Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் மோடித்துவாவின் புதிய பங்காளிகள்

மோடித்துவாவின் புதிய பங்காளிகள்

  • PDF

இந்தியத் தரகு முதலாளிகளின் தளபதிகளாகக் கருதப்படும் ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மித்தல் (ஏர்டெல் நிறுவனத் தலைவர்) ஆகி யோரின் மனம் கவர்ந்த நாயகனாகிவிட்டார், திருவாளர் நரேந்திர மோடி. குஜராத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலாளிகளின் கூட்டம் மோடியைப் புகழ்ந்து தள்ளியதைக் கேட்டால், தமிழ்நாட்டில் அம்மாவையும், தளபதிகளையும் புகழ்ந்து "கட்அவுட்'' வைக்கும் தொண்டன்கூடக் கூசிப் போயிருப்பான்.


ரத்தன் டாடா தனது நானோ கார் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்தில் அமைப்பதற்கு இரண்டே நாட்களில் ஒப்புதல் அளித்த மோடியின் தொழில் முனைவைக் கண்டு கிறுகிறுத்துப் போனதாகப் புகழ்ந்தார்.


"மோடி, ஒரு நிறுவனத்திற்குப் பதிலாக ஒரு மாநிலத்தையே ஆளும் மிகச் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி'' என்றார் ஏர்டெல் நிறுவனத் தலைவர், சுனில் மித்தல்.
 "கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே கனவு காணும் மோடியின் ஆற்றல்; குறிக்கோள்களை அடைவதற்கு அவர் காட்டும் வேகம் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், மோடிதான் நமது நாட்டின் எதிர்காலத் தலைவர்'' என்றார், அனில் அம்பானி.


"குஜராத்தை தொழில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி, இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பொழுது, இந்திய நாட்டின் முகமே மாறிப் போய்விடும்'' என்றும் அனில் அம்பானி மோடியைத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பா.ஜ.க.வின் பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானிக்கு எதிராக, அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவருமான பைரோன்சிங் ஷெகாவத் போர்க் கொடி தூக்கிய நேரத்தில் தரகு முதலாளிகளின் தளபதிகள் நரேந்திர மோடியைப் புகழ்ந்து தள்ளியது பா.ஜ.க.விற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

 

பரலோகம் போவதற்குள் இந்தியாவின் பிரதம மந்திரி நாற்காலியில் உட்கார்ந்து விடவேண்டும் எனப் பித்துப் பிடித்து அலையும் அத்வானி, "பா.ஜ.க., மைய ஆட்சியைப் பிடித்தால், மோடி பாணி பொருளாதார நடவடிக்கைகளையே பின்பற்றும்'' எனத் தரகு முதலாளிகளுக்கு உறுதிமொழி அளித்தார். நரேந்திர மோடியோ, "தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை'' என அறிவித்து, தனது பணிவையும், விசுவாசத்தையும் காட்டிக் கொண்டார். இப்படியாக பா.ஜ.க.விற்குள் பிரதமர் பதவி நாற்காலியைக் குறிவைத்து எழவிருந்த கோஷ்டிச் சண்டை தற்காலிகச் சமாதானத்துக்கு வந்தது.

 

•••

 

குஜராத்துக்கு வெளியே மோடியின் செல்வாக்கு ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் என்ற வட்டத்துக்கு அப்பால் இருப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. பா.ஜ.க.வின் செல்வாக்குமிக்க மாநிலங்களாகக் கருதப்படும் ராசஸ்தான், தில்லியில் கூட, மோடியின் தேர்தல் பிரச்சாரம், அக்கட்சிக்கு சட்டசபைத் தேர்தல்களில் வெற்றியைத் தேடித் தரவில்லை. மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை, பா.ஜ.க.வில் இருக்கும் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற குட்டித் தலைவர்கள் கூட ஏற்றுக் கொள்வார்களா என்பதும் சந்தேகத்திற்குரியது. இவை அனைத்துக்கும் மேலாக 2002இல் குஜராத்தில் நடந்த இந்துமதவெறிக் கலவரங்கள் காரணமாக, "இட்லருக்கு இணையான கொலைகாரன்'' என்ற அவப்பெயரும் மோடிக்கு இருந்து வருகிறது. இந்த ""நெருடல்களை'' எல்லாம் தாண்டி, தரகு முதலாளிகளின் தளபதிகள் ஒரே குரலில் மோடியை ஆதரிப்பதற்கான காரணம் எதுவாக இருக்க முடியும்?


 தரகு முதலாளிகள் மோடிக்கு அளித்துள்ள இந்த ஆதரவைக் காரியவாதத் தொண்டன் தனது தலைவனைக் காக்கா பிடிப்பதைப் போன்ற ஒன்றாகச் சுருக்கி விட முடியாது. ""இவர் பிரதமரானால் நன்றாக இருக்கும்; இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும்'' எனச் சாதாரண வாக்காளர் விரும்புவதைப் போலவும் தரகு முதலாளிகளின் விருப்பத்தை எளிதாக எடுத்துக் கொண்டுவிட முடியாது. மேலும், தரகு முதலாளிகளின் தளபதிகள் சமீப காலத்தில் வேறெந்த அரசியல்வாதியையும் இப்படி வெளிப்படையாக ஆதரித்ததில்லை என்பதால், இப்பிரச்சினையைப் பற்றி பரிசீலிக்க வேண்டியது அவசியமாகி விடுகிறது.

 

ரத்தன் டாடா மோடியை ஆதரிப்பதற்குப் பின்வரும் காரணத்தைக் கூறுகிறார்: "குஜராத்தில் நானோ கார் ஆலையை அமைப்பதற்கான ஒப்புதல் இரண்டுமூன்று நாட்களில் கிடைத்து விட்டதாகவும்; பிற மாநிலங்களுக்குப் போயிருந்தால் இதற்கு 90 முதல் 180 நாட்கள் வரைக் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும்'' என்கிறார், அவர். டாடா மட்டுமல்ல, மோடியை ஆதரிக்கும் அனைவருமே குஜராத்தில தொழில் வளர்ச்சியில் அவர் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருவதாகவும், பிற மாநில முதல்வர்கள் அவரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் அடித்துக் கூறி வருகிறார்கள்.


சமீபத்தில் நடந்த குஜராத் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 12 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை குஜராத் பெறும் அளவிற்கு தொழில் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டுள்ளன. இதற்கு முன் 2003, 2005, 2007ஆம் ஆண்டுகளில் நடந்த முதலீட்டாளர் மாநாடுகளின் மூலம் 6.34 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ஒப்பந்தங்களைப் பெற்று சாதனை படைத்த மோடி, 2009 மாநாட்டில் தனது முந்தைய சாதனையை தானே உடைத்துவிட்டதாகப் புகழப்படுகிறார்.


எனினும், மோடியின் இந்தச் சாதனை "ஓவர் பில்ட்அப்'' என ஆர்.எஸ்.எஸ்.இன் கொ.ப.செ. போலச் செயல்படும் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'' நாளிதழே அம்பலப்படுத்தியிருக்கிறது. "2003, 2005, 2007இல் நடந்த குஜராத் சர்வதேச முதலீட்டாளர் மாநாடுகளின் மூலம் 6.34 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான முதலீட்டை மோடி கவர்ந்து விட்டதாகக் கூறப்பட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.30 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான முதலீடுகள்தான் குஜராத்திற்கு வந்திருப்பதாகவும்; 13,23,452 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறப்பட்டதற்கு மாறாக, 1,62,784 வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருப்பதாகவும்'' அந்நாளேடு மோடியின் சாதனைகளைக் கூறு போட்டுக் கிழித்து விட்டது.


மோடியைப் போல, ஒவ்வொரு மாநில முதல்வருமே தனது மாநிலத்தில் நுழையும் முதலீடுகள் பற்றியும்; அம்முதலீடுகள் உருவாக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் பொய்களையே புள்ளி விவரங்களாக வெளியிட்டு வருவதால், நாம் மோடியை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டியதில்லை. ""தொழில் முன்னேற்றத்தில் மோடி காட்டும் அக்கறைக்காகத்தான் அவரை ஆதரிப்பதாக இந்திய முதலாளிகள் கூறினால், அவர்கள் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரைத்தான் பாராட்ட வேண்டும். ஏனென்றால், குஜராத்தில் தொழில் முன்னேற்றத்திற்கான அடித்தளம் காங்கிரசு ஆட்சியின் பொழுதே உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால், நிதிஷ்குமாரோ "பின்தங்கி தேங்கிப் போன பீகாரில் சாதனைகளைப் படைத்து வருவதாக'' முதலாளித்துவப் பத்திரிகையொன்று குறிப்பிடுகிறது. இந்த அளவுகோலின்படி பார்த்தால், ரத்தன் டாடா போன்றோர் தொழில் முனைவுக்காக மோடியை ஆதரிப்பதாகக் கூறுவது ஊரை ஏய்க்கும் வாதம்தான்.


நானோ கார் ஆலையை குஜராத்தில் அமைப்பதற்காக நரேந்திர மோடி ரத்தன் டாடாவிற்கு 30,000 கோடி ரூபாய்க்கு மேலான சலுகைகளை வாரி வழங்கினார். அடானி குழுமத்தை நடத்தி வரும் கௌதம் அடானிக்கு ஒரு சதுர அடி ஐந்து பைசா என்ற விலையில் 33,000 ஏக்கர் நிலத்தை விற்றார், மோடி. அந்த நிலத்தை சதுர அடி 120 ரூபாய் என்ற விலையில் விற்று, 20,000 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது, அடானி குழுமம்.


மோடி, இவை போன்ற சலுகைகளை வாரி வழங்குவதால்தான், அவரைத் தரகு முதலாளிகள் ஆதரிக்கிறார்கள் எனக் கூறினால், மோடியைப் போலவே அனைத்து ஓட்டுக் கட்சிகளையுமே தரகு முதலாளிகள் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டும். நானோ கார் ஆலையைத் தங்கள் மாநிலத்தில் அமைக்க வேண்டி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில முதல்வர்கள் டாடாவுக்குக் காவடி தூக்கிய வெட்கக் கேட்டை நாம் மறக்க முடியதே!


அனைத்து மாநில முதல்வர்களும், அனைத்து ஓட்டுக் கட்சித் தலைவர்களும் தரகு முதலாளிகளுக்குச் சேவை செய்ய போட்டா போட்டி நடத்தும் பொழுது, ரத்தன் டாடா, அம்பானி போன்றோர் மோடியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்கு வேறென்ன சிறப்பான காரணம் இருந்து விட முடியும்? மற்ற மாநில முதல்வர்களையும் மோடியையும் பிரித்துக் காட்டும் காரணி எது? என்ற கேள்விக்கான பதில்தான், தரகு முதலாளிகளுக்கும் மோடிக்கும் இடையே மலர்ந்துள்ள நெருக்கத்தைப் புரிய வைக்கும்.


•••


இந்து மதவெறி பாசிசம் என்ற அரசியல் காரணிதான் மோடியையும், தரகு முதலாளிகளின் தளபதிகளையும் நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது. ரத்தன் டாடா, அம்பானி போன்றோர் மோடியைப் போலப் பச்சையாக முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைக் கக்குவதில்லை என்பது உண்மைதான். அதேசமயம் அவர்கள் "பயங்கரவாதமும், தீவிரவாதமும்தான் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக'' நாகரீகமான முறையில் இந்துத்துவா அரசியலைப் பேசுகிறார்கள்.

 

குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்பொழுது, "பாதுகாப்பில்லாமல் வளர்ச்சியில்லை'' என்றுதான் மோடி பிரச்சாரம் செய்தார்.


 தற்பொழுது மோடித்துவம் எனக் கூறப்படும் இந்த இந்துமதவெறி அரசியல், முசுலீம்களுக்கு எதிரானது என்பது ஊரறிந்த உண்மை. அதேசமயம், அது அடித்தட்டு "இந்துக்களையும்'' பாதுகாக்கவில்லை என்பதை குஜராத்தில் நடந்து வரும் விவசாயிகளின் தற்கொலைகளும்; செயற்கை வைரத்தைப் பட்டை தீட்டும் தொழிலாளர்களின் தற்கொலைகளும் நிரூபித்து வருகின்றன. குஜராத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 47 சதவீதம் பேர் போதிய உணவு கிடைக்காமல், நோஞ்சானாகச் சூம்பிப் போய்க் கிடக்கின்றனர். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராட வேண்டிய பெரும்பான்மை "இந்து'' சமூகமோ, மோடிக்குப் பின்னால் நின்று கொண்டு, முசுலீம்களுக்கு எதிராகத் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு திரிகிறது. இந்தப் பிளவு, குஜராத்தில் "தொழில் அமைதி''யைப் பாதுகாப்பதால், தரகு முதலாளிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்!


மற்ற மாநில முதல்வர்களும்கூட, "தொழில் அமைதி''க்காக உழைக்கும் மக்களை ஒடுக்குவதில் சளைத்தவர்கள் இல்லையென்றாலும், மோடி உள்ளிட்ட இந்துமதவெறி பாசிஸ்டுகளோ மூலதனத்தின் நலனைப் பாதுகாப்பதைப் புனிதமான மதக் கடமையைப் போன்று கருதுகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் பெயருக்காகவேனும் "சோசலிசம்'' என வாய்ச் சவடால் அடித்து வந்த நாட்களில் கூட, பா.ஜ.க.வும், அதன் தாய் அமைப்பான ஜனசங்கமும் தனியார் முதலாளித்துவத்திற்குத்தான் ""ஜெ'' போட்டு வந்தனர் என்ற உண்மை, மோடிக்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள உதவும்.


மைய அரசு சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, குஜராத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றுவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார், @மாடி. உலக வங்கியின் கட்டளைக்கு இணங்க, விவசாயத்திற்கான மின் கட்டணத்தை மோடி உயர்த்திய பெழுது, அதனை ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த விவசாய சங்கமே எதிர்த்தது. எனினும், மோடி "இந்து'' சகோதரர்கள் என்று கூட பாராமல், விசவாயிகளின் எதிர்ப்பை ஒடுக்கினார். மறுகாலனியாதிக்கம் எதை விரும்புகிறதோ, அதை ஈவு இரக்கமின்றி செயல்படுத்தும் அடியாளாகச் செயல்படுவதில் மோடி முன்னோடியாக இருந்து வருகிறார். இந்த மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தை  அடியாள்தனத்தை "குஜராத் இனப் பெருமை'' என்ற முகமூடிக்குள் போட்டு மறைப்பதிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.


இவைதான் அம்பானி, டாடா, சுனில் மித்தல் ஆகிய தரகு முதலாளிகளை மோடிக்கு முடி‹ட்டிவிடத் தூண்டுகிறது. இதன் பொருள், மற்றொரு ஆளும் வர்க்க பாசிசக் கட்சியான காங்கிரசைக் கைகழுவி விட்டார்கள் என்பதாகாது. மூலதனத்தின் நலனுக்காக, நாட்டை மீண்டும் காலனியாக்குவதற்காக, தரகு முதலாளிகள் ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகிய முகமூடிகளையெல்லாம் கழற்றிப் போட்டுவிட்டு இந்து மதவெறி பாசிசத்தோடும் வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.


ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மித்தல் ஆகியோர் இந்து மதவெறி பாசிசத்தின் புரவலர்களாக மாறியிருக்கும் விசயம் விவாதத்திற்கு வந்தபொழுது, முதலாளித்துவப் பத்திரிகைகளோ, பிரச்சினையை மடை மாற்றிவிடத் தீவிரமாக முயன்றன. மறுகாலனியாதிக்கச் ‹ழலில், தரகு முதலாளிகளுக்கும் இந்துமதவெறி பாசிசத்திற்கும் இடையேயான சித்தாந்தபூர்வமான நெருக்கத்தை அம்பலப்படுத்தாத இப்பத்திரிகைகள், "மோடிக்குச் சகிப்புத்தன்மை கிடையாது; மோடி, 2002 கலவரத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற வாதங்களை எடுத்துப் போட்டு, தரகு முதலாளிகளின் யோக்கியதையைக் காப்பாற்ற முயன்றன. மோடியோ, அம்முதலாளித்துவ அறிவுஜீவிகளின் "அறியாமையை' எண்ணிப் புன்னகைத்துக் கொண்டிருக்குகிறார்!


• செல்வம்

Last Updated on Sunday, 22 March 2009 07:29