Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் "பாலியல் கல்வி - பெற்றோருக்கு" -- 16

"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" -- 16

  • PDF

"சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு இரு சிறகு முளைத்தது !"

 

சென்ற பதிவின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டு முடித்திருந்தேன்!

 

உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் ஆன ஒரு இளம் பெண்ணை, உங்கள் குழந்தையை எப்படி எதிர் கொள்வது என்று.

 

இது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் குறைவே என்றாலும், விவரமறியா பெண்களிடம் இது இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

இது பற்றி, சுவாரசியமாக சொல்ல வேண்டுமென்றால், பல கதைகள் இருக்கிறது, பதிவை நிரப்ப!

 

ஆனால், இது ஒரு சங்கடமான நிகழ்வு என்பதால், கிளு, கிளு கதைகளைத் தவிர்க்க விரும்புகிறேன், ஒரு சிலர் முகம் சுளித்தாலும்!!

 

நேரடியாக இதைப் பற்றிச் சொல்லி மேலே செல்லலாம்.

 

இன்னும் ஓரிரு பதிவுகள் மட்டுமே இருக்கின்றன!

 

பெண்கள் வாலிப வயதில், திருமணத்திற்கு முன் கர்ப்பமடைய காரணங்கள் பல உண்டு.

 

இதில் பாதிக்கு மேல், பெற்றோரின் கவனமின்மையால் நிகழ்கிறது.

 

பாலியல் பற்றி ஒரு உணர்வை, விழிப்புணர்வை தம் மக்களிடம் ஏற்படுத்தாமல் போவது.

 

அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து இவர்களை வளர்த்து விடுவது.

கண்டிக்க வேன்டிய நேரத்தில் கண்டிக்காமல், சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாமல் மெத்தனமாய், அறியாமையாய் இருந்து விடுவது.

 

கருத்தடை சாதனங்களைப் பற்றி பேச அச்சப்பட்டு, நம்பிக்கையின்றி,... எங்கே இது மேலும் தவறுகளுக்கு வழி வகுத்து விடுமோ, என்று மறைத்து விடுவது,

குடும்ப மான அவமானங்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருப்பது,

 

தான் ஒரு தவறான முன்னுதாரணமாய் இருப்பது,

 

[வீட்டிலேயே அனைவர் எதிரிலும் குடிப்பது, ஆபாச ஜோக்குகளை விகல்பமின்றிப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறி வைப்பது, தன் வாலிப கால விளையாட்டுகளை தம்பட்டம் அடித்துக் கொள்வது, எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஒரு கணவன் மனைவி சண்டையில், ஒருவரைப் பற்றி ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் எதிரிலேயே ஏசி சண்டை போடுவது, அல்லது தாயோ , தந்தையோ, அடுத்தவரைப் பற்றி குழந்தைகளிடம் சொல்லி அங்கலாய்ப்பது என பல இதில் அடங்கும்].

 

ஏற்கெனெவே சொல்லியது போல, இவ்வயதுப் பெண்களுக்கு ஒரு அசாதாரண துணிச்சல் வருவது நிஜம்.

 

அதன் ஆட்டத்தில், சற்று எல்லை மீறப்படுவதும் நிஜம்.

 

வரம்பு மீறி அடுத்த கட்டத்தை ஆபத்தின்றி அடைய முடியுமோ என்ற அசட்டுத் துணிச்சலில், கவனமின்றி தன்னைப் பறி கொடுத்து பின் விழிப்பது,

சேராத இடந்தனிலே சேர்ந்து கெட்டுப் போவது,

பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாவது,

கருத்தடை சாதனங்களை நம்பி, ஏமாந்து போவது.

 

இவையெல்லாம் இவர்களே தேடிக் கொண்டு நம்மை சோகத்தில் ஆழ்த்துபவை.

 

இப்படி மேலே கூறிய ஏதோ ஒன்றினால் கர்ப்பம் ஆன பின்பு நாம் செய்யக் கூடியது என்ன?

 

வழக்கமாக நாம் பார்ப்பது, அடி, உதை, திட்டு, கருக்கலைப்பு, அல்லது தற்கொலை இவையே!

 

இவற்றால் என்ன பயன்?

யாருக்கு லாபம்?

நேரடியாக இதை அணுக வேண்டிய முறை என்ன?

 

இது சம்பிரதாய ரீதியிலோ, சமூக ரீதியிலோ அனைவராலும் ஒப்புக் கொள்ள முடியாத சில எண்ணங்கள்.

 

அவரவர் நிலைமைக்கேற்ப ஏற்றுக்கொள்வதோ, ஒதுக்குவதோ உங்கள் உரிமை.

 

இதற்கான வழிமுறைகள் என்னென்ன?

 

1. கருக்கலைப்பு, [abortion], பொதுவாக நிகழ்வது.

 

காதும் காதும் வைத்த மாதிரி நடத்திட முடியும் என்பதால் அதிகமாக செய்யப்படுவது இதுவே.

உடற்கூறாக ஒரு சில தகாத விளைவுகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தக் கூடும்.

ஆனால், ஒரு தேர்ந்த மருத்துவரின் கையில் இது மிக எளிமையாக, சிரமமின்றி முடியும்.

மனோ ரீதியான, தார்மீக ரீதியான காரணங்கள் இதற்குத் தடையாகப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

 

ஆனால் குடும்ப மானம் என்ற ஒன்றைக் காட்டியோ அல்லது இது கற்பழிப்பு என்னும் அநாகரீகமான செயலின் மூலம் விளைந்தாலோ இதைச் செய்வதில் தவறில்லை.

 

2. இரண்டாவது, குழந்தை பெற்று தாமே வளர்ப்பது.[Parenting]

 

இதற்கு மிகுந்த மனத்திடமும், நம்பிக்கையும், அன்பும் வேண்டும்.

இது நியாயமான முடிவு பெரும்பாலான நிகழ்வுகளில் என்றாலும், பெண்ணின் வயது, சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் சம்பந்தப் பட்டவரின் முழு ஒப்புதல் இதற்குத் தேவை என்பதால் அதிகமாகப் பரிசீலனைக்கு உட்படாத ஒன்றாகவே இது போய் விடுகிறது.

எந்த ஒரு நிகழ்வுக்கும் தாம் பொறுப்பேற்க நினைப்பவர் செய்ய வேண்டியது இது தான் என்பது என் கருத்து.

 

ஆனால், இதுவும் கற்பழிப்பு மூலம் நிகழ்ந்திருந்தால் அல்லது ஒரு சில நோய்கள் வர வாய்ப்பிருந்தால் கருச்சிதைவே இதை விட நல்ல வழி.

 

3. இன்னும் சில நேரங்களில், குழந்தை பெற்று அதை ஒரு காப்பகத்தில் விடுவதும் [adoption] ஒரு வழியாக இருக்கிறது.

 

இது நம்மை உளவியல் ரீதியாக சமாதானம் செய்துகொள்ளும் ஒரு நிகழ்வு.

குழந்தையையும் சாகடிக்க வில்லை!

தானும் வளர்க்கவில்லை !

இதுவும் சிறந்த வழியே.

 

இதை எல்லாம் எடுத்துச் சொல்வதில்தான் உங்கள் பங்கு வருகிறது.

 

ஏற்கெனேவே, அவமானத்தாலும், குற்ற உணர்வாலும் குன்றியிருக்கும் அந்தப் பெண்ணைத் திட்ட முற்படாமல், இதைப் பற்றி விவரமாக, தெளிவாக, நிதானமாகப் பேச வேண்டும்.

 

அவர்களுக்கு உங்கள் கண்டிப்பு இப்போது தேவையில்லை.

அதற்காக இதை அப்படியே மன்னித்து ஒதுக்கிடவும் வேண்டாம்.

 

வீட்டில் சில கடுமையான கட்டுப்பாடுகள் வந்தே ஆக வேன்டும், இவருக்கும், மற்றவர்க்கும்.

 

முறையான பாலியல் அறிவுடன், இதுவரை சொல்லியபடி, ஆரம்ப முதலே வளர்த்து வந்தால் முக்கால் வாசி பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

 

இவர்களது எதிர்காலக் கனவுகளும், திறமையும் இந்த ஒரு நிகழ்வினால் பாதிக்காத வண்ணம் செயல் படுதல் முக்கியமான ஒன்று.

 

'சொல்லுதல் யார்க்கும் எளிதாம்' என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இங்கே நான் சொன்னது ஒரு பொதுப் படையான கருத்தே அன்றி, இப்படித்தான் என வலியுறுத்தும் ஒன்றல்ல.

 

பதிவு நீண்டு விட்டதால்,....

 

அன்புடனும், அறிவுடனும், பொறுமையாக இதை அணுகி நல்ல முடிவு எடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

அடுத்து இதே நிலையில் இருக்கும் ஆண் பிள்ளையை எதிர் கொள்வது எப்படி என்பதையும், மணமுடித்த பிள்ளைகளின் வாழ்வில் உங்கள் பங்கு என்ன என்பதையும் பார்ப்போம்.