புலி அழியவில்லை, மற்றொன்றாகவே பிரதியிடப்படுகின்றது. இலங்கை எங்கும் கட்டவிழ்த்து விடப்படும் பாசிசமே, புலி அழிப்பின் ஊடாக மேலெழுந்து வருகின்றது. சாதாரணமான பத்திரிகைச் சுதந்திரம் முதல் போலித் தேர்தல்கள் வரை பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் எல்லைக்குள் அதை முடக்கி வருகின்றது. அனைத்தும் பாசிசக் கும்பல்களின் அதிகாரத்துக்கானதும் இருப்புக்கானதுமாகி, அதுவே நாட்டின் ஜனநாயகமாகின்றது.
புலிகளிடம் தமிழ் மக்கள் எதை இழந்து இன்று அரசியல் அனாதைகளானார்களோ, அது இன்று இலங்கை முழுக்க உருவாகின்றது. மக்கள் மக்களுக்காக சிந்திக்கக் கூடாது, இது இன்று ஒரு தேசக் குற்றம். இதுதான் மகிந்த சிந்தனை. ஆம், புலிகள் அழியவில்லை, மற்றொரு புலியாகி, இலங்கை முழுக்கவே அதுவாகின்றது. மகிந்த சிந்தனை என்ன செய்கின்றது, தம்மை யாரும் எதிர்க்காத வண்ணம் அனைத்தையும் கருவறுக்கின்றது. புலியின் பெயரில், இதை செய்கின்றது. யுத்தத்தை வெல்ல இது தடையாக இருப்பதாக கூறி, புலி முத்திரை குத்தியும் தன் பாசிசத்தை சமூகத்தில் திணித்து வருகின்றது
.
தாம் செய்வது மனித விரோத குற்றம் என்பது, நன்கு தெரிந்தே செய்கின்றது. இதன் மேலான விமர்சனத்தை தடுக்கவும், அம்பலமாவதைத் தடுக்கவும், முதலில் சுதந்திரமான ஊடாக ஜனநாயகத்தை அது திட்டமிட்டு நசுக்கி வருகின்றது. படுகொலை அரசியல் முதல் நாட்டை விற்று ஊழல் செய்வது வரை, அவை நாட்டின் நன்மைக்காகத்தான் என்று பிரச்சாரம் செய்யும்படி துப்பாக்கி முனையில் கோருகின்றது. மீறினால் மரணம், இதுதான் உன் கதி என்பதை வெளிப்படையாக, அது செய்தே காட்டுகின்றது. கருத்துச்சுதந்திரத்தின் குரல் வளையை நசுக்க, அனைத்தையும் புலியாக்கி, புலி முத்திரை குத்தியே தன் வெறியாட்டத்தைப் ஆடுகின்றது. யுத்த சூழலில் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க முடியாது என்று பாசிச முழக்கமிட்டு, மனிதகுலம் மீது எகிறிப் பாய்கின்றது.
இவர்கள் தாமே மக்களை அடக்கியாள உருவாக்கிய நாட்டின் சட்டம், நீதி என்று அனைத்தையும் மீறும் இவர்கள், இரகசியப் படுகொலைகள் முதல் நாட்டில் உயிருள்ள மனித உணர்வுகள் எல்லாவற்றையும் பொசுக்கி வருகின்றனர். அனைத்தையும் சட்டத்துக்கு புறம்பாக, நீதிக்கு புறம்பாக, தான் கட்டிவைத்துள்ள மிகப்பெரிய பயங்கரவாத இயந்திரத்தைக் கொண்டு, இதை கட்டவிழ்த்து விட்டுள்ளது. நாடு புலியழிப்பின் பெயரில், ஒரு இருண்ட காலத்தினுள் நுழைகின்றது.
தமிழ்மக்களை புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதாகக் கூறிக்கொண்டு, (புலிப்) பயங்கரவாதத்தை இலங்கை முழுக்க நிறுவிவருகின்றது.
இதன் முதற்படி, சாதாரண ஜனநாயகத்தை மறுக்கின்றது. பயங்கரவாத ஒழிப்பில், இதுதான் அச்சாணி என்கின்றது. புலிகள் இதையே தேசியத்தை அடைய அச்சாணி என்றனர். இப்படி ஓரே விடையத்தை, இரண்டு தரப்பும், தத்தம் பாசிசத்தை நிறுவ மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்தன, மறுக்கின்றன.
இதன் முதற்படியாக தம்மையும், தமது யுத்த அழித்தொழிப்பு பயங்கரவாதத்தையும் பற்றிய செய்திகளை பிரசுரிக்கக் கூடாது என்கின்றது. இதற்குள் நாட்டை விற்கும் ஊழல்கள் அம்பலப்படுத்தக் கூடாது என்கின்றது. இன அழிப்பை, இனச் சுத்திகரிப்பை இட்டு யாரும் எதுவும் பேசக்கூடாது என்கின்றது. இதுவோ புலி ஒழிப்பிற்கு உட்பட்டது என்கின்றது. இதை மீறினால் புலி முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் அல்லது சிறைகளில் தள்;ளப்படுகின்றனர்.
இதற்கு மாறாக வாழ்வது என்றால், தாம் செய்யும் இனஅழிப்பு யுத்தத்தை ஆதரிக்கக் கோருகின்றது. இதற்கு மாறான மாற்றுக் கருத்துகள் அனைத்தும், இன்று படிப்படியாக ஒடுக்கப்படுகின்றது. இப்படி முதலில் தமிழரின் மாற்றுக்கருத்து தளம் நலமடிக்கப்படுகின்றது. அனைத்தையும் புலியாக முத்திரை குத்தியே, நசுக்கப்படுகின்றது. ஒரு அசாதாரணமான பாசிச சூழல், பாசிச வெறியுடன் கடித்து குதறுகின்றது. முன்பு புலிகள் முன் எது நிலவியதோ, அதே நிலை. ஆனால் இன்று முழு இலங்கையிலும், அரசுக்கு முகம் கொடுக்கின்ற மனித அவலம்.
சாதாரண இந்தியாவில் இருந்து வரும் தமிழ்மொழிப் பத்திரிகை இறக்குமதியாளர்களைக் கூட, அது விட்டுவைக்கவில்லை. அதன் விநியோகஸ்;தர்கள் என்று அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் தள்ளப்படுகின்றனர். இப்படி தமிழ் இனம், அதன் மொழி, அதன் உரிமை எல்லாம் மிரட்டப்பட்டு, அடிமைப்படுத்தப்படுகின்றது. பாசிட்டுக்கு ஏற்ற கொலைவெறி பிடித்த கொலைகாரத் தம்பி கோத்தபாய, ஒரு தலைமுறையல்ல பத்து தலைமுறைக்கு இன உரிமையை கேட்காத வண்ணம், தமிழன் அடக்கப்படுவான் என்று வெளிப்படையாக கொக்கரிக்கின்றான். புலியின் பெயரால், தமிழன் ஒடுக்கப்படுகின்றான்;. இன அழிப்புக்கும், இனச் சுத்திகரிப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றான்.
இதற்கு இலங்கையின் எந்த சட்ட நடைமுறைக்கும் உட்படாத ஒரு வெறித்தனத்துடன், சட்டத்தை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். இதன் மேல் எந்த நீதி விசாரணையும் கிடையாது. விசாரணை செய்யவேண்டியவன், இங்கு இனஅழிப்பையும் இனச் சுத்திகரிப்பையும் செய்பவனாக உள்ளான். இப்படி தமிழினம் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள பேரினவாத இனஅழிப்பு, இன்று இலங்கை தளுவிய பாசிசமாக உருவெடுத்து நிற்கின்றது. தமிழ் இனத்தை மட்டுமல்ல, இலங்கையின் முழு மக்களையும் தன் பாசிச பிடிக்குள் ஒடுக்கத் தொடங்கியுள்ளது. புலிகளைப் போல், தன் இனஅழிப்பு வெற்றிகளைக் காட்டி, தன் பாசிசத்தை நியாயப்படுத்தி முழு மக்கள் மேல் இதை இறக்குகின்றது. இதன் மூலம் ஒரு அடிமை நிலைக்குள், முழு மக்களையும் இட்டுச்செல்லுகின்றனர்.
இன்று இதை இனம் கண்டு போராடுவதும், இலங்கையின் முழு மக்களுடனும் ஜக்கியப்படுவது அவசியமானது. அதேநேரம் மேலெழுந்து வரும் பாசிசத்துக்கு எதிராக போராடுவதே, அவசரமானதும் அவசியமான இன்றைய தேவையாகும்.
பி.இரயாகரன்
17.03.2009