Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.

  • PDF

அண்மையில் காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு என்ற தலைப்பில் இடப்பட்ட பதிவிற்கு மின்னஞ்சலில் வந்த எதிர்வினையையும் அதற்கான பதிலும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. மஹாத்மா, தேசத்தந்தை எனும் விதந்தோதல்களெல்லாம் பிம்பங்களின் பின்னே ஒழிந்துகொள்வதை வெளிப்படுத்தவே இவை பதிவிடப்படுகிறது.

 

 

நண்பர் செங்கொடி அவர்களுக்கு,

 

வணக்கம். காந்தியாரைத் திறனாய்வு செய்யும் போது இந்தியாவின் உயர்ந்த மேதைகளான இரவீந்திர நாத் தாகூரையும், விவேகானந்தரையும், பண்டித நேருவையும் இகழ்ந்துள்ளது நியாயமாகத் தெரியவில்லை. காந்தியின் மீது நீங்கள் கூறிய 100 மேற்பட்ட குற்றங்கள் படித்த பின் ஒன்று கூட என் மனதில் ஒட்ட வில்லை. காரணம் உங்களுடைய தனிப்பட்ட தீர்ப்பான முழு வெறுப்பு உணர்ச்சியே. இரு தரப்பார் கருத்தின்றி ஒருவர் மட்டும் இகழ்ச்சியாக இப்படி எழுதுவது பொதுக் கருத்தாகாது. காந்தியாரின் குறைகள் நிறைகள் இரண்டையும் எடுத்துக் காட்டுவதுதான் எழுத்தாளன் கடமையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

இந்தியா ஏவிய சந்திராயனை நீங்கள் ஆதரிக்க வில்லை. 1957 இல் ரஷ்யா முதன்முதல் ஏவிய ஸ்புட்னிக் பற்றி என்ன சொல்வீர்கள்? ஏழை நாடு சைனா முதன்முதல் ஏவிய துணைக்கோளைப் பற்றி என்ன சொல்வீர்கள் ?

 

இந்தியத் தலைவர்களில் உங்களுப் பிடித்த பெரியாரும், அம்பேத்காரும் எப்படிப் பட்டவர்கள் என்று இதே போல் திறனாய்வு செய்தால் நான் அவற்றைப் படிக்க விரும்புகிறேன்.

 

அம்பேத்கார் இந்து மதத்தையும் பிராமணரையும் திட்டிக் கொண்டு ஒரு பிராமணப் பெண்ணை மணந்து கொண்டார். அவரைச் சட்ட சபைக்குக் கொண்டு வந்து இந்திய அரசியல் சாசனத்தை எழுத வைத்த பெருமை பண்டித நேருவைச் சார்ந்தது.

 

தந்தை பெரியாரைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள்:

 

1. தமிழரிடையே இருந்த மூடப் பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டினார். ஆனால் அவர் கையாண்ட முறைகள் கடூரமானவை. பிள்ளையார் சிலையை உடைத்தல், கம்ப ராமாயண இலக்கியத்தை எரித்தல்,திருக்குறளைப் பார்ப்பனர் நூல் என்று இகழ்தல், தமிழைக் காட்டுமிராண்டிகள் மொழி என்று அவமானப் படுத்தல், பார்ப்பனத் தமிழரை எல்லாவற்றுக்கும் காரணமாகத் திட்டுவது, கடவுளை நம்புவோரை எல்லாம் “முட்டாள்” என்று பட்டம் கொடுப்பது. இவை அனைத்தும் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்.

 

2. இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்காது பெரியாரும் அவரது சீடர்களும் எதிர்த்து வேலை செய்தார்கள். இந்திய சுதந்திர தினத்தைத் “துக்க தினமாகக்” கொண்டாடிய பகுத்தறிவாளி பெரியார் !!! பெரியாருக்கு இந்தியப் பாராளு மன்றக் குடியாட்சி முறையில் நம்பிக்கை இல்லாமல் போனது.

 

3. நாடு விடுதலை பெற்ற பிறகு, எல்லை தெரியாத “திராவிட நாடு” பிரிவினைக்குத் திட்டமிட்டுத் தோல்வி யடைந்தவர்.

 

4. மகள் என்று வெளியே கூறிக் கொண்டு தனக்குப் பணிசெய்த 21 வயது மணியம்மையாரை 70 வயது பெரியார் மணந்து கொண்டது. பெரியாரின் சொத்துக்கள் மணியம்மைக்குச் சேர வேண்டும் என்பது அவரது ஒரு நோக்கம்.

 

5. நாலாவது காரணத்தால் சீடர்கள் குருவை விட்டுப் பிரிந்து அவருக்கு எதிராய் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று திருமூலர் பாக்களின் வரிகளை கூறிவந்தார்.

 

பெரியார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத, இன வகுப்புகளை ஒழிக்க முற்பட்டார். எந்த மதம், ஜாதி, இனம் இதுவரைத் தமிழ்நாட்டில் ஒழிந்துபோய் உள்ளது ?

 

45 ஆண்டுகளாக பெரியாரின் சீடர்கள்தான் தமிழகத்தை ஆண்டு வருகிறார். சமூகத்தில் என்ன ஆக்க பூர்வமான புத்துணர்ச்சிகள் பொங்கி யுள்ளன ? பெரியாரும் அவரது சீடர்களும் எத்தனை உன்னத விஞ்ஞானிகளை, கலைமணிகளை, ஓவியரை,அறிஞர்களை உண்டாக்கி இருக்கிறார் ?

 

காந்தியின் சீடர் பண்டித நேரு பிரதமராகி இந்தியாவின் தொழிற்துறை, விஞ்ஞான, கல்விக் கலாச்சாரம் யாவும் விருத்தியாகி இந்தியா ஆசியாவில் முன்னேற வில்லையா ? வேறெந்த இந்தியத் தலைவர் நாட்டு முன்னேற்றத்துக்கு இந்த அளவு வழியிட்டார் ?

 

சி. ஜெயபாரதன், கனடா

 

நண்பர் செங்கொடி அவர்களுக்கு

 

வணக்கம்

 

ரஷ்யப் பொதுடைமைக் கட்சியைப் பற்றிய உங்கள் கட்டுரை ஸ்டானிக்கு ஒரே புகழ் மாலை சூடுவதாக உள்ளது. அதே போல் காந்தியார் கட்டுரையும் ஒரே இகழ் மாலை சூடுவதாக இருக்கிறது. இரண்டும் பலதிசைக் கண்ணோட்ட மின்றி ஒற்றைக் கண் நோக்காக எனக்குத் தெரிகிறது.

 

மனிதர்கள் பூரண மாந்தர் அல்லர். காந்தி எப்படிப் பூரண மனிதர் இல்லையோ அதே போல் லெனினும்,ஸ்டாலினும், மாசேதுங்கும், பெரியாரும் பூரணத் தலைவர் அல்லர். எல்லாரும் சந்தர்ப்ப வாதிகள். ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியவற்றை வேறிடங்களில்

 

காட்டி அவை தவறு என்று வாதிடுவது சரியில்லை.

 

மனிதரின் குறைபாடு, நிறைபாடு இரண்டையும் எடுத்துக் காட்டும் நேர்மையான கட்டுரைகளை விருப்பு வெறுப்பில்லாமல் யாருக்கும் நீதிபதிபோல் தீர்ப்பளிக்காமல் எழுதுங்கள். உங்கள் கண் பார்வையில் பிடிக்காதவர் எல்லாரது போக்கும் தவறாகத் தெரிவதில் வியப்பில்லை.

 

பூரண மனிதரின் பெயர் கொண்ட லெனின்கிராடும், ஸ்டாலின்கிராடும் இப்போது ஏன் ரஷ்யத் தளப் படத்தில் இல்லாமல் போயின ?

 

நேபாளம், பாரத நாடுகளில் எப்போது யார் பொதுடைமைப் புரட்சியைக் கொண்டு வந்து நிலைநாட்டப் போகிறார் ? பல மதங்கள், இனங்கள்,ஜாதிகள்,மொழிகள், மாநிலங்கள் கட்சிகள் கொண்ட சுதந்திர இந்தியாவைப் பொதுவுடைக் கட்சி கைப்பற்றி விடுமா ?

 

ரஷ்யாவில் லெனின் செய்த சீரான புரட்சி வேறு. இந்திய நாட்டில் நடக்கும் தினக் கலவரங்கள் ?

 

அன்புடன்,

சி. ஜெயபாரதன்.

****************************************

வணக்கம் ஐயா,

 

உங்களின் விமர்சனத்திற்கு நன்றி.

 

காந்தியின் மீது கூறப்பட்ட விமர்சனங்கள் ஒன்று கூட உங்கள் மனதில் ஒட்டவில்லை எனக் கூறியிருந்தீர்கள். எப்படி ஒட்டவைப்பது….கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் எதை தனிப்பட்ட வெறுப்பினால் எழுந்ததாக கருதுகிறீர்கள், அல்லது அனைத்துமேவா? என்றால் அதை காந்தி மீது உங்களுக்கிருக்கும் புனித பிம்பத்தினால் கூட இருக்கலாமல்லவா? காந்தியை பாராட்டி அனேகம் பேர் எழுதியிருக்கலாம், காந்தியை விமர்சிக்கும் யாரும் அந்த பாராட்டுரைகளின் பின்னணியில் தான் விமர்சிக்க வேண்டுமா? நாங்கள் காந்தியின் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் கற்பனையில் கூறியவைகளல்ல.பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தான் கூறியிருக்கிறோம். அவைகளில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் காந்தியின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதையும் நீங்கள் மறுக்கவில்லை என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஒரு தேசத்தந்தையை இப்படி விமர்சிக்கலாமா?எனும் ஆதங்கம் தான் உங்களிடமிருந்து வந்திருக்கிறது. யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களல்ல. நாங்கள் ஒரு எழுத்தாளனாக நின்று காந்தியை அணுகவில்லை. அவரின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் சார்பில் அவரை அணுகியிருக்கிறோம்.அவர்மீது போர்த்தப்பட்டிருந்த வெற்று மாயையை அகற்றியிருக்கிறோம். அதில் நீங்கள் மாறுபட்டால் உங்களின் மறுப்பை தாருங்கள் பரிசீலிக்கிறோம். மகாத்மாவின் மீதா? எனும் புனித ஆச்சரியம் வேண்டாம்.

 

ஆம். சந்திராயனை ஏவியதில் எங்களுக்கு உடன்பாடில்லை,அறிவியல் முன்னேற்றம் கூடாது என்பதாலல்ல, அறிவியல் மக்களை வாழ வைப்பதற்கு பயன் படவேண்டும் என்பதால். கடந்த பத்தாண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால். சற்றேறக்குறைய அனைத்துதட்டு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை சிந்திக்காமல், இதை மறைத்துவிட்டு பெரும்பான்மை மக்களின் வாழ்வோடு தொடர்பில்லாத ஒரு திட்டத்திற்கு அவர்களின் வரிப்பணம் கொட்டப்படுவது வீணானதல்லவா?

 

இதில் இந்திய‌வென்ன‌? ர‌ஷ்யாவென்ன‌? சீனாவென்ன‌? ர‌ஷ்யாவை நாங்க‌ள் ச‌மூக‌ ஏகாதிப‌த்திய‌ம் என்று தான் ம‌திப்பிடுகிறோம். குருஷேவின் சீர‌ழிவுப்பாதை அது. ஸ்டாலினுக்குப்பிற‌கு சோவிய‌த் ச‌ரிவின் தொட‌க்க‌ம்.க‌ம்யூனிச‌ம் என்ற‌தும் ர‌ஷ்யா சீனாவை க‌ண்ணை மூடிக்கொண்டு ஆத‌ரித்தால் அத‌ற்கு மார்க்ஸிய‌ம் என்று பெய‌ரில்லை. அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை நாங்க‌ள் போலிக‌ள் என்ற‌ழைக்கிறோம்.

 

பெரியாரும் அம்பேத்காரும் சீர்திருத்த‌வாதிக‌ள் தான் புர‌ட்சியாள‌ர்க‌ள் அல்ல‌.

 

அம்பேத்கார் க‌ம்யூனிஸ்டுக‌ளை எதிர்த்த‌வ‌ர். பார்ப்ப‌னீய‌ எதிர்ப்புப்புள்ளியில் தான் பெரியாரும் அம்பேத்காரும் எங்க‌ளின் இல‌க்குக‌ளோடு ஒன்றிணைகிறார்க‌ள். அம்பேத்கார் இந்திய‌ அர‌சிய‌ல் சாச‌ன‌த்தை எழுதிய‌து ப‌ற்றி நிறைய‌ விள‌க்க‌மளிக்க‌லாம்.அர‌சிய‌ல் சாச‌ன‌த்தை தீவைத்துக்கொளுத்தும் முத‌ல் ஆளாக‌ நானே இருப்பேன் என்று பாராளும‌ன்ற‌த்திலேயே அறிவித்த‌வ‌ர் அம்பேத்கார். அம்பேத்கார் ப‌ணியாற்றிய‌து மூன்றாவ‌து குழுவுக்கு த‌லைவ‌ராக‌. முத‌ல்குழு அப்போதைய‌ நாடுக‌ளில் எந்த‌ நாட்டு சட்ட‌ங்க‌ளை எடுத்துக்கொள்ள‌லாம் என்று அல‌சி இங்கிலாந்து உட்ப‌ட்ட‌ சில‌ நாடுக‌ளின் ச‌ட்ட‌ங்க‌ள் தேர்வு செய்த‌து. இந்த‌க்குழுவில் பார்ப்ப‌ன‌ர்க‌ளைத்த‌விர‌ வேறு யாருக்கும் இட‌மில்லை. இர‌ண்டாவ‌து குழு அந்த‌ச்ச‌ட்ட‌ங்க‌ளில் எதை இந்தியாவுக்காக‌ தெரிவு செய்ய‌லாம், என்னென்ன‌ மாற்ற‌ங்க‌ள் செய்ய‌லாம் என்று வ‌ரைய‌றை உருவாக்கிய‌து. இந்த‌க்குழுவிலும் பார்ப்ப‌ன‌ர்க‌ளைத்த‌விர‌ வேறு யாருக்கும் இட‌மில்லை.இவ‌ற்றிலிருந்து அர‌சிய‌ல் சாச‌ன‌ முன்வ‌ரைவை உருவாக்கி இந்திய‌ பாராளும‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்து ‌அமலாக்குவ‌து மட்டும்தான் மூன்றாவ‌து குழுவின் வேலை. இந்த‌க்குழுவில் ம‌ட்டும் பார்ப்ப‌ன‌ர்க‌ளோடு இர‌ண்டு முக‌ம்ம‌திய‌ர்க‌ளும் சேர்க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அத‌ற்க்குத்த‌லைவ‌ராக‌ ஒரு தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர் அதாவ‌து அம்பேத்கார்.

 

ஏன் அம்பேத்கார் த‌லைவ‌ராக்க‌ப்ப‌ட்டார்?

 

தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ம‌க்க‌ளை பெரும்பான்மையாக‌ கொண்ட‌ நாட்டில் சிறுபான்மை பார்ப்ப‌ன‌ர்க‌ள் கொண்டுவ‌ந்த‌ ச‌ட்ட‌ம் என்று பின்ன‌ர் மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்டுவிட‌க்கூடாது என்ப‌தால் தான்.

 

அந்த‌ நேர‌த்தில் தாழ்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் பிர‌திநிதியாக‌ செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மூவ‌ர். ஒன்று பெரியார் ஆனால் அவ‌ர் பாராளும‌ன்ற‌ அர‌சிய‌ல் முறையை நிராக‌ரித்தார். இர‌ண்டு பாபுராவ் பூலே இவ‌ர் ம‌ராட்டிய‌த்திற்கு வெளியே அறிய‌ப்ப‌டாத‌வ‌ர். ஆகையினால் அவ‌ர்க‌ளின் நோக்க‌த்திற்கு ப‌ய‌ன்ப‌ட‌மாட்டார். மூன்றாவ‌து அம்பேத்கார், இவ‌ர் ந‌ன்கு அறிய‌ப்ப‌ட்ட‌வ‌ராக‌வும் காங்கிர‌ஸ்கார‌ராக‌வும் இருந்தார். அத‌னால் த‌லைவ‌ரானார். ஆனால் பெரியார் அப்போதே அம்பேத்காரிட‌ம் கூறினார்,பொறுப்பேற்காதீர்க‌ள் ஏமாற்ற‌ப்ப‌டுவீர்க‌ள் என்று. பொறுப்பேற்றார் ஏமாந்தார்.

 

ச‌ரி, அம்பேத்கார் ஏன் ஏற்க‌வேண்டும்?

 

உண்மையிலேயே தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ச‌ட்ட‌ரீதியாக‌ ஏதாவ‌து செய்துவிட‌முடியும் என்று ந‌ம்பினார். ஆனால் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ஆத‌ரவாக‌ ஒரு சில திருத்த‌ங்க‌ளை கொண்டுவ‌ருவ‌த‌ற்கு கூட‌ அவ‌ர் போராட‌வேண்டியிருந்த‌து. அத‌னால் தான் அவ‌ர் பாராளும‌ன்ற‌த்திலேயே அறிவித்தார் இதை நான் கொழுத்துவேன் என்று.

 

அர‌சிய‌ல் சாச‌ன‌த்தின் முத‌ல் வ‌ரி we are the people of india என்று தொட‌ங்கும், அனால் அம்பேத்கார் எழுதிய‌து we are the peoples of india. இதுதான் அம்பேத்கார் அர‌சிய‌ல் சாச‌ன‌ப் பெருமை. இவைக‌ளுக்கெல்லாம் ஆதார‌ம்? பாராளும‌ன்ற‌ நூல‌க‌த்தில் நூல்க‌ளாக‌ உற‌ங்கிக்கொண்டிருக்கிற‌து.

 

அடுத்து பெரியாரைப்பற்றி,

 

௧) பெரியார் இலக்கியவாதியல்ல, நளினமான தலைவரல்ல,மக்களை கண்டு அவர்களின் மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டு கோபம் கொண்டவர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மக்களை நாயிலும் கீழாய் இருத்தி வைத்திருப்பதை எதிர்த்து அவர்களை சுய மரியாதை கொள்ளச்செய்தவர். உலகில் பல நாத்தீக அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆனால் உலகின் வேறெங்கும் நாத்தீகம் ஒரு மக்கள் இயக்கமாய் பரிணமிக்கவில்லை தமிழகத்தை தவிர. பெரியார் அதைச்செய்தார். பல அறிஞர்கள் அறிவியல் ரீதியாக மதங்களை கடவுளர்களை விமர்சித்து நூல்கள் எழுதினர். பக்கம் பக்கமாய் விவாதித்தனர். அவை அவர்களைக்கடந்து மக்களிடம் வந்தடையவில்லை, காரணம் மக்கள் பாமரர்களாய் இருந்தனர். இந்தியாவிலோ அவர்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டிருந்தது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய். அவர்களை திருத்த நினைத்த பெரியார் நூல்களில் விளக்கமெழுதிக்கொண்டிருக்க முடியுமா?பார்ப்பனீய நுகத்தடியில் சிக்கி உழன்று கொண்டிருந்த மக்களுக்கு விளக்க அவர்கள் மொழியிலேயே தான் பேசியாக வேண்டும். எந்த தர்க்க நியாயமுமின்றி, எந்த அறிவியல் ஞானமுமின்றி வெற்று நம்பிக்கையாய் கடவுள் மீது பிடிப்புக்கொண்டிருந்தவர்களை திருத்த,அவர்களின் மூட நம்பிக்கைகளை நொறுக்க அவர்கள் கடவுளாய் நம்பிக்கொண்டிருக்கும் சிலைகளை நொறுக்குவதை தவிர என்ன வழியிருந்தது கூறுங்கள். அவர்களை அடிமைச்சிறையில் வைத்திருந்த பார்ப்பனீய கடவுட் சிலைகளை உடைக்காமல் சேரிகளில் அவரால் பார்பனீய கொடுங்கொன்மையை உடைத்திருக்கமுடியாது. கடூரமானவையாக உங்களுக்கு தெரிந்த நடைமுறைகளால் தான் உலகில் எங்குமே இயலாதிருந்த மக்கள் இயக்கத்தை நாத்தீக இயக்கத்தை தமிழகத்தில் செயல்படுத்திக்காட்டினார். எது முக்கியம் சில சிலைகள் உடைந்ததா? இல்லை மக்கள் அடிமை விலங்கு உடைந்ததா?

 

கம்பராமாயணம் இலக்கியமா? அழ‌கியல் சார்ந்து வார்த்தைகளை அழபெடை செய்துவிட்டல் அங்கு இலக்கிய மதிப்பு வந்துவிடுமா?இன்றைய திரைப்பாடல்களை விட ஆபாசம் மலிந்து கிடக்கும் அதை எந்த அடிப்படையில் இலக்கியமாக ஏற்பது? பழமை என்பது மட்டும் போதுமா? அதன் பாடு பொருள் எதை நோக்கமாக கொண்டிருந்தது? வால்மீகி ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு இலக்கியத்தை நோக்கமாகக் கொண்டது தானா?

 

தமிழை நீச பாஷை என்று இழித்தவர்கள், தமிழர்களை காட்டுமிராண்டியாய் நடத்தியவர்கள் பெரியாரை பற்றி பேசும்போது மட்டும் திருக்குறளை இகழ்ந்தார்,தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கேவலப்படுத்தினார் என்று தொனி மாறிப்பேசுவார்கள்.

 

திருக்குறளின் பெண்ணடிமைத்தனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அறிவியலோடு அது முரண்படும் இடங்களை நீங்கள் சரி காண்பீர்களா? சில நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள சொற்களெல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள திருக்குறளில் இடம்பெற்றிருக்கிறதே அவற்றின் இடைச்சொருகல்களை நீக்க முடியுமா?

 

சரியானதை ஏற்று அல்லாததை தள்ளுவது தான் மனிதனின் இயல்பு பெரியார் சுயமரியாதைக்காரர்.

 

காலத்திற்கேற்ற மாற்றம் செய்யப்படவில்லை என்றால் அது காட்டுமிராண்டி மொழிதான் அதிலென்ன சந்தேகம். வீரமாமுனிவரிலிருந்து பெரியார்வரை தமிழில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. திருவள்ளுவர் எழுதிய தமிழ் தான் இப்போது இருக்கிறதா?

 

௨) இந்திய விடுதலைப்போர் என்று பொதுவாக குறிப்பிட்டிருந்தீர்கள். காங்கிரஸ் தலைமையில் நடந்ததை குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன். அது விடுதலைப்போரும் அல்ல, 47ல் நமக்கு கிடைத்தது விடுதலையும் அல்ல. அதிகார மாற்றம் மட்டுமே. வெள்ளையனின் கையிலிருந்த அதிகாரம் பார்ப்பனர்களின் கைகளுக்கு மாறியதை சுதந்திரம் என்று கூற முடியாது. அதனால் தான் பெரியார் அதை கருப்பு தினமாக அறிவித்தார். அவர் பகுத்தறிவாளராக இருந்ததால் தான் சுதந்திரத்தையும் சுதந்திரம் என்ற பெயரில் வந்ததையும் பிரித்தறிய முடிந்தது. பெரியாருக்கு இந்திய குடியரசு முறையில் நம்பிக்கை இருந்திருக்கவில்லை,எங்களுக்கும் தான். உங்களுக்கு இருக்கிறது என்றால் ஒரே ஒரு கேள்வி உங்களிடம், இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் கழுத்தில் கத்திவைத்திருக்கும் காட் ஒப்பந்தம் கொல்லைப்புற வழியில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் இரண்டு அதிகாரிகள் ஒப்பமிட்டு இந்தியாவின் மீது திணிக்கப்பட்டதே இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா?

 

௩) சுதந்திரக்குழிபறிப்புகளுக்கு மாற்றாக‌ அவர்கண்டடைந்த ஒரு அரசியல் தீர்வு தான் திராவிட நாடு. அது தோல்வியடைந்தது அவருடைய ஆளுமையை கொள்கையை எந்த விதத்திலாவது பாதித்ததாக கருதுகிறீர்களா?. திராவிட நாடு வெற்றி என்பது முழுக்க முழுக்க அவரைச்சார்ந்தது மட்டுமல்ல.

 

௪) மணியம்மையை அவர் மணந்தது வெளிப்படையானது, வெளியே மகள் எனக்காட்டிக்கொண்டு உள்ளே மனைவியாக கொண்டிருந்ததாக உங்கள் வாசகங்கள் பொருள் தருகிறது. அது தவறானது. சொத்துகள் மணியம்மைக்கு சேர வேண்டும் என்பதால் தான் மணந்து கொண்டதாக எழுதியுள்ளீர்கள். உங்கள் எண்ணம் என்ன என்று கொஞ்சம் வெளிப்படையாக எழுதினால் வசதியாக இருக்கும்.

 

௫) சீடர்கள்(!) பிறிந்தது பதவி வெறியில் வாய்ப்பை எதிர்நோக்கி செயல் பட்ட ஒன்று அதுவும் பெரியாரின் கொள்கைகளும் வேறு வெறானது.

 

வாழ்நாள் முழுவதும் மக்களை பார்ப்பனீயத்திலிருந்தும் மூடத்தனங்களிலிருந்தும் விடுவிக்க போராடினார். அவர் நோக்கம் முழுமையாய் நிறைவேறவில்லை என்பது வேதனையானது தான். என்றாலும் வட மாநிலங்களிலும் தமிழகத்திலும் உள்ள நிலமைகளை ஒப்பிட்டு நோக்கினால் பெரியாரின் வெற்றி பளிச்செனத்தெரியும். உங்களுக்குத்தெரியாதது ஆச்சரியம் தான்.

 

காந்தியின் சீடர் நேருவின் சாதனை காந்தியின் ஆலோசனைகளை பொருளாதாரத்திட்டங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கியது தான் என்று சொன்னால் அதில் பிழையொன்றுமில்லை.

 

முன்பே கூறியது போல் பெரியாரும் அம்பேத்காரும் சீர்திருத்தவாதிகள் தான் புரட்சியாளர்கள் அல்ல. அவர்களின் பார்வையில் இருந்த தவறு இருக்கும் பிரச்சனைகளுக்கு பார்பனீயத்தை மட்டுமே காரணமாக கண்டு வர்க்கத்தை ஒதுக்கியது. ஆனாலவர்கள் இருவருமே தாம் சரியெனக் கண்டதை அடைய சமரசமின்றி போராடினார்கள். நடைமுறையில் ஏற்ப்பட்ட முரண்பாடுகளை எதற்காக போராடினார்களோ அந்த மக்கள் விடுவிப்பதை அடிப்படையாகக் கொண்டே தீர்த்துக்கொண்டார்கள். காந்தியிடம் இல்லாத பண்பு இது தான்.

 

அஹிம்சையை மக்களுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தியது தான் காந்தியின் முத்திரை. காந்தியின் மீது நாங்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதிலை எதிர் நோக்குகிறேன்.

 

உங்களின் இரண்டாவது கடிதத்தில்,புகழ் மாலை இகழ் மாலை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இரண்டுமே வரலாற்று ஆதரங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருந்தது. ஆதாரமில்லாது புகழ்வது,ஆதாரமில்லாமல் இகழ்வது என்பதை அந்த இரண்டு கட்டுரைகளிலும் எந்த இடத்தில் கண்டீர்கள் என்பதை குறிப்பிட்டால் நாம் தொடர்ந்து இது குறித்து விரிவாக பேச வசதியாக இருக்கும்.

 

எவருமே பூரண மாந்தர்கள் அல்லர். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தான் மனிதன் வரலாற்றை கடந்து வந்து கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தவறிலிருந்து ஒருவன் எத்தகைய பாடத்தை கற்றுக்கொள்கிறான்அவன் கற்றுக்கொண்டதை எந்த விதத்தில் பயன் படுத்துகிறான்? யாருக்காக பயன் படுத்துகிறான் என்பதில்தான் அவனின் பூரணத்தன்மையின் அளவுகோல் இருக்கிறது.

 

ஸ்டாலினிடமும் தவறுகள் இருக்கின்றன ஆனால் அவை முதலாளித்துவங்கள் முன்வைக்கும் அவதூறுகளல்ல. லெனின்கிராடும் ஸ்டாலின் கிராடும் தளப்படத்தில் இல்லை என்பது அங்கு சோசலிசம் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதன் அடையாளங்கள். ஸ்டாலினுக்கு பிறகு அவர்களின் சோசலிசத்தில் கம்யூனிச கொள்கைகள் விடைபெறத்தொடங்கிவிட்டன. அதன் அடையாளம் தான் அவைகள். தினக்கலவரங்கள் தான் புரட்சி என்று யாரும் இங்கு கருத்துக்கொண்டிருக்கவில்லை.

 

நான் கருதுகிறேன் நீங்கள் கம்யூனிசம் என்றதும் போலிகள் என்று நாங்கள் அழைக்கும் இடது வலது ஓட்டுக்கட்சிகளைப்போல் எங்களை எண்ணிக்கொண்டீர்கள் என்று. நாங்கள் மகஇக எனும் புரட்சிகர பொதுவுடைமை இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது உங்கள் கவனத்திற்கு.

 

மீண்டும் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி கூறி தொடருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

தோழமையுடன்

செங்கொடி

Last Updated on Wednesday, 08 April 2009 10:07