், எந்த நெருக்கடியும் இவர்களுக்கு இருக்காது. இதற்கு மாறாக அவர்கள் போராடி மடிவது, இதற்காவும் மதிக்கப்பட வேண்டும்.   

 

புலிகளின் அரசியல் கோசங்கள் முதல் அவர்களின் நடைமுறைகள் அனைத்தும் படுபிற்போக்கானவைதான்;. மக்களை பணயம் வைத்தும், அவர்களை கொன்றும் நடத்துகின்ற புலி அரசியல் ஒருபுறம். மறுபுறத்தில் தப்பியோடாது,

 

துரோகமிழைக்காது போராடி மடிகின்றனர். இந்த இடத்தில் மக்களை வதைத்து, இறுதியில் ஒரு துரோகத்தையும் அரங்கேற்றாது மரணிப்பது, ஒரு துரோகத்தை விட மேலானது. துரோகத்துக்கு பதில் இதையே, நாம் கோருகின்றோம். இதையே நாம் எம் முந்தைய கட்டுரைகளிலும் தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம்.      

  

3. போராடி மரணித்தவர்களை நாம் எப்படி மதிப்பிடுவது? துரோகி என்றா? புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் பார்ப்பது போல்தான், நாமும் இதைப் பார்ப்பதா?

 

புலிகள் வலதுசாரிகள் என்பதால் அந்த இயக்கத்தின் அடிமட்டத்தில் போராடி மரணித்தவர்களை, நாம் கொச்சைப்படுத்த முடியாது அல்லவா. அவர்களை வழிநடத்திய தலைமையின் ஒரு பகுதி, இன்று தன் சரணடைவுக்கும் துரோகத்துக்கும் பதிலாக மரணிக்கின்றது. இதை நாம் கொச்சைப்படுத்த முடியாது. 


 
இன்று போராடி மடியும் வலதுசாரிய புலித் தலைவர்களை எப்படி நாம் அணுகுவது? சொகுசு வாழ்வு, அதிகாரம், அடாவடித்தனம், ஈவிரக்கமற்ற மனிதவிரோத தன்மை கொண்ட புலித்தலைமை தான், இன்று போராடி மரணிக்கின்றது. துரோகம் என்ற எலும்புத்துண்டை ஏகாதிபத்தியம் போடுகின்றது. மாறாக அதை நிராகரித்து, மரணத்தை தனது தமிழ் தேசியத்தின் பெயரில் செய்கின்றது.

 

தான் நம்பிய, தான் கட்டமைத்த தேசியத்தின் பெயரில், தன் மரணத்தை விட்டுச்செல்லுகின்றது. இந்த மரணத்தை, வெறுமனே புலித் துரோகிகளின் மரணம் என்று நாம் கொச்சைப்படுத்த முடியாது. எதற்காக, ஏன், எந்த வர்க்கத்துக்காக மரணித்தார்கள் என்ற கேள்விகளை, கொச்சைப்படுத்தும் பார்வையில் முன்னிறுத்தி நிராகரிப்பதல்ல. மாறாக இந்த வர்க்கம், இயல்பாக ஒரு துரோகம் ஊடாக மக்களை இன்னும் ஏய்த்து வாழ்ந்திருக்க முடியும்;. அதற்கான சந்தர்ப்பம் இருந்தே வந்துள்ளது. அது தொடர்ந்தும் ஒரு துரோகத்தைச்  செய்யாது போராடி மரணிப்பதும், அவர்கள் தாம் கொண்ட தவறான இலட்சியத்தின் பால் மடிவதும் துரோகமா? புலிகள் மக்கள் விரோத நடத்தைகள் துரோகம் என்றால், அவர்கள் தேர்ந்தெடுத்த சொந்த மரணமும் கூட துரோகமா? இல்லை.

 

துரோகம் தியாகம் என்று சொல்லுக்குள் இதை அளந்து பார்ப்பது அபத்தமானது. இதற்கு வெளியிலும் அரசியல் மதிப்பீடுகள் உண்டு. நாங்கள் புலிகள் துரோகம் செய்ய மறுத்து மரணிப்பதை, அரசியல் ரீதியாக சரியானதாகவே ஏற்றுக்கொள்கின்றோம். அதை நாம் இந்த நெருக்கடி மீது, முன்வைத்து வந்துள்ளோம்.

 

அதையே நாம் எம் கட்டுரைகள் ஊடாக சொல்லி வருகின்றோம்.    

         

எமக்கு புலி முத்திரை குத்தியும், நான் உணர்ச்சி வசப்பட்டதாக திரித்தும், எம்முடன் ஓடிப்பிடித்து விளையாட முனைகின்றார் சிறிரங்கன் .

 

வேடிக்கை தான். வழமை போல், தன் குழப்பமான உணர்ச்சிப் பாணியிலேயே, இம்முறை எம் கருத்துக்கு சேறடித்துள்ளார். எம் இந்த இணையத்தளத்தில், அவரின் அந்தக் கட்டுரை உள்ளது. இதை அவர் வெளியிட முன், இதை எம்முடன் விவாதிக்க அவரின் தொலைபேசி இயங்கவில்லை. வெளிவந்த பின் நாம் தொடர்பு கொள்ளமுயன்றும், அப்போதும் முடியவில்லை. அவர் முன்கூட்டிய தன் முடிவுகளுடன் காத்திருந்தது புரிகின்றது. மூக்கணாங் கயிறு கட்டுரை ஊடாக, இதைத்தான் அவர் செய்தார். தற்போது எம்முடன் நேரடியாக விவாதிக்காமல், அவசரம் அவசரமாக எனக்கு எதிராக எழுத காத்திருந்த ஆவலுடன், தன் அரசியல் நேர்மையீனத்துடன் தான் இந்த புலி முத்திரை குத்தல் கூத்து அரங்கேறுகின்றது.

 

அடுத்தநாள் நாதன்(?) பெயரில் அவரே வெளியிட்ட ஒன்றில், அதற்குள்ளான குறிப்பில், 'மக்களது தலைமையில், மக்களோடு மக்களாக இணைவதன் தொடர்ச்சியில் மேலும் பயணிக்கிறேன் தனிமனிதனாக! எமது மக்களது விடிவுக்கான புரட்சிகரக் கட்சியின் மலர்வை எதிர்பார்த்து..." என்கின்றார். தன் வழியில், தனிமனிதனாக செல்வதாக அறிவிப்பதன் மூலம், அவரை அவ்வழியில் செல்வதை நாம் புரிந்து அதில் இருந்து நாம் விலகிக் கொள்கின்றோம்.

 

எம்முடனான விலகலுக்காக 'தனிமனிதனாக!" செல்ல அவர் காத்திருந்தது, குறித்த கட்டுரையை தன் வசதிக்காக திரித்துப் புரட்டியதும், இங்கு வெளிப்படையாக அம்பலமாகின்றது. 'தனிமனிதனாக! எமது மக்களது விடிவுக்கான புரட்சிகரக் கட்சியின் மலர்வை எதிர்பார்த்து..." நிற்பதாக கூறி விலகிச் செல்வதை, நாம் இங்கு இனம் கண்டு கொள்கின்றோம்.  

  

'துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகள்"- என்ற எம் கட்டுரை இரவு வெளிவந்த  சில மணி நேரத்தில் (இரவு 2 மணிக்கு), அதனை பார்வையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியிருந்தோம். இதைப்பற்றிய விவாதம் ஒன்றை அன்று இரவே வேறு தோழர்கள் நடத்தியதாலும், இதை தவறாகத்தான் இன்றைய அற்ப அறிவுத்தளத்தில் இருந்து விளங்குமளவுக்கு அரசியல் நிலைமை உள்ளது என்ற அடிப்படையில், இதை விரிவாக்கி தெளிவாக்கி வெளியிடுவது என்று எண்ணினோம்.

 

ஆனால் சிறிரங்கன் கட்டுரை ஏன் இடைநிறுத்தப்பட்டது என்பது கூட அவருக்கு அக்கறைக்குரியதாக இருக்கவில்லை. ஆனால் கட்டுரையை அவரே மீள பிரசுரித்ததுடன், அவரின் அரசியல் பாணியல்  உளறியுள்ளார். அவருக்கு முன் இருந்த அரசியல் காழ்ப்பு

 

1. என்னை பிழை பிடித்து தாக்க வேண்டும் என்ற அரசியல் தெரிவு, முதன்மையான அரசியல் நிலையாக இருந்ததுள்ளது. இங்கு தோழமை இருக்கவில்லை.

 

2. அரசியல் ரீதியாக என்னை தாக்குவதற்காக காத்திருந்திருக்கின்றார்.

2005 பின் தமிழ்மணத்தின் மூலம் சிறீரங்கன் மீள அறிமுகமான போது, உங்களிடம் நாம் உங்கள் கடந்தகாலத்தை சுயவிமர்சனம் செய்யும்படி கோரவில்லைத்தான். கடந்த காலத்தில் நீங்கள் புலிகளின் முகாமில் இருந்தபோது, உங்களுக்கு எதிராக நாம் குரல்கொடுத்தும் இருந்தும், நீங்கள் தமிழ்மணத்தில் வைத்த கருத்தின் அடிப்படையில் அதை உங்கள் சுயவிமர்சனமாக கருதி உங்களைப் பாதுகாக்க முனைந்தோம். ஆனால் திடீரென எம் முதுகில் குத்துவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லைத்தான். நான் கடந்தகாலத்தில் இந்தப் போராட்டத்தை தனித்து நடத்திய போது, நீங்கள் யாரும் எம்முடன் இக்கருத்துடன் இருக்கவில்லை. அன்றில் இருந்து விலகாத எம் அரசியல் மதிப்பீடுகள், திடீரென்று உங்களால் திரித்துக் காட்டப்படுவது கண்டு அதிர்ந்து போனோம்;. எம் முதுகுப் பின்னால் நீங்கள் நின்றதைத் தான், எம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

 

சிறீரங்கனின் நேர்மையற்ற தன்மையே இங்கு பளிச்சென்று உள்ளது. இங்கு நாம் சிறீரங்கனுக்கு, வரிக்குவரி பதில் சொல்வது அவசியமற்றது. அவரின் அரசியல் புரிதல், மிகக்குறுகிய அவரின் உணர்ச்சியின் எல்லைக்குட்பட்டது. அவரின் ஓரு சில தர்க்கத்தை அரசியல் ரீதியான உடைப்பதும், மறுபக்கத்தில் சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தில் மிகப் பின்தங்கிய அறிவுத்துறையினர் மட்டத்தில், இதை விரிவாக்கி விளக்குவதும் இங்கு முதன்மையான பணியாக உள்ளது.    

 

புலிகளை நாம் வரைந்த வைத்துள்ள கோட்டுக்குள் பூட்டிவைத்துக் கொண்டு, மாறுகின்ற நிலைமைகளை கவனத்தில் எடுக்காது மதிப்பிடுவது மார்க்சியமல்ல. அதிரடியாக மாறிக் கொண்டிருக்கும் நிலைமைக்குள் நின்றுதான், நாம் சமூகத்தின் முன் கருத்துரைக்க முடியும;. இதைச் செய்வதற்கு சமூகத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகும் ஆற்றலும், அனுபவமும் அவசியம். இது இன்று எமக்கு வெளியில் கிடையாது. இதை இன்று அடித்து சொல்ல வேண்டியுள்ளது. நான் மட்டும்தான் கடந்த 25 வருடமாக இந்த ஆற்றலை செய்யுமளவுக்கு, தளம்பாத வகையில் தொடர்ச்சியாக விளக்கிவந்துள்ளேன். இதை நாம் இன்று சொல்வது ஏன் அவசியமாகின்றது என்றால், இதை மறுப்பது இதை உரிமை கோருவதும் கூட இன்று சந்தர்ப்பவாத அரசியல்தான்.

 

முதலில் என் கருத்தை வெறும் சொற்களில் நிறுத்தி திரிக்கின்றார். நாம் சொல்லாத சொல்லைப் போட்டு கதை விடுகின்றார். எமது அரசியல் நிலையை உணர்ச்சி வசப்பட்ட ஓன்றாக காட்டி கொச்சைப்படுத்துகின்றார். இதுதான் சிறீரங்கன் செய்ய முனைந்தது. 

 

1. இப்படி சிறீரங்கன் எழுதுகின்றார் 'புலிகள் தமது தவறான வரலாற்றுப்பாத்திரத்துக்கு இப்போது தியாகங் கற்பிக்கத் தோழர் இரயாவைப் பயன்படுத்துகிறார்களாவென நாம் ஐயுற வைக்கும் கட்டுரையை அவர் புலிகளைத் தலைவணங்கிச் செய்கிறார்- எழுதுகிறார். இதில், எங்கே தோழர் மக்கள் நலம் இருக்கு?" முதலில் தோழர் என்ற வர்க்க அடிப்படையில், நீங்கள் இங்கு எம்மை அணுகியிருக்கவில்லை. சும்மா பயன்படுத்துகின்றீர்கள். உங்கள் உறவு, உங்கள் புலியெதிர்ப்பு அரசியல் அடிப்படையில் எழுந்துள்ளது. அதை களையாத வரை, அது உங்களுடன் அதுவும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.      

 

நான் சொன்னது என்ன? 'போராடி மடியும் வீரத்திலும் தியாகத்திலும், துரோமிழைக்காத நிலைப்பாட்டிலும், ஒரு நேர்மை உண்டு. அரசு சார்பு நிலையெடுத்து நக்கும் புலியெதிர்ப்பு கும்பலிடம் இருக்காத ஓன்றிது. அதற்கு நாம் தலைவணங்குகின்றோம்" நாம் எழுதிய கட்டுரையில், இறுதி வரிகள் இது. இங்கு எதைத்தான், நாம் சொல்லுகின்றோம். அவர்களும் மற்றவர்கள் போல், துரோகமிழைக்காத அந்த சந்தர்ப்பத்தை மதித்து தலைவணங்குகின்றோம். அந்த தெரிவை தேர்வாக உலகம் அவர்கள் முன் திணித்தது. அவர்களின் மேலான பொது நிர்ப்பந்தம், அதை செய்யும் எல்லையில் நிறுத்தியது. அதை மறுத்து, போராடி மரணித்தமைக்கு,  தலைவணங்குவது பாட்டாளி வர்க்கத்தின் கடமை. இந்தக் கோசத்தை நாம் முன் கூட்டியே முன்வைத்தவர்கள் கூட.

 

சிறீரங்கன் கேட்கின்றார் 'எங்கே … மக்கள் நலம் இருக்கு? என்று.  ஒரு கருணா போல், ஒரு டக்ளஸ் போல், ஒரு ஞானம் போல் துரோகமிழைக்காது, இருத்தல் மக்கள் நலன்தான். புலியெதிர்ப்பு கண்ணாடியால் பார்த்தால், இது தெரியாது. இப்படி துரோகமிழைக்காது இருத்தல், மக்கள் நலன்தான். இப்படி சொல்வது என்பது, புலியை பாதுகாத்தல், புலிக்காக பிரச்சாரம் செய்வதல்ல. குறிப்பான மரணத்தின் பின் உள்ள, தெளிவான அரசியல் மதிப்பீடு இது.

 

இதையே அன்று கருணா பிரிந்த போது, துரோகத்துக்கு பதில் புலியுடன் போராடி மடிந்திருந்தால், அவனின் அரசிலுக்கு அப்பால் அவனுக்கு தலைவணங்கியிருப்போம். ஏன் மாத்தையா புலியிடம் சரணடைவதற்கு பதில், புலியுடன் மோதி இறந்து இருந்தால், அதையும் மதிப்பளித்து இருப்போம். வலதுசாரிகள் என்பதால், ஏதார்த்தங்கள் தானாக கொச்சையாகிவிடாது.

 

'தியாகங் கற்பிக்கத் தோழர் இரயாவை"  என்று எம்மை திரித்து புரட்டிய இவ்வரிகள் எமக்கு சொந்தமில்லாத வரிகள். எங்கள் மதிப்பீடுகள் குறிப்பானவை, தெளிவானவை. கருணா வகையறாக்கள் போல், துரோகம் செய்யாது மரணிக்கும் சூழல் மேலானது. இதில் நாம் குறிப்பிடுகின்றோம் 'எம் வரலாறு சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபை, கற்றுக்கொள்ளும் வகையில், புலிகள் மரணங்கள் தன் தவறுகள் ஊடாக எமக்கு விட்டுச்செல்ல முனைகின்றது." என்ற கூறுகின்றோம்;. இதை யாரும் திரிக்க முடியாது. புலிகளின் பாசிசம் கட்டமைத்த அரசியல் எதிர்மறையிலும், நேர்மறையிலும் கூட, கற்றுக்கொள்ள நிறைய விடையங்களாக உள்ளது. அவர்கள் போராடி மரணிக்கும் முடிவின் மேல்,

 

குறிப்பாக

 

1. அவர்கள் மக்களுக்கு இழைத்த துரோகங்களும் உண்டு.

 

2. சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபும் உண்டு. இதை வேறுபடுத்தி பார்க்க முடியாத கிளிப்பிள்ளைகள், ஓரேமாதிரி கீச்சிடத்தான் முடியும்.  

 

அதே எமது முக்கால் பக்கக் கட்டுரையில் புலிகளின் தவறான பக்கத்தை தெளிவாகவே குறிப்பிடுகின்றோம்;. 'புலிகள் தமிழ்மக்களின் போராட்டத்தை சிதைத்து, தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகள் வரலாற்றில் மன்னிக்க முடியாதவை. பாசிச வழிகளில்; தமிழ் மக்களை ஓடுக்கி, தம்மைத்தாம் தனிமைப்படுத்தி, தற்கொலைக்குரிய வகையில் தம் போராட்டத்தை அழித்தனர். பாரிய உயிர்ச்சேதத்தை, பாரிய பொருட்சேதத்தை தமிழ்மக்கள் மேல் சுமத்தியத்துடன், தமிழ்மக்களை ஒடுக்கினர். மொத்தத்தில் ஒரு போராட்டதையே அழித்தனர்" இப்படி தெளிவாக்கிய நாம், இதன் மேல் தான், 'எம் வரலாறு சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபை, கற்றுக்கொள்ளும் வகையில், புலிகள் மரணங்கள் தன் தவறுகள் ஊடாக எமக்கு விட்டுச்செல்ல முனைகின்றது." என்று கூறுகின்றோம்;. இதில் எங்கே நாம் புலிகளை பாதுகாக்க முனைகின்றோம். அரசியல் எதார்த்தத்தை பற்றிப் பேசுகின்றோம், அதை மதிப்பிடுகின்றோம்.

       

எம் வரலாற்றில் சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபு, புலம்பெயர் இலக்கிய கும்பலிடமும், அதன் கூட்டுக் கூத்தாடிகளிடம் கூட இருந்தது கிடையாது. இங்கு புலிகள் துரோகமிழைக்காது என்று நாம் கூறுவது, தமிழ் மக்களின் எதிரியுடன் சேர்ந்து தொடர்ந்தும் தமிழ் மக்களை ஓடுக்க முனையாது மரணிப்பதைத்தான். இதற்கு வெளியில் மாற்று இயங்கு தளங்கள், சந்தர்ப்பவாதத்தின் முழுவடிவில் தான் உள்ளனர். கருத்துகள் முதல் கூடி கூத்தடிக்கும் அரசியலையே பினாத்துகின்றனர். இப்படி புலிகளிடம் கற்றுக்கொள்ள, அதை மதிப்பளிக்க பல விடையங்கள் உண்டு. அவர்கள் சரணடையாது, துரோகமிழைக்காது, போராடி மரணிப்பதைக் கூட, நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் இராணுவ உத்திகள், என்ற பல விடையங்கள் உண்டு. 

 

2. சிறீரங்கன் எம்மை திரித்துப் புரட்டும் போது கூறுகின்றார் '.. 'துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகள்..."- இரயாகரன். அப்போ, எது துரோகம் எனும் கேள்வி அவசியமாகிறது. 'எது துரோகம்" எனும் இக்கேள்வி குறித்து நீண்ட ஆய்வு அவசியமாகிறதா? அதையும் நாம் செய்யத் தயாராகவே இருக்கின்றோம். புலிகளைத் தூக்கி நிறுத்தப் புரட்சிப் பரப்புரை எனக்கு அவசியமில்லை! எனவே, புலிகளது பாத்திரம் என்னவென்பதைத் தொடர்ந்து கால் நூற்றாண்டாக நாம் குறித்துரைத்துள்ளோம்" என்கின்றார்.

 

ஒரு விவாதத்தின் சாரப்பொருளையே புரிந்துகொள்ள முடியாது குடுகுடுப்பைக்காரன் மாதிரி, எதிர்வு கூறி எம்மை தூற்ற முனைவது வேடிக்கைதான். இதை சொல்ல உணர்ச்சிவசப்பட்ட நிலை என்று, தன் நிலையையே எமக்கு பொருத்தி விடுவது கோமாளித்தனமாகும். முன்கூட்டியே போராடி மடியுங்கள், என்று கோசமாக வைத்தவர்கள் நாம். அதை அரசியல் ரீதியாக சீர்தூக்கி பார்த்து மதிக்கின்றோம்.

 

நீங்கள் இதை திரித்தும் கொச்சைப்படுத்தியுமே 'புலிகளைத் தூக்கி நிறுத்தப் புரட்சிப் பரப்புரை எனக்கு அவசியமில்லை!" என்று கூறி, வித்தைகாட்ட முனைகின்றீர்கள். புலியெதிர்ப்பே மாற்று என்ற தளத்தில் பொதுவாக நீச்சலடிக்கும் போது, ஊசலாட்டமும் உணர்ச்சிக்கும் உள்ளாகின்றவர்கள் சொல்லுக்குள் அமர்கின்றனர். தத்துவார்த்த ரீதியாக இதற்கு பதிலளிக்க முடியாது.

 

புலிகள் இலங்கை அரசுடன் செய்து கொள்ளும் எந்த சரணடைவும் துரோகமானதுதான். அவர்கள் அரசியலில் நீடித்தாலும் சரி, சரணடைந்தாலும் சரி, அவர்கள் முன்னெடுக்கும் எந்த அரசியலும் மக்களுக்கு விரோதமானது. அவர்களின் வலதுசாரி பாசிச அரசியல், அதைத்தான் எங்கும் எப்போதும் தேர்ந்தெடுக்கும். இன்று இக்கட்டான வாழ்வா சாவா என்ற நிலையில், சரணடைவையும் துரோகத்தையும் தான், பிற்போக்கான மக்களின் எதிரிகள் புலிக்கு தன் தீர்வாக முன்வைக்கின்றது. ஏன் அதைத் திணிக்கின்றது கூட. இதை நாங்கள் எதிர்த்தால், உடனே அது புலியை ஆதரிப்பதா?

 

நாங்கள் என்ன சொல்கின்றோம். இதற்கு எதிராக போராடக்கோருகின்றோம், அந்த போராட்டத்தில் மரணிக்க கோருகின்றோம்;. இதை அவர்கள் செய்து மரணிக்கும் போது,   அதை நாங்கள் மதிக்கின்றோம்;. இதைச்செய்யாது சரணடைந்தால், அதைத் துரோகம் என்போம். இதற்கு வெளியில் அவர்கள் எப்படி நீடித்து இருந்தாலும், மக்கள் தொடர்ந்தும் மனித அவலத்தையே சந்திப்பார்கள். சுயவிமர்சனம் செய்யாத புலிகளின் இருப்பு, அவை எந்த வடிவத்தில் இருந்தாலும், அவை மக்களுக்கு எதிரானது. சுயவிமர்சனமில்லாத அவர்களின் இருப்பு எம் மக்களுக்கு அவசியமற்ற ஓன்று. இந்த நிலையில் சுயவிமர்சனமற்ற புலி வாழ்வு, மீளவும் துரோகமும் செய்வதற்கு பதில், உங்கள் வழியில் போராடி மடியுங்கள் என்கின்றோம். இதை நாங்கள் மதிக்கின்றோம்.

 

அடுத்த 30 வருடத்துக்கு தம் துரோகத்தை தமிழரின் விடுதலையாக, தமிழரின் தீர்வாக புலிகள் சொல்லாமல், அதை மக்களிடம் விட்டுச் செல்வது அரசியல் ரீதியாக மேலானது. புலிகள் தவறான அரசியல் ரீதியாக இருப்பதை விட, அவர்களின் மரணம் மேலானது. இது யாரையும் கொண்டு புலிகளை அழிப்பதை ஏற்பதென்பதல்ல. மாறாக குறித்த சூழல் சார்ந்த, எல்லைக்குள்ளான, எம்மால் எந்த அரசியல் தலையீட்டையும் நடத்த முடியாத நிலையில் ஒரு அரசியல் பார்வை.  

 

சிறீரங்கன் 'எது துரோகம் எனும் கேள்வி அவசியமாகிறது" என்று கேட்கின்றார். துரோகம் எது என்பது குறித்து, ஒவ்வொரு குறிப்பான விடையம் மீதும் வேறுபடும். முன்கூட்டியே முடிந்த முடிவுகளுடன், நாம் இயங்கியல் போக்கை இயக்க மறுப்பியலாக மறுக்க முடியாது.

  

நாங்கள் விவாதித்த விடையம் என்ன? புலிகள் இன்றைய நெருக்கடியில் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதுதான். இலங்கை அரசுடன் சேர்ந்து மக்களுக்கு ஒரு துரோகத்தை இழைக்காது இருக்கும், புலிகளின் தெரிவையொட்டி எம் அரசியல் மதிப்பீடுகளை வைக்கின்றோம்;. புலிகளின் வலதுசாரிய பாசிசம் மாபியா வாழ்வு முறை, தன் சொந்த குறுகிய வாழ்வுக்கான வழியைத் தேடும். இதில் சரணடைவும், துரோகமும் தெரிவுக்குள் முதன்மையான வழியாக காணப்படுகின்றது. மறுபக்கத்தில் தான் தப்பிப் பிழைக்க மக்களை பலி கொள்ளும் அரசியலாக்கி நிற்கின்றது. இதைக்கொண்டு துரோகத்தையும், சரணடைவையும் செய்யத் துடிக்கின்றது. இதற்கு மாறாக போராடி மடி என்று, அவர்களின் கோசத்தையே அவர்களுக்கு எதிராக நாம் கையாளுகின்றோம். இதைச் செய்யாத அனைத்தும், துரோகமென்கின்றோம். இது மட்டும்தான் இன்றைய குறிப்பான நிலையில், புலிகளின் தொடர்ச்சியான ஒரு துரோகத்தில் இருந்து மக்களை விடுவிக்கும்.

 

இது எதிர்காலத்தில் துரோகத்துக்கு பதில், போராடுவதே தன் வாழ்வதற்கான பாதையாக தேர்ந்தெடுக்கும். துரோகமே வாழ்வதற்கான அரசியல் என்பதை மறுக்கும். தம் இலட்சியத்துக்காக போராடுவதும், காட்டிக்கொடுக்காது மடிவதும், ஒரு அரசியல் மரபாக இது விட்டுச்செல்லும்.

 

3. சிறீரங்கன் தன் உணர்ச்சிவசப்பட்ட கருத்தில் கூறுகின்றார் 'இவ் யுத்தம் மொத்தத்தில் சமூகவிரோதமானதென்று வரலாறு முன்னுரைக்கும்போது, இரயாகரன் அதற்குத் தார்மீக நியாயங் கற்பிக்கின்றாரா?" என்று, கேட்பது வேடிக்கையானது. யுத்தம் சமூகவிரோதமானதாக மாறி இருக்கின்றது என்பதுதான் உண்மை. யுத்தமல்ல. மறுபக்கத்தில் யுத்தமற்ற புலியிருப்புடன் கூடிய சூழலும் கூட, சமூக விரோதமானதாக இருக்கும். இன்றைய சூழலைப்போல், இது மீண்டும் 30 வருடங்கள் தன் சமூக விரோதத்தை புலி ஊடாகச் செய்யும். எந்தத் துரோகமும், சரணடைவும் அதைத்தான் செய்யும். புலிகள் இன்று எந்த வீச்சோடு தம்மை பாதுகாக்க முனைகின்றனரோ, அந்த வீச்சோடு; தான் துரோகத்தையும் அரங்கேற்றுவர்.

 

இங்குதான் நாம் அவர்கள் எதைத் தேசியம் என்றனரோ, அதற்காக துரோகமிழைக்காது போராடி மடியுங்கள் என்ற கோசத்தை நாம் முன்னிறுத்துகின்றோம்;. அதை நாம் வைத்தபோது மக்களையும், போராடாத விரும்பாதவர்களையும் விடுவிக்கக் கோரினோம். இதைத்தான் நாம் அரசியல் ரீதியாக, மதிப்பளித்தோம். இது புலியை தூக்கி நிறுத்துவதாக பார்ப்பது, அவர்களின் அரசியல் குண்டுச்சட்டிக்கு உட்பட்ட ஓன்றே.

 

4. 'புலிகள் தமிழ்மக்களது குழந்தைகளைப் களப்பலிகொடுத்துத் தலைவரைக் காப்பது தியாகமென உரைக்க, இரயா எமக்குத் தேவையில்லை! அதைப் புலிகளே சொல்லப் போதும். அவர்களது ஊடகங்களே சொல்லப்போதும்." என்று எம்மை திரிக்கின்றார். புலிகளின் தலைவர்களின் மரணத்தை, தலைவரை பாதுகாக்க என்று பார்ப்பது புலியெதிர்ப்பு அரசியல்.

 

'தியாகம்" என்ற வார்த்தையை நாங்கள் இந்த இடத்தில், பயன்படுத்தவில்லை. நாங்கள் அரசுடன் சரணடையாது மரணிக்கும் புலித்தலைவர்களின் மரணத்தின் போது  பயன்படுத்தியுள்ளோம். இங்கு அவர்கள் தங்கள் வர்க்கநலனுக்கு முரணாகவே மரணிக்கின்றனர். நாம் பயன்படுத்திய இடம் இது தான். 'போராடி மடியும் வீரத்திலும் தியாகத்திலும், துரோகமிழைக்காத நிலைப்பாட்டிலும், ஒரு நேர்மை உண்டு. அரசு சார்பு நிலையெடுத்து நக்கும் புலியெதிர்ப்;பு கும்பலிடம் இருக்காத ஓன்றிது. அதற்கு நாம் தலைவணங்குகின்றோம்"

இதுவல்லாத மற்றவை எல்லாம் துரோகம் என்பதைத்தான் நாம் 'ஒரு" என் சொல் ஊடாக தெளிவாக வேறுபடுத்தியிருக்கின்றோம். 

 

இதுவல்லாது எந்த வார்த்தையை நாம் பயன்படுத்தினோமோ அதை திரிக்காது காண்பது அவசியம். மொட்டையாக நாம் பயன்படுத்தாத இடத்தில், சொல்லைப் போட்டு அரசியல் வித்தை காட்டக்கூடாது. இது அரசியலுக்கு அழகுமல்ல, நேர்மையுமல்ல. பழைய புலம்பெயர் இலக்கிய அரசியல் பாணியிது. உங்களை எல்லாம் எதிர்த்து, 25 வருடத்துக்கு மேலாக போராடிய எம்மிடம் இது அவியாது.   

  

5. சிறீரங்கன் கூறுகின்றார் 'எனினும், இலங்கை தழுவிய புதியஜனநாயகப் புரட்சிபேசும் தோழரிடம் இப்படியான ஊசலாட்டம் எங்ஙனம் தோன்றுகிறது. 'இங்கேயும், அங்கேயும்" ஊசலாடுவதாக என்னைச் சொன்னவர்கள் சொன்னவர்கள், இப்போது தமது தரப்பு நியாயத்தைப் புலிகளது அழிவு யுத்தத்தினூடாக வரையறுப்பதுதாம் கொடுமை!" இந்த விடையம் தான், அவரின் அரசியல் காழ்ப்பிற்கான அரசியல் அடித்தளம். மூக்கணாம் கயிறு என்று எழுதிய அடித்தளமும் இதுதான். அரசியல் நேர்மையீனத்துடன், காத்திருந்து இதைச் செய்துள்ளார். ஊசலாட்டத்தை அடிப்படையாக கொண்ட, உங்கள் உணர்ச்சி அரசியல், கடந்த வரலாறு முழுக்க இருந்துள்ளது. இதை எமக்கு சூட்ட, எம்மைத் திரிப்பது அவசியமாகிவிடுகின்றது. அதைத் திருத்த மறுப்பதும், எம்மிடம் நடித்ததும் புரிகின்றது. 'தனிமனிதனாக! எமது மக்களது விடிவுக்கான புரட்சிகரக் கட்சியின் மலர்வை எதிர்பார்த்து..." நிற்பதாக கூறி செல்வதும், இதனால் தான்.  

 

பி.இரயாகரன்
10.04.2009

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ