Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !- நிறைவுப் பகுதி !

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !- நிறைவுப் பகுதி !

  • PDF

31 ம் தேதி காலை முதலே கொளத்தூரில் வந்து குவிந்து கொண்டிருந்த்து மக்கள் கூட்டம். அந்தப் பகுதி முழுவதும் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகள். குவிந்து கொண்டிருந்த கூட்டத்தில் மாணவர்கள் அதிகம்.

 அவ்வகையில் முத்துக்குமாரின் விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்றும் கூறலாம். கூட்டத்தில் ஆங்காங்கே ராஜபக்சே, ஜெயலலிதா, சோனியா ஆகியோரின் கொடும்பாவிகளும் காங்கிரசு கொடிகளும் எரிந்து கொண்டிருந்தன.

 

தொலைக்காட்சிக்காரர்கள் யாரையும் காணவில்லை. குறிப்பாக சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி. தட்டுக்கிட்டுப் போய் அங்கு வந்து சிக்கிய என்.டி.டி.வி காரர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டும்தான் கூட்டம் மரியாதை கொடுத்த்து.

 

மேடை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியாத ஒரு சூழல். வைகோ மைக்கைப் பிடித்து பேசத்தொடங்கினார். “நீயெல்லாம் ஏன் பேசுகிறாய்? இறங்கு” என்று கத்தினான் ஒரு மாணவன். வைகோவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் யாரும் இல்லை. “சரி தம்பி, நீ பேசு” என்று அவர் பணிந்தார். பின் ஜெயலலிதாவை கவனமாகத் தவிர்த்து விட்டு கருணாநிதியை வசை பாடத் தொடங்கினார்.

 

வைகோ பேசிக்கொண்டிருந்த மேடைக்கு நேர் பின்னே புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்கள் வீதி நாடகம் நடத்திக் கொண்டிருந்தனர். முத்துக்குமாராக நடித்துக் கொண்டிருந்த தோழ.ர் “என்னுடைய உடலைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அதை அனுமதிக்காதீர்கள்” என்று கூட்டத்தைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தார். கூட்டம் கரவொலி எழுப்பி ஆமோதித்த்து.

 

“சே குவேராவையும், மாவோவையும், ஹோ சி மின்னையும் காட்டிலும் தலை சிறந்த இராணுவத்தலைவன் பிரபாகரன்” என்று சம்மந்தமே இல்லாமல் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார் வைகோ. அவருக்கு நேர் எதிரில் நின்று கொண்டிருந்த மாணவர் கூட்டமோ ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரிப்பதில் தீவிரமாக இருந்தது.

 

கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் உரையாற்றினர். பிறகு நடிகர்களின் வழக்கமான வீர உரைகள். “நான் எதற்கும் துணிந்தவன். வரும்போதே வீட்டில் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்” என்ற மன்சூர் அலி கானின் சவடால் உரைக்கு விசில் பறந்தது. “நடிகன் மேடையேறினா உடனே விசில் அடிக்கணுமா?” என்று மேடையிலிருந்தே அதனைக் கண்டித்தார் ஒரு பெண்.

 

“பீரங்கிகளே உங்களுக்கு இதயமில்லையா?” “துப்பாக்கிகளே உங்களில் ஈரமில்லையா?” என்பன போன்ற பித்துக்குளித் தனமான முழக்க அட்டைகளை ஏந்தியபடி தன்னார்வக்குழுவினர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். “பிரபாகரன் ஆயுதம் தூக்க விரும்பவில்லை. தூக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்” என்று ஓயாமல் சொல்லியபடியே நின்று கொண்டிருந்தார்கள் 4 தன்னார்வக் குழுக்காரர்கள். கூட்டத்தில் யாரும் அவர்களை சட்டை செய்யவில்லை. அவர்களும் அந்த “ஏசு வருகிறார்” மேட்டரை கடைசி வரை நிறுத்தவில்லை.

 

வைகோ, திருமா, நல்லகண்ணு போன்றோர் மேடையில்தான் இருந்தார்கள். இருப்பினும் மேடையின் மீது அவர்கள் யாரும் கட்டுப்பாடு செலுத்த முடியவில்லை. ஏனென்றால் கூட்டத்தில் அவர்களுடைய கட்சித் தொண்டர்கள் குறிப்பிடும் அளவுக்கு இல்லை. திடீர் திடீரென ஒரு கூட்டம் மேடை ஏறுவது, தான் பேச விரும்பியவற்றைப் பேசுவது, பின்னர் வேறொரு கூட்டம் வந்து அவர்கள் இடத்தைக் கைப்பற்றுவது என்பதாகப் போய்க்கொண்டிருந்த்து “நிகழ்ச்சி நிரல்”.

 

பிற்பகல் 2 மணிக்குத் தொடங்க வேண்டிய இறுதி ஊர்வலம் 3.30 க்குத்தான் தொடங்கியது. கொண்டாட்டமாகவோ அல்லது துயரமாகவோ நடத்தப்படும் இறுதி ஊர்வலங்களையே சென்னை கண்டிருக்கிறது. அரசியல் கொலைகளும், லாக்-அப் கொலைகளும் இறுதி ஊர்வலத்தைக் கிளர்ச்சி நடவடிக்கையாக மாற்றும் வாய்ப்பை வழங்குகின்றன எனினும் ஓட்டுக் கட்சிகள் அதனை அனுமதிப்பதில்லை.

 

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தையும் மவுன ஊர்வலமாக நடத்தவேண்டும் என்பதே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினுடைய தலைவர்களின் கருத்தாக இருந்த்து. எனினும் அந்தக் கருத்தைக் கூட மேடையிலிருந்து கூறும் துணிவு அவர்களுக்கு இல்லை. மவுனத்தை அவர்கள் மீதே திணித்து விட்டது மக்கள் திரள்.

 

ஊர்வலத்தின் முகப்பிலும் இறுதியிலும் செஞ்சட்டையணிந்த எமது தோழர்கள் முழக்கமெழுப்பிச் சென்றார்கள். (முழக்கங்களை எற்கெனவே வினவு தளத்தில் வெளியிட்டிருக்கிறோம்) இவற்றை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு கூடியிருந்த மக்களிடையே விநியோகித்திருந்தோம். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், முழக்கங்களில் அவரவர்க்குப் பிடித்தமானவற்றை முழங்கிச் சென்றார்கள்.

 

“ஓட்டுப் பொறுக்கிகளை ஒதுக்கித் தள்ளுவோம். மாணவர்களாக ஒன்றிணைவோம்” “பார்க்காதே பார்க்காதே சன் டிவியைப் பார்க்காதே” “கலைஞர் டிவியை பார்க்காதே”: “சூடு சொரணை இல்லாத கருணாநிதி ஒழிக” “பாப்பாத்தி ஜெயலலிதா ஒழிக” என்பன ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்களில் சில. வழி முழுவதும் எங்கெல்லாம் சுவரில் கருணாநிதி, ஜெயல்லிதா, சோனியா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தனவோ அவற்றைப் பிய்த்தெறிந்து கொண்டே சென்றார்கள் சில மாணவர்கள். அவற்றைச் செருப்பாலடித்தபடி சென்றனர் வேறு சிலர்.

 

இருமருங்கிலும் கட்டிடங்களே தெரியாத அளவுக்கு ஊர்வலத்தைக் காணத் திரண்டிருந்தார்கள் மக்கள். கொளத்தூரிலிருந்து திருவிக நகர், செம்பியம் வழியாக பெரம்பூரை அடையும்போதே மணி 6 ஆகிவிட்டது. பெரம்பூரிலிருந்து பின்னி மில், ஒட்டேரி, புரசைவாக்கம் என்பன போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் வழியாக ஊர்வலம் செல்லவேண்டும் என்பதே திட்டம். அந்தப் பகுதிகளிலெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியைக் காண ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் போலீசோ பெரம்பூர் ரயில்வே கீழ்ப்பாலத்தின் குறுக்கே தடுப்பரண் எழுப்பி இருந்தது.

 

பெரம்பூர் ரயிலடி, வியாசர்பாடி ஜிவா ஸ்டேசன், ஏரிக்கரை வழியாக மூலக்கொத்தளம் சுடுகாடு நோக்கி ஊர்வலத்தைத் திசை திருப்புவதே போலீசின் திட்டம். தெரு விளக்கின் வெளிச்சமும் இல்லாத, சனநெருக்கம் குறைவான பாதை அது.  ”அந்தப் பாதையில் செல்லமாட்டோம்” என மறுத்து ஊர்வலத்தின் முன் பகுதி சாலையில் அமர்ந்து மறியல் செய்தது. ஊர்வலம் நின்றது. ஒரு மோதலுக்கான களம் தயாராகிவிட்டது.

 

சாலை மறியலைத் தொடர்ந்திருந்தால், அனுமதிப்பதைத் தவிர போலீசுக்கு வேறு வழி இருந்திருக்காது. தடியடியோ மோதலோ நடந்திருந்தால் அது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். இந்தப் பிரச்சினையில் அத்தகையதொரு முடிவுக்குச் செல்ல முடியாத பலவீனமான நிலையில்தான் திமுக அரசு இருந்த்து. எனினும் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிய ஓட்டுக்கட்சித் தலைவர்களோ அதைவிடப் பலவீனமான நிலையில் இருந்தார்கள். போலீசு சொல்லும் பாதையில் செல்லும்படி மக்களைக் கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடினார்கள். அவர்களை வாய்க்கு வந்தவாறு ஏசியபடியே திருப்பிவிடப்பட்ட பாதையில் நகர்ந்த்து ஊர்வலம்.

 

வழியெங்கும் மக்கள் ஊர்வலத்தினருக்குத் தண்ணீர் கொடுத்தார்கள். பலர் ஊர்வலத்தில் இணைந்து கொண்டார்கள். தொலைக்காட்சியில் கற்றுக் கொண்ட மெழுகுவர்த்தி அஞ்சலியையும் பல இடங்களில் காண முடிந்தது.

 

ஊர்வலம் பேசின் பிரிட்ஜ் பாலத்தை அடையும் நேரம். தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் மாணவர் விடுதிகளும் காலவரையறையின்றி மூடப்படுவதாக திமுக அரசு வெளியிட்ட அறிவிப்பு மாணவர்களை எட்டியது. ஊர்வலம் நின்றது. மறியல் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் ஊர்வலம் மீண்டும் நகர்ந்து இடுகாட்டை எட்டியது.

 

முன்னமேயே மேடைக்கு வந்து விட்ட தலைவர்கள் தயாராக மேடைமேல் இருந்தார்கள். “மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் துரோகிதான் கருணாநிதி. நான் சும்மா வாயால் பேசுபவன் அல்ல, துப்பாக்கிகளும் இலைகளும் சலசலக்கும் காட்டில் அலைந்து திரிந்தவன்” என்று உறுமினார் வைகோ. எனினும், “வைகோ வாழ்க” என்று எழும்பிய கூச்சலை யாரும் எதிரொலிக்கவில்லை.

 

திருமாவோ கலைஞரைப் பாராட்டினார். “நாமல்லாம் வீதிக்கு வந்து போராடவேண்டும் என்பதற்காகத்தான் கலைஞர் கல்லூரிகளை மூடியிருக்கிறார். அவர் நம் போராட்டத்துக்கு உறுதுணையாய் இருக்கிறார்” என்று வியாக்கியானம் செய்தார்.

 

“நான் உயிராயுதம் ஏந்தினேன், நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள்” என்று முத்துக்குமார் எழுதிய வரிகளைப் பிடித்துக் கொண்டு, அவரது அறிக்கையை போட்டோ காப்பி எடுத்து விநியோகிப்பதுதான் நாம் அவருக்கு செய்யும் ஒரே அஞ்சலி என்ற பாணியில் முழங்கினார்கள் பலர்.

 

இந்த உரைகள் எதையும் பொருட்படுத்தாமல் முத்துக்குமாரின் உடலை எரியூட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள் மாணவர்கள். அவரது உடல் எரியூட்டப்பட்டபோது மணி சுமார் 11.

 

திரண்டிருந்த மக்கள் வீடு திரும்புவதற்கு பேருந்தோ ரயிலோ கிடையாது. இடுகாட்டிலேயே கழிந்தது இரவு. களைத்துச் சோர்ந்து உறங்கி எழுந்து காலைப் பத்திரிகைகளைத் திறந்தபோது முதல் பக்கத்தில் நாகேஷ் மரணம் அடைந்திருந்தார்.

 

திமுக, அதிமுக, காங்கிரசு, பா.ஜ.க, அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகிய அனைவரும் ஓரணியில் திரண்டிருந்தனர். முத்துக்குமார் ஓரங்கட்டப்பட்டிருந்தார்.


Last Updated on Sunday, 01 February 2009 13:14