Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் வாழ்த்துக்கள் கிடக்கட்டும் ஒபாமா ! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் !!

வாழ்த்துக்கள் கிடக்கட்டும் ஒபாமா ! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் !!

  • PDF

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை இனவெறியை மீறி அவர் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்களும், அதிபர் தேர்லின் போது ஜான் மெக்கைனின் ஆதரவாளர்களும் வெள்ளை  நிறவெறியை வெளிப்படையாக பேசிவந்தனர். தற்போதைய வாக்கு விகிதத்தில் கூட வயதான வெள்ளையர்கள் மெக்கைனுக்கும்,

 இளவயது வெள்ளையர்கள் கணிசமாக ஒபாமாவுக்கும் வாக்களித்தாகச் செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மையான கருப்பின மக்களும், ஹிஸ்பானிய மக்களும் ஒபாமவை ஆதரித்திருப்பதில் வியப்பில்லை. இப்படி அமெரிக்க சமூகத்தில் வலுவாகக் கருக்கொண்டிருக்கும் நிறவெறியை மீறி ஒபாமா வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றுதான். எனினும் இந்த வெற்றி அமெரிக்க அரசின் செயல்பாட்டை எந்த அளவு மாற்றும் வல்லமை கொண்டிருக்கும் என்பது நமது கேள்வி. ஒபாமாவின் பிரச்சார பீரங்கிகள் மாற்றம்தான் நம்முடைய தேவை, நம்மால் முடியும் என்பதைதே தேர்தலின் முழக்கமாக முன்வைத்தார்கள். கீழ்க்கண்ட கேள்விப் பட்டியிலிலிருந்து அந்த மாற்றம் குறித்த பெரிய கேள்வியையும் அதற்கான பதிலையும் புரிந்து கொள்ளலாம்.

cariobama2

 

 

1. அமெரிக்க நகரங்கள், குடியிருப்புகள், உணவு விடுதிகள், காவல் துறை, வேலைவாய்ப்பு, நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் முதலான ஒட்டு மொத்த அமெரிக்காவில் வேர் கொண்டிருக்கும் வெள்ளை நிறவெறி இனிமேல் இல்லாமல் போய்விடுமா?

 

2. அமெரிக்காவில் கருப்பின மக்களுக்காகத் தரப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை இனிமேல் பொருளாதார அளவு கோலின்படி செய்யலாம் என்று ஒபாமா பேசியிருப்பதற்கும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை அதேபோல மாற்றியமைக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பேசிவருவதற்கும் என்ன வேறுபாடு?

 

3. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அமெரிக்கர்களில் பெரும்பான்மையினரும், அமெரிக்கச் சிறைகளில் மெஜாரிட்டியாகவும் இருக்கும் அமெரிக்க - ஆப்ரிக்க மக்களின் யதார்த்தம் இனிமேல் மாறிவிடுமா?

 

4. திவாலான அமெரிக்க நிறுவனங்களால் வாழ்விழந்து, வீடிழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சில அமெரிக்கர்களை இந்த வெற்றி எந்த வகையில் எதிர் கொண்டு ஆறுதல் சொல்லும்?

 

5. வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் தமது வருமானத்தில் பெரும்பகுதியை வீட்டிற்கும், காப்பீட்டிற்கும் ஒதுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை ஒபாமாவின் வருகை மாற்றி அமைத்து விடுமா?

 

6. திவாலாகி வரும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை, மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றும் புஷ்ஷின் நடவடிக்கைகள் இனிமேல் நிறுத்தப்படுமா?

 

7. ஆண்டுதோறும் பல நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் வேலையிழந்து தவிக்கும் அமெரிக்க மக்களுக்கு அளவிடற்கரிய வேலை வாய்ப்புக்களை ஒபாமா அரசு உருவாக்குமா?

 

8. அமெரிக்காவின் சமூக வன்முறைகளுக்குக் காரணமான தடையற்ற துப்பாக்கிகளின் சுதந்திரம் ஒபாமாவால் தடை செய்யப்படுமா?

 

9. மேல்நிலைக் கல்வி கற்கவேண்டுமென்றால் ஒரு அமெரிக்க மாணவன் பத்து இலட்ச ரூபாயைக் கடன் வாங்கித்தான் செய்ய முடியும் என்ற நிலைமை இனிமேல் மாறுமா?

 

10. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் உலக அளவில் முன்னணியில்  இருக்கும் அமெரிக்காவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?

 

11. கிளிண்டனில் தொடங்கி புஷ்வரை ஈராக்கையும், ஆப்கானையும் ஆக்கிரமித்து நடத்தப்படும்  போரைஒபாமா நிறுத்துவாரா? அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படுமா?

 

12. இசுரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் நயவஞ்சகத்துடன் பின்பற்றப்படும் அமெரிக்காவின் மத்திய கிழக்கின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுமா?

 

13. வளைகுடாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரபு நாடுகளை அவை சர்வாதிகார நாடுகளாக இருந்தாலும் தனது செல்வாக்கில் வைத்திருக்கும் அமெரிக்காவின் தூர கிழக்குக் கொள்கைகள் இனிமேல் அரபு நாட்டு மக்களின் நலனுக்காக மாற்றப்படுமா?

 

14. அணுஆயுதம் தயாரிக்க முயற்சி செய்வதாகக்கூறி ஈரானை மிரட்டி வரும் அமெரிக்காவின் அணுகுமுறை இனிமேல் ஜனநாயகப்பூர்வமாக அவதாரம் கொள்ளுமா?

 

15. பால்கன் நாடுகளில் செர்பியாவை மிரட்டுவதற்காக மற்ற சிறிய நாடுகளை ஆதரிக்கும் கொள்கைகள் இனிமேல் எப்படி பார்க்கப்படும்?

 

16. ஆப்பிரிக்க நாடுகளில் கனிமவளங்களைத் தொடர்ந்து கொள்ளையடிப்பதற்காக பின்தங்கிய இனக்குழுக்களின் உள்நாட்டுப்போரை மறைமுகமாக ஆதரிக்கும் அமெரிக்க அரசின் ஆப்பிரிக்க சூதாட்டம் இனிமேல் நிறுத்தப்படுமா?

 

17. பொருளாதாரத் தடைகளால் கியுபாவையும், வட கொரியாவையும் தொடர்ந்து மிரட்டி வரும் அமெரிக்காவின் ரவுடி அணுகுமுறைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

 

18. இந்தியா, பாக்கிஸ்தானை தொடர்ந்து ஒரு ஆயுதப் போட்டியில் வைத்திருப்பதற்காக இரண்டு நாடுகளையும் கூட்டாளிகளாக நடத்தும் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைக்கப்படுமா?

 

19. அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை தனது செல்வாக்கில் சிறைபிடிக்கும் புஷ் அரசாங்கத்தின் இந்தியக் கொள்கை ரத்து செய்யப்படுமா?

 

20. விடுதலைப் புலிகளைத் தடை செய்ததோடு ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் வருமா?

 

21. தென் அமெரிக்க நாடுகளில் வாழைப்பழக் குடியரசுகளை உருவாக்குவதற்காக தனது கைக்கூலிகளின் அரசுகளை ஏற்படுத்த எல்லா சதிகளிலும் ஈடுபடும் அமெரிக்க அரசின் தென்னமெரிக்க கொள்கையில் ஏதேனும் மாற்றம் வருமா?

 

22. உலக அளவில் அமெரிக்க நலனுக்காக சாம, தான, பேத, தண்ட என எல்லா முறைகளிலும் செயல்பட்டு வரும் சி.ஐ.ஏ உளவு அமைப்பு ஒபாமாவின் காலத்திலாவது சைவப் புலியாக மாறுமா?

 

23. ஆயுத ரீதியில் வல்லரசாகவும், பொருளாதார ரீதியில் தற்போது வலுவடைந்து வரும் ரசியாவுக்கு எதிராக முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சதுரங்கக் காய்களை நகற்றி வரும் அமெரிக்காவின் நாட்டம் இனிமேல் தலைகீழாக மாறுமா?

 

24. உலகமெங்கும் இருக்கும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், கப்பற்படைகள் எல்லாம் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டு அமெரிக்கா திரும்பி விடுமா?

 

25. அமெரிக்கா முதலாளிகளின் நலனுக்காகவும்  ஏழை நாடுகளைச் சுரண்டுவதற்காகவும் டாலரை உலகச் செலவாணியாக பயன்படுத்துமாறு நிர்ப்பந்தித்து, அதன் மதிப்பை தேவைக்கேற்றபடி கூட்டியோ குறைத்தோ

 

பொருளாதார அடியாளாக செயல்படும் அமெரிக்க அரசின் அணுகுமுறை இனிமேல் உலகமக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுமா?

 

முற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான். அது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பும், அரசியலும், பொருளாதாரமும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடரப்போகிறது என்பதே!

http://vinavu.wordpress.com/2008/11/05/obama1/

Last Updated on Wednesday, 05 November 2008 07:32