Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி ! - தோழர் மருதையன்

வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி ! - தோழர் மருதையன்

  • PDF

நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையின் தலைப்பு ‘சத்யமேவ ஜெயதே’.

தமிழ் உணர்வு, பார்ப்பனிய எதிர்ப்பு ஆகிய கருத்துகளை எதிர்ப்பதும், சுப்பிரமணியசாமி போன்ற ‘ஜனநாயகவாதிகளை’ ஆதரிப்பதும்தான் வழக்குரைஞர் விஜயனின் கொள்கை. தனது கொள்கையை நிலைநாட்டுவதற்காகவும், சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் போலீசு ஆட்சியை நியாயப்படுத்துவதற்காகவும் அவர் வரலாற்றைப் புரட்டுகிறார். மிகவும் தரம் தாழ்ந்த முறையில் கண் முன்னால் நடந்த உண்மைகளையும் திரிக்கிறார்.

தமிழ் உணர்வின் வரலாறு குறித்த அவரது பார்வை துக்ளக் பார்வை. அதற்கு இப்போது நாம் பதில் சொல்லவில்லை. நிகழ்காலம் குறித்து அவர் கூறுவனவற்றில் சத்தியம் உள்ளதா என்பதை மட்டும் பார்ப்போம்.

“17ம் தேதியன்று சு.சாமி மீது முட்டையை வீசியது மட்டுமின்றி, சுமார் 20 வழக்குரைஞர்கள் அவரை சாதிப்பெயர் சொல்லிக் கீழ்த்தரமாகத் திட்டினார்கள். அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சி தொடங்கியவுடன், சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப்புகார் கொடுத்தார்கள்” என்கிறார் விஜயன்.

17ம் தேதியன்று ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்து கொண்டிருந்தது. சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்திருந்த மேல் முறையீட்டு மனு, அனுமதிக்காக (admission)  அன்று விசாரணைக்கு வந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை அனுமதிப்பதா என்பதையே உயர்நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.

இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் அரசும், சிவனடியார் ஆறுமுகசாமியும். party in person  ஆக வந்திருந்த 80 வயதான எதிர்மனுதாரர் ஆறுமுகசாமி, நீதிமன்ற அறையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தம்மையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி implead செய்த ஒரு வைணவப் பெரியவரும் இன்னொரு மூலையில் நின்று கொண்டுதானிருந்தார். வழக்கம் போல பல வழக்குரைஞர்களும் நின்று கொண்டுதானிருந்தார்கள்.

இந்நிலையில், அரசுக்கு எதிராகத் தன்னையும் அந்த வழக்கில் ஒரு மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார் சு.சாமி. மூத்த வழக்குரைஞர்கள் அமரும் நாற்காலியில் அவருக்கே உரிய முறையில் தெனாவெட்டாக உட்காரவும் செய்தார். நீதிமன்றம் துவங்கியவுடனே, அன்றைய பட்டியலில் 60ஆவது இடத்தில் இருந்த தீட்சிதர் வழக்கை முதலில் விசாரிக்கவேண்டும் என்று கோரினார் சாமி.

“வக்கீல்களையும் தண்டிக்கவேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்கிறாரே விஜயன், சுப்பிரமணியசாமி மட்டும் கொஞ்சம் அதிகமாக சமமா? வக்கீல் அல்லாத வேறு யாராவது ஒரு குப்பனோ சுப்பனோ வக்கீல்களுக்கான நாற்காலியில் அமர்ந்து காலாட்ட முடியுமா? அல்லது admit ஆகாத ஒரு மேல்முறையீட்டில், சம்மந்தமில்லாத யாரோ ஒரு நபர் தன்னையும் implead செய்யவேண்டும் என்று மனுப் போட்டு, கோர்ட் தொடங்கியவுடனே “என் வழக்கை எடு” என்று கேட்பதை நீதிமன்றம்தான் அனுமதித்திருக்குமா?

சு.சாமிக்கு வழங்கப்பட்ட இந்த ஸ்பெசல் சலுகைகளுக்கு காரணம் என்ன?

இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூசை நடத்த பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை மாலை சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வந்தார் சு.சாமி. அன்று சுமார் ஒரு மணி நேரம் சிற்றம்பல மேடை சுப்பிரமணியசாமி மேடையானது. பக்தர்கள் யாரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை.

நடராசன் கோயிலிலும், நீதியின் கோயிலிலும் சு.சாமிக்கு சட்டவிரோதமாகவும், மரபுகளுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்ட இந்த சிறப்பு மரியாதைகளுக்குக் காரணம் அவரது சாதியா, அல்லது அவரது அரசியல் தரகுத் தொழிலா அல்லது அம்மாவின் உருட்டுக் கட்டையாக அண்மையில் அவர் எடுத்திருக்கும் அவதாரமா? உருட்டுக் கட்டை உணர்த்திய சத்தியம் நம்மைவிட விஜயனுக்குத்தானே அதிகமாகத் தெரியும்!

முட்டை எறிந்தவர்கள் 20 வழக்குரைஞர்கள் என்ற புள்ளிவிவரம் விஜயனுக்குத் தெரிந்திருக்கிறது. சி.பி.ஐ விசாரணை, பெஞ்சு விசாரணையெல்லாம் தொடங்குவதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் பட்டியலைக் கையில் வைத்திருக்கிறார் விஜயன். ஆனால் அன்று அங்கே அமர்ந்திருந்த நீதிபதிகளுக்கு அது தெரியவில்லையே! அவர்கள் விசாரணைக்கு அல்லவா உத்தரவிட்டிருக்கிறார்கள். விஜயன் கூறும் சட்டத்தின் ஆட்சியில் விசாரணையே இல்லாமல் தண்டித்துவிடவேண்டும் போலும்!

சுப்பிரமணியசாமிக்கு எதிரான வன்கொடுமைப் புகாரும் பொய்ப்புகார் தானாம். அதுவும் விஜயனுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. ஏனென்றால், “தன் மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் பெயரோ அல்லது சாதியோ சு.சாமிக்குக் கண்டிப்பாகத் தெரியாது” என்கிறார் விஜயன். அந்த அரிச்சந்திரனுக்கு இந்த விஜயன் வக்காலத்து! பொருத்தமாகத்தான் இருக்கிறது.

தனக்குத் தெரியாத, ஆதாரமில்லாத எதையும் எந்தக் காலத்திலும் பேசாதவரல்லவா சு.சாமி! ” என்னைக் கொலை செய்வதற்கு புலிகளுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஜெயல்லிதா” என்று 1992 வில் குற்றம் சாட்டினார் சு.சாமி. உடனே சு.சாமிக்கு எதிராக ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

‘புனிதமான’ உயர்நீதி மன்ற அறைக்கு வெளியே அம்மாவின் மகளிரணியினர் அம்மண டான்ஸ் நடத்தியதும் ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயன்றதும் அப்போதுதான். வெளியே ‘டான்ஸ்’ ஆடுவதைக் காட்டிலும் ‘உள்ளே’ முழக்கமிடுவதுதான் பெரிய நீதிமன்ற அவமதிப்பு போலும்! நீதிமன்ற அறைக்கு வெளியே அன்று வீசப்பட்ட அரிவாளைக் காட்டிலும், இன்று உள்ளே வீசப்பட்ட முட்டைதான் அதிபயங்கரமான ஆயுதம் போலூம்! அன்று டான்ஸ் ஆடியவர்களோ, அவர்களை ஆடவைத்தவர்களோ இன்றுவரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை. அந்தப் பிரச்சினையை ஃபுல் பெஞ்சோ ஆஃப் பெஞ்சோ விசாரிக்கவும் இல்லை.

இதே சுப்பிரமணியசாமிக்கு ராஜீவ் கொலையில் தொடர்பு இருக்கிறது என்று பிரமாண வாக்குமூலம் கொடுத்தார் ஜனதா கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி. அதனை ஆதரித்து அதே ஜெயின் கமிசனில் வாக்குமூலம் தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இன்று அதே சாமியும், அதே மாமியும் சேர்ந்துகொண்டு முட்டையின் கவிச்சு வாடை நீதிமன்றத்தின் புனிதத்தைக் கெடுத்து விட்டதாகக் கூக்குரலிடுகிறார்கள். இந்த “356 ஆர்க்கெஸ்டிரா”வில் சம்மந்தமில்லாதவர் போலத் தன்னைக் காட்டிக்கொள்ளும் விஜயன் “சட்டத்தின் ஆட்சி” என்று சுருதி மாறாமல் ஒத்து ஊதுகிறார்.

சுப்பிரமணியசாமியின் மீது வழக்குப் பதிவு செய்ய வற்புறுத்தித் தொடங்கிய விஷயம் வன்முறையைத் தூண்டிவிட்டதாம்! ஒரு வாதத்துக்காக அது பொய்ப் புகார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் புகார் பொய்யானது என்று அன்றைக்கு நீதிமன்றத்திலேயே இல்லாத விஜயனுக்குத் தெரிந்திருப்பதைப் போலவே, அன்று வெளியில் தள்ளி கதவு சாத்தப்பட்ட போலீசுக்கும் அது பொய்ப்புகார் என்பது தெரிந்திருக்கிறது. என்ன ஆச்சரியம்?

அய்யா, அது பொய்ப்புகாராகவே இருக்கட்டும். அந்தப் புகாரைப் பதிவு செய்து கொண்டு, விசாரணை நடத்தி, அது பொய்ப்புகார் என்று முடிவு செய்யும் உரிமை போலீசுக்கு இருக்கிறதே! ஒரு வேளை போலீசே புகாரைப் பதிவு செய்துவிட்டாலும், அதனை சட்டப்படி எதிர்கொண்டு முறியடிக்கும் உரிமையும் சு.சாமிக்கு இருக்கிறதே! அப்படியிருக்கும்போது, ‘வழக்கைப் பதிவு செய்ய வற்புறுத்தினால்’ அதன் காரணமாகவே எப்படி வன்முறை வெடிக்கும்?

தனக்கு விருப்பமில்லாத செயலைச் செய்யுமாறு ஒருவரை வற்புறுத்தினால் அவ்வாறு வற்புறுத்தப்படுபவருக்குத்தான் கோபம் வரும். வற்புறுத்தப் படுபவர்கள் சட்டத்தின் காவலர்கள் அல்லவா? போலீசாவது, பொய்வழக்குப் போடுவதாவது? அந்தப் பொய்ப்புகாரைக் கண்டு விஜயனைப் போலவே சத்திய ஆவேசத்தில் துடித்து, பின்னர் வெடித்து விட்டார்கள் போலிருக்கிறது!

விஜயனின் வாதப்படி வன்முறையைத் தொடங்கியவர்கள் போலீசுதான் என்ற முடிவுக்கே யாரும் வரமுடியும். எழுதுவது பொய், அதற்கு சத்யமேவ ஜெயதே என்று தலைப்பு போட்டு விட்டால் எல்லோரும் நம்பிவிட வேண்டுமா?

முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாகத் தான் சந்தேகிக்கும் வழக்குரைஞர்களுடைய வீடுகளுக்கு இரவு நேரத்தில் சென்று, வழக்கம்போல அவர்களது குடும்பத்தினரை மிரட்டியிருக்கிறது போலீசு. எனினும் ஒருவரை மட்டுமே கைது செய்ய முடிந்திருக்கிறது. மற்றவர்களை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் வைத்தே கைது செய்வது என்பதே போலீசின் திட்டம். அவ்வாறு கைது செய்யும்போது மற்ற வழக்குரைஞர்கள் திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தால், அதனைக் கையாள்வதற்குத் தேவையான அதிரடிப்படை முதல் ஐந்தாம்படை வரை அனைத்தையும் போலீசு தயார் நிலையில் வைத்திருந்தது. இது போலீசால் திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட தாக்குதல்.

இப்படி ஒரு தாக்குதல் தொடுப்பதற்குப் பொருத்தமான சூழ்நிலைக்காக மட்டும்தான் அவர்கள் காத்திருந்தார்கள். ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் தீவிரமாகப் போராடுகிறார்கள் என்பது மட்டும் போலீசின் கோபத்துக்குக் காரணம் அல்ல. வழக்குரைஞர்கள் என்ற பிரிவினருக்கு எதிராக போலீசு துறையைச் சேரந்த உயரதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை வன்மம் வைத்திருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. குறிப்பிட்ட போலீசு அதிகாரிகளுக்கு விசேட காரணங்களும் இருக்கலாம். முட்டை வீச்சு சம்பவம், அதைத் தொடர்ந்து சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா கூட்டணியால் எழுப்பப்பட்ட “356 கோரிக்கை”, ஊடகங்கள் அரசுக்கு எதிராகப் போட்ட கூச்சல், இவையனைத்தையும் கண்டு திமுக அரசு பீதியடைந்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில் “எதை வேண்டுமானாலும் செய், ரிசல்ட்டு காட்டு” என்று அரசாங்கம் போலீசுக்கு வழங்கியிருக்கக் கூடிய அனுமதியைத் தனது கொலைவெறியாட்டத்துக்கான லைசன்சாக மாற்றிக் கொண்டுவிட்டது போலீசு.

வழக்குரைஞர்களின் மண்டையை உடைத்தது, எலும்பு நொறுங்கும் வகையில் அடித்தது, சேம்பர்களில் புகுந்து அடித்தது, நீதிமன்ற அலுவலக ஊழியர்களையெல்லாம் அடித்து நொறுக்கியது, நீதிமன்ற அறைகளையும், வழக்குரைஞர்களின் வாகனங்களையும் நொறுக்கியது.. இவையனைத்தும் காட்டுவது என்ன? நீதித்துறை என்ற நிறுவனத்துக்கு எதிராக போலீசு துறையின் மனதில் கொழுந்துவிட்டு எரியும் வெறிதான் அது. 20 பேரைக் கைது செய்ய வேண்டும் என்பது ஒரு முகாந்திரம் மட்டும்தான். அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் தெரிவிக்க விரும்பிய செய்தி. அதனால்தான் நீதிபதிகளைத் தாக்குவதற்குக் கூட அவர்கள் தயங்கவில்லை.

17ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் போலீசின் இந்தக் கொலைவெறியாட்டத்தை லைவ் ஆக ஒளிபரப்பிய சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சி, இது குறித்து தொலைபேசியின் மூலம் சுப்பிரமணிய சாமியிடம் கருத்து கேட்டது. “சட்டத்தை நிலைநிறுத்த இந்த தடியடி அவசியம்தான்” என்றார் சாமி. “அதற்காக உயர்நீதி மன்றத்திற்கு உள்ளேயே தடியடி நடத்தலாமா? என்று நிருபர் கேட்டதற்கு “அதிலென்ன தவறு, சட்டத்தை போலீசு எந்த இடத்திலும் நிலைநாட்டலாம்” என்று பதிலளித்தார் சாமி. “என்ன இருந்தாலும் அவர்கள் வழக்குரைஞர்கள் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார் நிருபர். “இவர்களெல்லாம் வழக்குரைஞர்களே அல்ல, மாமாப்பயல்கள் (Touts). வழக்குரைஞர் சமூகத்தையே இவர்கள் பிளாக்மெயில் செய்கிறார்கள்” என்று திமிராகப் பதில் சொன்னார் சாமி.

மாமாப்பயல்கள் என்ற சொல்லைக் கொஞ்சம் மாற்றி, “தொழில் இல்லாத வழக்குரைஞர்கள்” என்று போராடுபவர்களை நக்கல் செய்கிறார் விஜயன். “திறமையில்லாதவர்கள், சட்டம் தெரியாதவர்கள், வக்கீல் தொழிலின் கவுரவத்தைக் கெடுப்பவர்கள்” என்று வெவ்வேறு சொற்களில் இவர்கள் சொல்ல விரும்பும் கருத்து என்னவோ ஒன்றுதான். “கோட்டா பேர்வழிகள்” என்பதுதான் அது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குப் போட்டவரல்லவா விஜயன்? அன்று இவர் உருட்டுக் கட்டை அடி வாங்கியபோது ‘நீதிமன்றப் புறக்கணிப்பு’ செய்தார்களே வழக்குரைஞர்கள், அவர்களெல்லாம் தொழில் உள்ள வழக்குரைஞர்களா அல்லது இல்லாத வழக்குரைஞர்களா என்பதை விஜயன் விசாரித்தாரா?

பிப் 19-ஆம் தேதி நடந்த வன்முறையின் சாபக்கேடு என்னவென்றால், சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கு சம்பந்தமாக வன்முறை செய்த வழக்குரைஞர்களோ அல்லது அதைத் தூண்டிய தலைவர்களோ அடிவாங்கவில்லை… இந்த சம்பவத்துக்காக போலீசு மீது மட்டுமல்லாது மற்ற காரணகர்த்தாக்கள் மீதும் நாம் கோபம் கொள்ள வேண்டும்” என்கிறார் விஜயன்.

அதாவது, “நீ ஏன் சு.சாமியை முட்டையால் அடித்தாய், உன்னால்தான் நான் தடியடி வாங்க நேர்ந்தது” என்று போலீசிடம் அடிபட்ட வழக்குரைஞர்கள், சு.சாமி மீது முட்டை எறிந்தவர்களுடன் சண்டைக்குப் போகவேண்டும் என்கிறார் விஜயன்.

அப்படியா, சு.சாமி முட்டையடி பட்டால், நீதிபதிகளும் கூட கட்டையடி படவேண்டுமா? எந்தச் சட்டம் அப்படிக் கூறுகிறது?

கொலைக்குற்றவாளி சங்கராச்சாரியைக் கைது செய்தபோது, அவரைப் பாதுகாப்பதற்கு ‘தொழில் உள்ள’ வழக்குரைஞர்களும் ஆடிட்டர்களும் மருத்துவர்களும் அணிவகுத்து நின்றார்களே, அவர்களைக் கலைப்பதற்கு ‘லேசான’ தடியடி கூட நடத்தப்படவில்லையே. கொலைக்குற்றத்தை விடக் கொடியதா, முட்டை வீசிய குற்றம்? விஜயன் விரும்பும் ‘சட்டத்தின் ஆட்சியில்’ மனுமருமச் சட்டத்தின் நாற்றமடிக்கிறதே!

முட்டை வீச்சு நடந்தது உண்மைதான். வீசியவர்களை யாரென்று கண்டுபிடிக்கத்தான் விசாரணை நடக்கிறது. அந்த விசாரணையே சரியா தவறா, நீதிபதிகள் நீதிமன்றத்தில் பதிவு செய்த விவரங்கள் சரியா தவறா என்பன போன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்.

முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த போலீசே அந்த 20 பேர் யார் என்பதை இன்னும் வெளியிடவில்லை. எனினும் “முட்டை வீச்சு தொடர்பாக இன்னின்ன வழக்குரைஞர்களை விசாரிக்க வேண்டும்” என்று போலீசார் நீதிமன்றத்தையே அணுகியிருக்கலாம். பார் கவுன்சிலை அணுகியிருக்கலாம். சம்மந்தப்பட்ட வழ்க்குரைஞர்களுக்கே சம்மன் அனுப்பி அழைத்திருக்கலாம். நள்ளிரவில் அவர்களது குடும்பத்தினரை மிரட்டுவதற்கும், உயர்நீதிமன்ற வளாகத்திலேயே வளைத்துப் பிடிப்பதற்கும் அவர்கள் முகவரி இல்லாத கேடிகளா? மேற்கூறிய வகையிலான சட்டபூர்வமான வழிமுறைகளைப் போலீசு பின்பற்றியிருந்தால், இந்த மோதலுக்கே இடமில்லையே. சட்ட அறிவு இல்லாத ஒரு பாமரனுக்குக் கூட புரியக்கூடிய இந்த உண்மை மூத்த வழக்குரைஞர் விஜயனுக்குப் புரியாமல் போனது ஏன்?

ஏனென்றால் ‘சக சுப்பிரமணியசாமி’ மீது முட்டை வழிந்ததற்கே பதறித் துடிக்கும் விஜயனின் இதயம், ‘சக வழக்குரைஞர்களின்’ முகம் முழுவதும் ரத்தம் வழிவதைக் கண்டபிறகும் துடிக்காதது ஏன்?

உள்ளே சு.சாமியை அடித்தால் கருத்துரிமைக்கு ஆபத்து! சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்து!! வாசலில் வைத்து வழக்குரைஞர்களை அடித்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதலா? அதென்ன, நீதிமன்ற அறை மட்டும்தான் புனிதமானதா? அதன் தாழ்வாரங்கள் சாக்கடைகளா? இது எந்த ஊர் நியாயம்?

“சாமியையே அடித்துவிட்டார்கள்” என்பதுதான் இவர்களது குமுறல். அதை மறைத்துக் கொள்ளத்தான “உள்ளேயே அடித்துவிட்டார்கள்” என்று கண்ணீர் விடுகிறார்கள். “நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயேவழக்குரைஞர்கள் தாக்கப்பட்டதனால் நீதியின் புனிதம் கெட்டுவிட்டதாக” இவர்கள் யாரும் அலறவில்லை. ஏனென்றால், மண்டை உடைக்கப்பட்டவர்களெல்லாம் சு.சாமி அளவுக்குப் புனிதமானவர்கள் அல்லவே!

விஜயன் முதலானோரின் பார்வையில் சிலருடைய உரிமைகள் புனிதமானவை. வேறு சிலரின் உரிமைகள் அவ்வளவாகப் புனிதமற்றவை. தடியடிக்கு ஆளான வழக்குரைஞர்களின் உரிமை மட்டுமல்ல, குண்டு வீச்சுக்கு ஆளாகும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளும் கூட அவரைப் பொருத்தவரை புனிதமற்றவைதான்.

ஈழத்துக்கு எதிரான ‘கருத்தைக் கொண்டிருப்பவர்’ என்ற காரணத்துக்காக சு.சாமி மீது முட்டை வீசியவர்களை பாசிஸ்டுகள் என்கிறார் விஜயன். “வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம்” என்பது கூட ஈழத்தமிழ் மக்களின் கருத்துதான். அந்தக் ‘கருத்தின் மீதுதான்’ குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது சிங்கள இராணுவம்.

தனக்கு நேரடியாகத் தொடர்பில்லாத வழக்காக இருந்தாலும் அதில் தலையிடும் புனிதமான உரிமையை அரசியல் சட்டம் சு.சாமிக்கு வழங்குகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் தங்களுக்கு நேரடியாகத் தொடர்புள்ள, தாங்கள் பிறந்து வளர்ந்த தாய் மண்ணில் தாங்கள் விரும்பும வகையிலான ஒரு அரசை அமைத்துக் கொள்ளும் ‘புனிதமான’ உரிமையை சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கிறதே, என்ன செய்யலாம்?

“வழக்கறிஞர்களுக்கு சர்வதேசச் சட்டம் தெரியும். இந்திய அரசின் இறையாண்மை, தலையீட்டின் முன் விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் தெரியும். இவை அனைத்தும் தெரிந்தும்.. நீதிமன்றப் புறக்கணிப்பும், அது தொடர்பாய் வன்முறையும் அதன் தொடர் விளைவாய்ப் போலீசு வன்முறையும் நேர்ந்ததற்கு வழக்குரைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் விஜயன்.

தெரிந்த்தனால்தான் வழக்குரைஞர்களை இந்தப் போராட்டத்தில் முன் நிற்கிறார்கள். 80 களில் ஈழப் போராளிக்குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்ததும், பின்னர் இலங்கையின் இறையாண்மையை மீறி ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைத் திணித்ததும், இந்தியப் படையை அனுப்பியதும், அது தோல்வியுற்றதால், சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்வதுடன், இன்றைய போரை சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்று வழிகாட்டி இயக்குவதும் வழக்குரைஞர்களுக்குத் தெரியும். “இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது” என இன்றைக்கு  கற்புநெறி பேசும் மத்திய அரசின் கயமைகள் அனைத்தும் வழக்குரைஞர்களுக்குத் தெரியும். அதனால்தான் வழக்குரைஞர்கள் போராடுகிறார்கள்.

போராடும் வழக்குரைஞர்கள் யாரும் இலங்கையில் தலையிடச் சொல்லவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் தற்போது இந்திய அரசு தலையிட்டுக் கொண்டிருக்கிறதே, அந்தத் தலையீட்டை நிறுத்தத்தான் சொல்கிறார்கள். “இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்று” என்று யாரும் கேட்கவில்லை. “ஒரு இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த குரல் கொடு” என்றுதான் இந்திய அரசைக் கோருகிறார்கள்.

ஈழத்தில் நடப்பது இரு தரப்பினருக்கு இடையிலான போர் அல்ல. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மை சிங்கள இனவெறி அரசு நடத்தும் படுகொலை.

19 ஆம் தேதியன்று உயர்நீதி மன்றத்தில் நடந்ததும் வக்கீல்-போலீசு மோதல் அல்ல. வழக்குரைஞர்களுக்கு எதிராக போலீசு நடத்திய கொலைவெறித் தாக்குதல்.

சிதம்பரத்தில் நடந்ததும் தீட்சிதர் - சிவனடியார் மோதல் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகத் தீட்சிதர்கள் தொடுத்துவரும் பார்ப்பனியத் தாக்குதல்.

கம்யூனிஸ்டுகளான ம.க.இ.க வினர் போன்ற வெளியாட்கள் ஆத்திகர் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறார்கள் தீட்சிதர்கள். ஆனால் ‘ஹார்வர்டு சு.சாமி’ தில்லைவாழ் அந்தணர் சார்பாக வழக்கில் தலையிடுகிறார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சினையை பிரபாகரன் பார்த்துக் கொள்வார். அதில் நாம் தலையிட அவசியமில்லை” என்கிறார் விஜயன். ஆனால் சுப்பிரமணிய சாமி பிரச்சினையில் விஜயன் தலையிடுகிறாரே - அது எப்படி?

அது அப்படித்தான். எப்படியென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இருந்தாலும் சில விஜயன், சு.சாமி மாதிரி சில பேர் மட்டும் கொஞ்சம் அதிகமாகச் சமம்.

தனது கட்டுரைக்கு பொருத்தமாகத்தான் தலைப்பிட்டிருக்கிறார் விஜயன் - சத்யமேவ ஜெயதே…! ராமலிங்க ராஜு வழங்கும் ‘சத்யம்’ மாதிரி இது விஜயன் வழங்கும் சத்யம் போலும்!

-தோழர் மருதையன்

 

பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

 

Last Updated on Wednesday, 25 February 2009 11:47