Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கேலிக் கூத்தாகிய போராட்டம், துன்பவியலாக முடிகின்றது

கேலிக் கூத்தாகிய போராட்டம், துன்பவியலாக முடிகின்றது

  • PDF

கடமைகளுள்ள உரிமைகளையோ, உரிமைகளுள்ள கடமைகளையோ தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இப்படி இதிலிருந்து மக்கள் பலாத்காரமாக அன்னியமாக்கப்பட்டனர். மக்கள் மந்தைகளாக, ஆடு மாடுகள் போல் எந்த உரிமையுமற்ற நடைப்பிணமாக வாழ்வதைத்தான், தமிழ்மக்களின் உரிமைகள் கடமைகள் என்றனர். 

இதை மூடிமறைக்க ஆர்ப்பாட்டமான பேச்சுகள், பொய்கள், நிச்சயமற்ற உளறல், தடுமாற்றம், குழப்பம், தெளிவற்ற பிதற்றல், இதுவே மனித அறிவாகியது. இவை கடமைகளுள்ள உரிமைகளையும், உரிமைகளுள்ள கடமைகளையும் இழந்த மக்கள் முன், (புலித்) தேசியமாகியது.

 

திட்டம் கிடையாது, நோக்கம் கிடையாது. மக்கள் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. துவக்கெடுத்தவர்களும், சுட்டவர்களும், கடத்தல்காரர்களும், கொலைகாரர்களும் கதாநாயகர்களாகி, விடுதலையின் பெயரில் ஒரு இனத்தையே அழித்துவிட்டனர். புலிகள் மட்டுமல்ல, இன்று அரசின் பின் மண்டியிட்டு தொழும் தொழுநோய்க்காரர்கள் அனைவரும் இந்தப் பாதையில் தான் பவனிவந்தவர்கள். 

 

மக்களோ தம் வரலாற்றை தாங்கள் விரும்பியவாறு உருவாக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் விரும்பியவாறு எல்லா நேரமும், வரலாற்றை உருவாக்க முடிவதில்லை. மக்களின் அறியாமை, அவர்களின் விழிப்புணர்வற்ற தன்மை, செயலற்ற தன்மை, அவர்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இதனால் எல்லாம் கேலிக்கூத்தாகி, மனித வரலாறே துன்பவியலாக மாறிவிடுகின்றது. மக்களை மந்தைகளாக மாற்றி, அவர்களை தம் அதிகாரத்தின் கொலுசில் கட்டி விடமுனைகின்றனர்.

 

மக்களின் பெயரில் சிலர் நலன் பேணுவதே, போராட்டமாகி விடுகின்றது. இப்படி சீரழிந்து விட, மக்களால் இந்த மக்கள் விரோத போராட்டம் தோற்கடிக்கப்படுகின்றது. இந்த நிலையில், எதிரி அவர்களை உதிரியாக இனம் கண்டு அழிக்கும் வண்ணம், மக்களை தனியாக பிரிந்துவிடுகின்றனர். இன்று அதுவே புலியின் பின்னால் அரங்கேறுகின்றது.

 

போராட்டம் என்பது குறுகிய நம்பிக்கை விசுவாசமாக, நக்கித் தின்பது விடுதலை உணர்வாக, தியாகம் அறியாமையாகிவிடுகின்றது. இவை எல்லாம் இன்று கேலித் கூத்தாகிவிடுகின்றது. மனித விடுதலை என்பது, துன்பவியலாகிவிடுகின்றது.

 

இப்படி மனிதத்தை வதைத்து, கற்பனை உலகில் மிதக்கின்ற பிரமைகளுடன் கூடிய ஒரு தேசியப்போரையே மக்கள் முன் திணித்தனர். கதாநாயகர்கள் பற்றி மிதமிஞ்சிய கொசிப்பில், அவை மிதக்கவைக்கப்பட்டது. இப்படித் தான் புலித்தேசியம் வீங்கி வெம்பியபடிதான், தன் கழுத்தை தூக்கில் தொங்கவிட்டது.

 

போலிகளும் பொறுக்கிகளும் இதை தம் சொந்தப் பிழைப்பாக்க, அப்பாவி இளைஞர்களும் யுவதிகளும் தியாகங்களின் பெயரில் பலியிடப்பட்டனர். இதை மூடிமறைக்க, கதாநாயகர்கள் பற்றிய மிதமிஞ்சிய கற்பனைகளை திணித்தனர்.   

 

இதற்கு அமைய ஆயுத கவர்ச்சியிலும், நவீன ஆயுதங்களிலும், பற்பல படைகளிலும் நம்பிக்கையூட்டி, மக்களை நாயினும் கீழாக நடத்தியபடி அவர்களை எட்டியே உதைத்தனர். இப்படி மக்களை இழிவாகவும் கேவலமாகவும் பார்த்தனர், நடத்தினர். அவர்களை வெறும் மந்தைக் கூட்டமாக நடத்தினர். உயிரற்ற சடப்பொருளை பூசித்தவர்கள், உயிருள்ள மக்களை தூற்றினர். இப்படி எதிர்மறையில் நம்பிக்கை ஊட்டி வளர்த்த போராட்டம், கற்பனையில் எப்போதும் வெற்றிபெற்று வந்தனர்.

 

கற்பனைச் சிறகை தட்டிவிட்டு, அதை பிரச்சாரம் செய்தனர். ஒரு இராணுவமாக இருந்து செய்யும் நடவடிக்கைகளை, மிதமிஞ்சிய கொசிப்பில் பொழுதுபோக்கிலும் வெற்றியாக காட்டினர். அதை கதாநாயகர்களின் அதி அற்புதமான வழிகாட்டலாக புனைந்தனர். ஆனால் இவர்கள் மக்களை வெற்றி கொள்ள முடியவில்லை. மக்களை நிமிர்ந்து பார்த்து கதைக்க முடியாத அங்கவீனர்கள், கதாநாயகர்களானார்கள். அவர்கள் பற்றயி கற்பனை, நிஜவுலகில் பொய்யும் போலியும் நிறைந்த பிரமைக்குள் திணிக்கப்பட்டு இருந்தது.

 

ஆனால் மக்கள் கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மறுத்தலித்தனர். மக்கள் தம் சொந்த வாழ்வில் இருந்து தான் கற்றுக்கொள்கின்றனர் என்ற உண்மை, இந்த விம்பத்தையும் இந்த போலித்தனத்தையும் தகர்த்தெறிந்தது.

 

இந்த மக்களில் இருந்து விலகிப் பிழைத்த கும்பல், புலிகள் பற்றிய ஆரூடங்களையும், அனுமானங்களையும் உருவாக்கினர். இவை எல்லாம் கற்பனை என்று சொல்லும் துணிவுடன், நாம் மட்டும் பயணித்து வந்தோம் என்பது, இன்று எம்மாலே நம்ப முடியாமல் உள்ளது. புலிகள் பற்றிய பிரமைகள், நம்பிக்கைகள் எல்லாம் இன்று கேலிக் கூத்தாகின்றது. அவையோ பரிதாபகரமான துன்பவியலாக முடிகின்றது.

 

புலிகள் பற்றி, புலிகள் எதையும் சொல்ல முடிவதில்லை. மாறாக கண்டகண்ட தெருநாய்கள் எல்லாம் அவர்கள் பற்றி சொல்லுகின்ற அவலம்;. அதை தூக்கிவைத்தே இன்று புலிகள்  பிரச்சாரம் செய்யும் அவலம். மக்களுக்கு சொல்ல எதுவும் புலியிடமில்லை. தம் ஆயுத வல்லமை பற்றி, எதிரிகள் அளிக்கும் சாட்சியங்களில் தொங்கும் அவலம்.

 

எல்லாமே பொய்க்கின்றது. மேட்டிமை தாங்கிய கற்பனைகளையும் பிரமைகளையும் விதைத்து, அதை அறுவடை செய்யத் துடிக்கும் நம்பிக்கைகள், கணத்துக்கு கணம் அடி சறுக்குகின்றது. கற்பனையுடன் சேர்ந்த ஊகங்கள் நம்பிக்கையாகி அடிசறுக்கின்றது. இன்று இவை கணத்துக்கு கணம் சரிந்து அவர்கள் மேலே விழுகின்றது.

 

புலிகள் பின்வாங்கி அடிக்கப் போகின்றார்கள், இது தந்திரோபாயமான பின்வாங்கல்கள், இன்னும் அவர்கள் சண்டை செய்யவி;ல்லை, இனித்தான் சண்டை என்று எண்ணற்ற ஊகங்கள் அனுமானங்கள். இவை எல்லாம் கற்பனையில் விளைவாகி, இன்று அடிக்கடி வெத்துவேட்டாகின்றது.

 

சண்டை நடந்ததா எனின் ஆம். எல்லையற்ற உக்கிரத்துடன் தான், அவர்களிள் உயர் வலிமையுடன்தான் புலிகள் தம் எதிரியுடன் மோதினர். ஆனால் தோற்றுப் போனார்கள் என்பதே உண்மை. இதை எப்படி ஜீரணிப்பது எனத் திணறும் அங்கலாய்ப்பும் பரிதபிப்பும் யத்தம் நடக்கவில்;லை என்ற கற்பனைக்குள் சிறகடிக்க வைக்கின்றது. வீங்க வைத்து வெம்ப வைத்தவர்கள், இன்று எப்படி இது இன்று நடக்கமுடியும் என்று தெரியாது ஆந்தை முழி முழிக்கின்றனர்.

 

இதை சமாளிக்க, இதற்கும் போலிக் காரணத்தை கண்டுபிடிக்க முனைகின்றனர். பெரும் படை,  சர்வதேச ஆதரவும் விநியோகமும், ஒற்றுமை இன்மை, துரோகம் என்று ஆளுக்காள் இந்த தோல்விக்கான காரணங்களைச் சொல்லி, செக்குமாடுகள் போல் சுத்திசுத்தி வருகின்றனர். 

 

ஏன் புலிகள் தோற்கின்றனர்? தோற்பது மட்டுமல்ல, அவர்கள் எப்படி அழிகின்றனர்?  இந்த அடிப்படை விடையத்தை, யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை,  ஆராய முற்படவேயில்லை, சுயவிமர்சனம் கூட செய்ய முற்படவில்லை. இதை ஒரு விடையமாகக் கூட கவனத்தில் எடுக்கவில்லை.

 

மாறாக புலிகள் இதில் தோற்றாலும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்ற அனுமானங்களை முன்வைக்கின்றர். மறுபக்கத்தில் புலியை கொப்பில் ஏற்றி கீழே நின்று தறிக்கும் விற்பன்னர் கூட்டங்களின் பகிடிகள் தான், இதன் மேலான ஆய்வாக வருகின்றது. 

 

புலிகள் ஏன் தோற்றனர்? யாராவது இதை கண்டுபிடித்தார்களா? தோற்பதற்கு அவர்கள் காரணமா? அல்லது வெளிக்;காரணமா? அல்லது இரண்டுமா? இந்த கேள்விக்கு, பதில் தேட முனையாத அபிப்பிராயங்கள், கருத்துகள், பிரச்சாரங்கள்.

 

எதிர்காலம் பற்றிய குருட்டு அனுமானங்களாகின்றது

 

புலிகள் நீடிப்பார்கள், கெரில்லா அணியாக மாறுவார்கள். தொடர்ந்தும் சண்டை நடக்கும். அடர்காட்டில் இருந்து தப்பிப் பிழைப்பார்கள். இப்படி குருட்டு அனுமானங்களுடன் பல்வேறு முடிவுகளையும் அபிப்பிராயங்களையும் பிரகடனம் செய்கின்றனர். பிழைப்புவாதிகள் முதல் 'சுதந்திர" ஊடகவியல் பேசும் பச்சோந்திகள் வரை இதில் அடங்கும்;. உண்மைக்காக போராடுவது, மக்களைச் சார்ந்து நிற்றல் என்பது அருகிவிடும் போது, ஆய்வுகளும் அனுமானங்களும் கூட குறுகிவிடுகின்றது.

 

இப்படி இவர்கள் கூறும் காரணங்களாக அவர்கள் கண்டுபிடிப்பதில் முக்கிமானது, தமிழ் மக்களின் பிரச்சனையை இந்த அரசு தீர்க்காது என்ற அனுமானம் தான். 

 

இந்த பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காது என்பது உண்மைதான்;. இதனால் மட்டும் புலிகள் நீடித்து இருக்கமுடியும் என்று, எப்படி கூறமுடியும்!? புலிகள் நீடித்து இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றனரா? இந்தக் கேள்வியை யாரும் எழுப்புவது கிடையாது. புலிகளை ஏன் எதற்காக தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டும்? 

 

மறுபக்கத்தில் இன்றும் தான், தமிழ் மக்கள் பிரச்சனையை இந்த அரசு தீர்க்கவில்லை. இதை தீர்க்காது என்பது, அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியும். துரோகத்தையே இன்று  தொழிலாக கொண்ட கும்பலுக்கும் கூட இது தெரியும். இப்படி இருந்தும், புலிகளை மக்கள் ஏன் தோற்கடிக்கின்றனர்? இதை விட புலிக்கு சார்பாக, மக்களின் அகநிலையில் இருந்து ஒரு புதியநிலைமை திடீரென வந்துவிடாது.

 

இந்த நிபந்தனை, எப்படி கெரில்லா அமைப்பாக புலி மாறும் போது மாறிவிடும்? புலிகளின் தோல்வி என்பது, பேரினவாதத்தின் பலத்தால் நிகழவில்லை. புலிகளின் சொந்த தவறுகளால் நிகழ்கின்றது. மக்களை மக்களாக அவர்கள் கருதியது கிடையாது. மக்களை மந்தையாக்கி, கடமைகளில்லாத உரிமைகளையும், உரிமைகளில்லாத கடமைகளையும் கோரியபோது, அதை மக்கள் மறுத்தலித்தனர்.

இப்படி மக்களில் இருந்து அன்னியமாகிய புலிகளை, மக்கள் கைவிட்டதன் மூலம்  தோற்கடித்துள்ளனர். இந்தத் தோற்கடிப்பை மக்கள் நிறுத்தவேண்டும் என்றால், புலிகள் மாறவேண்டும். இதைப் புலிகள் செய்வார்களா? இதைச் செய்யாதவரை, புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக கூட நீடிக்க முடியாது என்ற உண்மையை, சமூகத்துடன் உறவை வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கூட இன்று காணத் தவறிவிடுகின்றனர்.

 

புலிகள் தோற்பதற்கு காரணம் மக்கள் தான் என்று நீங்கள் கருதினால், அவர்கள் கெரில்லா அமைப்பாக கூட நீடிக்க முடியாமைக்குரிய காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். 

 

அகநிலை சார்ந்த சூழலில் புலிகளின் தொடர்ச்சியான நீடிப்பு என்பது, புலிகள் தம் தவறை முற்றாக சுயவிமர்சனம் செய்ய வேணடும். அது வலதுசாரி பாசிச சர்வாதிகார அமைப்பாக உள்ள புலியில் நடக்காது. சுயவிமர்சனம் செய்யாத வரை, புலிகள் கெரில்லா அமைப்பாக கூட நீடிக்க முடியாது.

 

இதை புரிந்து கொள்ள, இன்றைய சில நடைமுறைகள் கூட உதவுகின்றது. இன்று இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகளின் இருப்பு எதனால் மறுதலிக்கப்படுகின்றது? இதன் மேலான தெளிவு, இதை முழுமையாக உணர்த்தி நிற்கின்து. இன்று இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகள் செயலிழந்து போன தன்மை என்பது, புலிகள் மக்களுடன் கொண்டிருந்த உறவில் ஏற்பட்ட பாரிய பிளவுதான் அடிப்படையான காரணம். இலகுவாக அவர்கள் இனம் காணப்பட்டு அழிக்கப்படுகின்றனர்.

 

உண்மையில் புலிகள் கட்டமைத்து வைத்திருந்த உறவு அரசியல் ரீதியானதல்ல. மாறாக  பணம், சொந்த உறவுகள், மிரட்டல் என்ற எல்லைக்குள்தானே ஒழிய, உணர்வுபூர்வமான அரசியலால் அல்ல. கடமைகளை செய்ய, புலிகளின் பின்னால் எந்த அரசியல் உணர்வையும் மக்கள் கொண்டிருக்கவில்லை.

 

நாம் கடந்துவந்த வரலாற்றில் இதைக் காணமுடியும். கம்பூச்சியாவில் பொல்போட் நகரத்தில் அன்னியமாகி கிராமங்களில் முடங்க மக்களுடன் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணம். சீக்கிய போராட்டம் அதன் வேரேயின்றி அழிந்துபோக, அவர்கள் மக்களை கையாண்டவிதம் தான் காரணமாகும். இந்த நிலைமை தான் எம் மண்ணில் காணப்படுகின்றது. ஆப்கானின் தலிபான் அடிப்படைவாதிகள், வலதுசாரி மக்கள் விரோத காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை நடத்திய போதும், அவர்கள் அடிப்படைவாதத்தின் எல்லைக்குள் அவை ஏற்றுக்கொள்ளபட்டது. இதன் பின், இதை ஏற்றுக்கொள்ளும் அரசியல் இருந்தது. இதனால் அவர்கள் இன்றும் நீடிக்க முடிகின்றது.

 

புலிகளை எம் மண்ணில் ஓரு அமைப்பாக நீடிக்க கூடிய எல்லையில், மக்கள் அவர்களை அங்கீகரிக்கக் கூடிய எந்த அரசியல் அடிப்படையும் கிடையாது. ஆயிரம் ஆயிரம் தியாகங்களை மக்கள் எப்படி பார்ப்பார்கள்? புலிகள் தம் குழந்தைகளை பறித்துச்சென்று அநியாயமாக பலியிட்டதாகத்தான் பெரும்பான்மை கருதும். போராட்டம் மீதான மக்களின் வெறுப்பு, போராட்டம் ஏன் என்ற தெளிவின்மை, தமிழ் மக்களின் உரிமை என்ன என்பது பற்றிய அடிப்படை அறிவின்மை, புலிகளை வேகமாகவே இல்லாதொழித்துவிடும்.

 

சாதாரண மக்கள் தமக்கு எதிரான இந்த யுத்தத்தை வெறுக்கின்றனர். நிம்மதியான அமைதியான வாழ்வை, தேவையற்ற இந்தப் போராட்டம் தான் உருவாக்கியதாக நம்புகின்றனர்.  பிரச்சனையை தீர்க்க விரும்பாது, யுத்தத்தை புலிகள் தான் விரும்புவதாக நம்புகின்றனர்.

 

தமது பிரச்சனையாக கருதுவது இராணுவ கெடுபிடிகளைத்தான். தமிழன் என்பதால் தாம் மட்டும் இந்த நிலையை சந்திப்பதாக கருதும் மக்கள், இந்நிலை புலிகளின் செயலால் தான் என்று கருதுகின்றனர்.

 

புலிகளற்ற யுத்தமற்ற சூழல், இவை எல்லாவற்றையும் மாற்றிவிடும். இதனால் மேலும் புலி மேலான வெறுப்பாக, புலி அவசியமற்ற தொங்குசதையாக மாறுவார்கள். இதனால் தம் நிம்மதிக்கு இடைஞ்சலாக கருதி, அவர்களை காட்டிக்கொடுப்பது தன்னியில்பாக மாறும்;;. இதை இன்று இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காணலாம். இதற்கு அப்பால், உரிமைகளை புலியிடம்  இழந்த மக்கள், பேரினவாதம் மறுக்கும் உரிமைகள் பற்றி எதுவும் அறியாதவர்களாகவே உள்ளனர்.  அவர்கள் சிந்திக்க முடியாத சூழலுக்குள், புலித்தேசியம் அனைத்தையும் நலமடித்துவிட்டது.

 

தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுவதாக இருந்தால், 1980 களில் வைத்த அனைத்துக் கோசத்தையும் மீள முன்வைக்கவேணடும். மீண்டும் 30 வருடத்துக்கு முந்தைய கோசங்களை முன்னிறுத்த முன், அதை மறுதலித்து வந்த புலிகள் எப்படி முன்வைக்க முடியும். அதை அவர்கள் மீள முன்வைத்தால், அவர்கள் தமக்குத்தாமே மரண தண்டனை விதிக்க வேண்டும். இதை முன்வைத்தவர்களை கொன்றவர்கள் இந்த புலிகள் தான். இப்படி புலிகள் கெரில்லா அமைப்பாக கூட, மாறி நீடிக்க முடியாத அவலம். எம் போராட்டம் புலிகளால் தோற்கடிப்பட்டுவிட்டது.

 

மாற்றுத்தலைமை உருவாகுமா?

 

இல்லை. மக்கள் இதற்கும் தயாராக இல்லை என்பதே உண்மை. யுத்தம் வேண்டாம், இந்த போராட்டம் வேண்டாம் என்ற நிலையில்; மக்கள்; உள்ளனர். (இதை பின்னால் விரிவாக பார்ப்போம்.)

 

என்னதான் நடக்கும்?

 

மலையகம் முதல் முஸ்லீம் மக்களை மேய்க்கும் தலைமைகள், எப்படி மக்களை மந்தைகளாக வைத்து, பிழைக்கின்ற ஒரு அரசியல் சூழல் உள்ளதோ அந்த நிலைக்கு மக்கள் உணர்வு மட்டம் தயாராகவே உள்ளது. (இதை பின்னால் விரிவாக பார்ப்போம்.)

 

எது போராட்டம்?

 

இலங்கை தழுவிய ஒரு வர்க்கப் போராட்டம் தான். இது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த, எல்லைக்குள் நடப்பதைத் தவிர வேறு போராட்ட சூழல் கிடையாது. சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத கட்சி, கம்ய+னிஸ்ட் கட்சியல்ல. அது  வர்க்கப் போராட்டமுமல்ல. வர்க்கப் போராட்டத்துக்கான சர்வதேச சூழலும், சர்வதேச பொருளாதார நெருக்கடியும் இன்று உருவாகியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்படும் வேலை இழப்புகள், 30 லட்சம்  இலங்கை தொழிலாளர்களின் வாழ்வைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உள்நாட்டின்  ஏற்றுமதி சரிகின்றதால், ஏற்படும் வேலை இழப்புகள். யுத்தம் முடிய, இராணுவத்தில் உள்ள  5 லட்சம் இளைஞர்களும், இதை அண்டி வாழ்ந்த மேலும் 5 லட்சம் இளைஞர்கள் வீதிக்கு வருவார்கள். மிக கொந்தளிப்பான வர்க்கப் போராட்டம் தொடங்கும் நிலைக்குள் இலங்கை செல்லுகின்றது. (இதை பின்னால் விரிவாக பார்ப்போம்.)

 

பி.இரயாகரன்
07.01.2009
              

 

Last Updated on Wednesday, 07 January 2009 11:58