Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வங்கதேசத் துணை இராணுவக் கலகமும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள பேரபாயமும்

வங்கதேசத் துணை இராணுவக் கலகமும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள பேரபாயமும்

  • PDF

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று துணை இராணுவப் படையினர் நடத்திய கலகமும், இராணுவ உயரதிகாரிகள் - அவர்களது குடும்பத்தாரோடு சேர்த்து கொல்லப்பட்டிருப்பதும் இந்திய துணைக் கண்டத்து நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதித் திட்டத்தோடு நடந்துள்ள இக்கலகமும் படுகொலைகளும் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அது மீண்டும் நடப்பதற்கான அபாயம் அந்நாட்டைக் கவ்வியுள்ளது.

 

வங்கதேசத் தலைநகரான டாக்காவில் உள்ள பில்கானா பகுதியில் பங்களாதேஷ் ரைபிள்ஸ் (ஆஈகீ) எனும் துணை இராணுவப் படையின் தலைமையகம் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று அங்கு அப்படையின் ஆண்டு விழாக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அந்த அரங்கைச் சுற்றி வளைத்த சிப்பாய்கள், அப்படையின் தலைமை இயக்குனரான ஷகீல் அகமதுவை விழாவுக்கு விருந்தினராக வந்திருந்த அவரது மனைவியோடு சேர்த்து சுட்டுக் கொன்றனர். இவர்கள் தவிர, மேஜர் ஜெனரல், பிரிகேடியர் ஜெனரல் பதவி வகித்த பல உயர் ராணுவ அதிகாரிகளை அவர்களது குடும்பத்தாரோடு சேர்த்து ஏறத்தாழ 140 பேரைச் சுட்டுக் கொன்று, பிணங்களைப் பாதாள சாக்கடையில் தள்ளியும் பெரிய குழிவெட்டிப் புதைத்தும், அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

 

இத்துணை இராணுவப் படை, இராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் அல்லாமல், உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இராணுவ அதிகாரிகளே பொறுப்பேற்று இப்படையை இயக்குகின்றனர். இராணுவப் படையினருக்கு வழங்கப்படும் சம்பளம், படிகள், சலுகைகள் முதலானவை இத்துணைப் படைக்கு அளிக்கப்படுவதில்லை. மேலும் இராணுவ அதிகாரிகளின் லஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளால் இத்துணைப் படையினர் சிப்பாய்கள் குமுறிக் கொண்டிருந்தனர். இவர்களின் அதிருப்தியைக் கிளறிவிட்டு, பிற்போபாக்குக் கும்பல்கள் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த முயற்சித்துள்ளன.

 

இன்றைய வங்கதேச நாடு, அன்று பாகிஸ்தானின் ஒரு மாநிலமாக "கிழக்கு பாகிஸ்தான்'' என்றழைக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் மக்களின் போராட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, பாசிச இந்திரா ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு தலையிட்டு, போராட்டத் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மானை தனது விசுவாசியாக்கிக் கொண்டு, விடுதலைப் படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பி "வங்கதேசம்'' என்ற புதிய பெயரிலான நாட்டை 1971இல் உருவாக்கியது. இந்திய விசுவாசியான ஷேக் முஜிபுர் ரஹ்மான் அந்நாட்டின் அதிபரானார். மிகக் குறுகிய காலத்திற்குள் பாக். விசுவாச இராணுவக் கும்பல், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் துணையோடு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானைச் சுட்டுக் கொன்று இராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவின. அடுத்தடுத்து அந்நாட்டில் பலமுறை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்து, இராணுவ சர்வாதிகார ஆட்சியே தொடர்ந்து நீடித்து வந்தது.

 

இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிரான வங்கதேச மக்களின் போராட்டங்களுக்குப் பின்னர், நாடாளுமன்ற போலி ஜனநாயகம் அந்நாட்டில் மெதுவாகக் காலூன்றத் தொடங்கியது. எனினும், ஜனநாயக சக்திகள் வலுப் பெறாததால், இராணுவக் கும்பலும் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. இக்கும்பல்களுக்கு இணக்கமாகவே நாடாளுமன்ற ஆட்சிகளும் செயல்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவ சர்வாதிகாரி ஜியா உர் ரஹ்மானின் மனைவியாகிய கலீதாஜியா, சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா ஆகியோர் தலைமையிலான நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிகளால் இக்கும்பலை பகைத்துக் கொள்ள முடியவில்லை. இதில் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சி, இஸ்லாமிய அடிப்படைவாத ஜமாத்இஇஸ்லாமி கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துதான் ஆட்சி செய்தது. கலீதா ஜியாவின் எதிர்த்தரப்பான ஷேக் ஹசீனா, நடந்து முடிந்த தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளார்.

 

1971இல் பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்கு எதிராக நடந்த வங்கதேச விடுதலைப் போரின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்று, போராடிய மக்களை மிருகத்தனமாக ஒடுக்கி போர்க் குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ கும்பல்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும் என்பது வங்கதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. அக்கோரிக்கையை முன்வைத்துப் பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்று இப்போது ஆட்சிக்கு வந்துள்ள ஷேக் ஹசீனா, 1971இல் நடந்த விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் மீது விசாரணை நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

 

அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டால், இராணுவக் கும்பல் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் ஆதிக்கத்துக்கு பேரிடியாக அமையும் என்பதால், இச்சக்திகள் ஆத்திரமடைந்தன. மறுபுறம், இத்தகைய விசாரணை நடத்தப்பட்டால் பாகிஸ்தானின் போர்க்குற்றங்கள் உலக அரங்கில் அம்பலமாவதோடு, பாகிஸ்தானிலும் இராணுவமத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்தெழும் என்பதால், பாக். அதிபர் சர்தாரி, கடந்த பிப்ரவரியில் இந்த விசாரணையை நிறுத்தி வைக்குமாறு ஷேக் ஹசீனாவிடம் தெரிவித்தார்.

 

இன்னொருபுறம், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., வங்கதேச இராணுவமத அடிப்படைவாதக் கும்பல்களுடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டு, இந்திய விசுவாசியான ஷேக் ஹசீனாவைச் சுட்டுக் கொன்று இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தும் சதித் திட்டத்தில் இறங்கியது. வங்கதேச துணை இராணுவப் படை சிப்பாய்களிடம் நிலவும் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்ட இக்கும்பல்கள், அவர்களைத் தூண்டி ஹசீனா ஆதரவு இராணுவ உயரதிகாரிகளையும் ஹசீனாவையும் கொன்று, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தத் திட்டமிட்டன. அத்திட்டப்படி துணை இராணுவப்படை சிப்பாய்கள் உயரதிகாரிகளைச் சுட்டுக் கொன்றபோதிலும், சதிகார கும்பல்களுக்கிடையே ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் இத்திட்டம் தோல்வியடைந்து விட்டது.

 

கிரிமினல் மாஃபியா கூட்டாளியும், கப்பல் அதிபரும் கலீதா ஜியா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சலாவுதீன் சவுத்திரி என்பவர் ஏறத்தாழ ரூ. 30 கோடி ரூபாய்களை இராணுவக் கும்பல்களிடம் கொடுத்ததாகவும், அவர்கள் கலகத்தில் இறங்குமாறு துணைப்படை சிப்பாய்களுக்கு இத்தொகையைப் பிரித்துக் கொடுத்ததாகவும், ஜமாத்இஇஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் பாக். உளவாளிகளுடன் இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார் என்றும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன. துணை இராணுவப் படையினர் இராணுவ உயரதிகாரிகளைச் சுட்டுக் கொன்றதையடுத்து, ஹசீனாவை வங்கதேசத்திலிருந்து மீட்டுவர இந்திய அரசு தயார் நிலையில் இராணுவப்படை விமானங்களை ஏற்பாடு செய்து, ஹசீனாவுக்குச் செய்தி அனுப்பியது. இருப்பினும் இராணுவமத அடிப்படைவாதச் சக்திகளின் சதித்திட்டம் தோல்வியடைந்து அம்பலமானதால், அவை தற்காலிகமாகப் பின்வாங்கி விட்டன. நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக ஹசீனாவும் அறிவித்துள்ளார்.

 

மேற்கே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாத தாலிபான்களின் எதிர்த்தாக்குதல்கள் அதிகரித்துள்ள அதேசமயம், அவற்றுடன் கள்ளக்கூட்டு சேர்ந்துள்ள வங்கதேச இராணுவஇஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்குக் கும்பல்களும் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளில் இறங்கியுள்ளன. தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள இக்கும்பல்கள், மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் பெயரளவுக்கான ஜனநாயகமும் பறிக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் மீது மத அடிப்படைவாத காட்டுமிராண்டித்தனமும் ஒடுக்குமுறையும் ஏவிவிடப்படும். இக்கும்பல்கள் தாலிபான்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்துள்ளதைக் காட்டி, பயங்கரவாத பீதியூட்டி அமெரிக்கா ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடத்த முற்படும். அதற்கு தெற்காசிய அடியாளான இந்திய அரசு விசுவாசமாகச் சேவை செய்யக் கிளம்பும். இவற்றைக் காட்டி இந்தியாவிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பயங்கரவாதச் சதிகளில் ஈடுபடுமாறு தூண்டப்படும். இப்பயங்கரவாத நடவடிக்கைகளைக் காட்டி இந்திய நாட்டு மக்கள் மீது அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும். இந்தியாவிலும் வங்கதேசத்திலுமுள்ள புரட்சிகரஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்கு கும்பலையும் இந்தியஅமெரிக்க மேலாதிக்க வெறியர்களையும் தனிமைப்படுத்தி முறியடிக்கும் போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால், இந்நாடுகளைச் சூழ்ந்துள்ள பாசிச பயங்கரவாத இருளை அகற்றவே முடியாமல் போய்விடும்.

 

மனோகரன்

Last Updated on Wednesday, 22 April 2009 06:09