Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் 'தாழ்த்தப்பட்ட மககள் மீதான அடக்குமுறைகளை முறியடிப்போம்!" வாழ்வுரிமைக்காகப் போராடுவோம்! பு.அ.ஆர்ப்பாட்டம்

'தாழ்த்தப்பட்ட மககள் மீதான அடக்குமுறைகளை முறியடிப்போம்!" வாழ்வுரிமைக்காகப் போராடுவோம்! பு.அ.ஆர்ப்பாட்டம்

  • PDF

 தர்மபுரி  கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி கிராமத்தில் டீக்கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென

 தனிக்குவளை முறை பகிரங்கமாகவே நீடிக்கிறது. நாட்ராம் பாளையம் பகுதியில் பட்டா வழங்கி 25 ஆண்டுகள் ஆகியும், பல நூறு மனுக்கள் கொடுத்து முறையீடு செய்தும் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை கிடைக்கவில்லை. வீட்டுமனை கேட்டுப் போராடிய மக்கள் மீது பொய்வழக்குகளைப் போட்டு துன்புறுத்தி வருகிறது, அரசு. பென்னாகரம் அருகே சிகரலப்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தினை தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரும் இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கிடைக்கவில்லை. இம்மாவட்டங்களின் பல்வேறு கிராமப் பொதுக்கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுத் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் செம்மணக்குழியில் தாழ்த்தப்பட்டோரின் 25 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்ட வன்கொடுமை நடந்த போதிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.


 தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இம்மாவட்டங்களில் தொடரும் தீண்டாமை  வன்கொடுமைகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கக் கோரியும், பொய்வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைவாக விசாரித்து, ஆதிக்க சாதிவெறியர்களைத் தண்டிக்கக் கோரியும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 29.12.08 அன்று கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கீழ்வெண்மணி தியாகிகளின் 40ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், ஆதிக்க சாதிவெறிக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுரிமைக்காகவும் அனைத்து உழைக்கும் மக்களையும் போராட அறைகூவியது.