Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

என்.எல்.எப்.ரியின் வரலாறு

  • PDF

ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நேரத்தில் தமிழ் ஈழ தேசிய விடுதலை முன்னணி ஆரம்பம் முதலே ஒரு இடதுசாரி கருத்தை முன்வைத்து இருந்தபோதும் என்.எல்.எப்.ரி இப் போராட்டத்துக்கு தலைமை தாங்க முடியாமல் போனது ஏன் என ஆராய்வது அவசியம் என்ற அடிப்படையில் இக் கட்டுரையை வெளியிடுகிறோம்.

 

என்.எல்.எப்.ரி இன் கடந்த காலம் பற்றி ஆய்வு வருங்காலப் போராட்டத்தின் ஒவ்வொரு அடிக்கும் மிக மிக அவசியமானது. தேசிய எழுச்சிக்காலத்தில் 30க்கு மேற்பட்ட இயக்கங்கள் தோன்றியிருந்தன். அவைகளுக்குள் தோன்றிய இடதுசாரி இயக்கங்களுக்குள் ஆரம்பத்திலிருந்தே என்.எல்.எப்.ரி உறுதியான இடதுசாரிப் போக்கை கடைப்பிடித்தது. இதைத் தவிர பி.எல்.எப்.ரி, தீப்பொறி, பாசறை என்பன 1985 பிந்தைய ஆண்டுகளில் உருவாகியிருந்தன. இவை தவிர பாதுகாப்பு பேரவை, றெலா(RELO) என்பன குறிப்பிடத்தக்கன, இதில் பி.எல்.எவ்.ரி என்ற அமைப்பு என்.எல்.எப்.ரி யிலிருந்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது. தீப்பொறி பிளாட்டிலிருந்து தப்பி வந்த பொழுது என்.எல்.எப்.ரி பாதுகாப்பு வழங்கியதுடன் தீப்பொறியின் ஆரம்ப வளர்ச்சிக்கும் என்.எல்.எப்.ரி உதவியது. ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த என்.எல்.எப்.ரி அரசியல் ரிதீயில் வளர்ச்சி பெற்று, அரசியல் அதிகாரத்தை பெறாமல் போனதுடன், ஒரு சிறு அமைப்பாக கூட மண்ணில் இன்று இல்லாமல் போயுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்வதுடன், அதன் படிப்பினைகளை ஆராய்வது, மீண்டும் என்.எல்.எப்.ரி விட்ட தவறுகளை வருங்காலத்தில் வேறொரு அமைப்பும் விடாமலிருக்க உதவும். அவ்வகையில் இவ் வரலாற்று கட்டுரை அமையும்.

கடந்த கால போராட்டத்தில் என்.எல்.எப்.ரி இன் அரசியல் வழிகளுக்கு அப்பால் தனிநபர்களின் பாத்திரங்கள், அவர்களின் ஆளுமைகள் எப்படி காலத்திற்கு காலம் இயக்கத்தை மாற்றி சென்றது, அவை தொடர்பான ஒரு பார்வையும் தனிநபர்களின் குணநலன்களுடன் எப்படி சம்மந்தப்பட்டது என்பதையும் இக் கட்டுரை ஆராயும். இங்கு தனிநபர்களை புனைபெயராகவும், இறந்தவர்களின் பெயர்களை சொந்தப் பெயர்களிலும் தந்து இக் கட்டுரையை வரைகிறோம். இக் கட்டுரையை எழுதும் பொழுது கட்டுரையாளர்களின் அபிப்பிராயத்தை விட்டு, நிகழ்வுகளையும் சம்பவங்களையும் முழுமையாக தர முயற்சிக்கிறோம்.

 

நினைவுக்குட்பட்டவை யாவும் முழுமையாக தொகுக்க முனையும் எமது முயற்சியில் சம்பவங்கள் சில விடுபட வாய்ப்பு உண்டு. என்.எல்.எப்.ரி யின் அரசியல் கோசங்கள் முழுமையாக அரசியல் திட்டம் என்பன இக் கட்டுரையில் முன்வைக்க முடியவில்லை. அவை தொடர்பான வெளிவந்த வெளியீடுகள் இல்லாமையே காரணமாகும். இருந்தபோதும் ஒரு பார்வையை தரும் வகையில் கருத்துக்களை இக் கட்டுரை கொண்டிருக்கும். இக் கட்டுரை அதிக கூடிய பாதுகாப்பு உணர்வுக்கும், எதிர்காலத்தில் இதிலிருந்த நபர்களை பாதிக்காத வகையிலும் போராட்டத்திற்கு பங்கம் ஏற்படாத வகையிலும் எழுதப்படுகிறது.

 

1981-முதல் என்.எல்.எப்.ரி யின் வரலாற்றை ஆய்வுக்கு முன்னெடுத்துள்ளோம். அதற்கு முந்திய ஆய்வு தொடர்பானவை முன் வைக்க முடியாதுள்ளது. அவை பற்றிய முழுமையான தகவல் இல்லாமையே. தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் 1981-1982-1983 இல் இயங்கிய இவ்வியக்கம் 1983இன் இறுதியில் என்.எல்.எப்.ரி (தமிழீழ தேசிய விடுதலை முன்னணி) என பெயர் மாற்றப்பட்டது.

 

1981-இல் ஒரு மத்திய குழுவை, ஒரு பிரதேசக் குழுவை இவ் இயக்கம் கொண்டிருந்தது. மத்திய குழுவிலிருந்த பலர் இடதுசாரி இயக்கத்திலிருந்து களைந்து போன உறுப்பினர் ஆகி முற்றாக செயல்படாத நபர்களாக இருந்தனர். எப்பொழுதாவது கூட்டப்படும், கூட்டப்படாத மத்திய குழு வெறும் பொழுது போக்கு இயக்கமாகவே இருந்தது. மத்திய குழுவிலிருந்த விசுவானந்ததேவன் மட்டுமே சுயாதீனமாக செயற்படும் ஒரு உறுப்பினராக இருந்தார்.

 

அவர் சுயாதீனமாக இயங்கி பல புதிய தொடர்புகளை ஏற்படுத்தினார். அவர் தீவிர இயங்கு சக்தியாக செயற்பட்ட முழுநேர உறுப்பினர். இவர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக கடமையாற்றியவர். இவர் தமிழ் தேசிய எழுச்சியில் மேலெழுந்து வந்த இளைஞர்களை வென்றெடுத்தார். இந்த வகையில் அவரின் கருத்துக்களை கவர்ந்தவர்களை கொண்டு ஒரு பிரதேசகமிட்டியை உருவாக்கினார். இதில் ஜவர் இருந்தார்கள். அவர்கள் குமரன், ஜோர்ச், ராகவன், நிமால், (கட்டுரையாளர் கொடுத்த பெயர்) அன்ரன், ஆகியோரே. இக் குழுவே அரசியல் வேலை செய்து வந்தது. இதில் தீவிர அரசியல் செயற்பாட்டை விசுவானந்ததேவனும், குமரனும், ஜோர்ச்சும் செய்தனர். இவர்களே அரசியல் வகுப்புக்களையும் எடுத்து வந்தனர்.

 

1982 இல் சுந்தரம் படுகொலை தொடர்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டி அக்காலத்தில் பலரைப் பாதித்தது. அச்சுவரொட்டி உரிமை கோராமல் ஒட்டப்பட்டிருந்தது. அச் சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் எனத் தெரியாத நிலையில் அதிலிருந்த சொற்தொடர்களை வைத்து பிழையாக சக்திகள் வளர வழி வகுத்தது. அதன் பின் பிளாட்டுக்கு சென்ற பலரில் அச் சுவரொட்டியின் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் பலர் இருந்தனர்.

 

ஏன் என்.எல்.எப்.ரி யில் இணைந்த சிலருக்கு கூட அச்சுவரொட்டியின் தாக்கத்தினால் பிளாட் மீது ஒரு மயக்கம் இருந்தது. இச் சுவரொட்டியை என்.எல்.எப்.ரி யே அன்று ஒட்டியிருந்தது. ஒரு கொலையை அம்பலப்படுத்தல் சரியானதேயாகும். ஆனால் கொலை செய்யப்பட்டவரின் அரசியல் அவர் இருந்த இயக்கத்தின் தன்மையை அச் சுவரொட்டியில் அம்பலப்படுத்தியிருப்பின் அச்சுவரொட்டி சரியான சக்திகளை வளர வழி வகுத்திருக்கும்.

 

1981-82-83- விசுவானந்ததேவனின் அனுசரணையுடன் ஒரு கலைக்குழு செயற்பட்டது. இக்குழு திருவிழா என்ற நாடகத்தை மேடையேற்றியது. இத் திருவிழா நாடகம் அன்று தமிழர் விடுதலை கூட்டணியையும் அம்பலப்படுத்துவதில் பெரும் பங்களிப்பை செய்தது. சிங்கள, தமிழ் இனவாதத்தை அம்பலப்படுத்தியது. இந் நாடகம் 30 க்கும் மேற்பட்ட தடவை மேடையேறியது. இக் கலைக்குழுவில் 15க்கும் மேற்பட்டோர் இயங்கு சக்தியாக இருந்தனர். இதில் பலர் என்.எல்.எப்.ரி என தம்மைத் தாமே அல்லது விசுவால் இனம் காட்டப்பட்டனர். இக் குழுவிற்கு பிளாட்டினால் சுட்டுக்கொல்லப்பட்ட இறைகுமாரன், உமைகுமாரன் ஆகியோர் உதவி வந்தனர். தெல்லிப்பழையில் திருவிழா நாடகத்தை கூட்டணியினர் திட்டமிட்டு குழப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் முன்னணியில் நின்ற நபர் பின் கூட்டணியின் இராணுவ அமைப்பான -T.E.N.A. (தமிழீழ தேசிய இராணுவம்) வின் முக்கிய உறுப்பினர். இன் நிகழ்வைத் தொடர்ந்து சிவமகாராசா, யோகஸ்வரன் எம்.பி போன்றோர் தலையிட்டு பேச்சுவார்த்தை செய்து நாடகத்தை நிறுத்த முயன்றனர். பின் மிரட்டியும் பார்த்தனர். இது போன்று வடமராட்சியில் நாடகத்தை குழப்பவும் முயன்றனர்.

 

இந் நாடகக்குழு உறுப்பினர்களில் சிலரை என்.எல்.எப்.ரி உறுப்பினர்களென விசு வரையறுத்திருந்தார். அதில் சிலர் என்.எல்.எப்.ரி யில் வகுப்புகள் எடுத்தனர். அன்று புதிதாக இணைந்தவர்களின் அரசியல் இன்மையும் இவர்களின் வாய்ச்சவடால்களும் மொத்தத்தில் எந்த அரசியல் வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. இதிலிருந்த சில நபர்கள் வாய்ச்சவடால்கள் மட்டுமன்றி பிரமுகர்களாக இருந்ததுடன், மிக மோசமான நபர்களாகவும் இருந்தனர். ஒரு முறை வவுனியாவிற்கு நாடகம் மேடையேற்றவென வானில் சென்ற இக் குழு காங்கேசந்துறை சந்தியில் ஒரு விபச்சாரப் பெண்ணைக் கண்டு அவளை வானில் ஏற்றி யாழ் வரை கொண்டு சென்றனர். அப்பெண்ணுடன் தகாத முறையிலும் நடந்து கொண்டனர். பின்னொரு முறை அந் நாடகக் குழுவிலிருந்த ஒருவர், ஒரு பெண்ணைக் கூட்டி வந்த போது அப் பெண்ணுடன் ஏழுபேர் தொடர்பு கொண்டனர். இந்த நபர் இன்று (2001 இல்) புலிகளுக்காக லண்டனில் செயற்படுகின்றார். இந் நிகழ்வுகள் என்.எல்.எப்.ரி யிற்கோ விசுவானந்ததேவனுக்கோ தெரிந்திருக்கவில்லை. இச் சம்பவங்கள் பின் சிறியென்பவரால் கண்டறியப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டது. இவர்களது மார்க்சிச வாய்ச்சவடால்கள், இலக்கியம், கவிதைகள், புதிசு இலக்கிய சஞ்சிகை. திருவிழா நாடகம் ஆகியவற்றின் மூலம் தம்மை புரட்சியாளர்களாகக் காட்டி நாடகமாடினர். என்.எல்.எப்.ரி யில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருந்தனர்.

 

1981ல் விசுவானந்ததேவன் சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த காலத்தில் சிறியென்பவருடன் தொடர்பு கொண்டிருந்தார். சிறி மார்க்சிச அறிவெதுவும் இல்லாத நிலையில் மார்க்சிசத்தின் மீதான பற்று அடிப்படையாகவிருந்தது. சிறியிடம் பிளாட் பற்றிய மயக்கம் காணப்பட்டது. முன்பு சுந்தரம் பற்றி ஒட்டிய சுவரொட்டியின் பாதிப்பு முக்கியமானது. இது தொடர்பாக விசு பிளாட்டை விமர்சிக்காமல் சிறியின் போக்குடன் 1983 வரையில் இழுபட்டார். விசு நபர்களின் பிழையான இயல்புகளையும், அவர்களின் பிழையான அடிப்படைக் கருத்துக்களையும் விமர்சிக்காமல் இசைந்து போகும் வழியைக் கடைப்பிடித்தார். நபர்களின் பலவீனங்களை கண்டிக்கத் தவறினார். தான் சொல்லுவதை ஏற்றுக்கொள்பவர்கள் பிழையான கருத்தைக் கொண்டிருந்தும் அவர்களை அரவணைத்துக்கொண்டார். ஒரு சரியான அரசியல் அடிப்படையை விட தனது கருத்துக்கு மதிப்பு கொடுப்பவர்களை எப்பொழுதும் முன்னுக்கு கொண்டுவர முயன்றார்.

 

1981ல் சிறியென்பவரின் தொடர்பின் பின்னால், சிறி ஒரு தீவிர இயங்குசக்தியாக மாறினார். பல புதிய தொடர்புகளை வேகமாகப் பெற்றுக் கொண்டார். 1983ன் ஆரம்பத்தில் புதிதாக ரமணி என்ற ஒரு புதிய இயங்கு சக்தியை என்.எல்.எப்.ரி பெற்றுக் கொண்டது. மொத்தத்தில் தீவிர இயங்கு சக்தியாக குமரன், ஜோச், விசு, சிறி, ரமணி ஆகியோர் செயற்பட்டனர். ரமணியென்பவர் யாழ் மருத்துவக்கல்லூரி படிப்பை துறந்து முழுமையாக இயங்கினார். இந்த இயங்குசக்திகளின் வளர்ச்சியால் சிறியின் புதிய தொடர்புகள் இயக்கத்தை 83ல் பெரும் எண்ணிக்கையாக மாற்றியது. புலிகளின் அன்றைய உறுப்பினர்கள் 57 பேர் மட்டுமே. மற்றைய இயக்கங்களில் அதையும் விட குறைவானவர்களே. ஆனால் என்.எல்.எப்.ரி உறுப்பினர்கள் தீர்மானமாக வரைறுக்காமலேயே 200 பேர் மட்டிலிருந்தனர். இதைவிட பல புதிய ஆதரவாளர்களைக் கொண்டிருந்தனர்.

 

83 க்கு முன் என்.எல்.எப்.ரி அரசியல் செயற்பாட்டால் இரண்டு இலட்சம் ரூபா கடனிருந்தது. விசுவின் நம்பிக்கையாலும் அவர்களின் பெற்றோர்களின் சொத்துகளையும் அடைவு வைத்து பெறப்பட்டது. இத் தொகையைக் மீளக் கொடுப்பது மிக அவசியமாகவிருந்தது. இதைவிட வருங்கால அரசியல் செயற்பாட்டுக்கு பணம் மிக அவசியமாகயிருந்தது. இதைத் தொடர்ந்து நிதி சேகரிப்பதென முடிவெடுக்கப்பட்டது. 5, 10, 50, 100, 1000 ருபா பற்றுச்சீட்டுகள் சகிதம் 83ன் மத்தியபகுதியில் மக்களிடம் என்.எல்.எப்.ரி சென்றது. வீடுகள் தோறும் 5,10 ரூபாவாக சேகரிக்கப்பட்டது. இன் நடவடிக்கையில் சிறி, குமரன், ஜோச், ரமணி, மகேஸ்வரன் (இவர் புலிகளின் உளவாளியாக என்.எல்.எப்.ரி யில் இருந்தார். பின் புலிகளுடன் இணைந்தார்.) ஜெயா (இவர் பின் பிளாட்டில் இணைந்தார்) ரூபன் (கட்டுரையாளர் கொடுத்த பெயர்) தேவன் ஆகியோர் முன்னணியில் செயற்பட்டனர்.

 

இச் செயற்பாடு இருமாதங்களாக ஒவ்வொரு நாளும் 30க்கும் மேற்பட்டோர் மக்களிடம் சென்றனர். இந் நடவடிக்கையில் சிறியுடனிருந்த குழு அறுபது ஆயிரம் ரூபாவும், ரமணியும் வடமராட்சியிலிருந்தோர் இருபத்திநாலாயிரம் ரூபாவும், மொத்தமாக 84000 ரூபா சேர்க்கப்பட்டது. 83ல் புலிகளின் திருநெல்வேலி தாக்குதலைத் தொடர்ந்து நிதி சேகரிப்பு நிறுத்தப்பட்டது.

 

ஒரு பக்கத்தில் சிலர் தீவிர இயங்கு சக்தியாக இயங்கிய நிலையில் சிலர் இரகசியமாக எந்த செயற்பாட்டையும் செய்யாது இருந்ததுடன் இயக்கத்தின் திசைவழியை மாற்றும் நிலையிலிருந்தனர். இது 1983க்கு முன் மட்டுமல்ல பின்னால் கூட தொடர்ச்சியாகவிருந்தது. இந் நபர்கள் பிரதேச கமிட்டியிலும், மத்திய குழுவிலும், பின்னால் இராணுவக் குழுவிலும் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தனர். அமைப்பு இரகசியமாக இருக்க வேண்டும், எல்லோரையும் இனம் காட்டக் கூடாது எனச் சொல்லி, மாவோ காலத்துச் சம்பவங்கள் சிலதும் உதாரணத்துக்கு வைக்கப்பட்டது. அன்டன், இராகவன் 1983 க்கு முன் பிரதேசக்கமிட்டியில் இருந்தபொழுது எந்த அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. மாறாக இவர்கள் சிலரை மட்டும் சந்திக்கும் நிலையில் இருந்தனர். இது தொடர்பாக பின் விரிவாக ஆராய்வோம்.

 

1983க்கு முன் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி அரசியல் திட்டம் ஒன்றைக் கொண்டிருந்தது. இத் திட்டம் கடந்தகாலத்தின் அரசியல் நிலமைகளை சுட்டிகாட்டியிருந்தது. நிகழ்காலத்திற்கான வேலைமுறைகளை தெளிவாக வகுத்திருக்கவில்லை. இத் திட்டம் தமிழீழத்தை தனது தீர்வாக கொண்டிருக்கவில்லை. ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்வாக சுட்டிக்காட்டியிருந்தது. இத் திட்டம் சோசலிச அமைப்பை வழிவகுத்திருந்தது. ஆனால் எதிரிகளை தீர்க்கமாக வரையறுக்கவில்லை தேசியப் பிரச்சனையையும் அதற்கான தீர்வையும் திட்டம் கொண்டிருக்கவில்லை. ஒரு பொதுப்போக்காக கடந்தகாலம் நிகழ்காலம் பற்றி குறிப்பாக திட்டம் கொண்டிருந்தது. எப்படி வேலைசெய்வது, எந்த வர்க்கத்தை அணிதிரட்டுவது, நேச சக்திகள் யார்? எதிரிகள் யார்? எங்கு எமது பிரதான இலக்கு? இவை எதையும் திட்டம் வரையறுத்திருக்கவில்லை. ஆனால் நடைமுறை அனுபவத்தில் திட்டத்திற்கு வெளியில் இவை தொடர்பாக தீவிரமாக வேலை செய்தவர்கள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர். அவை கூட முழுமையாகவின்றி அனுபவத்தின் அடிப்படையாக வைக்கப்பட்டவையே.

 

1982ன் இறுதியில் பிரபா என்ற தீவிர இயங்கு சக்தி அமைப்புக்குள் அறிமுகமானார். இவர் முன்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியின் (ரொட்ஸ்கி) மத்திய குழு உறுப்பினராக கொழும்பில் வேலை செய்தவர். இவர் பின் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் போமனாக கடமையாற்றினார். 1983களில் அரசியல் வகுப்புக்களை பலர் எடுத்தனர். அவர்களில் பிரபா, ரமணி, ராகவன், விசு, நிமால், சபேசன், சேரன், கண்டிபாலன், ஜோச், வாத்தி, மாஸ்டர் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் புதிய தொடர்புகளுக்கு வகுப்புக்களை எடுத்தனர். இவர்களில் பலதரப்பட்ட கருத்துள்ளவர்களும் இருந்தனர். இது தான் என்ற ஒரு கருத்தின் மீது பெரும்பான்மைக்கப்பால் அவர்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

 

பல புதிய தொடர்புகள் தோன்றிய நிலையில் அரசியலை மிக வேகமாக கிரகித்துகொண்டே அரசியல் ரீதியில் செயற்படத் தொடங்கினர். அதேநேரம் அரசியலை கிரகிக்க முடியாதவர்கள் அல்லது ஏற்றுக்கொண்டு அரசியல் ரீதியில் செயல்படாதவர்கள் இராணுவத்துறையை வலியுறுத்தியவர்கள், அரசியலுடன் தொடர்பு இல்லாத வகையில் பிரிக்கப்பட்டு இரகசியமாக கையாளத் தொடங்கினர்.

 

அவர்கள் தொடர்பாக அரசியல் ரீதியில் வேலை செய்தவர்கள் தொடர்பு கொள்ளவோ என்ன செய்கிறார்கள் என அறிந்து கொள்ளவோ முடியாது. இது பிரதேசகமிட்டியில், மத்திய கமிட்டியில் வேலை செய்தவர்களுக்கும் பொருந்தும். அவர்களின் அரசியல் நடைமுறைரீதியில் மக்களிடம் செல்வதினூடாக சோதிக்கப்படவில்லை. இத் தொடர்புகளை அரசியலில் செயற்படாதவர்களே நேரடியாக கையாண்டனர்.

 

1981ன் இறுதியில் விசு, சிறி ஆகியோர் சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த காலத்தில் அங்கு நடந்த ஊழல், தொழிலாளரை வேலை நீக்கம் செய்தல் என்பவற்றுக்கு எதிராக இரகசியமாக வேலை செய்தனர். அங்கு பல தொடர்புகள் பெறப்பட்டிருந்தன. ஜெயமான என்ற அதிகாரியும் சில தமிழ் அதிகாரிகளும் இணைந்து செய்து வந்த அடக்குமுறை, ஊழலுக்குக்கெதிராக, இருமாத இடைவெளிக்குள் இரு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இது பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. இத் துண்டுப்பிரசுரம் அரசியல் ரீதியில் எதையும் சொல்லவில்லை. மாறாக சம்பவத்தை மட்டும் அம்பலப்படுத்துவதாகவிருந்தது. இதைத் தொடர்ந்து அநேகமாக விசு தான் வெளியிட்டிருக்கலாம் என கருதி வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரம் விசுவுடன் வேலை செய்த பாலனும் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரம் பொலிஸ் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டது. 1982ல் மகாஜனக் கல்லூரியில் நடைபெற்று வந்த ஊழலை அம்பலப்படுத்தி ஒரு துண்டுப்பிரசுரம் விசு, சபேசன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். மூவர் தேடப்பட்டனர்.

 

1982ல் விசுவும், சிறியும் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர். அங்கு நாபா, (E.P.R.L.F) வை சந்தித்தனர் அவர் ஒரு அழுக்கடைந்த சப்பாத்துடன் பழைய சேர்ட்டுடன் திரிந்தார். இக் காலத்தில் இலங்கை இராணுவத்தால் தேடப்பட்டார். அவரின் படமும் வெளியிடப்பட்டு, சன்மானத்தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவரின் எளிய வாழ்க்கை அவரின் அரசியலுக்கு அப்பால் பாராட்டுக்குரியது. பழக இனிமையானவராகவும், மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பவராகவும், தான் சாப்பிடாவிட்டாலும் இருக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்கக்கூடிய சிறந்த மனிதர். நல்ல மனிதர்களையும் பிழையானவர்களுக்கு உடந்தையாக மாற்றுவது அரசியலே. எந்த நல்ல மனிதனும் நடுநிலையாக இருக்க முடியாது என்பதற்கு நாபா ஒரு உதாரணம். விசுவும் சிறியும் அங்கிருந்து கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் சென்றனர். அங்கு தீபனை ((R.E.L.O) பொறுப்பாளர் சந்தித்தனர். தீபன் கட்டுரையாளர் கொடுத்த பெயர். நாபா போன்று நேசிக்கக்கூடிய ஒரு மனிதர். இவர் 1983ல் என்.எல்.எப்.ரி யில் இணையும் நிலையிலிருந்தார். அப்படி இணைந்திருப்பின் என்.எல்.எப்.ரி யின் பக்கங்கள் சில வேறுபாடு கொண்டதாகவும் பல சரி பிழைக்கப்பால் பலமான அமைப்பாக மாறியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். தீபனை இணையவிடாது சக்தி யென்பவர் (இவர் முன்னர் ஜே-வி-பி-இல் இருந்தவர்) செய்த முயற்சியும் தனியான இயக்கமொன்றை ஸ்தாபிக்கவும் செய்தார். இவர்களின் பிழையான அரசியல் இவர்களை இன்று கூட ஒரு சரியான அரசியல் சக்தியாக கணிப்பிட முடியாத நிலைக்கு இட்டு சென்றது.

 

1983இல் குறிப்பாக தீவிரமாக செயற்பட்ட உறுப்பினர்களுக்கு அப்பால் பல புதிய ஊர்மட்டங்களில் தீவிர செயற்பாடுகளுடன் உறுப்பினர்கள் இயங்கினர். இயக்கத்தை நோக்கி பல சக்திகளின் கோரிக்கைகள் பல தீர்க்கப்படாமல் எதுவும் முடிவுக்கு இட்டுசெல்ல முடியவில்லை. நாம் என்ன செய்வது? வெறுமனே கதைப்பதா? ஆயுதப்பயிற்சி தாருங்கள்? ஆயுதங்கள் எப்படி பெறப்போகிறீர்கள்? இயக்கங்களுடன் ஜக்கிய முன்னணி கட்டலாமே! இப்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு இயக்கம் பதிலளிக்கவில்லை. நடைமுறை ரீதியில் ஊர்களில் வேலை செய்தவர்கள் நெருக்கடிக்குள்ளாகினர். இதை விட தொடர்புகளை இழுத்துப் பிடிக்கும் நிலைக்கு இது இட்டுசென்றது.

 

 

Last Updated on Tuesday, 07 August 2018 09:59