Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மக்களை விற்றுப் பிழைக்கும், புலம்பெயர் போக்கிலிகள்

மக்களை விற்றுப் பிழைக்கும், புலம்பெயர் போக்கிலிகள்

  • PDF

புலம்பெயர் புல்லுருவிகள் 28-29.03.2009 அன்று பேரினவாதத்துடன் கூடிக் குலாவிய போது, தாம் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டுமென்ற வேண்டுகோள் விட்டார்களாம். அரசாங்கமும் அதற்கு ஓத்துக்கொண்டதாம். இப்படியெல்லாம் பிபிசிக்கு தமிழ் சேவைக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.

 

வேடிக்கையான வேண்டுகோள். கசப்பு கடைக்காரனிடம், ஆட்டை பாதுகாக்க கோரிய புலியெதிர்ப்பு கூத்து. கொல்பவனிடமே தமிழ் மக்களை மீட்கும் தார்மிக பொறுப்பை பற்றி விவாதித்தார்களாம். 

 

இதற்கு முரணாக இந்த புலியெதிர்ப்பு பேட்டியில் புலிக்கு எதிரான குற்றச்சாட்டின் போது, தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு புலிகளுடையது என்கின்றனர். நல்லது  அப்படியென்றால், யாரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்? ஏன் பாதுகாக்க வேண்டும்? அறிவு நாணயம் உள்ளவர்கள் இந்த கேள்வியை கேட்டு அதற்கு பதிலளித்து இருந்தால், அரசின் பின் நக்கும் அவர்களின் சொந்த நக்குண்ணித்தனம் அம்பலமாகியிருக்கும். 

 

மக்களை பாதுகாக்க வேண்டியது புலிகளின் பொறுப்பு என்றால், மக்களை கொல்லும் இந்த அரசிடமிருந்து தானே. இப்படியிருக்க, மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை புலிக்கு எதிரான குற்றச்சாட்டாக்கி, புலிக்கு எதிராக அரசுக்கு சார்பாக விடையத்தை திரித்து மாற்றுகின்றீர்கள். மக்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசு செய்வதாக திரிக்கின்றீர்கள். புலிக்கு எதிரான புலியெதிர்ப்பு குற்றச்சாட்டில் அரசு கொல்லுகின்றது என்று கூறும் அதேநேரம், மக்களை அரசு பாதுகாப்பதாக கூறுவதுதான் வேடிக்கையான முரண்பாடு. 

 

புலிகள் மக்களை பாதுகாக்கவில்லை. சரி, ஏன் அரசு மக்களை பாதுகாக்க முனையவில்லை. இங்கு மக்களை கொல்வது புலியல்ல, அரசு. இந்த புலியெதிர்ப்பு புலம்பெயர் கும்பல், இந்த கொலைகார அரசுடன் நின்று தானே குலைக்கிறார்கள். அரசு தானே அறிவித்த யுத்த சூனிய பிரதேசத்தில், தஞ்சமடைந்த 2500 முதல் 3000 மக்களை கொன்றுள்ளது.  8000 முதல் 10000 பேரை காயப்படுத்தியுள்ளது. இது எப்படி, அரசுடன் நிற்கும் உங்களுக்கு நியாயமாகப்படுகின்றது. புலியை விமர்சிக்கின்றீர்கள், தூற்றுகின்றீர்கள். ஆனால் கொலைகார அரசுடன் ஓரே மேசையில் இருந்து உண்டு மகிழ்கின்றீர்கள். கொலைகாரனுடன் சேர்ந்து நிற்கும் நீங்கள், இதற்கு உடந்தையாளனை மட்டும் ஏன் தீட்டித் தீர்க்கின்றீர்கள். இதில் எங்கே அரசியல் தர்மம் உண்டு. புலியின் 'அரசியல் தர்மத்தை" திட்டிக் காறி உமிழும் நீங்கள், கொலைகாரனின் அரசியல் தர்மத்தின் பின் கும்மியடித்து நிற்பது, எந்த தர்மத்தின் பெயரில்! 

 

நீங்கள் உங்கள் புலியெதிர்ப்பு பேட்டியில் கூறுவது போல், புலிகள் நடத்துவது விடுதலை போராட்டமல்ல தான். அது சரி, அரசு நடத்துவது என்ன? அது இன அழிப்பு. நீங்கள் நிற்கும் இடமும், அதுதானே. 

 

யாரை ஏமாற்ற முனைகின்றீர்கள். தமிழ் சமூகத்தின் அறிவீனத்தை, ஏமாற்றி பிழைக்க முனையாதீர்கள். புலிகளும், அரசும், அரசை நக்கித்தின்னும் கூலிக்குழுக்களும், தமிழ் சமூகத்தின் உயிர் துடிப்பான சமூகக் கூறுகளை எல்லாம் அழித்துவிட்ட நிலையில், உங்கள் அறிவின் அற்பத்தனத்தின் மேன்மையால் தர்க்கம் செய்து நாய்ப் பிழைப்பு நடத்தாதீர்கள். மக்களின் பிணங்களின் மேல், உங்கள் புலியெதிர்ப்பு பிழைப்பை நடாத்துவதை தவிர, வேறு எந்த மக்கள் அரசியலையும் நீங்கள் செய்யவில்லை. 

 

புலிகள் நடத்துவது விடுதலைப் போராட்டமல்ல, நாம் ஓத்துக்கொள்கின்றோம். அரசு செய்வது என்ன? அது இன அழிப்பு என்று சொல்ல ஏன் உங்களால் முடிவதில்லை. அதைச் சொல்லாது, நீங்கள் நடத்துவது என்ன? நக்குவது தானே. வேறு என்ன? அரசு தமிழ் மக்களை கொல்வது தான், இங்கு மையமானது. அதைப் பற்றிக் கதையாது, வெறும் கதைவிடுவதும், புலியை குற்றம் சாட்டுவதும் இழிவான மலிவான புலியெதிர்ப்பு அரசியலாகும்.    

 

அரசுதான் தமிழ் மக்களை கொல்லுகின்றது. புலிகளல்ல. புலிகள் இங்கு கொல்லக் கொடுக்கின்றனர். கதையே இப்படியிருக்க, அரசிடம் மக்களை மீட்க கோருவது என்பது, கொல்லக் கோருவது தான். அரசியலில் வித்தை காட்டாதீர்கள். நாய் பிழைப்பை பிழைக்க வெளிக்கிட்ட பின்பு, மக்களைக் கொன்றாவது, புலியைக் கொல் என்பது தான் உங்களது அரசியல் கோரிக்கையாகும்.

 

இந்த இனவாத கொலைவெறி அரசுக்கு வெளியில், உங்களிடம் வேறு எந்த அரசியலும் கிடையாது. தமிழ்மக்கள் மத்தியில் சொல்ல, செயல்பட என்று எந்த அரசியலையும் முன்வைத்தது கிடையாது. பேரினவாதத்தின் கொலைகார இனஅழிப்பு வேலைத்திட்டத்தை வைப்பதற்கு அப்பால், உங்களிடம் ஒரு துரும்பும் கிடையாது.

 

இப்படிப்பட்ட நீங்கள், 20 வருடத்துக்கு முன் வந்த தமிழன் தான், புலியை ஆதரிப்பதாக கூறுவது வேடிக்கையானது. மண்ணின் எதார்த்தம் புரியாது புலம்பெயர் தமிழன் இருப்பதாக கதைவிடும் நீங்கள், அந்த எதார்த்தம் உங்களைப் போல் பேரினவாதத்துடன் சேர்ந்து நக்குவதா!? வேடிக்கையான குதர்க்கம். சமூக எதார்த்தம் வேறு ஒன்றாக இருக்க, பேரினவாதத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு கதைவிடாதீர்கள்.

 

பி.இரயாகரன்
02.04.2009

மற்றொரு தலையங்கத்தில் தொடரும்.

         

 

Last Updated on Thursday, 02 April 2009 08:43