Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம்  மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.

மக்கள் கொல்லப்படுவதன் மூலம், அதைப் பிரச்சாரம் செய்து தம் பாசிச அரசியல் இராணுவ இருப்பை தக்கவைக்க முனைகின்றனர். இந்த எல்லைக்குள் தான், மனித அவலங்களை புலிகள் அரங்கேற்றுகின்றனர். 

 

இந்த வகையில் இரண்டு மக்கள் விரோத இராணுவங்களினால், பரஸ்பரம் தம் வக்கிர உணர்வுடன் மக்கள் பலியிடப்படுகின்றனர். மக்களையிட்ட எந்த அக்கறையும் கிடையாது. மக்கள் தம் மீதான இந்த யுத்தத்தை வெறுத்து வாழ்கின்றனர். மக்கள் இதன் மேல் எந்த கருத்தும் கூறமுடியாது. விரக்தியில் நடைப்பிணமாக வாழ்வதையே, இயல்பு வாழ்வாக கொள்கின்றனர். இருந்தென்ன செத்தென்ன என்ற நிலையில் மக்கள், மிக கொடூரமாகவே யுத்தம் செய்பவர்கள் அவர்களை நடத்துகின்றனர். இதை நடத்திக் கொண்டிருக்கும் பாசிட்டுகளின ஈனத்தனமான கொடூரமான முகத்தையே, மக்கள் மாற்றாக தரிசிக்கின்றனர். மக்களுக்காக மாற்றாக எதையும் யாரும் முன்வைப்பதில்லை.    

 

மனித மரபில் கடவுளுக்கு படையல் படைப்பதன் மூலம், கடவுள் தமது விருப்பத்தை பூர்த்திசெய்வார் என்று  எதிர்பார்க்கின்றனர். படையல் நெய்யாக இருந்தாலும் சரி, ஆட்டை வெட்டினாலும் சரி, இதில் நோக்கம் ஓன்றுதான். இங்கு ஜனநாயகம், தேசியம் என்ற பெயரில் மக்கள் பலியிடப்படுகின்றனர். யார் எப்படி ஏன் பலியிடுகின்றனர் என்பதை அவரவர் செய்யும் குறுகிய உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்கள் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. மனிதம் மடிவதையிட்டு, யுத்தம் செய்யும் இருதரப்புக்கும் எந்த அக்கறையும் கிடையாது. மாறாக மனித அவலத்தை ஏற்படுத்தி, அதைப் புலிகள் புலிப் பிரச்சாரமாக்கினர். அதை வெறும் புலிப் பிரச்சாரமாக மறுப்பதன் மூலம், மனித அவலத்தை விதைப்பது பேரினவாதத்தின் ஈவிரக்கமற்ற நடத்தையாகின்றது.     

  

மனிதம் சிதைக்கப்படுகின்றது

இன்று ஒரு பக்கமாக, அதையும் உள் நோக்குடன் குறுகிய நோக்கில் மிகைப்படுத்தி, தம் பிரச்சார அடிப்படையில் புலிகளால் மட்டும் வெளியிடப்படும் சில காட்சிகள், அதன் அவலங்கள், மக்கள் அல்லோலகல்லோலபட்டு அதிர்ந்து நிற்கும் கையாலாகாத்தனம், என அனைத்தும் இன்று வன்னி மண்ணில் நிகழும் மனித அவலமாகிவிட்டது. இந்த அவலம் ஈவிரக்கமற்றது. பார்ப்போரை நடுங்க வைக்கின்றது. எதையும் செய்ய லாயக்கற்றுப் போன உணர்வாகி, அதுவே மனநோயாகிவிடுகின்றது. எம் மக்கள் இந்த மக்கள்விரோத யுத்த வெறித்தனத்துக்கும், அதன் நோக்கத்துக்கும் எதிராக புலம்புகின்றனர்.

 

பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய உணர்வுகளுக்கு வெளியில் கூச்சல்கள். தலையீடுகள். பேரினவாத ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக தளத்திலும், எதிரான தளத்திலும் சரி, மக்களுக்கு எது தேவை என்பதை மறுத்து நிற்கும் வக்கிரம். எல்லாம் குறுகிய தளத்தில் நின்று, மக்கள் மேல் மேளம் அடிக்கின்றனர். இப்படி இந்தியா முதல் இலங்கை வரை, மக்கள் கருத்துகளை மேவியெழும் மனித விரோத வக்கிரங்கள். சமூகம் பற்றி சிந்திப்பவர்கள் கூட, இந்திய ஊடகவியலை நம்பி அதை அடிப்படையாக கொண்டு கருத்துரைக்கும் பொய்யுரைகள். எங்கிருந்து இந்திய ஊடகவியல் தகவலைப் பெறுகின்றது? உண்மைக்கு மேல் பொய்களை மூட்டை கட்டிவிடும் புலிப்பிரச்சாரம், மக்கள் விரோத அடிப்படையில் இந்தியாவில் பிழைப்புவாத செய்தியாகின்றது. இன்று யுத்தத்தை நடத்தும் பேரினவாதமாகட்டும் புலிக்கு ஆதரவான மக்கள் விரோத யுத்தத்தை ஆதரிப்பவர்கள் எவருமாகட்டும், தமிழ் மக்கள் எந்த நிலையில் எப்படி ஏன் பலியிடப்படுகின்றனர் என்பதை காணத் தவறுகின்றனர்.

 

இந்த அவலத்தின் பின்னணியோ, மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. மனித அவலத்தை தவிர்க்கும் மனிதத்தன்மை, இந்த யுத்தத்தில் ஈடுபட்டுள்ள யாருக்கும் கிடையாது. இந்த அவலத்தைச் சொல்லி, இதில் ஒன்றை ஆதரிக்கும் யாருக்கும் மனிதம் மீதான அக்கறை கிடையாது. மக்களை இதில் இருந்து காப்பாற்றுவது, அப்படி சிந்திப்பது புலி மற்றும் இராணுவத்தின் அகராதியில் காணமுடியாத ஒன்று.

 

மாறாக இதை வைத்து பிரச்சாரம் செய்பவர்கள், மனித அவலத்தை விரும்புகின்றனர். அதை மூடிமறைக்க மறுதரப்பு முனைகின்றது. இப்படி மனித அவலம் இதற்குள் சிக்கிவிட்டது.

 

இதை வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் என்ன விரும்புகின்றனர். எவ்வளவு கோரமாக மனிதம் கொல்லப்படுகின்றதோ, எந்தளவுக்கு மோசமாக மனிதம் சிதைக்கப்படுகின்றதோ, அதுவே பிரச்சாரத்துக்கு உதவும் என்று கருதுகின்றனர். இதை யாரும் மறுக்கமுடியுமா!? இதை நோக்கியே புலிகளின் நகர்வுகள் அமைகின்றது. மக்களை இதில் இருந்து பாதுகாக்க விடுவிக்கவும் முனையாது, இதற்குள் மக்களை புலிகள் திணிக்கின்றனர். மனித அவலமும், அதன் காட்சிகளும் தான், இன்று புலிகள் தம்மை காப்பாற்றிக்கொள்ள உதவும் இறுதி நடவடிக்கையாகிவிட்டது. இதை காட்டி பிரச்சாரம், ஊர்வலம் என அனைத்தும், மக்களின் அவலத்தை பற்றியல்ல. புலியைப் பாதுகாக்கும் பிரச்சார எல்லைக்குள் சுருங்கிவிட்டது. புலிகள் அரசியல் அனாதைகளாகிவிட்ட நிலையில், மக்களின் அவலத்தை வைத்து பிழைக்கும் அரசியல் பிழைப்புத்தனம் இன்று அரங்கேறுகின்றது. புலிக்கு வெளியில் இந்த மனித அவலத்தை முன்னிறுத்தி போராட்டங்கள் எவையும் நடக்கவில்லை.

 

அரசுக்கு எதிரான பிரச்சாரத்தின் மூலம் தம் தற்காப்பு என்ற எல்லைக்குள், தமிழினம் மேலான பேரினவாத அழித்தொழிப்பு புலிகளின் அவசியமான அரசியலாகிவிட்டது. அதை நோக்கி புலிகளின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றது. மக்கள் கொல்லப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும். இதுதான் புலிகளின் அரசியல் இருப்பின் அடிப்படையான இன்றைய நிபந்தனையாகிவிட்டது.

 

இந்த உண்மைக்கும், மனித அவலத்துக்கும் இடையில் உள்ள மெல்லியகோடு, இன்று தமிழினத்தையே அழித்தொழிக்கின்றது.

 

பி.இரயாகரன்
30.01.2009

தொடரும்