Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் “பாலியல் கல்வி – பெற்றோருக்கு”

“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” [10]

  • PDF

“உறவுமுறைப் பாலியல் கொடுமை" --[தொடர்ச்சி]
சென்ற பதிவில் “உறவுமுறைப் பாலியல் கொடுமை" என்ற ஒரு அவலத்தைப் பார்த்தோம். 
பலருக்கு இதை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கமோ தெரியவில்லை, பின்னுட்டங்கள் பொதுவாக இதனைத் தவிர்ப்பதிலேயே,...... இது பற்றிப் பேசுதலைத் தவிர்ப்பதிலேயே நோக்கமாய்க் கொண்டிருந்தன.
இது இல்லை, இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் யோசிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.
இது பரவலாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுதான், எல்லா நாடுகளிலும்.
தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
“என்னடீ குட்டிப்பொண்ணே” என்றபடி சிறு பெண்களின் தொடையையும், இடுப்பையும் கிள்ளும் வயதானவர்களும் , 
சத்தமின்றி முத்தமிட்டு, முத்தம் கொடுக்க வற்புறுத்தும் பெரியவர்களும் 
இந்த வகையைச் சேர்ந்தவர்களே!
பெரும்பாலும், சிறுமிகள்தான் இதில் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் என்பது உண்மையென்றாலும், சிறுவர்களும் இதிலிருந்து தப்புவதில்லை.
அதே நேரத்தில் இன்னொன்று சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆண்கள்தான் இதில் அனேகமாக குற்றவாளிகள் என்பதும், ஆனால், அதே நேரம், பெண்களும் இந்தக் கொடுமையை நிகழ்த்துகிறார்கள் பாலரிடம் என்பதும் ஆராயப்பட்டுக் கண்டு கொண்ட உண்மைகள்.
பாலுணர்வு என்பது இருபாலருக்கும் பொதுவான ஒன்றுதான் என்றபொழுதில், இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை தானெனினும், இது சிலரால் இன்னமும் நம்பப்படாத ஒன்றுதான்.
இதன் மூலம் வாழ்க்கையைத் தொலைத்த பெண்டிரை நான் மருத்துமுறையில் சந்தித்திருக்கிறேன்.
இதைச் சொல்வது எதற்கென்றால், இப்படி இருக்காது என எதையும், யாரையும் ஒதுக்கிட வேண்டாம் என்பதற்கே.
என்ன செய்யலாம் பெற்றோர்கள்; என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் சற்று பேசலாம்.
சாதாரணமாக, இது பற்றி குழந்தைகள் புகார் செய்வதில்லை.
பயம், நாணம், வெட்கம், அவமானம், வயது காரணமாகவோ அல்லது இதனைப் பற்றி அதிகம் தெரியாததாலோ இந்த நிலைமையின் தீவிரம் புரியாமை, அச்சுறுத்தலுக்கு அடி பணிதல், 
நம்மை யார் நம்புவார்கள் என்ற சந்தேகம், 
நம்மைத்தானே குறைவாகப் பேசுவார்கள் என்ற கழிவிரக்கம்,
நாம் ஏன் இதை அப்போதே சொல்லவில்லை; சொல்லியிருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாமே என்ற குற்ற உணர்வு, 
போன்ற பல்வேறு காரணங்களால் சிறுவர், சிறுமியர் இது பற்றி பேசாமல் போகலாம்.
ஆனால், சற்று உஷாரான பெற்றோர்கள் இக்குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்படுகின்ற ஒருசில மாற்றங்களை விரைவில் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது உங்கள் சொத்து; உடைமை, உரிமை; பெருமை.
இது சீரழிய நீங்கள் விடக்கூடாது.
சகஜமாகப் பேசிப், பாடி, ஓடி ஆடிக்கொண்டிருந்த குழந்தையின் நடவடிக்கைகளில் ஒரு சோர்வு தென்படும். 
ஒரு சிலரை…... குற்றம் இழைக்கும் அந்த ஒரு சிலரை….. தனி இடங்களில் தவிர்க்க முற்படுதல், 
பொது இடங்களில் கண்டு பயப்படுதல் அல்லது வெறுத்து ஒதுக்குதல், பாடங்களில் கவனம் குறைதல், 
சாப்பாடு சரியாகச் சாப்பிடாதிருத்தல் 
போன்ற நிகழ்வுகள் ஒரு தாய் அல்லது தந்தையிடம் ஒரு கவனிப்பை உண்டு பண்ண வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாய், ............
இது ஒருவித பிடிப்பை உண்டு பண்ணுவதால், 
மேலே சொன்னவற்றிற்கு நேர்மாறான போக்குகளும் கூட இக்குழந்தைகளிடம் தென்படலாம். 
அதுவும் ஆபத்தான அறிகுறிகளே.
திடீரென "அந்த ஒரு" உறவுக்காரரிடம் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ளுதல், 
அவரை/அவளைச் சீண்டுதல், 
காரணமின்றி சில பரிசுப்பொருள்களோ அல்லது அதிக சலுகைகளோ கிடைத்தல்/ எதிர்பார்த்தல் 
போன்ற நிகழ்வுகளைப் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
புரியும் என நம்புகிறேன்.
குறிப்பிட்ட சிலரைப் பற்றி ஏற்கெனவே உறவுமுறைகள் மூலமாக ஒரு சில செய்திகள் நமக்குக் கிட்டியிருக்கும்.
அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.
குழந்தையின் நடவடிக்கைகளை முதலில் சாடைமாடையாகப் பார்த்து வந்து, சந்தேகம் தோன்றும்படி ஏதேனும் தெரிய வந்தால், உடனே ஆவன செய்யத் தயங்க வேண்டாம்.
என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் , பலர் இங்கு தவறி விடுகிறோம்.
இதனை, வெறித்தனமாக எதிர்கொண்டால், வெகு விரைவில் உங்கள் குழந்தையை நீங்கள் இழக்க நேரிடும்….... இரு வகைகளில்!
ஒன்று, துடுக்குத்தனம் மிகுந்த, உங்களிடமிருந்து விலகிச் செல்லும் ஒரு குழந்தையோ, 
அல்லது, 
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையோ தான் உங்களுக்கு மிஞ்சும்.
தெரிந்து செய்கின்றனரா, இல்லை அறியாமல் செய்கின்றனரா எனக் கண்டுகொள்ளல் மிக, மிக முக்கியமான ஒன்று.
முதல் வகைக் குழந்தைகளை, 
பிரச்சினையின் தீவிரத்தைப் பற்றியும், இதனால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, ஒரு தகுந்த மனநிலை மருத்துவரிடம் கூட்டிச் சென்று, மாற்று ஏற்பாடுகள் செய்து புரிய வைக்க வேண்டும்.
முடிந்தவரை, அன்பாகவும், ஒரு நண்பனாகவும் நடத்தி இதனைச் செய்வது பலன் தரும்.
அதே நேரம், இதில் நீங்கள் உறுதியாய் இருக்கிறீர்கள், ஒரு சிலவற்றை இழக்கவும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை சற்று ஆழமாக இவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.
குற்றவாளியை இவர்கள் எதிரில் எதிர் கொள்ள வேண்டாம்.
தானும் அதில் உடந்தை என்பதால், ஒரு வித இரக்கம் தோன்ற வாய்ப்பிருக்கிறது.
இது என்னவெனத் தெரியாமல், இதற்கு ஆட்படுத்தப்பட்ட இரண்டாம் வகையினரைத் திருத்துதல் சற்று சுலபம்.
இதில் என்ன தவறு நிகழ்ந்திருக்கிறது, இதனால் என்னவெல்லாம் ஆகக் கூடும், ஆகியிருக்கலாம் என்பதைச் சொன்னாலே பெரும்பாலான குழந்தைகளை வழிக்குக் கொண்டுவந்து விடலாம்.
அன்பும், கண்டிப்பும், பரிவும் கலந்த ஒரு வழியில் இவர்களை எதிர் கொள்ள வேண்டும்.
குற்றவாளிகள் கண்டிக்க, தண்டிக்கப் படுவது இவர்களுக்குத் தெரிவது ஒருவித தன்னம்பிக்கையை இவர்களுக்குக் கொடுக்கும்.
இறுதியாக ஒரு எச்சரிக்கை!
எக்காரணம் கொண்டும், குற்றவாளிகள் தப்பிச் செல்ல விடாதீர்கள்.இவர்கள் சமூக விரோதிகள்.நம் குழந்தையைக் காப்பாற்றிய வரை கவலை விட்டது என விட்டுவிடாதீர்கள்.
சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, எடுக்க முடியுமோ, அத்தனையும் செய்து விட வேண்டும் இவர்களுக்கு.
அடுத்த குழந்தை கிடைக்க அதிக நேரம் ஆகாது இவர்களுக்கு.
ஐயோ பாவம் என்றோ, அல்லது நமக்குத்தானே அவமானம் என்றோ மட்டும் விட்டுவிட வேண்டாம்.
ஒரு மிகப் பெரிய சமூகப் பொறுப்பிலிருந்து தவறி விடுகிறோம், இப்படிச் செய்யாததால்.
தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் குழந்தைகள் திருந்தி வரும்போது, தவறிழைத்தவனும் தண்டிக்கப்பட்டான் என்பது மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் .
பல விஷயங்களை, பதிவின் கண்ணியம் கருதி, பொதுவாகவும், மேலோட்டமாகவும் சொல்லியிருக்கிறேன்.
இது பற்றி அதிக விவரம், எவருக்காவது தேவைப் பட்டால், தனி மடல் இடவும் அல்லது தகுந்த மருத்துவரை நாடவும்.
பருவம் அடைந்த பாலரின் பெற்றோர் அறிய வேண்டிவற்றை இனிப் பார்க்கலாம்.