Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் போஸ் கொடுக்கிறான் போலீசு இ.பி.கோவை நம்புறவன் லூசு ! - துரை. சண்முகம்

போஸ் கொடுக்கிறான் போலீசு இ.பி.கோவை நம்புறவன் லூசு ! - துரை. சண்முகம்

  • PDF

வழக்குரைஞர் நண்பா !
கெட்ட வார்த்தைகளின் மீதேறி

கல்லால் அடித்தார் கமிஷனர்
சட்டசபைலிருந்தபடி
சொல்லால் அடிக்கிறார் நிதியமைச்சர்.

 இந்நாட்டு தொழிற்பேட்டைகளை இழுத்து மூடிவிட்டு
பன்னாட்டு கம்பெனிகளுக்கு பரிசம் போடும்
இந்த அரசியல் புரோக்கர்
போராடும் வக்கீல்களைப்  புரோக்கர் என்கிறார்.

policelawer

எந்தக் கல்லூரியில் இவர் பேராசிரியர் என்று
சட்டசபையில் ஜெயலலிதா காலால் சிரித்த போது
ஐம்பொறிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.சீல் வைத்தபடி
அடங்கிக் கிடந்தார்…. அக்காலம்.
இப்போது வழக்கறிஞர்களை ‘அவன், இவன்’ என்றபடி
அன்பழகனார்க்கு ….. என்ன ஒரு எக்காளம்?!

பார்ப்பனப் புரோக்கர் சுப்ரமணிய சுவாமிக்காகப்
படை நடத்தும் ‘இனமான’ திராவிட புரோக்கரின்
வரலாறு தெரியாதா நமக்கு.

அண்ணா சாலையில் ஒரு ரூபாய் கிடந்தால்
முக்கால் ரூபாய் கலைஞருக்கு
கால் ரூபாய் தனக்கென காலந்தள்ளும் முதலியார்வாளுக்கு
வழக்குறைஞர் போராட்டம் அபச்சாரம்! அபச்சாரம்!!
கருணாநிதியை போலீசு கையைப் பிடித்து இழுத்தபோது
“அய்யோ கொல்றாங்கப்பா, அய்யோ கொல்றாங்கப்பா” என்று
அப்போது மட்டும் எதற்குப் பிரச்சாரம்?

பார்ப்பான் கொலையே செய்தாலும்
அவனுக்கு மயிர்தான் போகும்
பார்ப்பானுக்கு ஒரு ஊறு விளைவித்தால்
உனக்கு உயிர் போகும் - இதுதான் மனுநீதி.

இதை நீதிமன்ற வாசலிலேயே
நிகழ்த்திக் காட்டிவிட்டார் கருணாநிதி
இதுதான் தமிழினத் தலைவரின் சமூகநீதி
வழக்குறை நண்பா! புரிந்து கொள் !

அரசு என்பது
ஆளும் வர்க்கத்தின் குண்டாந்தடி என்று

அன்றைக்கே லெனின் எச்சரித்தார்.
இன்னும் அது புரியாதவர்களுக்கு
மாண்புறு நீதியரசர் மண்டைக்கும் உரைக்கும்படி

இரத்தத்தால் எழுதிக்காட்டிவிட்டது போலீசின் லத்திக்கம்பு.

மாணவர்களைக் கடித்து… மகளிரைக் கடித்து…
தொழிலாளர்களைக் கடித்து… விவசாயிகளைக் கடித்து…
போராடியவர்களையெல்லாம் …கடித்துக் குதறிய
போலீசிடமே சட்டமா?
நாங்கள் சுவைக்காத ரத்தமா? என
கடைசியில் உயர்நீதிமன்றத்தையே கடிக்கையில்
நீதிதேவனுக்கு மயக்கம்!
அடிக்க அடிக்க போலீசுக்கோ பதக்கம்!

கடிப்பதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட நாய்களுக்கு
நடிப்பதெற்கு?

அடிப்பதை எத்தனை படம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்
எங்களைக் கிழிக்கவா முடியும் உனது சட்டத்தால் - என்று
புகைப்படச்சுருள் திணறும்படி போஸ் கொடுக்கிறான் போலீசு
இனியும் இங்கு இ.பி.கோவை நம்புறவன் லூசு!

உன்னையே காப்பாற்ற முடியாத சட்டத்தால்
உலகத்தைக் காப்பாற்றுவேன் என்று இனியும் சொல்வாயா நீ?
இப்போதாவது விழித்துக் கொள்…
சட்டத்தின் மாட்சி… அவன் தடியடிக்கு தூசி
உனது அரசியல் சட்டம்…போலீசின் பூட்சு மட்டம்.

நான்கு ஜனநாயகத் தூண்களில்
நாமும் ஒருவர் என்ற மாயை, மயக்கத்தை
நெற்றியில் வழிந்த உனது ரத்தம் தெளிவித்து விட்டது

சட்டம், போலீசு, நீதிமன்றம் இவைகள்
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகள் என்பதை
அனுபவத்தில் உணர்ந்த நீங்கள்
மக்களோடு இணைவதே போராட்ட விதி
போலீசோடு இணைவது ஆளும்வர்க்கச் சதி!

ஏடறிந்த காலந்தொட்டு வர்க்கப் போராட்டமே வரலாறு என
வரைந்து காட்டினார் கார்ல் மார்க்ஸ்.
கேசெடுத்த காலந்தொட்டு போலீசுடன் தகராறு என
போராடி, வெகுமக்கள் விரோதிகளை
வென்றவர்கள் நீங்கள் - அதனால்தான்
வாயில்லா நண்பனான உங்கள் வண்டிகள் மீதும்
வன்மத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

நடந்த சம்பவங்களுக்கு வாதாடுவதே
வழக்குறைஞர் பணி எனும் நிலையை மாற்றி
புதிய சம்பவங்களை நடத்திக்காட்டு!
இனி… ஒடுக்குமுறையாளனோடு ஒன்றுபட முடியாது
உளுத்துப் போன இந்த அதிகாரவர்க்க அமைப்பையே
அடித்து நொறுக்காமல்
நம் உதிரம் காயாது

-துரை. சண்முகம்

Last Updated on Tuesday, 03 March 2009 07:35