Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !

ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !

  • PDF

 ஆபிரிக்கக் கண்டம் பல “அதிரடிச்” செய்திகளுக்குப் புகழ் பெற்றது. அங்கே ஏதோ ஓரு நாட்டில் திடீரெனச் சதிப்புரட்சி நடக்கும், திடீரென ஆட்சி கவிளும், திடீர் திடீரெனக் கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயுதங்களுடன் தோன்றுவார்கள்.

 மேற்கு ஆபிரிக்காவில் ஒருகாலத்தில் யானைத்தந்தம், தங்கம் ஏற்றுமதி செய்ததால் “ஐவரி கோஸ்ட்” என நாமம் சூட்டப்பட்ட நாட்டிலும் திடீர் கிளர்ச்சியாளர்கள் தோன்றியதால், இன்நாடும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. வழமைபோல், இத்தடவையும் சர்வதேசப் பார்வை பாரபட்சம் நிறைந்ததாகவேயுள்ளது. உதாரணமாகக் கூறினால், இன்னொரு மேற்காபிரிக்க நாடான நைஜீரியாவில் எண்ணைவளப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் எழச்சி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் “ஷெல்” எண்ணை அலுவலகங்களை முற்றுகையிட்டு கீழ் மட்ட அதிகாரிகளைப் பணயம் வைத்ததை எந்தவொரு செய்தி நிறுவனமும் தெரிவிக்கவில்லை. map_of_africa_ivory-coast இந்தப் பிரச்சினை பல வருடங்களாக தொடர்கின்றது.

அப்படியிருக்கையில் ஐவரி கோஸ்டின் திடீர்க்கிளர்சியாளரின் கலகம் பற்றிய செய்திகள் சர்வதேசத் தொடர்பூடகங்களில் முக்கியத்துவம் பெறுவதைப்பற்றிச் சந்தேகப்படாமல் இருக்க முடியாது. மேலும், எமக்குச் சொல்லப்பட்டது போல சாதாரண “சிப்பாய்களின் கலகமாக” மட்டுமிருப்பின், அவர்களின் இராணுவ, அரசியல் பின்ணணி என்ன ? கிளர்ச்சியாளருக்கு ஆதரவளித்த எதிர்க் கட்சித் தலைவர் ஏன் பிரஞ்சுத் தூதுவராலயத்தில் சரணடையவேண்டும் ?

ஐவரி கோஸ்ட் குடியரசு 40 வருடங்களாக சர்வாதிகரிகளினால் ஆளப்பட்டு வந்தாலும், நிலையான அரசு மற்றும் பொருளாதார வளர்ச்சியைக்கண்ட நாடு. மரப்பலகை, கொக்கோ, கோப்பி போன்றவற்றின் ஏற்றுமதி வருமானம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திவிட, அயல் நாட்டவர்கள் இங்கு வேலை தேடிவந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் உலகம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. நீண்ட காலத்திற்கு பின்பு நடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயக பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி லோரன்ட் குபாக்போ பதவியேற்ற பின்னர்தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின.

 

ic_gbagbo_motta_eng_195முன்னாள் பிரஞ்சுக்காலனியான ஐவரி கோஸ்ட் சுதந்திரமடைந்த பின்னரும் பிரான்சுடனான வர்த்தகத்தொடர்புகள் வழக்கம் போல தொடர்ந்தன. நவகாலனித்துவக் கொள்கைகளின்படி கொக்கோ, கோப்பி போன்றவற்றை பதனிடப்படாத மூலப்பொருட்களாகவே ஐவரி கோஸ்ட் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. இதற்கென்று தனியான அமைச்சு கூட இயங்கியது. புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் “இந்த மூலப்பொருள் ஏற்றுமதிக்கான அமைச்சின்” தேவைபற்றிக் கேள்வியெழுப்பியுள்ளார். மூலப்பொருட்களை முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை நிறுவவேண்டுமெனவும் கூறியுள்ளார். இவற்றைவிட பிரான்ஸை “தாய்நாடாக” ப் பார்க்கும் அரசியலிலிருந்து விலகி உள்நாட்டுப் பொருளாதார கட்டுமானங்களைச் சீர்திருத்தும் சமுகப் பொருளாதாரத் திட்டங்களை வகுத்திருந்தார்.

ஆபிரிக்காவில் காலனித்துவப் பொருளாதார நலன்களைக் கொண்டிருந்ததை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ளும் பிரான்ஸ் ஐவரி கோஸ்டில் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தயாராகவில்லை. புதிய ஜனாதிபதி குபாக்கோ எல்லாவற்றிற்கும் பிரான்ஸிலேயே தங்கியிருக்காமல் சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் நட்புறவுகளை வளர்த்தமையானது, பாரிஸில் எச்சரிக்கைச் சமிக்கையாக எடுக்கப்பட்டது. “ஆபிரிக்கத் தலைவர்களுக்கு ஜனநாயகம் என்பது ஆடம்பரமானது” எனக்கூறிய பிரான்ஸ் மாஜி ஜனாதிபதி ஷிராக்கின் பேச்சில் வெறுப்புத் தெரிந்தது.

27bca_cote_divoire_2004_110322471058610464ஐவரி கோஸ்ட்டின் ஜனாதிபதி பதவி விலகி புதிய தேர்தல்கள் நடாத்தப்படவேண்டுமென்பது கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை. பிரான்ஸினது விருப்பமும் அதுதான். போர் நெருக்கடியால் ஆட்சி கவிழும் நிலையில், எதிர்க்கட்சித்தலைவரும் தமது நெருங்கிய நண்பருமான உவாத்தராவை வேண்டிய பணம் செலவழித்து ஆட்சிபீடம் ஏற்ற விரும்பியது பிரான்ஸ். தலைநகர் அபிஜானில் சண்டை நெருங்கியவுடனேயே உவாத்தரா ஓடிப்போய் பிரஞ்சுத் தூதுவராலயத்தில் சரணடைந்த மர்மமும் இதுதான்.

புதிதாக ஆரம்பித்துள்ள உள்நாட்டு யுத்தம் நாட்டை இன-மத ரீதியாகப்பிரித்துள்ளதுடன், வெளிநாட்டவர் 1365538778_27c02d97ddமீதான வெறுப்பையும் தூண்டிவிட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த செனூபோ, பம்பரா, மலின்கே இனமக்கள் அயல்நாடுகளான பூர்க்கினா ஃபாசோ, மாலி, கிணி ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்வதுடன் இஸ்லாமிய மதத்தையும் சேர்ந்தவர்கள். உத்தியோக பூர்வ அறிக்கைகளின்படி ஐவரி கோஸ்ட்டின் மொத்தச் சனத்தொகையில் முஸ்லிம்கள் 20 வீதமானவர்கள். தெற்கு மாகாணங்களில் வாழும் குறு, பவுலே (முன்னாள் சர்வாதிகாரியின் இனம்) இனங்களில் 20 வீதமானோர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். பிரான்சுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் சர்வாதிகாரி புவாஞி தான் பிறந்த இடத்தில் கோடிக்கணக்கான டொலர்கள் செலவிட்டு மிகப்பிரமாண்டமான (வத்திக்கான் சென்ட் பீட்டர்ஸ் பாணியில்) கத்தோலிக்கத் தேவாலயத்தைக்கட்டிப் பெருமை தேடிக்கொண்டவர். அச்சு அசலாக வாத்திக்கானில் உள்ளத்தைப் போல காட்சியளிக்கும் அந்த தேவாலயத்தின், கோபுரத்தின் உயரத்தை குறைத்துக் கட்டும் படி பாப்பரசர் உத்தரவிட்டாராம்.

இன்றைய ஐவரி கோஸ்ட் பிரச்சினையில் வந்தேறுகுடிகளின் பங்கும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. காலனித்துவக் காலத்திலேயே பிரஞ்சுக்காரர் தமது பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் வேலைக்கமர்த்த அயல்நாடுகளிலிருந்த (பூர்க்கினா ஃபாசோ, மாலி) பெருமளவு கூலித்தொழிலாளர்களை வருவித்தனர். சுதந்திரமடைந்த பின்பும் இவர்களின் குடியேற்றம் தொடர்ந்தது. இதிலே பூர்க்கினாபே என அழைக்கப்படும் பூர்க்கினா ஃபாசோ குடியேறிகளைத் தம்மைவிடத் தாழ்ந்தவர்களாக ஐவரியர்கள் (மரபு வழி ஐவரி கோஸ்ட் பிரஜைகள்) கருதுவது வழக்கம். எதிர்க்கட்சித்தலைவர் உவாத்தரா உணமையில் பூர்க்கினா ஃபாசோவைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சைக்கும் உள்ளானவர். பூர்க்கினாபேக்கள் வாழும் வட மாகாணங்களில்தான் இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தமை கவனிக்கத்தக்கது. கிளர்ச்சியாளர்கள் வடக்கு மாகாணங்களையே தமது கட்டுப்பாட்டில் விட்டிருந்ததால், அவர்களும் பூர்க்கினாபேக்கள்தான் என பரவலாக நம்பப்பட்டது.  மரபுவழி ஐவரிகோஸ்ட் பிரஜைகளின் மூதாதையர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாலி, பூர்க்கினா ஃபாசோ போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் என்பது உதிரிச்செய்தி.

thomas_sankaraபூர்க்கினா ஃபாசோவை முன்பு ஆட்சிசெய்த, பலராலும் மதிக்கப்பட்ட சோஷலிஸ ஜனாதிபதி தோமஸ் சங்கரா படுகொலைசெய்யப்பட்டபின் ஆட்சியைப்பிடித்த தற்போதைய ஜனாதிபதி கம்பாரே தீவிர மேற்குலகச் சார்பாளர். அங்கேயிருந்துதான் கிளர்ச்சியாளருக்கான ஆயுதத் தளபாடங்கள் அனுப்பப்படுவதாக நம்பப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட சந்தேகங்கள் எல்லாம் ஒன்றுகூடி இப்போது நடப்பது சிப்பாய்க்கலகமல்ல, ஒரு அந்நிய நாட்டுப் ( பூர்க்கினா ஃபாசோ) படையெடுப்பு என உள்ளூர் மக்களைச் சொல்ல வைத்துள்ளது. சர்வதேசச் செய்தி ஸ்தாபனங்கள் கூறியபடி “நீண்டகாலத்திட்டங்களுடன் நிறுவனமயமாகிய” கிளர்ச்சியாளரின் பிரதிநிதி “தமது இயக்கம் பற்றித் தெளிவுபடுத்த” பாரிஸிற்குச் சென்றிருந்தார். இதேவேளை பிரான்ஸில் தங்கியிருந்த முன்னாள் சர்வாதிகாரி புவாஞியின் வாரிசும் (உண்மையிலேயே புவாஞியின் வைப்பாட்டி மகன் என்று கதை அடிபடுகின்றது) உலக வங்கியில் பதவி வகித்த பொருளாதார நிபுணருமான கோனன்பெடி திடீரென நாடு திரும்பியுள்ளார்.

கேனன் பெடி ஒரு வலதுசாரி அரசியற் தலைவரென்பதும், முன்பு இவரின் ஆட்சிக்காலத்தில், நிறவாத தென்னாபிரிக்காவுடன் கூட இவர் உறவுகளை மேற்கொண்டிருந்தார் என்பதும், தெரிந்தவிடயங்களே. பிரான்ஸைப் பொறுத்தவரை தம்மோடு ஒத்துழைக்கும் வலதுசாரிக்கட்சிகளின் தலைவர்களான கேனன் பெடி அல்லது உவாத்தராவை பதவியில் அமர்த்த எத்தனித்தது.  ஆபிரிக்காவில் பிரான்ஸின் மறைமுகமான அரசியல்-இராணுவத் தலையீடுகள் ஒன்றும் புதியவையல்ல. சுதந்திரம் வந்த பின்பும் அபிட்ஜான் நகரில் நிரந்தரமாக இருக்கும் பிரஞ்சு இராணுவ முகாமும், உயரதிகாரிகளாகவும் வர்த்தகர்களாகவும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட பிரஞ்சுக்காரரும் இந்நாட்டில் இன்னமும் நடப்பது நவ-காலனித்துவ ஆட்சி என்பதைத் தெளிவு படுத்தும். இதற்குத் தடையாக உள்ளூர் மக்களின் நலன்பேணவரும் அப்பாவி அரசியல்வாதிகளான தற்போதைய இடதுசாரி ஜனாதிபதி குபாக்போ போன்றவர்களை வெளியேற்ற எந்த வழிமுறையையும் பின்பற்ற காலனித்துவ வாதிகள் தயாராயுள்ளனர். அதை அவர்கள் நேரடியாகச் செய்யாமல் உள்நாட்டு எதிரிகளை வைத்து செய்துமுடிப்பது தான் நடக்கும் கதை.

_44489082_nestle_afp_203bசுவிட்சர்லாந்தில் இருந்து ஏற்றுமதியாகும் நெஸ்லே சொக்லேட்களை சுவைப்பவர்கள் பலருக்கு, அதன் மூலப்பொருளான கொக்கோ அந்நாட்டில் உற்பத்தியாவதில்லை என்பதும், ஐவரி கோஸ்டில் இருந்து இறக்குமதியாகின்றது என்பதும் தெரியாது.  ஐவரி கோஸ்ட்டின் 1.4 பில்லியன் டாலர் பெறுமதியான கொக்கோ தொழிற்துறை, வருடத்திற்கு 4 வீதம் வளர்ந்து வருகின்றது. ஆனால் லாபத்தில் பெரும்பகுதி சுவிட்சர்லாந்திற்கு செல்கின்றது.செல்வந்த நாடுகளின் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட்டின் உற்பத்தியில், ஐவரி கோஸ்ட்டின் ஏழைக் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படும் வேடிக்கையான உலகமிது. எந்த வித இயற்கைவளமும் இல்லாத ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்காவில் இருந்து தருவித்த வளங்களை வைத்து தான், உலக சந்தையை தமது விற்பனைப் பண்டங்களால் நிரப்பி வருகின்றன. உண்மையில் ஐரோப்பா தான் ஆப்பிரிக்காவில் தங்கிcocoa_gal_01இருக்கின்றது. ஆப்பிரிக்காவில் வாங்கப்படும் மலிவு விலை மூலப் பொருளுக்கும், சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த முடிவுப் பொருளுக்கும் இடையில் கிடைக்கும் நிகர லாபம் தான் ஐரோப்பாவில் செல்வத்தை குவித்து வருகின்றது.  ஆப்பிரிக்கா மட்டும் இல்லையென்றால், ஐரோப்பியர்கள் வறுமையில் வாட வேண்டி இருக்கும். இதனால் மூலப்பொருளின் விலையை முடிந்த அளவு மிகக் குறைவாக வைத்திருப்பது ஐரோப்பாவிற்கு நன்மை பயக்கும். அதற்காக இராணுவத் தலையீட்டை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

லைபீரியாவிலும், சியாரா லியோனிலும் வைரக் கற்களுக்காக, கொங்கோவில் கணிப்பொறி ”சிப்”களுக்காக… இந்த வரிசையில் சாக்லெட்டுக்காக ஐவரி கோஸ்ட்.  இப்படியே போனால், மீனுக்கும், மரக்கறிக்கும், பழங்களுக்குமாக எந்த நாட்டின் மீது படையெடுப்பார்களோ தெரியாது.  ஏனென்றால் ஐரோப்பிய சந்தைகளை நிரப்பும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் இருந்து தான் வருகின்றது.  நாளாந்தம் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் உணவை விழுங்கும் ஐரோப்பியர்கள், அங்கே பட்டினியால் வருந்தும் மக்களுக்கு உதவி செய்கிறார்களாம்.

– தொடரும் –

Last Updated on Friday, 20 March 2009 06:58