Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பெரும்பான்மை திட்டம் பேரினவாதமே என்பதை இனம் காண்பதும், மாற்றாக குறைந்தபட்ச ஜனநாயகத் தீர்வும்

பெரும்பான்மை திட்டம் பேரினவாதமே என்பதை இனம் காண்பதும், மாற்றாக குறைந்தபட்ச ஜனநாயகத் தீர்வும்

  • PDF

(இந்த விமர்சனத்தை தீர்வை முன்வைக்கும் அனைத்து தரப்புக்கும், இதன் மீது அக்கறை உள்ள அனைத்து சமூகப் பிரிவுக்கும் முடிந்தளவுக்கு அனுப்பிவைக்கவும்)

 

கொடூரமான புலிப்பாசிசம் ஒருபுறம், பேரினவாத அரசு நடத்தும் சதிகள் சூழ்ச்சிகள் கூடிய பாசிசம் மறுபுறம். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பதால், அனைத்தையும் மோசடி செய்தல், ஏய்த்து ஏமாற்றுதல், சமூகங்ளை இங்குமங்குமாக நம்பிக்கையூட்டி அலைக்கழித்தல்,

 சமூகத்தையே சின்னாபின்னப்படுத்தி சிதைக்க காலத்தை இழுத்தடித்தல், அரசியல் பித்தலாட்ட மோசடிகளின் ஒட்டு மொத்த வடிவம் தான், இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற பெயரில் இன்று அரங்கேறுகின்றது.

 

குறிக்கோளற்ற வகையில் காலத்தை இழுத்தடித்து பேச்சு வார்த்தைகள், சமாதானம் என்ற பெயரில் அர்த்தமற்ற வார்த்தைகள், அமைதி சமாதானம் என்ற பெயரில் கொலை வெறியாட்டங்கள், மக்களையே திண்டு செரிக்கும் சர்வ கட்சி கூட்டங்கள் என்ற பெயரில் வம்பளப்புகள், நிபுணர் குழுக்களின் ஆலோசனையின் பெயரில் பேரினவாத அரசியல் மோசடிகள், இப்படி பற்பல அன்றாடம் அரங்கேறுகின்றது.

 

தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகள் என்ற பெயரில் சிறிய கும்பல்கள், மக்களுக்கு விளங்காத மொழியில், மக்களை எட்டி மிதித்தபடி கட்சிகளையும், சந்திப்புகளையும் நடத்திக்காட்டுகின்றனர். இந்த வகையில் அமைக்கப்படட நிபுணர் குழுக்களின் அறிக்கைகள் எல்லாம், கடைந்தெடுத்த அரசியல் மோசடிகளை அடிப்படையாக கொண்டது. இந்த வகையில் தான் அரசால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் பெரும்பான்மை அறிக்கை உள்ளது. இதன் தமிழ் ஆக்கத்தை "நண்பர்கள் வட்டம் - பிரான்ஸ்" வெளியிட்டுள்ளதுடன், இதையொட்டிய ஒரு சந்திப்பை நடத்தவுள்ளனர்.

 

இது போன்ற அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைப்பவர்கள், தீர்வு வைக்கப்போவதாக விடும் சவடால்கள் எல்லாம் வழமை போல் வெற்று கூச்சலாகவும், காலத்தை இழுத்தடிக்கும் ஒரு சதியாகவும், ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் சூழ்ச்சியாகவும் அம்மணமாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த அறிக்கை மீதான கவனத்தை குறிப்பாக்கி, இந்த விடையங்கள் மீதான ஒரு தெளிவான சிந்தனைப் போக்கை கட்டமைப்பது அவசியமாகின்றது.

 

மறுபக்கத்தில் யுத்தத்தை விரும்பி வலிந்து தாக்கிய புலிகள் அதில் இருந்து மெதுவாக ஒதுங்கி விலக, யுத்தத்ததை நோக்கி பேரினவாதம் வலிந்து கால் வைத்து முன்னேறுகின்றது. இருந்த போதும் தீர்வை நோக்கிய இந்த சூழ்ச்சிகள் பற்றி தெளிவு கொள்வது அவசியமானது.

 

1. 1.1 இல் "உரிய அரச அதிகாரத்திற்கான பங்கு வழங்காமையினாலேயே இன்றைய சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது." இவ்வாக்கியம் மூலம் இனப்பிரச்சனையை அடையாளம் கண்ட விதமே முற்றாக முழுமையாக தவறானது. அரசு மற்றும் அதிகாரம் என்ற எல்லைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைiயை குறுக்கி விடுவதன் மூலம், பேரினவாதத்தை மூடிமறைக்கின்றது.

 

தமிழ் மக்கள் இன ரீதியாக அடையாளம் காணப்பட்டு ஒடுக்கப்பட்டதன் விளைவு தான் இனப்பிரச்சனை. குறிப்பாக தமிழ் மொழி பேசும் மக்கள் எப்படி ஒடுக்கப்பட்டனர், ஒடுக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை ஆதாரமாக தயாரிக்கமால், இதை ஒரு நாளும் சரியாக இனம் காணவோ, தீர்க்கவோ முடியாது.

 

2.1.2 இல் "இந் நிலமை காரணமாக சிறுபான்மையினர் ஓரம் கட்டப்பட்டதோடு, இலங்கை அரசிலிருந்தும் ஒதுக்கப்பட்டதால் ஏற்கெனவே அதிகாரப் பகிர்வு குறித்து மேற்கொள்ளப்பட்ட பொறிமுறைகள் தோல்வி அடைந்தன." இது அபத்தமானது. அதிகாரப் பகிர்வுகள் தோல்வி அடைந்தமைக்கு இவை காரணமல்ல. மாறாக பேரினவாத நிலையே காரணம். அந்த வகையில் பேரினவாத நிலைமையை அடையாளம் காணவும், அதை சுட்டிக்காட்டவும் தவறுகின்ற அறிக்கை, தோல்விக்கான காரணத்தை மூடிமறைக்கின்றது. இதன் மூலம் அதிகாரப் பகிர்வின் உண்மைத் தன்மையையே மீளவும் கேள்விக்குரியதாக்குகின்றது.

 

3.1.3 இல் "வித்தியாசமான இனக் குழும, மத அடையாளங்களை இணைத்துச் செல்வதற்கான இலக்கு அரசியல் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டு", என்றும் 1.4 இல் "வேறுபட்ட இனங்கள், மதப் பிரிவினரிடையே மிக அதிக அளவிலான உண்மையான அதிகார பகிர்வினை வழங்கும்" என்றும் அரசியல் அமைப்பு திருத்தத்தை முன்வைக்கின்றது. மத அடையாளத்தை திணிப்பது, உருவாக்குவது இனப்பிரச்சனையில் புதியதொரு அரசியல் சூழ்ச்சி. மதத்துக்கு அதிக அதிகாரம் என்றால் என்ன? இன அடையாளத்தை குறிப்பிட்ட இந்த அறிக்கை, அதன் அடிப்படையில் தீர்க்க தவறுகின்றது. தவறாக இந்த பிரச்சனையை மத அடையாளமாக காட்டி, அதை வலிந்து முன்னிலைப்படுத்தி இதற்குள் திணிக்கின்றது. அரசு மதத்துக்கு வெளியில் இருக்க வேண்டிய ஒன்று என்பது கட்டாயமான ஒன்று.

 

4.1.5 இல் "இக் குழுவினரின் அணுகுமுறை இரு முனைகளைக் கொண்டது. அதாவது மாகாண சபைகளும், உள்ளுராட்சி சபைகளும் அரசின் நிறுவனங்களாகவும்," என்பதன் மூலம் இனங்கள் என்ற அடிப்படையில், மொழிகள் என்ற அடிப்படையில் பிரச்சனையை இனங் காணத்தவறி, அதை பேரினவாத நிலைக்குள் இதை சிறுமைப்படுத்தி ஒடுக்க முனைகின்றது.

 

5.2.2 இல் "ஓற்றையான, சமஷ்டியிலான, பிரதேசங்களின் அல்லது மாகாணங்களின் ஒன்றியம் என அழைக்கப்படும்" என்பது உள்ளடகத்தில் தேசிய இனப்பிரச்சனையை முழு இலங்கைக்குமான ஒன்றாக கருத மறுக்கின்றது. மாகாணங்கள், மாகாண சபைகள் அனைத்தையும் இலங்கைக்கான ஒன்றாக கொண்டு வந்தவர்கள், இனப்பிரச்சனை தீர்வில் அதை தமிழருக்கு மட்டுமானதாக காட்டுவது, அதனடிப்படையில் பேரினவாதம் தான். தமிழ் மக்களை அது தனிமைப்படுத்தி இனவொடுக்குமுறையை ஆணையில் வைக்கின்றது.

 

6.2.4:இல் "மக்களுக்கு தமக்கான மொழியை உருவாக்கவும், வளர்க்கவும் அத்துடன் தமது கலாச்சாரத்தின் வரலாற்றினைப் பேணவும், வளர்க்கவும், அபிவிருத்தி செய்யவும் உரிமை உண்டு. அத்துடன் இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்தினைப் பலவீனப்படுத்தாத வகையில் அரச அதிகாரத்தில் பகிர்வு கொள்ளவும், ஏனைய அரச கட்டுமானங்களில் பிரதிநிதித்துவம் பெறவும் உரிமை உண்டு. இவ் விளக்கமானது நாட்டின் எல்லைகளின் தன்மையை முழுமையாக அல்லது பகுதியாக பிரித்தல் அல்லது குடியரசின் அரசியல் ஐக்கியத்திற்கு பங்கமேற்படும் வகையிலான நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தினை வழங்குவதாக கருதுதல் ஆகாது." என்பது அபத்தமான விளக்கம். யாருக்கு யார்? ஏன்? இதை விளக்க முனைகின்றனர். நிச்சயமாக தமிழ் மக்களுக்கு அல்ல சிங்கள பேரினவாதிகளுக்கே. இந்த வகையில் இத் திட்டம் பேரினவாதிகளை திருப்தி செய்கின்ற வகையில், இதை விளக்கி தீர்வை இனம் காண முனைகின்றது. பொதுவான விளக்கம், அடையாளம் காணல், இவைகள் மட்டும்தான் உண்மையான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும்.

 

7. 4.2இல் "குடியரசின் மாகாணத்தினை அல்லது அதன் பாகத்தை பிரிப்பதற்காக நேரடியாக அல்லது மறைமுகமாக ஊக்கமளித்தல் அல்லது நியாயப்படுத்தல் அல்லது முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன மாகாண அரசினால் அல்லது மாகாண சட்ட சபையினால் மேற்கொள்ள முடியாது." என்ற விளக்கம் அபத்தமானது. ஒரு தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் போதும், முன்வைக்கப்படும் போதும் இப்படி இனம் காண்பது, விளக்குவது, யாரைத் திருப்தி செய்ய? நிச்சயமாக தமிழ் மக்களை அல்ல. சிங்கள பேரினவாதிகளைத் தான். இனப்பிரச்சனையை இவர்களால் வேறு எப்படிதான் இனம் காணமுடியும்.

 

8. 4.3இல் "நாட்டின் இறைமைக்கு அல்லது எல்லைப் பாதுகாப்பிற்கு அல்லது ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் நிகழ்வு ஏற்படும்போது மாகாண நிர்வாகத்தின் அழைப்பின்பேரில் மத்திய ஆட்சி தலையிடமுடியும். அவை அரசியல் அமைப்பில் தெளிவாக வரையறுக்கப்படும்." பேரினவாதத்தை திருப்தி செய்கின்ற வாதங்கள். யாரால் "நாட்டின் இறைமைக்கு அல்லது எல்லைப் பாதுகாப்பிற்கு அல்லது ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படும்" என்றால் அது தமிழரால் என்று மறைபொருளாகின்றது. அசட்டுத்தனமான ஒன்று. ஏன் மத்திய அரசால், சிங்கள பிரிவால் நடக்காது.? இப்படி இனம்காணுதல், விளக்குவது என்று இந்த அத்தியாயம் முழுக்க பேரினவாதமாகவே கொட்டிக்கிடக்கின்றது.

 

9. 6:3இல் "அதன் அடிப்படையில் அதிகார பரவலாக்கத்திற்கான பொருத்தமான அலகு மாகாணம் என குழு கருதுகிறது." இது உண்மையில் இனங்களின் உரிமையினை மறுக்கின்றது. அதை வெறும் அதிகாரமாக விதந்துரைக்கின்றது. இலங்கையை இன மற்றும் மொழி பிரதேசங்களாக பிரிக்க மறுக்கின்ற பேரினவாத அரசியல் சூழச்சி, பிரச்சனையை தீர்க்க உண்மையில் விரும்பவில்லை.

 

6:4இல் ".. தீர்மானங்களை மேற்கொள்ளும்போது இனக்குழுமம் மட்டும் தீர்மானிக்கும் காரணியாக அமையக்கூடாது என்பதும் கருத்தாக உள்ளது." ஏன் என இதற்கு பதிலளிக்கவில்லை. உண்மையில் சிங்கள பேரினவாதத்தையே தீர்வாக முன்மொழியும் போது, தனது அந்த எல்லைக்குள் தான் அது விதந்துரைக்கின்றது. பேரினவாதத்தை திருப்தி செய்கின்ற பல விளக்க உரைகளை வழங்க முனைகின்ற இந்த குழு, பிரச்சனையை இனங்காண்பதையே மறுக்கின்றது. சொல்லப்போனால் இந்த பிரச்சனையை அலசி ஆராயும் சுயாதீனமான குழுவாகக் கூட இதனால் இருக்க முடியவில்லை.

 

10. 6:5 இல் "1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பும், 1987ம் ஆண்டின் மாகாண சபை சட்டத்தின் பிரிவு 42ம் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய இரண்டு அல்லது மூன்று மாகாணங்களின் இணைவு அதுவும் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தி இணையுமாயின் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என குழு கருதுகிறது." இவை எல்லாம் ஏமாற்றுகின்ற, பிரச்சனைகளை சிக்கலாக்குகின்ற ஒரு அரசியல் ஏற்பாடு. உண்மையில் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கின்ற, அதேநேரம் ஏற்பது போல் நடித்து அதை வாக்கெடுப்புக்கு விட்டு இணைப்பது பற்றி சிங்கள பேரினவாதத்துக்கு காட்டுகின்ற ஒரு ஏற்பாடு. நேர்மையற்ற சதியை இப்படி முன்வைக்கின்றனர். இது மக்கள் கூட்டத்துக்கு இடையில் பிளவுகளையும், விரிசல்களையும் உருவாக்குகின்ற ஒரு தொடர்ச்சியான ஏற்பாடு. கூறப் போனால் இது பேரினவாதத்தின் சதி தான்.

 

11. 6:7 இல் "இந்த அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் பிரதான கவலைகள் பின்வருமாறு" 6:7 (அ) "தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிலும், அரசியல் அதிகாரத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளதாக காணப்படும் உணர்வு" 6:7 (ஆ) "முடிக்குரிய நிலங்களைப் பயன்படுத்தல்" தமிழ் மக்களின் பிரச்சனையை மிகவும் குறுகிய எல்லையில் சுருக்கி, அதில் முடிக்குரிய காணியை முன்னிலைப்படுத்தி பேரினவாதத்தை அதன் திட்டமிட்ட குடியேற்றத்தை பாதுகாக்க முனைகின்றனர். முடிக்குரிய காணி அல்லாதவை மீதான அழுத்தமான உரிமையை இனங்களுக்கு மறுக்கின்றது.

 

அதை 17.1 "மத்திய அரசாங்கமும் அதன் ஸ்தாபனங்களும், யாப்பின் ஆரம்பத்தில் தேசிய அட்டவணையிலுள்ள விடயங்களின்படி கடடுடப்பாட்டில் அல்லது பாவனையில் வைத்திருக்கும் அரச காணிகளை எல்லாம் மத்தி பொறுப்பேற்கும்." என்கின்றது. இப்படி மையமான புள்ளியில் விட்டுக் கொடுக்க மறுக்கின்றது. மகாணங்கள் காணி மீதான எந்த உரிமையையும் கொண்டிருக்காது.

 

.இதைத்தான் முஸ்லீம் மக்கள் மீது 6:8 (இ) " முடிக்குரிய நிலங்களைப் பயன்படுத்தல்." பற்றி பேச முனைகின்றது. 6:8 (அ) "வடக்கு, கிழக்கில் காணப்படும் இனச் சுத்திகரிப்பு, அதனைத் தொடர்ந்து ஏற்படும் சொந்த சொத்துகளை இழத்தல் தொடர்பான பயம்." என்ற விடையத்திலும் தீர்வை குளறுபடியாக்கி மிரட்டுகின்றது. முஸ்லீம் மக்களின் தனித்துவத்தை அடையாளம் காண மறுக்கின்றது. இந்த அறிக்கை அவர்களுக்கான சரியான ஏற்பாட்டை முன்வைக்கவில்லை. எப்படி தமிழ் மக்களுக்கு வைக்கவில்லையோ, அப்படி முஸ்லீம் மக்களுக்கும் முன்வைக்கவில்லை. பின் 6:8 (ஆ) "பாதுகாப்பு" பற்றி பேசுகின்றது. இதுவே மற்றொரு கேள்வியை எழுப்புகின்றது. தமிழ் மக்களுக்கு பயம் ஏற்படாதோ? பாதுகாப்பு எப்படி உறுதிசெய்யப்படும்!

 

6:9 இல் "வடக்கு, கிழக்கில் உள்ள சிங்கள மக்களின் கவலைகள் என பின்வருவனவற்றை குழு அடையாளப்படுத்துகிறது. 6:9 (அ) "பாதுகாப்பு" 6:9 (ஆ) "அதிகார பரவலாக்கத்தால் வாழ்வுக்கான வசதிகளை இழக்கக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய ஏக்கங்கள்." என்று இந்த தீர்மானம் சிங்கள மக்களின் பயம், ஏக்கம், ஆபத்து, இழப்பு என்று அலட்டுகின்றது. இது தமிழ் மக்களுக்கும் சிங்கள பகுதியில் பொருந்தும் தானே. அங்கு அது பற்றி அக்கறை கொள்ளவில்லை. தீர்வுகள், அதன் வரையறைகள் தவறாக உள்ள போதுதான், இவை பற்றி பிரச்சனைகளே உருவாகின்றது.

 

12. 6:10(அ) "தனியான வடக்கு, கிழக்கில் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு இரண்டு சுயாட்சி அலகுகள் அதனுள்ளே அமைக்கப்படுகின்றன." என்று கூறப்படுகின்றது. இதில் சிங்கள மக்கள் சுயாட்சி என்கின்றனர். எவ்வளவு இழிவாக தமிழ் முஸ்லீம் மக்களை காயடிக்க முடியுமோ, அப்படி இது காயடிக்கின்றது. நடத்தப்பட்டது திட்டமிட்ட சிங்கள குடியேற்றம். இந்த பேரினவாத செயலை கண்டிக்காது, அதற்கு அரசியல் அந்தஸ்து வழங்கும் ஒரு ஏற்பாடு. அப்படியாயின் இதே காரணங்களுக்காக, தமிழர்கள் செறிந்து வாழும் சிங்கள பகுதிகளில் சுயாட்சியை வழங்குவார்களா?

 

13. 6:10(ஆ)(2) "சிங்கள பெரும்பான்மை பகுதிகளை அருகிலுள்ள மாகாணத்துடன் இணைத்தல்." என்ற வாதம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மீதான நியாயப்படுத்தல். சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கி, அதை தமிழ் பிரதேசங்கள் அல்லாதனவென்று பிரிக்கின்ற சூழ்ச்சி. இதனால் தமிழ், முஸ்லீம் என்று பிரிக்கின்றனர்.

 

14. 6:10 (இ) "வடக்கு, கிழக்கிற்கென பொதுவான மாகாண சட்ட சபையும், அரசும் அமைதல் வேண்டுமெனவும், அதன் ஆயுள் 10 வருடகாலம் எனவும், அதன் பின்னர் கிழக்கில் வாக்கெடுப்பு நடத்தலாம்" இது தமிழ் மக்களை பிளக்கின்ற சூழ்ச்சி. இணைப்பு, பிரிப்பு என்று, தமிழ் மக்கள் பிரச்சனையை அங்கீகரிக்க மறுக்கின்ற பேரினவாத அரசியல் நாடகத்தின் நீட்சி. இந்த பெரும்பான்மை பேரினவாதத்தை எப்படி அமுல்படுத்துவது என்ற கூடி ஆராய்ந்து, முன்வைத்த அறிக்கை தான் இது.

 

இப்படி அறிக்கை முழுக்க பற்பல கூறுகள். சிலவற்றைத் தான் எடுத்துக் காட்டியுள்ளேன். மாறாக குறைந்த பட்ச அடிப்படையில் சில முன் மொழிவுகள்.

 

குறைந்தபட்ச ஜனநாயகத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு ஜனநாயகத் தீர்வு

 

இனப்பிரச்சனையில் குறைந்தபட்ச ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட, எமது கருத்து சார்ந்த முன்மொழிவு ஒன்றை எடுத்துக்காட்ட முனைகின்றோம். இதை அடிப்படையாக கொண்டு ஒரு தீர்வை, அனைத்து தரப்பையும் வலியுறுத்தி முன்வைக்க கோருகின்றோம். இதை நாம் தெளிவுபடுத்த முன், எமது நிலைப்பாடுகள் மீதான சில தெளிவுபடுத்தல் அவசியமானது.

 

1. எம்மைப் பொறுத்தவரையில் இலங்கையில் இனமுரண்பாட்டுக்கான தீர்வு சுயநிர்ணய அடிப்படையிலானது தான். இது அல்லாத அரசியல் அமைப்பில், இனப்பிரச்சனையை, அதன் சமூக பொருளாதார கூறுகளையும் முழுமையாக தீர்க்க முடியாது என்பது எமது தெளிவான நிலைப்பாடு. இதற்கு குறைந்த எந்தத் தீர்வும் இனங்களுக்கு இடையேயான பிரச்சனையையும், இனங்களுக்குள்ளான எந்த சமூக முரண்பாடுகளையும், மொத்த சமூக பிரச்னைகளையும் தீர்க்காது. இது எமது அரசியல் ரீதியான தெளிவான துல்லியமான நிலைப்பாடு. உண்மையில் அசாத்தியமான இந்த உண்மையை எடுத்துச் சொல்வதற்கு அப்பால், இதை நிர்ணயம் செய்யக் கூடிய வகையில் சமூகம் மீதான செயல்தளத்தில் எந்த சமூக பலத்தையும் இக்கருத்து கொண்டிருக்கவில்லை. இதை அடைவதற்கு இடைக்கட்டத் தீர்வைக் கூட முன்வைக்கவும், அதில் இருந்து முன்னேறும் நிலையிலும் கூட இக்கருத்து சமூக சார்ந்த அமைப்பு வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை.

 

2. சுயநிர்ணயத்தை அடையும் வழியில், ஒரு இடைக்கால தீர்வுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்து முன்வைக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. இதுவும் கூட இன்றளவில் கருத்தாகத்தான் உள்ளது. மக்களின் குறைந்தபட்ச நலன்களை முன்னிறுத்தி, அதை அமுல்படுத்தக் கோரும் வகையில் இலங்கையில் யாருமில்லை. எந்த சக்தியும் இதற்கு தயாரற்று இதற்கு எதிராகவே உள்ளனர். இந்த கருத்து தளம் சார்ந்து, அரசியல் ரீதியாக மக்கள் திரள் அமைப்பைக் கொண்ட இயங்கு தளம் எதுவும் கிடையாது. சமூக இயக்கம் முழுவதும் பாசிசமயமாகி, குறுகிய அதிகார வெறிக்குள் சமூகத்தை அங்குமிங்குமாக பிய்தெறிந்து பொறுக்கித் தின்னும் கூட்டத்தின் எல்லைக்குள் முழு சமூகமும் மலடாக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஒரு சமூகநலத் தீர்வைக் முன்வைக்க முடியாத நிலை. (இதை பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்தில் நான் முன்பே வைத்துள்ளேன். பார்க்க இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்)

 

இவ் இரண்டும் கருத்தளவில், மக்கள் சார்பு நிலையில் முன்வைப்பதாக மட்டும் உள்ளது. இந்த அவலமான ஒரு நிலையில், மூன்றாவது நிலையை ஒட்டிய குறைந்தபட்ச ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நிலைக்கு நாங்களும் கீழ் இறங்கி, அதையே குறிப்பாக்கி தெளிவான ஒரு வழிகாட்டலை வழங்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

3. இலங்கை முழுவதுமான இன்றைய பாசிச சூழலில் இருந்து, தப்பித்துக் கொள்ள மக்கள் விரும்புகின்றனர். இதை கவனத்தில் கொண்டு, இந்த உணர்வுகள், நிகழ்வுப் போக்குகள் மீது செயலாற்றவும் கோருகின்றது. எமது கருத்துக்களை மீறியும், மக்களின் வாழ்வியல் நிலை, அவர்களின் உடனடித் தேவை மீதான ஒரு தீர்வை, அவர்களின் அவலங்கள் கோருகின்றது.

 

இது உள்ளடகத்தில் பாசிச யுத்த பிரிவுகளிடமிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் ஒரு முயற்சி. இந்த நிலையில், நாம் இந்த மக்களின் துயரங்களை துடைத்துக்கொள்ளவும், அதையொட்டி இணங்கிச்செல்வதும் காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் கூட நாம் ஆளுமை செலுத்தவோ அல்லது அதன் திசைவழியை ஒழுங்குபடுத்தும் சக்தியோ எம் முன் கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் அதை நோக்கி ஒரு சிந்தனை முறையை உருவாக்குவது, அவசியமானது. இந்த வகையில், மூன்றாவது நிலை மீதான ஒரு தீர்வுக்கான ஒரு சிந்தனைமுறையை தூண்டும் முயற்சி தான் இது.

 

எமது மூன்றாவது நிலை பெரும்பாலானவர்களின் அருபமான முதலாவது அரசியல் நிலையாகும். ஆனால் அதில் தெளிவற்ற ஒரு கதம்பம். இந்த வகையில் இந்த மூன்றாவது வகையான தீர்வு என்பது, சமூகத்தில் நிலவும் பல்வேறு சமூக முரண்பாடுகளை தீர்க்கமாட்டாது என்பதை முதலில் தெளிவாக புரிந்திருக்க வேண்டும். இந்த அரசியல் நிலையைத்தான் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் யாரும் பாசாங்கு செய்யத் தேவையில்லை.

 

இது நிலவுகின்ற இந்த பிற்போக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தில், சில சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. இன்று பேசப்படும் அரசியல் தீர்வு இதற்கு உட்பட்டதே. இந்த நிலையில் சமூகத்தின் ஏனைய சமூக முரண்பாடுகள் பற்றிய விவாதப் பொருளையே இது இயல்பாக தவிர்த்துக்கொள்கின்றது. இன்று அரசு கூற முனையும் கற்பனையாகவேயுள்ள அந்த தீர்வும் சரி, அதையொத்த ஓத்த தீர்வுகளும் சரி, இதற்குள் தான் இயங்குகின்றது.

 

இந்த வகையில் தான் அண்மையில் வெளியாகிய பெரும்பான்மை அறிக்கை. இதை எடுத்துக் கொண்டால், இது பெருமளவில் உப்புச்சப்பற்ற வெற்று அலட்டல். சாதாரண மக்கள் புரிந்து கொள்ளமுடியாத வகையில், வெளிப்படையாக பேச மறுக்கின்ற, இனப்பிரச்சனையை தீர்க்கின்ற வகையில் புலமையெதுவுமற்ற ஒரு அறிக்கை. உண்மையில் பேரினவாதத்தை இறுக்குகின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு தீர்வு. அதைத்தான் சுருக்கமாக மேலே பார்த்தோம். படுமோசமானதும், இலங்கையில் இன ஒடுக்குமுறையை கட்டமைத்த பேரினவாத நிலையை பேணுகின்ற வகையில், ஒரு தொடர்ச்சியான முன் முயற்சிதான் இது. இதையும் இந்த பேரினவாத அரசியல் மலம் துடைக்க பயன்படுத்துகின்றது என்பது வேறு விடையம்.

 

இந்த அறிக்கையும் சரி, இது போன்ற அறிக்கைளும் சரி, இனப்பிரச்சனையை குறிப்பாக்கி அதற்கான தீர்வை முன்வைக்க தவறுகின்றன. எந்த மக்களுக்கு அதை விளங்க வேண்டுமோ, அந்த மக்கள் புரியாத வகையில் இதை திணிக்க முனைகின்றது. உண்மையில் பார்த்தால் இதன் உள்ளடக்கம், அரசியல் அமைப்பில் ஓட்டைகளை உருவாக்கி அதற்குள் அங்குமிங்குமாக இனவாதத்தை மிதக்கவிட முனைகின்றது.

 

சமூக முரண்பாடுகளை தீர்க்க மறுக்கின்ற இந்த அரசியல் சட்ட அமைப்புக்குள், இதை ஆதரிக்கின்ற சக்திகள் இனப்பிரச்சனையை குறைந்தபட்ச வரையறையில் தீர்க்கமுடியும். இனமுரண்பாடு அபத்தங்களையும் கடந்து, இதை செய்யமுடியும். பெரும்பான்மையின் விருப்பத்தை பெறும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளையும், அதன் குறுகிய குதர்க்கமான அரசியல் எல்லைகளை முடக்கும் வகையில், இதை முன்மொழிய முடியும்.

 

இதை நாம் வைப்பது எமது தொடர்ச்சியான அரசியல் நிலைக்கு முரணாகப்படலாம். மக்கள் விரும்புகின்ற உடனடியான அமைதியை, குறைந்தபட்ச ஜனநாயக கோரிக்கைக்குள் உள்ளடக்கி இதை நாம் முன்வைப்பது அவசியமாகின்றது.

 

இந்த வகையில் ஒவ்வொருவரின் சிந்தனை முறையையும், குறைந்தபட்ச ஜனநாயக கோரிக்கைக்குள் சிந்திக்க தூண்டுவது அவசிமானதாக உள்ளது.

 

இந்த வகையில் இனங்களுக்கு இடையில் மக்கள் கூட்டத்துக்குள் அதியுயர் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில், மிக நுட்பமாக தீர்வுகளை இனம் காணவேண்டும்.

 

1. இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பதை வெறுமனே வடக்கு கிழக்கு மக்களுக்கானதாக காட்டி மட்டுப்படுத்துவது நிராகரிக்கப்பட வேண்டும். இது பிரச்சனையை தீர்க்காது. மாறாக அலங்கோலமாக்கி சின்னா பின்னமாக்கும். உண்மையில் அரசியல் கட்சிகள், அரசியல் செய்யவே இது உதவுகின்றது.

2. இனப்பிரச்சனைக்கான தீர்வை இலங்கையின் இனங்கள் என்ற அடிப்படையிலான வரையறையிலும் செய்யப்பட வேண்டும். தீர்வு அனைத்து இனங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தீர்வு ஒரு பிரிவு மக்களுக்கு என்று சிறப்பானதாக, தனித்துவமானதாக இருக்கக் கூடாது. இவை பிரச்சனையை மேலும் கூர்மையாக்கும். வடக்குகிழக்கு மக்களின் பிரச்சனைக்கு தீர்வல்ல, இலங்கையில் உள்ள இனங்களுக்கான ஒரு தீர்வை இனம் காணவேண்டும்.

 

இந்த வகையில் முதன்மையானதும் முக்கியமானதுமாக, சிங்கள மக்களுக்கு தனி அலகாகக் கொண்ட இன அடிப்படையிலான தீர்வை வழங்குவது அவசியமானது, நிபந்தனையானது. இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களின் தனித்துவமான அடையாளங்களை ஒருங்கிணைக்கும் அரசியல் தான், இதை குறைந்தபட்சம் ஜனநாயக ப+ர்வமாக தீர்க்கும். இந்த வகையில் அடையாளம் காணப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் என்ற அடிப்படையில், தீர்வுகளை இனம் காண முற்படவேண்டும்.

 

3. இன அடிப்படையிலான தனி அலகை இனம் காண்பது, இனரீதியான ஒடுக்குமுறையை தொடங்கி வைத்த 1948 ஆண்டு காலகட்டத்தை அடிப்படையாக கொண்டு, இதை நெகிழ்ச்சி கொண்ட வடிவில் அணுகுவது அவசியமானது. இயல்பான இடப்பெயர்வுகள், திட்டமிட்டு நடத்திய குடியேற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், இந்த வரையறை முன்வைக்கப்பட வேண்டும்.

 

4. இந்த வரையரைக்குள் உள்ளடங்கும் சகல மக்களினதும் தனித்துவத்தையும், அதற்கு எதிரான முரண்பாடுகளையும் களையும் வகையில், முரண்பாடாக இயங்க முடியாத வகையில் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

 

5. மத்திய (இன மொழியல்லாத) அரசு, மாநில (இன மொழி) அரசு இந்த இணக்கப்பாடான உடன்பாட்டை மீறமுடியாத வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் அமைய வேண்டும். அந்த (இன மொழி வாரிப்) பகுதியில் வாழும் சிறுபான்மை இனப் பிரிவுகளின் ஆட்சேபனைகள், பெரும்பான்மை இனப் பிரிவுக்கு எதிராக இருக்குமானால், அந்த பெரும்பான்மை எடுக்கும் இனச் சட்டங்கள் செல்லுபடியாகாத வகையில் சட்ட விதிகள் அவசியமானது. இனம் மற்றும் மொழிச் சட்டங்கள் சிறுபான்மையின் இணக்கமான அங்கீகாரத்துடன் மட்டும் தான் சட்ட அங்கீகாரத்தை பெறும். இது அந்தப் பகுதி சிறுபான்மை மக்களின் விருப்பை தெரிந்து கொள்ளும் நேரடி வாக்கெடுப்புக்கு (அரசியல் வாதிகள் விலை பேசப்படலாம்) உட்பட்ட வகையில் இது அமைதல் அவசியம். (இங்கு வாக்களிப்பை கோருவதற்கு, குறிப்பிட்ட அந்தப் பகுதி மக்கள் அதை கோருகின்றனர் என்பதை உறுதி செய்யும் ஜனநாயகமுறை சட்ட ரீதியாக அவசியமானது.)

 

6. இன ரீதியான ஒரு மாநிலம் ஒன்றில் காணப்படும் பிரதேச ரீதியான முரண்பாடுகள், பிரச்சனைகள், அதிகாரங்கள் அனைத்தும் ஒரு இணக்கப்பாடான வடிவத்தில் இணைந்து காணப்பட வேண்டும். குறிப்பாக பிரதேச ரீதியான ஒரு ஆட்சேபனைக்கு எதிராக, பொதுவான பெரும்பான்மை மூலமான சட்டத்தை நடைமுறையில் அமுல்படுத்த முடியாத வகையில் இருக்க வேண்டும். ஆட்சேபனையை சட்டமாக்க வேண்டும் என்றால், அந்த பிரதேச மக்களின் வாக்களிப்பு மூலம் மட்டும் தான் செய்ய கூடியவகையில் அரசியல் அமைப்பு கொண்டிருக்க வேண்டும். (இங்கு வாக்களிப்பை கோருவதற்கு, குறிப்பிட்ட அந்தப் பகுதி மக்கள் அதை கோருகின்றனரா என்பதை உறுதி செய்யும் ஜனநாயகமுறை சட்ட ரீதியாக அவசியமானது.)

 

7. தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லீம் மலையக மக்களை எடுத்துக்கொண்டால், அவை தனி அலகுகளாக இருக்கின்ற வகையிலும், அது சிங்கள தமிழ் மக்கள் உட்பட்ட இரு பிரதேசங்களினுள்ளும் அமையலாம், தனித்தும் இருக்கலாம். அவர்களின் செறிவை அடிப்படையாக கொண்டு, இது வரையறுக்கப்பட வேண்டும். மக்கள் சிதறி வாழ்கின்ற குறித்த பிரதேசங்களில் அடர்த்தியாக வாழ்கின்ற போது, அவர்களின் ஆட்சேபனைகளை உள்வாங்கவும், அதை அந்த சிறுபான்மை நிராகரிக்கும் பட்சத்தில் அதை அமுல்படுத்த முடியாதாகவும் இருக்க வேண்டும்.

 

8. இன மொழி ரீதியான அமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை உள்ளடக்கிய வகையில், அவர்களை பெரும்பான்மை உறுப்பினராக கொண்ட ஒரு மத்திய அரசு உருவாக்க்கப்பட வேண்டும். ஒன்றையொன்று ஐக்கியப்பட்டு செயல்படவும், அதிகளவு பணம் நிர்வாக அலகுகளுக்கூடாக சிதைக்கப்படுவதையும் இது தடுக்கும்.

 

9. இந்த வகையில் இன ரீதியான அலகுகளின் அதிகாரங்கள் அனைத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு தொடர்புடைய வகையில் பிரிக்கப்பட வேண்டும். சர்வதேச தொடர்புடையவை மத்தியரசுடனும், உள்நாட்டுடன் தொடர்புடையவை மாநில அரசுகளுடனும் இருக்கும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். ஒரு பிரதேச பகுதிக்கான வரையறை, இயல்பாக அப்பிரதேச ரீதியான சட்டம், வாழ்வியல், பொருளாதாரம், கல்வி, காணி போன்ற பல துறைக்கு உட்பட்டதாக அதிகார கொண்டதாக இருக்க வேண்டும்.

 

10. மத்திய, மாநில அரசு இரண்டும் மதத்தில் தலையிடாக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். மதத்தை பாதுகாப்பது, அதற்கு நிதி ஒதுக்குவது முற்றாக தடை செய்ய வேண்டும். மதம் மக்களின் வழிபாட்டுமுறை என்றால், அதை பராமரிப்பது, அனுசரிப்பது மக்களின் உரிமையாக அவர்களிடமே விட்டுவிட வேண்டும். அரசு தலையிடவும், நீதி வழங்குவதும் தடைசெய்யப்பட வேண்டும்.

 

கல்வியில் அனைத்து மதக் கல்வியும் தடை செய்யப்பட வேண்டும். மொழிக் கல்வி முன்னிலைப்படுத்த வேண்டும்.

 

11. இனக்குரோதங்களை விதைத்தல் தடை செய்யப்பட வேண்டும். அவை என்ன என்பதை சட்ட வரையறை செய்வது அவசியம். குற்றம் இழைக்கும் பட்சத்தில் உறுப்புரிமையை இழக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசு உத்தியோகத்தர்கள் தமது பதவியை இழப்பர். அத்துடன் அனைவரும் தண்டனைக்கு உட்பட வேண்டும்.

 

12. கல்வி, வேலை வாய்ப்பு போன்ற விடையங்களில் இன அலகுகள் சுயாதீனமாக செயலாற்றும் வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் இலங்கை முழுவதுக்குமான கல்வி முறை, கூலி முறை, தொழிலாளார் சட்டங்கள் பொதுவானதாக இருக்கவேண்டும்.

 

13. நிதி வளங்களை பகிர்தல் என்பது, மாநில ரீதியான அலகு திரட்டக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும். மத்திய நிதியைப் பகிர்தல் என்பது, இன மொழி ரீதியான பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேசத்தைச் சோந்த ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் தீhமானிக்கப்பட வேண்டும். இனங்களின் எந்த ஆட்சேபனையும், இதை தடுக்கும் வகையில் இது உறுதி செய்யப்பட வேண்டும்.

 

14. மொழி மற்றும் பண்பாட்டு கலச்சார கூறுகள், பரஸ்பர இணைப்புக்குள்ளாக்க வேண்டும். தாய் மொழி பிரதானமாக இருக்கும் அதேநேரம், இரண்டாவது தேசிய மொழி (இது தமிழ் அல்லது சிங்களம்) உயர்தர வகுப்பு வரை கட்டாய பாடமாக இருக்க வேண்டும். உயர் பரீpட்சையில் இரண்டாவது மொழித் தேர்வு கட்டாயமாக இருக்க வேண்டும். இது ஒரு 10, 15 வருட கால இடைவெளியில் முழுமையாக அமுலுக்கு வரவேண்டும். அரசு சேவையில் உள்ளோர் குறிப்பிட்ட காலத்தின் பின்பும், மற்றும் புதிய நியமனங்களில் கட்டாயமாக இரண்டு மொழித் தேர்வும் சித்தி அடைந்து இருக்க வேண்டும். இரண்டு மொழி அறிவற்ற ஒருவரின் நியமனம் உரிமை அல்லது நியமனத்தில் இருந்து விலக்கும் உரிமை சட்ட ரீதியானது. இதை கால இடைவெளியில் அமுல்படுத்த வேண்டும். ஏற்கனவேயுள்ள முதியவர்களுக்கு சலுகையும், இரண்டாவது மொழியை பாவிக்கும் திறன் பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகையாக விசேட படியும் வழங்க வேண்டும். இரண்டாவது மொழியின் ஆற்றலை மூன்று வகையில், இதை நெகிழ்சி போக்காக கையாளவேண்டும் 1.இலக்கண ரீதியான முழுமையான மொழி அறிவு. 2. இரண்டாவது மொழி மூலம் பேசும் அறிவு. 3. எழுதவும் பேசவும் திறன் கொண்ட அறிவு. இந்த அடிப்படையில், சலுகை அடிப்படையில் இதை இனம் காண்பது அவசியம்

 

இது மத்திய மாநில அரசின் அனைத்து அரசு துறையிலும் இது கட்டாயம் கையாள வேண்டும்.

 

15. இன ரீதியான, மத ரீதியான இழிவாடல்கள், நடத்தைகள் அனைத்தும் சட்டத்தின் முன் குற்றமாக பிரகடனம் செய்து, தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். சாதிய ரீதியான குற்றங்களைப் போன்று இவை அடையாளம் காணவேண்டும்

 

இவைகள் குறிப்பிடத்தக்க சில. இவைகளில் உள்ள தப்பபிராயங்களை களைய, கால அவகாசத்தை அடிப்படையாக கொண்டு நடைமுறைக்குரிய ஒன்றாக மாற்றுவதன் மூலம், குறைந்தபட்சம் இனங்களுக்கு இடையில் உயர்ந்த ஜனநாயக பன்முகத் தன்மையை உருவாக்க முடியும்.

 

இவைகளை அடிப்படையாக கொண்டு, இலங்கைக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை புதிதாக வரைய வேண்டும். இது மட்டும் தான், பிரச்சனையை குறைந்தபட்சம் தீர்க்கும. இல்லாத அனைத்தும் மறுபடியும் மறுபடியும், இதை முன்னுக்கு கொண்டுவரும்.

 

பி.இரயாகரன்
24.2.2007

Last Updated on Friday, 18 April 2008 21:10