Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் சுதந்திர சுரண்டல் வலையம்

சுதந்திர சுரண்டல் வலையம்

  • PDF

இலங்கையில் எழுபதுகளின் இறுதியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த மேற்குலகின் ஆசி பெற்ற யு.என்.பி. கட்சி தெற்கு ஆசிய வரலாற்றில் அதுவரை கேள்விப்பட்டிராத புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைத்தது. “சுதந்திர வர்த்தக வலையம்” என்ற ஒன்றை உருவாக்கி, வெளிநாட்டு நிறுவனங்களை தடையின்றி வந்து முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தது.

 குறைந்த விலையில் உழைப்பை சுரண்டுவதற்கு ஏற்ப, தனது தொழிலாளர்களை கொடுப்பதாக அறிவித்தது. ஒரு பக்கம் தனது நாட்டின் சிறுபான்மை தமிழ் இனத்தின் மீது இனவெறி தாக்குதல்களையும், மறு பக்கம் மொத்த ஏழை, எளிய மக்கள் மீதும் நவ -லிபரல் தாக்குதல்களையும் ஒரு சேர தொடுத்தது. உலகின் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் இனவா

தத்திற்கும், பொருளாதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். இன்றைய “உலக ஒழுங்கின்” முன்னோடி நாடான அமெரிக்காவில் கடந்த எட்டு வருட புஷ் ஆட்சியில் தான், ஒரு பக்கம் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லீம் சிறுபான்மை மீதான அடக்குமுறையும், அதேநேரம் வேலையில்லாப் பிரச்சினை, வறுமை, அந்நிய கடன் என்பன அதிகரித்துக் கொண்டே போனது.

காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளை பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலியாக, அல்லது நவகாலனித்துவ தொடர்ச்சியாக வெளிநாட்டு கடன், பொதுத் தேர்தல்கள் அமைந்துள்ளன. என்றோ ஒரு நாள் இந்த நாடுகள் தமது ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும் என்ற முன்நோக்கோடு பிரிட்டன் போன்ற நாடுகள் அப்போதே திட்டம் தீட்டியுள்ளன. ஆகவே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் யாவும் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அதற்குமாறாக மேற்குலக தேசங்கடந்த வர்த்தக கழகங்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக, இடைத்தரகர்களாக செயற்படும் வர்க்கத்தை மட்டுமே உருவாக்கியுள்ளது. இவர்களுக்கு எந்த விதமான தேசாபிமானமும் கிடையாது. தமது வருமானம் குறித்து மட்டுமே அக்கறைப்படுகின்றனர்.

இலங்கையில் யு.என்.பி. எழுபதுகளில் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்கள், இந்தியாவில் தொன்னூறுகளில் ராஜீவ் காங்கிரஸ் கொண்டு வந்த மாற்றங்கள், யாவும் அங்கே அந்நிய நாடுகளில் தங்கியிருக்கும் தரகு முதலாளிகளையும், அவர்களுக்கு சேவை செய்யும் அரசாங்கத்தையும் உருவாக்கி விட்டிருந்தன. இந்த நிலைமை, தற்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் நீடிக்கின்றது. இந்த பொருளாதாரம் எப்படி செயல்படுகின்றது என்பதற்கு சிறந்த உதாரணம், “வெளிநாட்டு வேலைவாய்ப்பு”. ஒரு காலத்தில் மத்தியதர வர்க்கம் தமது பிள்ளைகளை எஞ்சினியர், டாக்டர்களாக உருவாக்கி, அவர்களது சேவைகளை மலிவு விலைக்கு பிரிட்டிஷ், அமெரிக்க கம்பெனிகளுக்கு விற்பனை செய்து, அந்நிய செலாவணி சேர்த்தனர். இதே நோக்கத்திற்காக தொன்னூறுகளில் இந்தியா கணிப்பொறி வல்லுனர்களை உருவாக்கியது.

ஒரு தேசத்தை நிர்வகிக்கும் மத்தியதர வர்க்கமே அவ்வாறு நடந்து கொள்ளும் போது உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனையும் அதுவாகவே இருப்பதில் வியப்பில்லை. மத்திய கிழக்கு நாட்டு பாலைவனங்களில், புதிதாக கட்டப்பட்ட நவீன நகரங்களில், உடல் உழைப்பை வழங்க இலங்கை-இந்திய மலிவு விலை தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். கூலிக்கும், விற்பனை சரக்கிற்கும் இடையிலான உறவை அறியாத மக்கள், தொழில் சந்தையில் அதிக விலை கொடுக்கும் முதலாளிகளின் “காருண்யத்தை” கண்டு வியந்தனர். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வறுமையில் இருந்து தப்புவதற்கு இது ஒரு வழி என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டது. இந்த மாய மானை நம்பிய மக்கள் அந்நிய தேசம் சென்றால் பொருள் ஈட்டலாம் என்ற கனவுடன், பல்வேறு சிரமங்களையும் பொருட்படுத்தாது உலகம் முழுவதும் பணக்கார நாடுகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

பணக்கார நாடுகளை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு தொழிலாளரின் உழைப்பை சேவைத் தொழில்துறை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றது. அதிகம் படித்த வைத்திய கலாநிதி முதல், பாடசாலை பக்கம் போகாத துப்பரவுப் பணியாளர் வரை சேவைத்துறையில் தான் பணி புரிகின்றனர். தவிர்க்கவியலாமல் இவர்களது உழைப்பு அந்த நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. உதாரணத்திற்கு லண்டன் தெருக்களை கூட்டும் துப்பரவு பணியாளர் லண்டனில் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் சராசரியில் இருந்து சிறிதளவு மட்டுமே குறைகின்றது.

அதற்கு மாறாக உற்பத்தி தொழில்துறைக்கு சில அனுகூலங்கள் உள்ளன. அவை தமது தொழிற்சாலைகளையே குறைந்த வேதனம் கொடுக்கும் நாடுகளுக்கு மாற்றி, அதிக லாபம் சம்பாதிக்க முடியும். அமெரிக்க-ஐரோப்பிய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து விட்டு பல நிறுவனங்கள் தமது தொழிலகங்களை வறிய நாடுகளில் நிறுவி வருகின்றன. இதற்கு தாம் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இருக்கும் “ஏழை மக்களுக்கு உதவுவதாக”(வேலை வாய்ப்பு கொடுப்பதாக) ஒரு காரணம் கூறுகின்றனர். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான் இதுவும்.

பணக்கார நாடுகளில் விற்கப்படும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கின்றதென்றால், அதன் காரணம் அந்த நாடுகளில் தொழிலாளருக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகம் என்பதால் தான். உற்பத்தி செலவினங்களை குறைத்து லாபத்தை பெருக்க வேண்டுமானால், தொழிலாளியின் சம்பளத்தை குறைப்பது சிறந்த வழி. மூலப்பொருளின் விலை, போக்குவரத்து செலவு என்பனவற்றை குறைப்பது, அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டவை. மேற்குலக நாடுகளில் தொழிலாளியின் சம்பளம் குறைக்கப்படும் போது, அது பலவித சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஒருவேளை கிளர்ச்சிகளுக்கும் வழிவகுக்கலாம். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக, நீண்டகாலமாகவே மேற்குலக நாடுகள், தமது உழைக்கும் மக்களை, சேவைத்துறையில் வேலை தேடுமாறு நிர்ப்பந்திக்கின்றன. (தவிர்க்கவியலாது சேவைத்துறையை இடம்மாற்ற முடியாத நிர்ப்பந்தத்தை நினைவுபடுத்திக் கொள்ளவும்).

உலகமயமாக்கல் தொடர்பான பிரச்சினைகளை, மேற்குலக கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம், என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். இல்லாவிட்டால் “ஓநாய் தன்மீது சகோதர பாசத்துடன் நடந்து கொள்வதாக ஆடு நினைத்த” கதையாகி விடும். ஏனெனில் எமது மக்கள் பலர்(படித்தவர் முதல் பாமரர் வரை) உலகமயமாக்கல் வந்தது, தமது நன்மைக்கே என்று கருதிக்கொண்டிருக்கின்றனர். உலகமயமாக்கல் முழு வீரியத்துடன் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்பே, “சுதந்திர வர்த்தக வலையம்” என்ற பொருளாதாரக் கொள்கை முன்னோட்டமாக காட்டப்பட்டது. இந்த “வலையம்” என்ற சொல், ஒரு நாட்டின் சிறிய நிலப்பரப்பையே குறிக்கும். அதுவே ஒரு தேசம் முழுவதும் விஸ்தரிக்கப்படும் வேளை, “உலகமயமாக்கல்” என்ற புது அவதாரம் எடுத்திருக்கும்.

ஒரு தேசத்தின் இறைமை என்பது வெறும் அரசியல் சுதந்திரம் சார்ந்த விடயமல்ல. பொருளாதார சுதந்திரம் முக்கியமானது. உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக எழுதப்படும் சட்டங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகளை வழங்குவதில்லை. சில உற்பத்தி சாதனங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிவையும், அதற்கென முதலிடும் பணபலத்தையும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இயங்க விடுவதில் தவறில்லை. இரண்டு பக்க நலன்களையும் முன்னிலைப்படுத்தும் “Joint Venture” நிறுவன முறை ஏற்கனவே உள்ளது. கியூபா போன்ற சோஷலிச நாடுகள் அந்த முறையை தான் பின்பற்றுகின்றன.

உலகமயமாக்கலின் அழுத்தங்களுக்கு தலை சாய்க்கும் நாடுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளூர் நிறுவனப் பங்குகளை வாங்கவும்(அதன் மூலம் அந்த நிறுவனம் வெளிநாட்டவர் சொத்தாகலாம்), அல்லது நேரடியாகவே முதலீடு செய்யவும்(இதனால் ஈட்டப்படும் லாபம் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு திரும்ப கிடைக்காது) சட்டங்களை திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு பலத்துடன் உள்ளூர் நிறுவனங்கள் போட்டி போட முடியாதாகையால், அவர்கள் தரகு முதலாளிகளாக மாறி விடுவர். சிறு முதலாளிகள் தான் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவர்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் ஓரளவிற்கேனும் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழே தான் நடக்கும். அதாவது வர்த்தகத்தில் ஈடுபடுவது வெளிநாட்டு நிறுவனமேயானாலும், உள்நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும். வழமையான வரிகள் தவிர, லாபத்தில் ஒரு பங்கு கூட அரசுக்கு வரியாக போய்ச் சேரும். (இதனால் அரச பட்ஜெட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் விடயமாகவும் பார்க்கப்படலாம்.) மேலும் தொழிலாளர் நல சட்டங்களை மதிக்க வேண்டுமென்பதால், தொழிலாளர் சுரண்டப்படுவது குறையும். தொழிலாளர் உரிமைகள் மீறப்பட்டால், சட்டப்பாதுகாப்பை கோரலாம். ஆனால் சுதந்திர வர்த்தக வலையங்கள் இவற்றில் இருந்து விதிவிலக்கானவை, அல்லது அந்நிய நிறுவனங்களை கவர்வதற்காக விதிவிலக்கு அளிக்கப்படுகின்றன.

தனது நாட்டில், குறிப்பிட்ட பிரதேசத்தை சுதந்திர வர்த்தக வலையமாக பிரகடனப்படுத்தும் அரசு, அங்கே தனது சட்டங்களை பிரயோகிக்காமல் தளர்த்திக் கொள்கின்றது. முதலீடு செய்யும் நிறுவனத்தை கவரும் இனிப்பான விடயங்கள் பல இதிலே உள்ளன. முதலில் தொழிற்சாலை கட்டும் செலவில் அரசாங்கமும் ஒரு பங்கை போடும். இரண்டாவதாக வேலைக்கு வரும் உள்ளூர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கவோ, அல்லது பிற தொழிலாளர் நல சட்டங்களின் துணை கொண்டு பாதுகாப்பு தேடவோ முடியாது. மூன்றாவதாக லாபமாக கிடைக்கும் தொகையை மறுமுதலீடு செய்யாமல் நாட்டை விட்டு எடுத்துச் செல்லலாம். குறிப்பிட்ட வருடங்களுக்கு லாபத்திற்கு வரியும் கட்டத்தேவையில்லை.(Tax Holiday)

இவ்வாறு கட்டுப்பாடற்ற, சுதந்திர வர்த்தக வலையம் அமைவதால் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு என்ன பிரயோசனம்? Off shore கம்பனிகள் அமைக்க இடம்கொடுக்கும் குட்டி நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற சட்டத்தை கொண்டுள்ளன. அதாவது வரிவிலக்கு அளிப்பதன் மூலம், தமது நாட்டிற்கு பெருமளவு முதலீட்டாளரை கவர்வது. இந்த நிறுவனங்கள் அமைப்பதற்கு தேவைப்படும் உள்நாட்டு சட்ட ஆலோசகர்கள், ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்காக பயன்படுத்தபோகும் துறைமுகம், இவற்றை விட மானேஜர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்தல். இப்படியான வழிகளில் தான் அந்த நாட்டிற்கு வருமானம் கிடைக்கின்றது. வரிகளால் அல்ல.

சுதந்திர வர்த்தக வலையத்தில், அனேகமாக உப-ஒப்பந்தக்காரர் தான் தொழிற்சாலை அமைக்கின்றனர். உதாரணத்திற்கு அமெரிக்காவின் பிரபல ஆயத்த ஆடை விற்பனை நிலையம் ஒன்று, தனக்கு தேவையான ஆடைகளை தயாரிப்பதற்கு பாகிஸ்தான் நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்தம் வழங்கும். இந்த பாகிஸ்தான் நிறுவனம் இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு தொழிலகத்தை நிறுவி, அங்கிருந்து ஆடை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும். இத்தகைய சிக்கலான வலைப்பின்னல் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைகின்றது. ஏனெனில் சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிலாளரை கொடுமைப்படுத்தியதாக போடப்படும் வழக்குகள் யாவும், உப-ஒப்பந்தக்காரருக்கு எதிராகவே போடப்படுகின்றன. பெரிய நிறுவனம் தனக்கு “எதுவும் தெரியாது” எனக்கூறி ஒதுங்கிக்கொள்ளும்.


சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்களாக உள்ளனர். சில இடங்களில் குழந்தை தொழிலாளரும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பல ஏழைக்குடும்பங்களில் ஆண் பிள்ளைகளை மட்டுமே படிக்க வைப்பதால், பெண் பிள்ளைகள் வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இலங்கையாகவிருந்தாலும், கம்போடியாகவாக இருந்தாலும் இது தான் நிலைமை. உலகெங்கும் சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதால், இது ஒரு பெண்ணியம் சார்ந்த பிரச்சினையாகவும் உள்ளது. பாலியல் துன்புறுத்தல், மகப்பேறு விடுமுறையில் நிலவும் கட்டுப்பாடுகள் போன்றன, பெண்கள் என்பதால் மேலதிக சுரண்டலுக்கு ஆளாவதை எடுத்துக்காட்டுகின்றது.


சுதந்திர வர்த்தக வலையங்கள், பண்டைய கால உழைப்பு சுரண்டல் சமூகத்தையே உருவாக்கி வருகின்றதால், இவற்றை “சுதந்திர சுரண்டல் வலையம்” என அழைப்பதே பொருந்தும். எனினும் இவற்றை ஆதரிக்கும் Paul Krugman, Joan Norberg போன்ற பொருளாதார அறிஞர்களும் உள்ளனர். அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் ஒரு காலத்தில் அப்படியான நிலை இருந்ததை சுட்டிக் காட்டுகின்றனர். குறைந்த கூலி வழங்கி அதிக நேரம் வேலை வாங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகளற்ற தொழிலகம், தொழிலாளருக்கு உதவாத சட்டங்கள், தொழிற்சங்கம் அமைக்க தடை, ஆகிய நிகழ்கால சுதந்திர வர்த்தக வலைய குறைபாடுகள் யாவும், 19 ம் நூற்றாண்டிலும், 20 ம் நூற்றாண்டு தொடக்கத்திலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சர்வசாதாரணமாக காணக்கூடியதாக இருந்தவை தான். எனினும் இந்த நிலைமை தொழிலாளர் போராட்டங்களால் தான் மாறியதே தவிர எந்த முதலாளியும் ஒரே இரவில் மனிதாபிமானியாக மாறிவிடவில்லை.


இந்த பொருளாதார அறிஞர்கள் வாதிடும் “பாரம்பரிய முதலாளித்துவம்” மேற்குலகில் புரட்சிகர மாற்றங்களுக்குள்ளாகிய போது, அதனை தடுக்கக் கூடிய பலமான சக்தி எதுவும் அப்போது இருக்கவில்லை. ஆனால் இன்று மூன்றாம் உலக நாடுகளின் நிலை வேறு. அங்கே எந்த நாட்டில், எந்தவொரு போராட்டம் வெடித்தாலும், அதனை அடக்குவதற்கு மேற்குலக நாடுகள் உதவிக்கு ஓடோடி வரும். இந்த நெருங்கிய தொடர்பை விளக்குவதற்காக தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் வரலாற்றை இரைமீட்க வேண்டி ஏற்பட்டது. இல்லாவிட்டால் சுரண்டலை ஆதரிக்கும் அறிஞர்கள் நமது காதிலே முழம் முழமாக பூச்சுற்ற காத்திருக்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டும் இன்னொரு உதாரணம் “ஆசிய புலிப்பாய்ச்சல் பொருளாதார” சிங்கபூர், மற்றும் ஹொங்கொங். இந்த குட்டி நாடுகளில், ஒரு காலத்தில் நாடு முழுவதும் சுதந்திர வர்த்தக வலையமாக இருந்தது உண்மை தான். மேற்குலக வாழ்க்கைமுறைக்கு நிகராக தனிநபர் வசதிவாய்ப்புகள் அதிகரித்தது உண்மை. ஆனால் அதற்கு முக்கிய காரணம், அப்போது கம்யூனிச நாடுகளாக இருந்த சீனா, வியட்நாம் ஆகியவற்றுக்கு எதிராக போட்டி போடுவது தான்.


உலகமயமாக்கலுக்கும், சுதந்திர வர்த்தக வலையங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. பெரிய பெரிய நிறுவனங்கள் யாவும் உலகமயமாக்கல் காரணமாக சர்வதேச வர்த்தக சட்டங்கள் தளர்த்தப்பட்டதை பயன்படுத்தி, தமது பொருட்களை குறைந்த கூலிகொடுக்கும் நாடுகளில் உற்பத்தி செய்து, அவற்றை அதிக விலைக்கு பணக்கார நாடுகளில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றன. காலனிய கால வர்த்தகம் மீண்டும் “உலகமயமாக்கல்” என்ற புதிய பெயரில் நடைமுறைக்கு வருகின்றது.
அன்று “கிழக்கிந்திய வர்த்தக கழகம்” என்ற பன்னாட்டு நிறுவனம்,(ஒல்லாந்தர் தாமே உலகின் முதலாவது தேசங்கடந்த வர்த்தக நிறுவனத்தை உருவாக்கியதாக, இப்போதும் பழம்பெருமை பேசுவர்) இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய ஆசிய நாடுகளில் மலிவு விலைக்கு மிளகு, கறுவா, கராம்பு போன்ற வாசனைத் திரவியங்களை வாங்கி, அவற்றை ஐரோப்பா கொண்டு சென்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இன்று அதே நாடுகளில் நவீன தேசங்கடந்த நிறுவனங்கள் சுதந்திர வர்த்தக வலையம் அமைத்து, தொழிலாளரை சுரண்டி அதிக லாபம் ஈட்டுகின்றன. நைக் என்ற பாதணி தயாரிக்கும் நிறுவனம், வால்-மார்ட் என்ற பல்பொருள் அங்காடி என்பன இதனால் பயனடையும் குறிப்பிடத்தக்க பிரபல தேசங்கடந்த நிறுவனங்கள்.


ஆகவே சுதந்திர வர்த்தக வலையத்தை முற்போக்கான தொழில்துறை புரட்சியாகவோ, அல்லது முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகவோ காண்பது அறிவீனம். அவை சந்தேகத்திற்கிடமின்றி மறுகாலனியாதிக்கத்தின் மறுவடிவமாகும்.

http://kalaiy.blogspot.com/

Last Updated on Friday, 14 November 2008 07:46