Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சிசெரோவின் படுகொலை!

  • PDF

சுதந்திரம் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி சமமாகப் பகிர்ந்தளிக்கப்படாததை ´சுதந்திரம்´ என்று சொல்ல முடியாது." * சிசெரோ

 

 ரோம் நகரில் 2000- ஆண்டுகளுக்கு முன் வன்முறைகளும், ஊழல் ஆட்சிகளும் நிறைந்ததாக மிக மோசமான சமூக சீர்கேடுகள் நடந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மாநில கவர்னராகவும், ரோம் குடிஅரசின் பிரதான நீதிபதியாகவும் பதவியில் இருந்தவர் மார்க்ஸ் துல்லியஸ் சிசெரோ. சுருக்கமாக சிசெரோ என்று அழைக்கப்பட்டவர். சிசெரோ சிறந்த பேச்சாளர், தத்துவவாதி, சட்டவல்லூநர், சிறந்த எழுத்தாளர் என பன்முகத் திறமை உடையவர். ரோமானிய அரசியல்வாதியாக இருந்த சிசெரோ ரோம் நகரின் அட்டகாசங்களைக் கண்டு கடுமையான விமர்சனங்களை வைத்தார். அவை குறித்து பேசினார், எழுதினார். அரசியலில் முக்கியப் பதவிகளில் இருந்தவர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுடை ஊழல்கள், தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் அம்பலப்படுத்திக் கொண்டே இருந்ததால் ஏராளமான எதிரிகளையும் சம்பாதித்துக் கொண்டார். ரோம் நகரின் பிரதான நீதிபதியாக இருந்த போது குற்றவாளிகளை கண்டிக்கக் கூட முடியாத நிலையில் அரசியல் குறுக்கிடுகள் இருந்தன. அவை சிசெரோவுக்குள் பல கேள்விகளை ஏற்படுத்தியது. 

தேச மக்கள் என்றால் என்ன பொருள்?
அரசாட்சியின் குறிக்கோள்கள் எவை?
குடிமக்களின் நல்லின்பம் என்றால் என்ன? 
ஓர் ஆட்சியின் முக்கிய நற்பண்பு என்ன?
சிறந்த ஆட்சித் திட்டம் என்றால் என்ன?
மக்கள் எவ்வாறு தங்கள் செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும்?
வளர்ச்சி இடையீடின்றி நடைபெற என்ன செய்ய வேண்டும்? 

போன்ற கேள்விகளை முன்நிறுத்தி நல்லரசாட்சி குறித்த சிந்தனைகளை "குடியரசு பற்றி.." என்ற நூலாக தொகுத்தார். 2000- ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிசெரோவின் இந்நூல் இன்றைக்கும் அரசியல் நிபுணர்களுக்கு திறனாய்வுக்குரிய கருத்துக்களை கொண்டுள்ளது. சிசெரோவின் தொலை நோக்குப் பார்வைக்கும், நேர்மைக்கும் கிடைத்த நற்சான்றுப்பத்திரம். 

ரோம் நகரில் எல்லைக் கடந்த அட்டுழியத்திற்கு செல்வாக்குள்ள பணக்காரர்கள் அல்லது அரசியல்வாதிகளின் பிண்ணனி இருந்தது. 

குடிஅரசு ஆட்சியில் சமத்துவம் சமமாக இருக்கவில்லை என்று கடும் கண்டனம் தெரிவித்த சிசெரோ, "ஊனம் மிகுந்த குளறுபடியான அரசியல் அமைப்புச் சட்டம் எது என்றால், மிகப் பெரிய பணக்காரர்களோ மிகச் சிறந்த மனிதர்கள் என்று தீர்மானித்துவிடும் சட்டம் தான்" இவை எப்படி நேர்மையான சமூதாயத்தை உருவாக்கி விடும் என்று கேள்விகளை எழுப்பினார். 

சிசெரோவின் நேர்மையான விவாதிங்கள் அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் எரிச்சலை அதிகப்படுத்தியது. தங்களுடைய செயல்பாடுகளை குறுக்கிட்டு தடங்கல் ஏற்படுத்துவதும் அம்பலப்படுத்துவதுமாக இருந்த சிசெரோவை ஒழித்தால் தான் தங்களுக்கு நிம்மதி என்று முடிவுக்கு வந்தனர். அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர். 

அக்காலத்தில் தூரப் பயணங்கள் செல்வதற்கோ அல்லது நகரத்திற்குள் பயணம் செய்வதற்கோ பல்லக்கு போன்ற வாகனத்தை உபயோகித்தனர். அதற்காக அடிமைகளும் வைத்திருந்தனர். சிசெரோ பல்லக்கில் செல்லும் போது திடீரென அரசியல் எதிரிகளின் கைக் கூலிகள் சூழ்ந்துக் கொண்டனர். மரணம் நிச்சயம் என்று தெரிந்த பின்னும் தன்னை காப்பாற்ற முயன்ற அடிமைகளைப் பார்த்து ஆயுதம் இல்லாத உங்களின் உயிருக்கும் நிச்சயம் ஆபத்து ஏற்படும். அவர்கள் குறி என்னைக் கொல்வது தான். நீங்கள் தப்பிச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். 

சிசெரோ கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். 

சிசெரோவின் சிந்தனை சாக்ரடீஸ், பிளாட்டோவின் தத்துவார்த்தங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கின்றது. இன்றைய மனிதர்களின் சிந்தனைகளையும், இன்றைய மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்னென்ன தீர்வு காண விரும்புகின்றோமோ அதே கொள்கையை சிசெரோவின் சித்தாந்தம் 2000- ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது.

"தேசம் என்பது ஓரே சட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் மக்களின் ஒன்றியமாக இருக்க வேண்டும்" என்றார். மக்களாட்சி மட்டுமே மக்களுக்கு நல்ல தீர்வாக இருக்க முடியும் என்பதும், மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுபவர்களின் இறுதி முடிவுகள் தேர்ந்தெடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும் மக்களிடமே இருக்க வேண்டும் என்கிறார். இதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்கிறார். கிட்டத்தட்ட வாக்குரிமை என்னும் சொல்லாடலுக்கு இணையாக இக்கருத்தை நாம் எடுக்கலாம். 

இப்படி அதிரடியான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததால் சிசெரோவின் வாழ்க்கை படுகொலையில் முடிந்தது.


தமிழச்சி
11/01/2009 

Last Updated on Sunday, 11 January 2009 13:00