Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பொருளாதார நெருக்கடி : எரிகிற வீட்டிலும் பிடுங்கும் வக்கிரம்

பொருளாதார நெருக்கடி : எரிகிற வீட்டிலும் பிடுங்கும் வக்கிரம்

  • PDF

 "எதைத் தின்றால் பித்துத் தெளியும்?'' இந்தக் கேள்விதான் இப்பொழுத் மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் குடைந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் வங்கியில் இருந்து 2,60,000 கோடி ரூபாய் சந்தையில் கொட்டி விட்டோம்; முதலாளிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியையும் இயன்றவரைக் குறைத்து விட்டோம். ஆனாலும், பங்குச் சந்தை சரிந்து கொண்டே போகிறதே எனத் திகைத்துப் போய் நிற்கிறார்கள், அவர்கள்.


 பங்குச் சந்தைக் சரியச் சரிய, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் (நவ. 22 நிலவரப்படி  ரூ. 50.20) சரிந்து கொண்டே போகிறது. தரகு முதலாளிகளோ சந்தையில் பணத்தை இன்னும் கொட்ட வேண்டும்; வட்டியை இன்னும் குறைக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இதற்கு மேலும் பணம் வேண்டும் என்றால், அரசு வங்கிகளின் சாவிகளை அம்பானிடாடாவிடம் ஒப்படைத்துவிடுவது தவிர வேறு வழியில்லை.


 இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில், தரகு முதலாளிகள் இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். "முறை சார்ந்த தொழில்களில் 25 முதல் 30 சதவீதம் வரையும்; மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் 50 சதவீதம் வரையும் வேலையிழப்பு ஏற்படும்'' எனத் தரகு முதலாளிகளின் சங்கமான அசோகாம் அறிக்கை வெளியிட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல்மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருப்பதால், காங்கிரசு கும்பல் இந்த அறிக்கையால் ஆடிப்போனது. தரகு முதலாளிகளை அழைத்துச் சமரசம் பேசினார், பிரதமர் மன்மோகன் சிங். அவர்களோ, தொழிலாளர்களைப் பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு, கைமாறாக என்ன தருவீர்கள் எனப் பேரம் நடத்தினார்கள். பகிரங்கமாகவும், பச்சையாகவும் நடந்த இப்பேரத்தையடுத்து, அரசுத் துறை வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக கடனுக்கான வட்டியை மேலும் குறைப்பதாக அறிவித்தன.


 ஆனாலும், இந்தியப் பொருளாதாரம் சண்டிக் குதிரையைப்போல எழுந்து நிற்கவே மறுக்கிறது. அமெரிக்க  ஐரோப்பியச் சந்தைகளை நம்பி இயங்கிவரும் அனைத்துத் துறைகளும் இப்பொழுது கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன.


 · திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழில், 200809 ஆம் ஆண்டில் 20 முதல் 30 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும்; இதனால் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் கூறியிருக்கிறார்.


 · குஜராத்திலுள்ள சூரத் நகரை  மையமாகக் கொண்டு இயங்கும் வைரப்பட்டைத் தீட்டும் தொழிலில் ஏறத்தாழ ஏழு இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். "சூரத்தின் வைர உற்பத்தியில் ஏறத்தாழ 50 சதவீதம் அமெரிக்காவுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுவதால், இத்தொழில் 20 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும்; இதனால் 25,000 முதல் 35,000 தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்'' என மதிப்பிடப்பட்டுள்ளது.


 · கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் முந்திரி, மசாலாப் பொருட்கள், தேங்காய் நார் தயாரிப்புகள், கைத்தறி ஆடைகளுக்கு அமெரிக்காதான் முக்கியமான ஏற்றுமதி சந்தை என்பதால், இத்துறைகள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்படும்  என்கிறார், சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலர் பினரய் விஜயன்.


 · மென்பொருள் ஏற்றுமதி மற்றும் அயல்பணி ஒப்படைப்பு ஆகிய துறைகளில் ஏறத்தாழ 2,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு(ரூ.1,00,000 கோடி ரூபாய்) வியாபார இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் எத்தனை ஆயிரம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்பது மட்டும் ""இரகசியமாக'' வைக்கப்பட்டுள்ளது.


"இந்த நெருக்கடி தங்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்து விடும்'' என இத்துறையின் ஜாம்பவான்கள் கூறிக் கொண்டாலும், இன்ஃபோசிஸ், சத்யம், விப்ரோ ஆகிய நிறுவனங்களில் புதிதாக ஊழியர்களை நியமிப்பது 40 சதவீதம் வரை அடிபட்டு போகும் என ""பிஸினஸ் வேர்ல்டு'' என்ற ஆங்கில வர்த்தக இதழ் குறிப்பிடுகிறது. கடந்த பிப்ரவரிக்குப் பிறகு, டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், ஐ.பி.எம்., ஹெச்.பி., யாகூ, பத்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களில் மட்டும் 28,000 ஊழியர்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளனர்.


"எஃகு, சிமெண்ட், தகவல் தொழில் நுட்ப சேவைகள், கட்டுமானத் தொழில்களில் வேலையிழப்பு கடுமையாக இருக்கும்'' என்கிறது அசோகாம் அறிக்கை. "ஜவுளிஆயத்த ஆடைத் தொழிலில் ஏற்கெனவே ஐந்து இலட்சம் வேலையிழப்பு ஏற்பட்டுவிட்டது; அத்துறையில் இன்னும் ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்; 2009இல் பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள்  உருவாக்கும் வேலை வாய்ப்புகளில் மூன்று இலட்சம் வாய்ப்புகள் காணாமல் போகும்'' என்கிறது, "இந்தியாடுடே'' சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு. இதுபோக, நாடெங்கும் 10 இலட்சம் தினக்கூலித் தொழிலாளர் வேலையிழப்பார்கள் என்ற குண்டை பல்வேறு கருத்துக் கணிப்புகள்  தூக்கிப் போடுகின்றன.


 ஊழியர்களை வேலையைவிட்டுத் தூக்காத நிறுவனங்கள்; சம்பளமில்லா விடுப்பில் அனுப்புவது; ஊதியத்தையும் மற்ற பிற நலன்களையும் வெட்டுவது எனத் தந்திரமான வழிகளில் இறங்கியுள்ளன.


 வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்ற கிடுக்கிப் பிடிக்குள் மக்கள் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டுள்ளனர். மன்மோகன் சிங் இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களின் தவிப்பைக் கண்டு கொள்ளாமல், முதலாளிகளின் இலாபம் சரிந்து விழுவதைப் பற்றிக் கவலைப்படுகிறார்.


 140 அமெரிக்க டாலருக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, இந்த நெருக்கடிக்குப் பிறகு 60 அமெரிக்க டாலருக்கு கீழாகச் சரிந்துவிட்டது. இப்பொழுது எரிபொருள் விலையைக் குறைத்தால், பொருளாதாரச் சரிவு மட்டுப்படும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் கூட ஆலோசனை கூறிவருகின்றனர். ஆனாலும், மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க மறுத்திருக்கிறார், மன்மோகன் சிங்; அதே சமயம், விமானங்களில்பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலையை ரூ. 71028/லிருந்து ரூ. 39380/ஆகக் குறைத்து, தனியார் முதலாளிகளுக்குக் கருணை காட்டியிருக்கிறார்.


 நிதிச் சந்தையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தனியார் புகுந்து விளையாட அனுமதிக்கப்பட்டதால்தான், அமெரிக்காவில் வீட்டுக் கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் பொருளாதார நிபுணர்கள், இப்பொழுது அரசு நிதிச் சந்தையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், மன்மோகன் சிங்கோ இப்படிப்பட்ட சமயத்தில், இந்திய காப்பீடு துறையில் அந்நியப் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனம் போடுவதற்கு இருந்த வரம்பை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தி, பன்னாட்டுச் சூதாட்டக் கும்பலுக்கு ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறார்.


 முதலாளிகளுக்குச் சலுகைளை வாரி வழங்கினால், அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் சொட்டுச் சொட்டாகத் தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் வந்தடையும் என்ற தாராளமயக் கொள்கை பெருந்தோல்வியில் முடிந்து விட்டதைத்தான் இந்த நெருக்கடி உணர்த்துகிறது. ஆனால், மன்மோகன் சிங்கோ, அமெரிக்கா சொல்லிக் கொடுத்த அதே செக்குமாட்டுப் பாதையில்தான் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்.


 இந்த நெருக்கடி பற்றியும், மக்களின் சுமை பற்றியும் முதலைக் கண்ணீர் விடாத எதிர்க்கட்சிகளே கிடையாது. ஆனால், அவர்களிடம் மன்மோகன் சிங் நடைமுறைப்படுத்திவரும் தனியார்மயம்  தாராளமயத்திற்கு மாற்றான பொருளாதாரத் திட்டமோ, கொள்கையோ உண்டா? தனியார்மயம் தாராளமயத்தை எதிர்ப்பதாகக் கூறும் போலி கம்யூனிஸ்டுகள் கூட, அவர்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் தனியார்மயத்திற்குத் தான் வால் பிடிக்கிறார்கள் என்றால், மற்ற முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


 பொதுமக்கள், தேர்தல், ஓட்டுக்கட்சிகள், தனியார்மயம்  தாராளமயம் என்ற செக்குமாட்டுத்தனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய தருணமிது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் முன் வைக்கும் அரசியல்பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு போராட வேண்டிய வேளையிது!


· குப்பன்

Last Updated on Wednesday, 31 December 2008 06:59