இந்தக் கேள்விக்கு இன்றைய (புலித்) தேசியம் பதிலளிக்க முடியாது திணறுகின்றது. புலிகள் தமிழரை ஆளும் உரிமையைத்தான் தமிழர் பிரச்சனை என்று நம்புகின்ற அடிமுட்டாள் தனத்தில் இருந்து இராணுவ ரீதியான பேரினவாத செயலை நிறுத்துவது தான் தமிழரின் பிரச்சனை என்று கருதுகின்ற பொதுவறிவுக்குள் தான், தமிழரின் மேல் சிங்கள மேலாதிக்கம் நிறுவப்படுகின்றது.
புலிகள் அழிக்கப்பட்டால், அதாவது பேரினவாதம் வெற்றிபெற்றால் தமிழர் இரண்டாம் தரக் குடிகளாக அடிமைகளாகி இந்தப் பிரச்சனையே இல்லாது போகும். இது இரண்டு விதத்தில்.
1. தமிழரின் மந்தை அரசியல் நிலை காரணமாக, தமிழரின் பிரச்சினை இதுவாக உணரப்பட்டுள்ளது. இதனால் இதனுடன் இது முடிவுக்கு வந்துவிடும்.
2. பேரினவாதம் வெற்றி பெற்றால், என்றைக்கும் தமிழரின் உரிமையை பேரினவாதம் வழங்காது. தமிழன் அடிமையாக வாழும் அவலநிலை, இது இயல்பாக உருவாகும்.
இந்த நிகழ்ச்சிநிரலுக்குரிய அடிப்படையில், தமிழர்களால் தமிழினம் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். சுயவாற்றலற்ற மந்தைக்கூட்டமாக, தலையாட்டும் பொம்மைகளாக, எதையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமிழினத்தின் சொந்த அடிமைநிலை உள்ளது. இதையே புலிகள் முதல் புலியெதிர்ப்புத் துரோகக் கும்பல் வரை உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் தாம் விரும்பும் தம் சுயநலத்தையே, தமிழரின் உரிமையாக பறைசாற்றி, அவர்கள் மேல் தம் சொந்தப் பாசிசத்தை அறைந்து வைத்துள்ளனர்.
புலிகள் தம் இராணுவ இருப்புத்தான் தீர்வுக்கான முடிச்சு என்பது முதல், புலியெதிர்ப்பு தம் துரோக இருப்புத்தான் சமாதானமான வழியில் தீர்வு என்று கூறுகின்ற தர்க்கம், சமூகத்தின் அடிப்படையாகியுள்ளது. இதற்குள் தமிழினத்தை கட்டிப் போட்டுள்ளனர். தமிழ்மக்களின் அரசியலை, இதற்கு வெளியில் நாம் காணவே முடியாது. இதனால் தமிழினத்தின் தோல்வி, முன் கூட்டியே ஏற்பட்டுவிட்டது. அதையே பேரினவாதம் அறுவடை செய்கின்றது.
இதை தடுத்து நிறுத்தும் சொந்தவாற்றல் தமிழினத்திடம் கிடையாது. சொந்த இனத்தின் சுயநிர்ணயப் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய ஆற்றலும் அறிவும் இன்றி, யாரும் தமிழினத்தைக் காப்பாற்ற முடியாது.
தமிழரின் பிரச்சனை புலியாக உணரப்படுவது
இன்றைய இளைய தலைமுறை முதல் இன்றைய அரசியல் தலைமைகள் (இலங்கை முதல் இந்தியா வரை) வரை, தமிழ் மக்களின் பிரச்சனையை புலியாக உணருகின்றனர். இதனால்
1. புலி சொல்வதையே தமிழர் பிரச்சனையாக புரிந்து நம்பும் ஒரு தீர்வு
2. இதனால் புலி ஒழிந்தால் எல்லாம் சரி என நம்புகின்ற ஒரு தீர்வு
மிகத் தீவிரமாக இதற்குள் தமிழினம் காயடிக்கப்படுகின்றது. இதனால் புலிகளின் அழிவுடன் தமிழரின் பிரச்சனை இல்லாததாகிவிடும்; என்ற பொதுவறிவு, எங்கும் நடைமுறை அரசியலாகி; விடுகின்றது.
புலியை அழிப்பதும், தமிழ்மக்களை காப்பதும் என்ற அரசியலையே தமிழக அரசியல் ஜனரஞ்சகமாக்கப்படுகின்றது. பேரினவாத யுத்தத்துக்கு, எதைச் செய்யவேண்டும், எதைச்செய்யக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு, புலிக்கு எதிரான யுத்தமாக நெறிப்படுத்தவே அனைவரும் (கருணாநிதி முதல் (ஜெயலலிதா வரை) முனைகின்றனர். புலியை அழிக்கக் கூடாது என்பவர்களை, தன் சட்டத்தின் எல்லைக்குள் ஒடுக்குகின்றது, ஒடுக்கக் கோருகின்றது.
புலியில் இருந்து தமிழ்மக்களை தனிமைப்படுத்துவதும், இதன் மூலம் புலியைத் தனிமைப்படுத்தி அழிப்பது என்ற அடிப்படையில் தான், தீர்வை (சுயநிர்ணயமல்லாத தீர்வை) வைக்கும்படி இந்தியா முதல் அமெரிக்கா வரை தெளிவாகக் கோருகின்றது. இந்த நிகழ்ச்சி நிரலின்படி தான், தமிழகத்தின் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றது. இதற்குள் பேரினவாதம் இறங்கிவர மறுப்பதும், அதை உருவாக்குவதும் தான் திரைமறைவில் நடக்கும் இன்றைய இராஜதந்திரங்களும் முரண்பாடுகளும். பேரினவாதத்திடம் இவர்கள் கோருவது, தமிழினத்தின் சுயநிர்ணயத்தை மறுக்கும் வகையில் ஒரு தீர்வை. அதாவது நாய்களுக்கு ஒரு எலும்பைத் தான்.
குறிப்பு :
1.மற்றொரு தலைப்பில் இது தொடரும்
2.தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன? அதை தெரிந்து கொள்ள
இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
பி.இரயாகரன்
25.10.2008