Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தேர்தல் 2009 - சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !

தேர்தல் 2009 - சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !

  • PDF

Subramanian Swamy expressed gratitude to the CPI (M), for condemning the incident of some miscreants throwing eggs at him in the Madras High court last month. Dr. Swamy in a letter to the state secretary N.Varadarajan said: please be assured that this support of your party will be remembered by me and reciprocated.

The Hindu, March 11, 2009

 

பெரியவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் மறைவுக்குப் பிறகு அவருடைய இடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான ஆள் இல்லையே என்று தவித்துக் கொண்டிருந்தார்கள் மார்க்சிஸ்டுகள். எச்சூரி எவ்வளவோ முயன்று பார்க்கிறார். இருந்தாலும் சுர்ஜித் அளவுக்கு அவருக்கு திறமை போதாது. அடுத்த தொங்குநிலைப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான தேர்தல் நெருங்கி வருகிறது. மார்க்சிஸ்டு கட்சியின் எம்.பி நாற்காலிகள் கரைந்து விடும் என்பதும் தெளிவாகத் தெரிந்து விட்டது. இந்த நிலையில் கிடைக்கிற எம்.பி சீட்டுகளை வைத்துக் கொண்டு டெல்லியில் பேரம் பேசி முடிப்பதற்கும், ஒரு மூன்றாவது அணியை செட் அப் செய்வதற்கும் திறமை வாய்ந்த ஒரு தோழர் இல்லாமல் இருப்பது எப்பேர்ப்பட்ட இழப்பு! அந்த இழப்பை ஈடு செய்ய இதோ, சாமி வரம் தந்துவிட்டார்.

“பக்தா உன்னை மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேள்” என்ற தோரணையில், “தோழர்களே, ஞாபகம் வைத்துக் கொள்கிறேன். தக்க சமயத்தில் கவனித்துக் கொள்கிறேன்” என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார். அரசியல் தரகு வேலைக்கு ஆளில்லையே என்று கவலைப்படாமல் மார்க்சிஸ்டுகள் தேர்தல் வேலையைக் கவனிக்கலாம்.

cpi(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

தமிழக மார்க்சிஸ்டுகளுக்கு இதில் விசேஷ சந்தோஷம். போயஸ் தோட்டத்துக்கு என்றைக்குத் தாவலாம் என்று மார்க்சிஸ்டுகள் மாநிலக்குழுவைக் கூட்டி விவாதம் நடத்திக் கொண்டிருக்கும்போதே, தா.பா குபீரென்ற தாவி அம்மாவைப் பார்த்துவிட்டார். வலது கம்யூனிஸ்டு தோழர்களுக்கு வாயெல்லாம் பல்லுதான். அவர்களை அவ்வப்போது மட்டம் தட்டி, ஓரம் கட்டி வைத்திருக்கும் மார்க்சிஸ்டுகளுக்கு தோழர்.தா.பா சரியான பாடம் புகட்டி விட்டார். “இப்படி சுறுசுறுப்பாக இருந்தால்தானே தோழர் கட்சி வளரும். நல்லகண்ணுவைப் போல கருணாநிதியையே சுற்றிக் கொண்டிருந்தால் காரியமாகுமா? பாருங்கள். உண்ணாவிரதத்தில் ஜம்மென்று அம்மாவுக்குப் பக்கத்து நாற்காலியில் நம்ம தோழர் உக்காந்திருக்கார். என்ன மீடியா கவரேஜ்! தாப்பான்னா தாப்பாதான்” என்று புளகாங்கிதம் அடைந்திருந்தார்கள்.

மார்க்சிஸ்டுகளா கொக்கா? “நீ மாமியை சுத்தி பழம் வாங்குவதற்குள் நான் சாமியை சுத்தி பழத்தை வாங்கிவிடுவேன்” பெரியண்ணன் வேலையைக் காட்டிவிட்டார்கள். மாமிக்கு இங்கே என்ன செல்வாக்கு இருந்தாலும், டெல்லி மேட்டருக்கு அவர் சாமியைத்தானே நம்பியாக வேண்டும். அந்த சாமியையே மடக்கிவிட்டால்! மடக்கி விட்டார்களே!

cpim(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

தேர்தல் முடிந்தபின் எந்த திசையில் காய் நகர்த்தப் போகிறார் என்பதையும் சாமி இன்றைக்கு சூசகமாகத் தெரிவித்து விட்டார். தனக்கு எதிராக சென்னை வக்கீல்கள் தீண்டாமைக் குற்ற வழக்கு கொடுத்திருப்பதால், பி.சி.ஆர் சட்டத்தை திருத்தச் சொல்லி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் சாமி ஒரு வழக்கு போடப்போகிறாராம். பிராமண தலித் கூட்டணி அமைந்து விட்டால், திராவிட இயக்கங்கள் அதோ கதிதானாம்.

தலித் என்றால் மாயாவதி. பிராமண என்றால் அதில் யாரெல்லாம் உண்டு? மார்க்சிஸ்டுகளைத்தான் கேட்கவேண்டும். எப்படியோ, நடுவில் ஜரிகை அங்கவஸ்திரத்துடன் வைத்தி மாமா நிற்க, இருபுறமும் காரத்தும் பரதனும் நிற்கும் கண்கொள்ளாக் காட்சியை தேர்தலுக்குப்பின் தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்ப்போம் என்பது மட்டும் புரிந்து விட்டது.

இது கொள்கையற்ற கூட்டணி என்றெல்லாம் யாரும் சொல்லிவிட முடியாது. வக்கீல் போராட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். “கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதனால்தான் இப்படியொரு சம்பவம் உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது” என்கிறார் சாமி. “புறக்கணிப்பு போராட்த்தைக் கைவிட்டு வக்கீல்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும்” என்றும் கூறுகிறார்.

மார்க்சிஸ்டு கட்சியின் நிலை என்ன? “உயர்நீதிமன்ற சம்பவத்துக்கு கருணாநிதிதான் பொறுப்பேற்க வேண்டும். புறக்கணிப்பை கைவிட்டு வக்கீல்கள் வேலைக்குத் திரும்பவேண்டும்” இதுதான் மார்க்சிஸ்டுகளின் நிலை.

சு.சாமியையும், மார்க்சிஸ்டுகளையும் தவிர வேறு யாரும் இந்த இரண்டு கருத்துகளையும் ஒரே நேரத்தில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, சு.சாமி மீதான முட்டை வீச்சு சம்பவத்தையும் இரண்டு கட்சிகள்தான் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஒன்று பா.ஜனதா. இன்னொன்று மார்க்சிஸ்டு.

இதை வைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அயோக்கியத்தனம் என்று மார்க்சிஸ்டு மெய்யன்பர்கள் கொதிக்கலாம். எது மொட்டைத் தலை எது முழங்கால் என்பது தேர்தலுக்கு முன்னால் எப்படித் தெரியும்? மேலும், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கலையில் வல்லவரான சாமியையே வளைத்து விட்டீர்கள். அப்புறம் என்ன? கூச்சப்படாதீர்கள். ரெண்டு பக்கமும் சிவப்பு பார்டர் போட்ட ஜரிகை அங்கவஸ்திரம் கிடைக்குமா என்று மார்க்கெட்டில் விசாரிக்கச் சொல்லுங்கள். எத்தனை நாள்தான் சாமியை நம்பியிருக்க முடியும்?

Last Updated on Monday, 16 March 2009 07:39