Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சி.பி.எம்.க்குள் ஒளிந்திருக்கும் மோடியின் ரசிகர்கள்

சி.பி.எம்.க்குள் ஒளிந்திருக்கும் மோடியின் ரசிகர்கள்

  • PDF

இந்துவெறி பாசிச பயங்கரவாத மோடிக்கு புதிய ஆதரவாளர் கிடைத்திருக்கிறார். தொழில் வளர்ச்சியைச் சாதிக்க, மோடியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உபதேசித்திருக்கிறார். இவர் இந்துவெறி பா.ஜ.க.வைச் சேர்ந்தவரல்ல; மோடியின் தாராள சலுகைகளால் ஆதாயமடைந்த தரகுப் பெருமுதலாளியுமல்ல.

 

 

மதச்சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்பு என்றெல்லாம் வாய்ச்சவடால் அடிக்கும் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்தான் இவர். கேரளாவின் கண்ணனூர் தொகுதியிலிருந்து சி.பி.எம்.கட்சி சார்பில் தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் அப்துல்லா குட்டி என்பவர்தான், மோடிக்குக் கிடைத்துள்ள இப்புதிய ஆதரவாளர்.

 

கடந்த ஜனவரியில் துபாயில், இந்தியா ஊடக அரங்கம் என்ற அமைப்பின் சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய அப்துல்லா குட்டி, ""தொழில் வளர்ச்சியைச் சாதித்து வரும் குஜராத் முதல்வர் மோடிக்கு முழு மதிப்பெண் தரவேண்டும். தொழில் வளர்ச்சிக்குத் தலைமை தாங்குவதில் அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பகமான நட்பு ரீதியான முதல்தரமான மாநிலம்தான் குஜராத். ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 25,000 கோடி அங்கு முதலீடு செய்ததில் மோடியின் பங்கு முக்கியமானது. மேலும் அவர் டாடாவின் நானோ கார் ஆலையை குறுகிய காலத்தில் நிறுவ திறமையாகச் செயல்பட்டுள்ளார். குஜராத் வழியைக் கேரளமும் பின்பற்ற வேண்டும். அதேசமயம் மோடியின் இந்துத்துவக் கொள்கையை நான் எதிர்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சி.பி.எம். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிறப்பால் முஸ்லிமுமாகிய அப்துல்லா குட்டியே இப்படி இந்துவெறி மோடிக்குப் புகழாரம் சூட்டுவதைக் கண்டு வியந்த குஜராத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவரான புருசோத்தம் ரூபலா, "கம்யூனிஸ்டுகளுக்கு இப்போது கண் திறந்துள்ளதை வரவேற்கிறேன். மோடியின் சாதனைகளை கம்யூனிஸ்டுகளும் அங்கீகரிப்பதைப் பாராட்டுகிறேன்'' என்று வெளிப்படையாக அறிவித்தார்.

 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கேரள சி.பி.எம். கட்சி, அவரிடம் மோடியைத் துதிபாடியதைப் பற்றி விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பியது. அவரோ, ""நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. வளர்ச்சியைச் சாதிக்க கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும் என்று ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடே கூறியுள்ளார். டெல்லியில் ஷீலா தீக்சித்தும், ம.பி.யில் ராமன்சிங்கும் தொடர்ந்து வெற்றி பெற்றதற்கு அவர்கள் தொழில் வளர்ச்சியைச் சாதித்தருப்பதே காரணம்'' என்று விளக்கமளித்ததோடு, "பாட்டாளி வர்க்க ஆசான் ஸ்டாலின் கூட அமெரிக்கத் திறமையை கட்சி ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே!'' என்றெல்லாம் உளறத் தொடங்கினார். கட்சித் தலைமையோ இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, ஓராண்டு காலத்துக்கு கட்சியிலிருந்து அவரை இடைநீக்கம் செய்தது.

 

கேரளத்தில், நீண்ட காலமாக காங்கிரசின் பிடியிலிருந்த கண்ணனூர் தொகுதியை சி.பி.எம். கட்சியின் கோட்டையாக மாற்றிக் காட்டிய அப்துல்லா குட்டியை, கட்சியில் நிலவும் கோஷ்டிச் சண்டையில் பகடைக் காயாக்கி விட்டது என்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எந்த நியாயமும் இல்லை என்றும் சி.பி.எம் அணிகள் மட்டுமின்றி, முதலாளித்துவப் பத்திரிகைகளும் அங்கலாய்க்கின்றன. உண்மைதான். தொழில் வளர்ச்சியைச் சாதிப்பது; மாநிலத்தை முன்னேற்றுவது என்ற பெயரில் பயங்கரவாத மோடி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும், மே.வங்கத்தின் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், கேரளத்தின் அச்சுதானந்தனும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? தனியார்மயதாராளமயக் கொள்கைகளை விசுவாசமாக நடைமுறைப்படுத்துவதில் மோடி அரசுக்கு இடதுசாரி அரசுகள் சளைத்தவையா? உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் சூறையாடலுக்காக சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் விவசாயிகள் மீது கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டதை மறைக்கத்தான் முடியுமா?

 

இப்படி தனியார்மய தாராளமயச் சேவையை தமது கட்சியும் ஆட்சியும் கொள்கையாகக் கொண்டுள்ள நிலையில், அப்துல்லா குட்டி இன்னும் ஒருபடி மேலே சென்று மோடியை விஞ்சும் வகையில், உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சியைச் சாதிக்க வேண்டும் என்று பேசிவிட்டார். மோடி பாணியில் அனைத்து ஓட்டுக் கட்சி அரசுகளும் "இடதுசாரி' அரசுகளும் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் சூறையாடலுக்கு விசுவாசமாகச் சேவை செய்து வரும்போது, மோடியைப் புகழ்ந்த அப்துல்லா குட்டி மீது ஏன் சி.பி.எம். கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்?

 

மோடி, நவீன் பட்நாயக், கருணாநிதி, ஷீலா தீக்சித் போல "இடதுசாரி' அரசுகளும் தனியார்மய தாராளமயமாக்கலைத் தீவிரப்படுத்தி மாநிலத்தின் "தொழில் வளர்ச்சியை'ச் சாதிக்கலாம்; ஆனால் இந்துத்துவ மோடியைப் பாராட்டக்கூடாது என்பதுதான் சி.பி.எம். கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கை. இந்தப் பித்தலாட்டக் கொள்கையைப் புரிந்து கொள்ளாமல் அப்துல்லா குட்டி, மோடியை வெளிப்படையாகப் பாராட்டித் தொலைத்துவிட்டார். அதுதான் பிரச்சினை.

 

இப்படி அப்துல்லா குட்டி மீது நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தாங்கள் இந்துத்துவ எதிர்ப்பில் உறுதியாக இருப்பதுபோல சி.பி.எம். கட்சி காட்டிக் கொள்கிறது. ஆனால், உலகமய எதிர்ப்பு என்ற பெயரில் பா.ஜ.க.வின் தொழிற்சங்கத்தோடு கூட்டு சேர்ந்து அடையாள போராட்டங்கள் நடத்தியதிலிருந்து, இந்துவெறி பாசிச சக்திகளுக்கு அனுசரணையாகவே சி.பி.எம். கட்சி நடந்து கொள்கிறது. மோடியின் பங்காளியும் பார்ப்பனஇந்துவெறியைத் தனது சித்தாந்தமாகக் கொண்டுள்ளவருமான பார்ப்பனபாசிச ஜெயாவுடன் தேர்தல் கூட்டணி கட்டிக் கொண்டிருக்கிறது சி.பி.எம். கட்சி.

 

அப்துல்லா குட்டியோ சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்து சி.பி.எம்.க்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அரசியல் சித்தாந்த உறுதியற்ற இத்தகையோரை வைத்து ஓட்டுப் பொறுக்கி தேர்தல் வெற்றியைச் சாதித்து வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அவர்களையும் இழந்து, கண்ணனூர் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது.

 

பச்சையப்பன்

Last Updated on Sunday, 19 April 2009 06:21