Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் குடியிருப்புப் பகுதியா? திறந்தவெளி மதுபான விடுதியா?

குடியிருப்புப் பகுதியா? திறந்தவெளி மதுபான விடுதியா?

  • PDF

 உழைக்கும் மக்களின் போராட்ட வரலாற்றில் ம.க.இ.க.வின் பெயரைப் பலமுறை பதிவு செய்திருக்கிறது, சென்னைசேத்துப்பட்டு. கடந்த 23.10.08 அன்று மீண்டும் ஒருமுறை கம்பீரமாகப் பதிவு செய்தது. "சேத்துப்பட்டு ஸ்கூல் ரோடு டாஸ்மாக் சாராயக் கடையை இழுத்து மூடு! குடிகாரர்களின் அலம்பல்கள்  அட்டாகசங்களிலிருந்து உழைக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு கொடு!'' என்ற முழக்கங்களுடன் பகுதிவாழ் மக்களை அணிதிரட்டி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்  மறியல் போராட்டத்தை நடத்தி முதற்கட்ட வெற்றியைச் சாதித்திருக்கிறது, ம.க.இ.க.


 சேத்துப்பட்டில் சாராயக் கடைக்கு எதிரான போராட்டத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு இதே ஸ்கூல் ரோடில் இருந்த திருப்தி ஒயின்ஸ் என்ற சாராயக் கடையை அகற்றக் கோரி ம.க.இ.க. தலைமையில் மக்கள் போராடினர். சேத்துப்பட்டிலிருந்த பிரபல ரவுடி தங்கையாவை வைத்து அச்சாராயக் கடை முதலாளி மிரட்டிப் பார்த்தான். ஆனால், ம.க.இ.க.வின் உறுதியான போராட்டத்தால் ரவுடி தங்கையா அலறியடித்துக் கொண்டு ஓடிப் போனான். இப்போது, அந்தச் சாராயக்கடை இருந்த இடத்தில் அரசின் டாஸ்மாக் கடை வந்துள்ளது.


 குடிகெடுக்கும் இச்சாராயக் கடையால், உழைக்கும் மக்கள் இத்தெருவில் நடமாட முடியாத அளவுக்கு குடிகாரர்களின் அலம்பல்களும் அராஜகங்களும் தொடர்ந்ததால், குடியிருப்புப் பகுதியிலுள்ள இச்சாராயக் கடையை அகற்றக் கோரி இப்பகுதியெங்கும் விரிவாக ம.க.இ.க. பிரச்சாரம் செய்தது. ஏற்கெனவே குமுறிக் கொண்டிருந்த தாய்மார்களும் இளைஞர்களும் இந்நியாயமான கோரிக்கையை ஆதரித்து உற்சாகத்துடன் அணிதிரண்டனர். 23.10.08 அன்று செங்கொடிகள் விண்ணில் உயர ம.க.இ.க. தலைமையில் உள்ளூர் மக்கள் பெருந்திரளாக அணிவகுத்து முழக்கமிட்டபடியே ஊர்வலமாக வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.


 உடனே பெருந்திரளாகக் குவிந்த போலீசு, ""ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வாங்கவில்லை; உங்கள் அனைவரையும் கைது செய்வோம்'' என்று மிரட்டியது. தாய்மார்களோ, "எங்க ளின் தாலி அறுக்கும் இச்சாராயக் கடையை அகற்றாமல் நகர மாட்டோம்'' என்று பதிலடி கொடுத்து, அங்கேயே சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒருமணி நேரத்தில் ஏ.சி., டி.சி. முதலான போலீசு உயரதிகாரிகள் வந்து, "நீங்கள் செய்வது சட்டவிரோதச் செயல்'' என்று மிரட்டி விட்டு, "இன்னும் 15 நாட்களில் இக்கடையை அகற்றிவிடுகிறோம்; குடிகாரர்களின் அலம்பல்  அராஜகங்கள் நிகழாமல் உரிய பாதுகாப்பு தருகிறோம்'' என்று வாக்குறுதி அளித்து, முன்னணியாளர்கள் 50 பேரைக் கைது செய்தனர். பின்னர், அனைவரையும் விடுவித்ததோடு, வாக்குறுதியை எழுத்துப்பூர்வமாகவும் அளித்தனர். இம்முதற்கட்ட வெற்றி, பகுதிவாழ் மக்களிடம் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மக்கள் நலனில் அக்கறை கொண்டு போராடும் ம.க.இ.க.வின் மீது எல்லையற்ற நம்பிக்கையையும் விதைத்துள்ளது.


—  ம.க.இ.க., சென்னை