Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் சளித்தொல்லையா ஒழியுங்கள் கரப்பொத்தான் பூச்சியை

சளித்தொல்லையா ஒழியுங்கள் கரப்பொத்தான் பூச்சியை

  • PDF


 
நீண்ட நாட்களுக்கு பின்னர் அந்தப் பையன் வைத்தியசாலைக்கு வந்திருந்தான். சந்தோஷமாக இருந்தது. மீண்டும் என்னிடம் வைத்தியத்திற்கு வந்துள்ளான் என்பதால் அல்ல. கடந்த ஆறு மாதங்களாக அவன் என்னைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படாதிருந்ததே என்ற மன ஆறுதல்.
ஆறு மாதங்களாகத் தான் அவன் வருத்தம் என்று என்னிடம் வரவில்லை. ஆனால், அதற்கு முந்தைய பத்து மாதங்களில் முப்பது தடவைகள் பார்க்க நேர்ந்தது. கணினியில் உள்ள அவனது கோப்பைப் பார்த்தபோது இது தெரிய வந்தது. எவ்வளவு துன்பம் அவனுக்கு அந்த வேளைகளில்.

 

ஒரே சளி வருத்தம் ! தும்மல், மூக்கடைப்பு, அரிப்பு, மூக்கால் ஓடுதல், கண்கடி, தலையிடி, தலைப்பாரம், சோம்பல், தூக்கக் குணம், இருமல், இளைப்பு, ஆஸ்மா சொல்லி மாளாது. பாடசாலை செல்லத் தொடங்கி சில மாதங்கள்தான். ஆனால், ஒழுங்காகப் பாடசாலை செல்ல முடியாது, படிக்க முடியாது. இதனால் பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் தூற்றலுக்கு ஆளாக நேர்ந்தது.

அத்தோடு குளிக்காதே, தண்ணி அளையாதே, குளிர்பானம் அருந்தாதே, பழங்கள் சாப்பிடாதே என்ற பெற்றோர்களின் கட்டுப்பாடுகள். மருந்துக்கு மேல் மருந்துகளும் சேர்ந்து கொள்ளவே மகிழ்ச்சியைத் தொலைத்து மந்தமானவனாக மாறியிருந்தான்.

விழுந்ததால் காலில் ஏற்பட்ட உரசல் காயத்திற்காக வந்திருந்தான். சளித்தொல்லைக்காக அல்ல. காயம் பட்டபோதும் இளமையின் உற்சாகம் முகத்தில் பளிச்சிட்டது.

"எப்படி மறைந்தது சளித் தொல்லை' பெற்றோர்களிடம் வினவினேன்.

"வீடு மாறினோம்.அதிலிருந்து இவனுக்கு சளிபிடிப்பதில்லை' என்றார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதா? வீடு மாறினால் சளி பிடிக்காதா!

காரணம் இதுதான். முன்பு அவர்கள் குடியிருந்த வீட்டிற்குப் பின் புறமாக தெருவோரக் கழிவுக் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. இரவானதும் இவர்கள் வீடெங்கும் அங்கிருந்து படையெடுந்து வரும் கரப்பொத்தான் பூச்சியின் இராச்சியம் தான். இப்பொழுது குடியிருப்பது தொடர்மாடி வீட்டில். அதுவும் 5 ஆம் மாடியில் அங்கு கரப்பொத்தான் அதிகமில்லை. அதனால் இங்கு கரப்பொத்தான் அதிகமில்லை. அதனால் இங்கு அப் பூச்சியின் எச்சங்கள் இருப்பதில்லை. எனவே சளித்தொல்லை நீங்கிவிட்டது.

சரி! சளிக்கும் கரப்பொத்தானுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

சளி, ஆஸ்மா ஆகியவற்றைத் தூண்டுபவையாக பல பொருட்கள் ஆய்வு ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன. பூக்களின் மகரந்தம், நாய், பூனை போன்ற வளர்புப் பிராணிகளின் ரோமம், தூசி, தூசிப்பூச்சி, கரப்பொத்தான் எச்சம் எனப் பலவாகும்.

இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரையில் வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியத் தூசிப்பூச்சி, கரப்பொத்தன் ஆகிய மூன்றுமே ஆஸ்மாவைத் தூண்டுவதற்கு முக்கிய காரணமாகும். இதனை பேராசிரியர் அனுரா வீரசிங்க (Prof.Anura Weerasinghe)தலைமையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெளிவாகக் குறிப்பிடுகிறது. எமது சூழலில் ஆஸ்மாவுக்கு பூக்களின் மகரதம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் ஆகியவை முக்கியமான காரணிகள் அல்லவாம்.

எமது படுக்கை விரிப்பு, தலையணை,மெத்தை போன்றவற்றில் மிக நுண்ணிய கிருமி (Dust mite) சேர்ந்து விடுவதுண்டு. அவற்றை நீரில் துவைத்து சுத்தப்படுத்துவதால் அக்கிருமியை ஒழித்து விடமுடியாது. அவற்றை வெயிலில் காயவைக்க வேண்டும்  அல்லது இஸ்திரிக்கை போட வேண்டும்.

 

எமது உடைகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றைக் களஞ்சியப்படுத்தும் 
இடத்தில் களஞ்சியப்பூச்சி (Storage Mite)உற்பத்தியாகும். இவை இரண்டுமே ஆஸ்மாவைத் தூண்டும் ஏனைய காரணிகளாகும். நீங்கள் சளி, ஆஸ்மா போன்றவை உள்ளவராயின், வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியதூசிப்பூச்சி, கரப்பொத்தான் ஆகியவற்றோடு தொடர்புறுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆயினும் கரப்பொத்தான் பூச்சியிலிருந்து தப்புவது சற்று சிரமமான காரியம்தான். இறைவனைப் போல எங்கும் நிறைந்தவனாக எல்லாம் வல்லவராக இருக்கிறார். டைனோசியர் போன்ற பாரிய உயிரினங்கள் பலவும் சூழல் மாற்றங்களுக்கு இசைவடைய முடியாது மறைதொழிந்து போக கரப்பொத்தான் பூச்சியோ இன்றும் தாக்குப் பிடித்து நிற்கிறது.

உலகத்திலிருந்து ஒழிக்க முடியாவிட்டால் போகிறது. உங்கள் வீட்டிலிருந்தாவது ஒழியுங்களேன். வீடு மாறினாலும் நீங்கள் கவலையீனமாக இருந்தால் புதிய இடத்திலும் வந்து சேரக் கூடிய தீரன் அது.

Last Updated on Thursday, 25 February 2010 19:43