Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் இந்துக்கலாச்சாரம்- ”பப்” கலாச்சாரம் இந்தியப் பெண்களைக் கவ்வும் இரட்டை அபாயம்

இந்துக்கலாச்சாரம்- ”பப்” கலாச்சாரம் இந்தியப் பெண்களைக் கவ்வும் இரட்டை அபாயம்

  • PDF

அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி  இராமாயணம்.

இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் "பப்'' கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த ""ஸ்ரீராமசேனை''. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களை மானபங்கப்படுத்தினர்.

 

இந்திய கலாச்சாரத்தையும், "இந்து'ப் பெண்களையும் மேற்கத்திய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக சொல்லுகிறான், ஸ்ரீராம சேனையின் தலைவன் பிரமோத் முத்தலிக். ""இந்துப் பெண்களை கலாசார முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிக்கும் அயல்நாட்டு அரக்கனிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்'' என்று கூறும் இவர்கள், அயல்நாட்டு அரக்கனிடமிருந்து பெண்களை காப்பதெல்லாம் இருக்கட்டும்; உள்ளூர் சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும்  பெண்களை யார்  காப்பாற்றுவது?


கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் எனக் காட்டுக் கூச்சல் போடும் சங்கப் பரிவாரங்களின் "நல்லொழுக்க' நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் கூவம் கூடக் காத தூரம் ஓடிவிடும்.


இளம்பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதுடன் விபச்சாரமும் செய்ய வைத்து மாட்டிக் கொண்ட பிருதிவிராஜ் சவான், சிவசேனாவின் திரைத்துறை அணியின் தளபதி. உட்கட்சிப் பூசலில் கேவலமாக நாறிப்போன நீலப்படப் புகழ் சஞ்சய் ஜோஷி, பா.ஜ.க.வின்  பொதுச் செயலாளர். காசுக்காக அடுத்தவன் மனைவியைத் தன் மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று மாட்டிக்கொண்ட பாபுபாய் கத்தாரா, பா.ஜ.க.வின் எம்.பி. கிலோகணக்கில் போதைப் பொருளோடு பிடிபட்ட ராகுல் மகாஜன், மாண்டுபோன பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனின் வாரிசு. வருடத்திற்கு இரண்டு தரம் செக்ஸ் சர்வே போடும் "இந்தியாடுடே'' ஆர்.எஸ்.எஸ்.சின் குடும்பப் பத்திரிகை. காமக்களியாட்டம் நடத்தும் கொலைகார ஜெயேந்திரன்தான் இவர்களின் லோககுரு.  இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.


இந்த "நல்லொழுக்க' சீலர்கள்தான் பெண்களுக்கு "ஒழுக்கம்' பற்றி வகுப்பெடுக்கிறார்கள். சாராய விடுதிக்குப் போய் இந்துப் பெண்களின் மானம் காக்க முயன்றவர்கள், அனுராதா ரமணன் முதல் ஸ்ரீரங்கம் உஷா வரை காமகோடி சங்கராச்சாரியின் மன்மதபாணத்துக்கு இரையானபோது, அவற்றைக் "கிருஷ்ணலீலை' எனக் கருதிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்களா என்ன?


 சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது "தேசிய நாயகன்' ஸ்ரீராமனைக் கைவிட்டு, "ஆக்ஷன் நாயகி' விஜயசாந்தியையும், "கனவுக் கன்னி' சௌந்தர்யாவையும், முன்னாள் "கவர்ச்சிப்புயல்' ஹேமாமாலினியையும் நம்பிப் பிரச்சாரம் செய்து "இந்து'க் கலாச்சாரப் பெருமையைப் பா.ஜ.க. நிலைநாட்டியது. பெண்கள் குடிப்பதற்கு எதிராக இப்போது கொம்பு சுழற்றுபவர்கள்,  சென்ற ஆண்டு கருநாடக சட்டமன்றத் தேர்தலில், எல்லோருக்கும் பட்டை சாராயம் வழங்கியதை எந்தக் கலாச்சாரத்தில் சேர்ப்பது? இவர்கள் கொடுத்த கள்ளச்சாராயத்தைக் குடித்துச் செத்துப்போன 400பேர்களில் பெண்களும் இருந்தார்களே!


இவர்களுக்குக் குடிப்பதுதான் பிரச்சினை என்றால் கருநாடகத்தில் இருக்கும் எல்லா சாராயக் கடைகளையும் மூடக்கோரி போராடலாம். ஆனால், சாராய முதலாளி மல்லையாவிடம் அடுத்த தேர்தலுக்குக் கைநீட்ட முடியாதே! நட்சத்திர விடுதி ""பார்''களில், எப்படிச் சாராயம் ஊற்றித் தருவது எனப் பெண்களுக்குப் பட்டயப் படிப்பாகச் சொல்லித் தருவதையாவது எதிர்க்கலாம் என்றால், அந்த நட்சத்திர விடுதிகளில் பாதி இவர்களது கட்சிக்காரர்களுடையதாயிற்றே! சரி, பெண்களைக் குடிக்கத் தூண்டிய கேளிக்கை விடுதியையாவது தாக்கினார்களா என்றால், அதுவும் இல்லை. மாறாக, அங்கே இருந்த பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்கியிருக்கின்றனர்.


கேளிக்கைவிடுதியில் வீரம் காட்டிவிட்டு அடுத்ததாகக் காதலர் தினத்தன்று, வெளியே சுற்றும் காதல் ஜோடிகளுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதாகப் பேட்டியெல்லாம் கொடுத்தனர், இப்பார்ப்பன பாசிஸ்டுகள். சங்கிலியோடு தெருநாய்களைப் பிடிக்க வருபவர்களைப்போல, சில இடங்களில் கையில் மஞ்சள் கயிற்றுடன் இவர்கள் திரிந்தனர். ஆனால், இந்த வேலையை இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தால் உமாபாரதி பா.ஜ.க.வை விட்டு போயிருக்கவே மாட்டார். அவர் விரட்டி விரட்டிக் காதலித்த கோவிந்தாச்சார்யாவையே உமாபாரதிக்கு கட்டி வைத்திருந்திருந்தால், கட்சிப் பிளவையாவது தடுத்திருந்திருக்கலாம்.


எல்லா மனித உணர்வுகளையும் விற்பனைச் சரக்காக்கி வணிகமயமாக்கும் முதலாளித்துவம்தான், காதலர்களின் உணர்வுகளை சந்தைப்படுத்திக் காதலர் தினத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறது. வணிக நோக்கம் கொண்ட காதலர் தினத்தைப் பரப்பும் வணிக நிறுவனங்கள் ஊடகங்களைத் தட்டிக் கேட்காமல், இந்த நுகர்வு கலாச்சாரத்தின் பலிகடாக்களான பெண்களைக் கோழைத்தனமாகத் தாக்குகிறது, ராம்சேனா.

 

மேற்கத்திய கழிசடை கலாச்சாரத்தைப் பயங்கரமாக எதிர்ப்பது போல பம்மாத்துக் காட்டும் இவர்கள், அதனை உருவாக்கும் தாராளமயப் பொருளாதாரத்தை, தலையில் வைத்து தாங்குகிறார்கள். அந்நிய மூலதனம் வேண்டும்; அடிமைச் சேவகம் வேண்டும்; ஆனால் அது பரப்பும் கலாச்சாரம் மட்டும் வேண்டாம் என்றால் எப்படி? பேய்க்கு வாழ்க்கைக்கப்பட்டுவிட்டுப் பிணம் மட்டும் திண்ண மாட்டேனென்றால் எப்படி?


கேளிக்கை விடுதி மீது இக்கும்பலின் தாக்குதல் மற்றும் காதலர் தினத்துக்கு மிரட்டல் விடப்பட்டது போன்றவை இந்தியா முழுதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது.  உடனடியாக ""ராம் சேனாவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்று பா.ஜ.க. பசப்பியது.  எதைச் செய்தாவது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த, பல்வேறு பினாமி அமைப்புகளின் பெயரில் செயல்படுவது ஆர்.எஸ்.எஸ்.சின் வழக்கமான தந்திரமாகும். மற்ற மாநிலங்களில் இந்து முன்னணி, விவேகானந்த கேந்திரா மற்றும் அபினவ் பாரத் போன்ற பினாமி அமைப்புகளை உருவாக்கிச் செயல்படுவதைப் போல, கர்நாடகத்திற்காக இவர்கள் உருவாக்கி இருப்பதுதான் ராம்சேனா. ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் முழு நேர ஊழியரான முத்தலிக் மீதிருந்த 50க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகளை, முதல்வராகப் பதவியேற்றவுடன் எடியூரப்பா திரும்பபெற்றதில் இருந்தே இது தெளிவாகத் தெரிகிறது.

 

உலகமய பண்பாட்டின் விளைவாக இந்தியாவெங்கும் ""பப்''கள் கொடி கட்டி பறக்கும் போது, கர்நாடகத்திலிருக்கும் ""பப்''பில் மட்டும் காவிக் கும்பல் புகுந்து தாக்க வேண்டிய அவசியமென்ன? இம்மாநிலத்தில்தான் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவும், உலகமய கலாச்சார சீர்கேடுகள் உச்சத்தில் இருக்கும் மங்களூர் போன்ற நகரங்களும் உள்ளன. இந்த கலாச்சார மாற்றங்களை நடுத்தர வர்க்கத்தால் சீரணித்துக் கொள்ள முடிவதில்லை. இந்த வர்க்கத்தின் கலாச்சார தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே இந்துத்துவ பயங்கரவாதிகளின் நோக்கம்.


 பார்ப்பன பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதையே தேசிய பெருமிதமாக முன்னிறுத்தி குஜாராத்தில் வெற்றி பெற்றார்கள். ஒரிசாவில் கிறித்துவ தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திக் காலூன்றினார்கள். ஏற்கெனவே கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒகேனக்கல் பிரச்சினையில் கன்னட இனவெறியைத் தூண்டிவிட்டு தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார்கள். தற்போது இனவெறியோடு ""பப்'' கலாச்சார எதிர்ப்பு கலந்த புதிய சோதனையை அங்கே நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதேபோல தமிழகத்தில், தன்னெழுச்சியாகத் தோன்றியுள்ள ஈழ ஆதரவு உணர்ச்சியைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் புதிய சோதனையை இந்துத்துவ நரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

 

ராம்சேனாவின் பாசிச நடவடிக்கையை எதிர்க்க கிளம்பிய மேட்டுக்குடி கும்பலொன்று இன்னொரு ஆபாசக் கூத்தை அரங்கேற்றியது. காதலர் தினத்தன்று பெண்கள் அணியும் உள்ளாடையை முத்தலிக்குக்கு அனுப்பும் போராட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். உழைக்கும் பெண்கள் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும், சமூகத்திலும் சந்திக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் மத்தியில், குடிப்பதற்கும் கூத்தாடுவதற்குமான உரிமையையே பெண் விடுதலையின் உச்சம் என்று இவர்கள் பேசுவது மிகவும் ஆபத்தானது. ராம்சேனாவின் நிலப்பிரபுத்துவ பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பதாக கிளம்பியுள்ள இவர்கள், அதற்குப் பதில் ஏகாதிபத்தியத்தின் மேட்டுக்குடிப் பெண்ணடிமைத்தனத்தைப் புகட்டுகிறார்கள்.

 

இன்று இந்து பயங்கரவாதிகள் மதுவிடுதிகளிலும் காதலர் தினத்திலும் நடத்தியிருக்கும் வன்முறையானது, தங்களது கூத்தடிக்கும் உரிமையைப் பறிக்கிறதென்று எதிர்போராட்டம் நடத்தும் இந்த மேட்டுக்குடி தாராளமயதாசர்கள்,  இதே கர்நாடகாவில் முஸ்லீம், கிறித்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்தி அம்மக்களின் கருத்துரிமையை மட்டுமல்ல, வாழும் உரிமையைக் கூட இந்து பயங்கரவாதிகள்  பறித்த போது ஒன்றுமே நடக்காதது போல மவுனமாக இருந்தனர். இன்றைக்கு தமது நுகர்வு வெறிக்கு குறுக்கே இந்துத்துவ பயங்கரவாதிகள் வருவதால் மட்டுமே   தங்கள் சுதந்திரம் பறி போய் விட்டதாக ஒப்பாரி வைக்கின்றனர். இதையே ஏதோ கருத்துரிமைக்கான போராட்டம் போலவும், பெண் உரிமைக்கான புரட்சி போலவும் பிரமிப்பூட்டுகின்றனர். கர்நாடகத்தில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மீதான தாக்குதல்; ஓவியர்கள் மீதான தாக்குதல் முதலான இந்துவெறி பயங்கரவாத வெறியாட்டத்தை, கணநேரச் செய்தியாக வெளியிட்டுவிட்டு ஓய்ந்து போன ஊடகங்கள், இந்த அப்பட்டமான சுயநலம் கலந்த அற்பத்தனத்தையே முற்போக்கு ""ஜாக்கி'' கொண்டு தூக்கி நிறுத்துகின்றன.


 இந்து பயங்கரவாதக் கும்பல், தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் ஆதரித்துக் கொண்டே அவை உருவாக்கும் கலாச்சாரச் சீர்கேட்டை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளுகிறது. மாறாக,  தாராளவாதக் கும்பலோ அந்த சீர்கேட்டையே பெண்ணுரிமையாக முன்னிறுத்துகிறது. முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள்; ஓவியர்கள் மீதான தாக்குதல்கள், கலாச்சார சீர்க்கேட்டை எதிர்த்து தாக்குதல், கன்னட இனவெறி — என இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய பார்ப்பன பயங்கரவாதத்தின் வேறுபட்ட வடிவங்கள் என்பதை உணர்ந்து புரட்சிகரஜனநாயக சக்திகள் அணிதிரண்டு முறியடிக்க வேண்டிய தருணமிது. ஆனால், தாராளமய தாசர்களோ நாட்டைக் கவ்வியுள்ள இப்பேரபாயத்தை உணர மறுத்து, கோமாளித்தனமான எதிர்ப்போராட்டங்களால் கூத்தடித்துக் கொண்டிருக்கின்றனர்.


• முத்து

Last Updated on Saturday, 28 March 2009 06:30