Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலியெதிர்ப்பு அரசியலை, புலியல்லாத சமூக மாற்றுக் கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியுமா?

புலியெதிர்ப்பு அரசியலை, புலியல்லாத சமூக மாற்றுக் கருத்தாக ஏற்றுக் கொள்ளமுடியுமா?

  • PDF

ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற புலி அல்லாதோரின் அரசியல் நிலைப்பாடுகள் தான், மக்களுக்கான உண்மையான மாற்று உருவாக முடியாமைக்கான சமூக அரசியல் காரணமாகும். இந்த உண்மை புரிந்துகொள்ள முடியாதவரை,

 தமிழ் மக்களின் உண்மையான மாற்று என்பது கிடையவே கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற எந்த அரசியல் வழிமுறையும், மக்களின் உண்மையான சமூக விடுதலைக்கு வழிகாட்டுவதில்லை. மாறாக மக்களுக்கான புதைகுழியைத்தான் எப்போதும் தோண்டுகின்றனர்.


தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான சமூக பொருளாதார அரசியல் சிதைவுக்கு காரணம், புலிகள் அல்லாத புலியெதிர்பு;பு அரசியல் பேசுவோர் புலிகளால் தான் என்கின்றனர். இது அரசியல் ரீதியாக உண்மையல்ல. இதற்கு எதிரான போராட்டமே அரசியல் ரீதியானது. புலிகள் இல்லையென்றால் எல்லாம் சரியாக இருந்து இருக்கும் என்று, இவர்களில் பலரும் புலம்ப முனைகின்றனர்.

 

உண்மையில் இந்த அரசியல் பிறழ்;சி எங்கே தொடங்குகின்றது? தனிமனிதனாக உள்ள, புலியல்லாதோரின் கையாலாகாத்தனத்தில் இருந்தே இவை தொடங்குகின்றது. இதை மூடிமறைக்கவே அதற்கு இசைவான கோட்பாடுகளை முன்தள்ளுகின்றனர். மக்களுடன் அரசியல் ரீதியாக தொடர்பறுந்த ஒரு நிலையில், புலிகளின் வன்முறை கொண்ட பாசிச கட்டமைப்பை எதிர்கொள்ள முடியாத தனிமனிதர்கள், புலிக்கு எதிரான அனைத்தையும் கண்மூடி ஆதரிக்கும்; கொள்கையை அரங்கேறுகின்றனர். இது உறைந்து போன இரத்தமும் சதையும் கொண்ட சிதைந்து போன அழுகிய பிணங்களை, அழகுபார்த்து பூச்சூட்டுவதையே செய்கின்றது. போராட முடியாத வங்குரோத்து அரசியலாக வலிந்து சீரழிந்த முடிவுக்கு வந்த நிலையில், மக்கள் தான் தமது சொந்த விடுதலைக்காக போராடவேண்டும் என்று கூறவும் அது சார்ந்த கோட்பாட்டையும் அரசியல் ரீதியாக முன்வைக்கவும் வக்கற்றுப் போய்விட்டனர். இவர்களே புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினராக சீரழிந்து, அன்னிய சக்திகளில் நம்பிக்கை கொண்ட செயல்பாட்டாளராகிவிட்டனர்.

 

அரசியல் உள்ளடக்க ரீதியாக இதையே அப்பட்டமாக புலிகள் தரப்பும் செய்கின்றனர். பேரினவாதத்தின் ஒழுக்குமுறையை காட்டி புலிகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்போரும், அவர்களின் மனிதவிரோத எல்லா சமூகப் புனைவுகளையும் நியாயப்படுத்துவதும் தொடர்ச்சியாக அரங்கேறுகின்றது.


இவர்களுக்கு இடையில் எங்கும் அரசியல் வேறுபாடுகள் கிடையாது. சமூக இயக்கம் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து, தனிமனித முயற்சிகள் மீதான போற்றுதல் தூற்றுதல் என்ற சீரழிந்த அரசியல் போக்கே, புலி மற்றும் புலியல்லாதோர் தரப்பின் அரசியல் அடிப்படையாகிவிட்டது.

 

புலிகள் தமிழ் மக்களின் சமூக பொருளாதார சீரழிவிற்கு புலிகள் அல்லாதோரே காரணம் என்கின்றனர். இது ஒரு விசித்திரமான எதிர்நிலைக் குற்றச்சாட்டின் மூலம், தமிழ்பேசும் மக்களின் அடிப்படையான சமூக பொருளாதார உரிமைகளை பரஸ்பரம் மிகவும் திட்டவட்டமான உணர்வுடன் மறுக்கின்றனர். தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் கூறுகளை, தாமாகவே தோண்டிய புதைகுழிகளில் அன்றாடம் இட்டு நிரப்புகின்றனர்.

 

தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் உணர்வுடன் ஒன்றி நிற்காத எந்தச் செயலையும் ஆதரிக்க மறுப்பது தான், மக்களின் விடுதலைக்கான முதல் நேர்மையான அர்ப்பணிப்பாகும். இதில் புலிசார்பு, புலியெதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்தை எம்மைச் சுற்றி நாமேயிட்டுவிட்டு, அதற்குள் நின்றபடி பாகுபாடு எதையும் காட்டமுடியாது. மக்களுக்காக குரல் கொடுப்பதையே, எப்போதும் நேர்மையான அரசியல் கோருகின்றது. இது அரசியல் ரீதியாக, சமூக நடைமுறை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக நாம் உணர்வுபூர்வமாக கொள்ளாதவரை, எமது நேர்மை மற்றும் எமது நோக்கம் சந்தேகத்துக்குரியதாகவே எப்போதும் அமைந்துவிடும்.

 

இதை உண்மையில் இனம் காணமுடியாத பல அப்பாவிகள். சமூகப் போக்கை புரிந்துகொள்ள முடியாதவர்களாக, சூழ்ச்சிமிக்க அரசியல் நகர்வுகளை இனம் காணமுடியாதவராகவே பலர் சமூக விழிப்பற்ற நிலையிலேயே உள்ளனர். இவர்கள் இந்த இரண்டு பிரதான அரசியல் போக்கின் பின்னால் இழுபடுகின்ற அரசியல் அனாதைகள். அதாவது சொந்தமாக இவை தான் சரியென்று சமூகத்தைச் சார்ந்து நின்ற கருத்து ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் புரிந்து கொண்டு தத்தம் கருத்துகளை முன்வைக்க முடியாதவர்கள். பலமாக இருப்பதில் ஒன்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டு கருத்துரைப்பவர்களாக மாறுகின்றனர். இது புலிசார்பு, புலியெதிர்ப்பு அணிகளில் பெருமளவில் பெருமெடுப்பில் காணப்படுகின்றனர்.

 

சமூக ஆதிக்கம் பெற்றுள்ள இரண்டு மக்கள்; விரோத போக்குகளின் எதிர்நிலைகளில் பயணிக்கும் இவர்களை, இனம்கண்டு சரியான வழிக்கு கொண்டுவருவது வேறு. ஆனால் இந்த இரண்டு அணியையும் அரசியல் பொருளாதார ரீதியாக வழிநடத்துபவர்கள் வேறு. இவர்களுக்கு எதிரான போராட்டமின்றி, மக்களுக்கான சமூகமாற்று என எதுவும் கிடையாது. மனிதனுக்கு உண்மையான விடுதலையும் கிடையாது.


இந்த பொதுவான விவாதத்தை முழுமையாக புரிந்துகொள்ள, நடந்த ஒரு குறிப்பான விவாதத்தின் முழுமையை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. நான் தூண்டில் பரமுவேலன் கருணாநந்தனை நோக்கி ஒரு அரசியல் விமர்சனத்தை முதலில் வைத்தேன். அதில் "தேனீ இணையம் புலியெதிர்ப்பு என்ற ஒரேயொரு அரசியல் பாதையில் இருந்து அனைத்தையும் வாந்தியெடுப்பவர்கள். புலிக்கு எதிராக அமெரிக்கா பேய்களுடனும் கூடிக்குலாவத் தயாரானவர்கள். இதை அரசியல் ரீதியாக சுயமாக புரிந்துகொள்ளுங்கள்.

 

குறித்த கட்டுரையின் தலைப்பு கூட ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்குரிய வகையில், இடப்பட்டு இருந்தது. அவர்கள் இதன் ஊடாக புலிகளை தூற்றவே விரும்பினார்களே ஒழிய, இந்த ஆணாதிக்க சமூக அமைப்பின் விளைவாக இதைப் பார்த்து அதற்கு எதிராகப் போராட முனையவில்லை. குறித்த சிறுமியின் நலன் அவர்களின் குறிக்கோளாக இருக்கவில்லை. இது அவர்களின் அரசியல் தெரிவு. குறித்த கட்டுரையை நீங்கள் போட்டதில் நாம் உடன்பட முடியாதவராக இருந்தோம். இதைவிட நீங்கள் சுயமாக ஒன்றைப் போட்டு இருக்கலாம். அது ஆரோக்கியமான, ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்துக்கு சரியாக வழிகாட்டக் கூடியதாக இருந்து இருக்கும்.

 

கட்டுரைகளை தெரியும் போதும், சமூக நோக்கில் அவை எந்தளவுக்கு மக்களுடன் இணங்கி நிற்கின்றன என்பதைப் கூர்ந்துபாருங்கள். எழுந்தமானமாக எடுத்துக் கையாள்வது என்பது, சமூகத்துக்கு எதிரானவர்களைப் பலப்படுத்துவதற்கே உதவுகின்றது. இதைத்தான் நாம் புலிகளின் போராட்டத்தின் மீது எமது விமர்சனமாக உள்ளது. குறுகிய புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாது, சமூக நோக்கில் விடையங்களை இனம் கண்டு அணுக வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்." என தூண்டில் பரமுவேலன் கருணாநந்தனுக்கு ஒரு அரசியல் வேண்டுகோளை விடுத்திருந்தேன்.

 

அவர் இதை பற்றி தனது பதில் கருத்தில் "தேனீயினது அரசியலானது பற்றி நான் பொத்தாம் பொதுவாகவொரு முடிந்த முடிவை வைத்திருக்கவில்லை. அவர்களிடம் கருத்துரீதியாக உடன்பாடு இல்லாதிருப்பினும் "புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்" கெதிரான போரைச் செய்யும் ஒரு ஊடகமாகவும், புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கான போரை உடைத்து மாற்றுக் கருத்தாளர்களை, அவர்களின் கருத்துக்களைத் தேனீயே கடந்த பல வருடமாக வெளிக்கொணரச் செய்ததுண்மை.


தேனீயின் அரசியலானது ஆனந்தசங்கரியின் இருப்போடும், அவரது அரசியல் வாழ்வோடும் சம்பந்தப்பட்டதை நான் அறிவேன். இலண்டனில் இது குறித்தொரு கலந்துரையாடலில் இதை வலியுறுத்தியுமுள்ளேன்.


உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் யாவையும் ஏற்றுக் கொள்வேன். எனது நோக்கமானது சமூகத்தில் ஜனநாயக பூர்வமாக மக்கள் செயற்படக்கூடிய அரசியல் சூழலுருவாகவேண்டும். எதன் பொருட்டும் புலிகளின் அச்சுறுத்தல், ஊடக ஆயுத வன்முறையால் மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். இத்தகைய நிலையுருவாகும்போது பாசிசக் கட்டமைவு தகர்வதற்கானவொரு சூழலைத் தமிழ்ச் சமுதாயம் பெற்றுவி;டும். அதன் அடுத்த பாச்சலானது பன்மைத்துவப் போராட்டச் சூழலை அந்தச் சமுதாயம் பெறுவதற்கானவொரு "இடம்" உறுதிப்படும். இதுவே முதற்தேவையானது.

 

இந்த அடிப்படையுரிமையை மறுக்கும் புலிகள் நம்மையும் அழித்தொழிப்பதில் தமது இருப்பை நிலைநாட்டுதல் சாத்தியமுறலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

பாரிசில் நடந்த இரு முக்கியமான கொலைகள். நம்ம சபாலிங்கத்தைச் சொல்லவில்லை. மாறகப் புலிகளின் உயர்மட்டப் பொறுப்பாளர்கள் நாதன், கஜன் கொலைகளையே கூறுகிறேன். இந்தக் கொலைகளைச் செய்த புலிப்பிரமுகர் திலகரைப் புலிகள் தளத்துக்கு வரவழைத்து தமது கண்காணிப்புக்குள் வைத்திருப்பது எதற்காக?


கஜன் ஊடகவியலாளராக இருந்தபோது ஈழமுரசுப் பத்திரிகையானது ஓரளவு மாற்றுக் கருத்தாளர்களையும் உள்வாங்கி ஜனநாயக பூர்வமாகச் செயற்பட முனைந்தது. இதில் அவரோடான எனது சந்திப்பு இலண்டனில் ஜமுனா இராஜேந்திரன் மூலம் இடம்பெற்றது. அவர் புலிகளை உட்கட்சி ரீதியாக விமர்சித்த போக்கும், தமிழர்களின் நலனை மையப்படுத்திய புலி இயக்க நலனை மையப்படுத்தாத போக்கே அவரைக் கொல்லப் புலிகளுக்கு இருந்த காரணங்களில் முக்கியமானது.

 

இங்கே கவனிக்கத்தக்கது என்னவெனில் புலிகளின் அதிகார வர்க்கத்துக்கெதிராக எவரும் சிறுகூச்சல் போட்டாலே அவர் சமாதியாகும் நிலைதான். தமது இருப்பே, தமக்கெதிரான எண்ணமற்ற சூழலேயென்பது புலியின் ஆதிக்கத்துக்கு நன்றாகத் தெரியும்.

 

இதை உடைப்பதே முதல் தேவை. இதற்காக லெனின் வார்த்தையில் சொன்னால் "பூதத்தின் மாமியாரோடாவது" இணைந்து செயற்படுதுல்... மீளவும் கவனிக்கவும் பூதத்தின் மாமியாரோடுதான். மாறாகப் பூதத்தோடல்ல. இங்கே தேனியானது பூதத்தின் மாமி! பூதம் யாரென்று எல்லோரும் அறிவோம் தானே." என்கின்றார்.


இதுவே எமக்கு இடையில் நடந்த ஒரு குறிப்பான விவாத உள்ளடக்கம்.

 

மனிதத்துவம் என்பதே வற்றிப்போன தமிழ் சமூகத்தில் இருந்து, சமூகமே மீள்வது எப்படி என்று கேள்வியில் இருந்தே, இப்படியான கருத்து வருகின்றது. முன்வைக்கபட்ட இந்த அரசியல் உள்ளடக்கமே மனிதர்களை விடுவிக்காது என்பதை, பரந்துபட்ட பலருக்கும் புரிந்துகொள்ள வைப்பதே எனது பதிலாக அமைகின்றது. சமூகத்துக்கு இது எதைக் கூறமுனைகின்றது

 

மனித வரலாற்றை மக்களுக்கு வெளியில் படைப்பதை பற்றி வரையறையில் நின்று இது பேசுகின்றது. இதை அவரும் பலரும் தெரிந்துகொண்டு சொல்லவில்லை என்றே நம்புகின்றேன்;. ஆனால் இதை முன்வைப்பவர்கள் அப்படியல்ல. தனிப்படட ரீதியில் முதலில் இவர்கள் கூட அப்படி இருந்ததில்லை. இது பிரபாகரனுக்கும் கூட பொருந்தும். உண்மையான மக்கள் விடுதலை என்ற உணர்வுப+ர்வமான உணர்வுடன் அனைவரும் போராட வந்தவர்கள். இதுவே பின்னால் சுயநலம் கொண்ட தனது விடுதலையாக சீரழிந்தது. இதை நாம் தெளிவாக அரசியல் ரீதியாக புரிந்துகொண்டு தான், சமூகத்தின் வேறுபட்ட நபர்களின் சமூக பாத்திரங்களை வௌ;வேறாக கையாள வேண்டியுள்ளது.



இனி நாம் ஏன் எதற்காக யாருக்காக போடுகின்றோம். இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ளாத வரை, அனைத்துமே தவறான அரசியல் விளக்கமும், அரசியல் நடைமுறையையும் இயல்பாக பெற்றுவிடும். நாம் போராடுவது எனக்காகவா அல்லது தமிழ் மக்களுக்காகவா. இரண்டும் வௌ;வேறான போராட்ட வழிகளை பற்றிப் பேசுவனவாக உடன் மாறிவிடுகின்றது.

 

நாம் போராடுவது மக்களுக்காகவே என்றால், எதற்காக போராடவேண்டும்;. மக்களின் இன்றைய சமூக வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து, அவர்களின் துயரத்தை இல்லாது ஒழிப்பதே எமது இலட்சியமாக இருக்கமுடியும்;. இது அவர்களின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வுக்கு வெளியில் இருந்து கற்பனையில் இதைப் பற்றி பேசமுடியாது. அவர்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்த ஒரு போராட்டமாக இருக்கவேண்டும். இதை போராடும் எந்தத் தரப்பும் அடிப்படையாக கொள்ளாத வரை, ஏதோ ஒரு காரணத்தினால் அதை நாம் ஆதரிக்க முடியாது. மாறாக சரியான போராட்டத்தை எடுத்துச் சொல்வதே எமது நேர்மையான பணியாக இருக்கமுடியும்.

 

பொதுவாக தேனீ போன்ற அனைத்தும் தமக்காக மட்டும், தமது சொந்த நலனில் நினN;ற போராடுகின்றன. அந்த போராட்டம் இயல்பில் மக்களுக்கு எதிராகவே எப்போதும் உள்ளது. புலியெதிர்ப்பது, புலிக்கு மாற்றான கருத்தைக் கொண்டுவருவது மட்டும் மக்களுக்கானதாக மாறிவிடாது. இது எப்படி எந்தவகையில் மக்களுக்கான விடுதலைக்கானதாக அமையும். மாறாக மக்களுக்கு எதிரான மற்றொரு பிற்போக்கு மக்கள் விரோத சக்தியை தான், புலிகளின் இடத்தில் மறுபிரதியீடு செய்யும்.

 

மக்களுக்கான போராட்டம் என்பது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டது. மக்களின் சமூக பொருளாதார நலனை முதன்மைப்படுத்தி போராடுவதை முன்னிலைப்படுத்துவதாகவே அமையும். இதை தேனீ போன்றவர்கள் திட்டவட்டமாகவே முன்னெடுக்கவில்லை. இதை முன்னெடுக்காத வரை, பொதுவான மக்கள் ஜனநாயகத்தைக் கூட அவர்கள் கோரவில்லை என்பதே தெளிவான அரசியல் முடிவாகும். இப்படியான கருத்துகளைக் கூட அவர்கள் திட்டவட்டமாக பிரசுரிப்பதில்லை.

 

உண்மையில் தேனீ போன்றவற்றின் பின்னால் கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் அடிப்படையே விசித்திரமானது. ஜனநாயகத்தை உருவாக்கினால் தான், மற்றைய கருத்துகளை விளைச்சலுக்காக விதைக்க முடியும் என்பதே, இதை நியாயப்படுத்த முன்வைக்கும் உயர்ந்தபட்ச அரசியலாக உள்ளது. இந்தக் கருத்தை அவர்கள் உங்களுக்கும் புகட்டியுள்ளனர். அதைத் தான் நீங்கள் "எனது நோக்கமானது சமூகத்தில் ஜனநாயக பூர்வமாக மக்கள் செயற்படக்கூடிய அரசியல் சூழலுருவாக வேண்டும். எதன் பொருட்டும் புலிகளின் அச்சுறுத்தல், ஊடக ஆயுத வன்முறையால் மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்படுவது தவிர்கப்படவேண்டும். இத்தகைய நிலையுருவாகும் போது பாசிசக் கட்டமைவு தகர்வதற்கானவொரு சூழலைத் தமிழ்ச் சமுதாயம் பெற்றுவி;டும். அதன் அடுத்த பாச்சலானது பன்மைத்துவப் போராட்டச் சூழலை அந்தச் சமுதாயம் பெறுவதற்கானவொரு "இடம்" உறுதிப்படும். இதுவே முதற்தேவையானது." இதை நீங்கள் எந்தளவுக்கு அரசியல் ரீதியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பத எனக்குத் தெரியாது.

 

ஆனால் இந்தக் கோட்பாட்டைத் தான் தேனீயும், தேனீ போன்ற பலரும் கொண்டுள்ளனர். இந்த அரசியலின் பின்னால் திரொஸ்;கிய அரசியல் வழிகாட்டல் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிலருடன் நான் விவாதித்த சந்தர்ப்பங்களில் கூட, அவர்கள் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் துணையுடன் கூட இதை சாதிக்க தயாராக இருப்பதை நான் நேரடியாக அவர்களுக்கு குற்றம் சாட்டியுள்ளேன்.

 

இந்தவகையில் தான் அண்மையில் நான் லண்டன் சென்ற போது ஒரு கூட்டத்தில் ரி.பி;.சி சிவலிங்கத்தை சந்தித்தபோது, 15 நிமிடங்கள் கூட அரசியல் பேசமுடியாத அளவுக்கு அவர்களின் மக்கள்விரோத வங்குரோத்து அரசியல் காணப்பட்டது. தமிழில் விவாதித்துக் கொண்டிருந்த அவருக்கு பதிலளிக்க முடியாத நிலையேற்பட்ட போது, கோபத்தின் உச்சத்தில் ஆங்கிலத்தில் திட்டிதீர்த்தார். எனக்கு சரளமாக ஆங்கிலம் தெரியாதது என்பது பற்றி அவருக்கு அக்கறை இருக்கவில்லை. இதைபோல் தான் கலைச்செல்வன் செத்தவீட்டில் நெதர்லாந்தில் இருந்து வந்த பாலசூரியைச் சந்தித்த போது, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையில் உச்சத்தொனியில் கத்தி தொடர்ச்சியாகவே ஆக்ரோசம் செய்தார். இவர்கள் எல்லோரும் தேனீயைப் போல் முதலில் புலியை ஒழிக்கவேண்டும் என்கின்றனர். அதற்காக எந்த அன்னிய சக்தியுடன் கூடத் தயாராக உள்ளனர். மக்கள் தான் அதைச் செய்ய வேண்டும் என்பதை அரசியலாகக் கூட முன்வைக்க முன்வராதவர்கள்.

 

புலிகளின் அரசியலை இலகுவாக புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளின் மேல் கேள்விக்கு உட்படுத்தும் இவர்கள், தமது சொந்த மக்கள் விரோத அரசியல் முன்வைக்கப்படும் போது கூத்தாடிக் கத்துகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். முதுக்கு பின்னால் நடத்தும் பிரச்சாரங்கள் எனது காதுக்கு எப்போதும் வந்தடைகின்றன. புலிகள் எப்படி தாம் அல்லாத மற்றவர்கள் பற்றி பிரச்சாரம் செய்கின்றனரோ, அதே போன்றே எனக்கு எதிராக இவர்கள் நடத்துகின்றனர். இந்த கட்டுரை வெளிவந்தவுடன் அதைத்தான் அவர்கள் மீண்டும் செய்வார்கள். அண்மையில் தேனீ இலக்கியச் சந்திப்பு தொடர்பாக பிரசுரித்த கட்டுரைக்கு, பதிலளித்த கட்டுரைகளை கூட பிரசுரிக்க முடியாது என்றனர். இவர்கள் கூட முரணற்ற ஜனநாயகத்தை மறுதலிக்கும், புலியெதிர்ப்பு அணியின் கருத்தை மட்டும் குறுகிய உள்ளடகத்தில் பிரசுரிப்பவர்கள் தான். ஆயுதம் இல்லாத நிலையிலேயே இப்படி என்றால், ஆயுதம் இருந்தால் என்ன செய்வார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

 

எனது கருத்தை புலியெதிர்ப்பு அணியினர் புலிக்கு சார்பான புலிக்கருத்து என்கின்றனர். புலிகளோ துரோகியின் கருத்து என்கின்றனர். இது நாம் எதிர்கொள்ளும் அன்றாட அரசியல் பிரச்சாரம். இந்த நிலையில் எமது சரியான நிலையை, புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியில் விமர்சனம் உள்ளது, ஆனால் தவிர்க்கமுடியாது ஆதரிக்கின்றோம் என்று கூறுபவர்கள் கூட சரியாக அடையாளப்படுத்துவதில்லை.


எமது இணையத்தை புலியெதிர்ப்பு அணியில் தீவிரமாக இயங்கும் இணையங்கள் இணைப்பே கொடுக்கவில்லை. அது போல் புலிகளும் கொடுக்கவில்லை. இதில் ஒரு அரசியல் வேடிக்கை என்னவென்றால், தேனீ முஸ்லீம் மக்கள் பற்றிய எனது ஒரு கட்டுரையை போட்டவர்கள், அதை வேறு ஒருவரின் பெயரில் இட்டுள்ளனர். அதை நான் ஆட்சேபித்த போதும் மாற்றவுமில்லை, அதற்கு பதில் தரவுமில்லை. இவர்களிடம் ஆயுதம் இருந்தால், இதை ஆட்சேபித்த எனது கதி என்னவாக இருந்து இருக்கும்.

 

நாங்கள் இரண்டு தரப்பு பலமான அரசியல் போக்குக்கு வெளியில் தனித்துவமாக தனித்து நிற்கின்றோம். மக்களின் அரசியலை உயர்த்தி அதைப் பிரச்சாரம் செய்கின்றோம். மக்கள் தான் போராட வேண்டும் என்ற நடைமுறை சார்ந்த அவர்களின் அரசியலை முன்வைப்பதால், ஒரு நடைமுறை செயல்வாதியாக உள்ளோம். குறித்த மண்ணில் சந்தர்ப்ப சூழல் ஏற்படுத்திய நிலைமைகளால் நாம் வாழாவிட்டாலும், விரும்பியோ விரும்பமாலோ அந்த மக்களின் நடைமுறையுடன் இணங்கி வாழ்கின்றோம். நாம் வெறும் கோட்பாட்டுவாதிகளாக சமூகத்தில் இருந்து அன்னியமாகாமல், அந்த மக்களுடன் இரண்டறக் கலந்து நடைமுறைவாதிகளாகவும் இருக்கின்றோம். அதனால் தான் நாம் மக்களுக்காக உயிருடன் கலந்துரையாட முடிகின்றது. எமது கருத்தை இதனால் தான் எதிர்கொள்ள முடியாதவர்களாக அனைவரும் உள்ளனர்.


இந்த நிலையில் பொதுவாக புலியெதிர்ப்பு அணியினர் தமக்குள் பரஸ்பரம் தொடர்புடையவராக உள்ளனர். அன்னிய தலையீட்டை நேரடியாக ஆதரிக்கும் ஒரு சிலரின் கருத்தைக் கூட மற்றவர் மறுப்பதில்லை. இவை அனைத்தும் புலிக்கு எதிரான ஜனநாயகத்தை மீட்பதற்கான ஐக்கியமாக தம்மைக் காட்டிக் கொள்கின்றனர். இந்த அரசியல் எல்லைக்குள்னான அன்னிய தலையீட்டால் தான், புலிகளில் இருந்து மீட்சி பெறமுடியும் என்பது இவர்களின் அரசியல் சித்தாந்த முடிபாகும். இதைத்தாண்டி யாரும் இவர்களின் அரசியலை சுயமாக காட்டமுடியாது.

 

இந்த அன்னிய தலையீட்டுக்கான அரசியல் வழி அப்பட்டமாகவே மக்களுக்கு எதிரானது. இது புலிகளின் ஜனநாயக மீறல் என்பதை விடவும், அபத்தமான கேடுகெட்ட அரசியல் வழிமுறையாகும்.


உண்மையில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முதலில் நடத்த வேண்டும் என்பது கடைந்தெடுத்த அரசியல் சுத்துமாத்தாகும். இது புலிகள் தேசியவிடுதலையின் பின் ஜனநாயகம், பெண்விடுதலை, சாதி ஒழிப்பு .. என்ற கூறும் அதே அரசியலாகும்.

 

ஜனநாயகத்துக்கான போராட்டத்தையும், பன்மைத்துவ போராட்டத்தையும் பிரித்து பார்க்கின்ற, ஒன்றன் பின் ஒன்றான நிகழ்வாக கருதுவதில் இருந்தே இந்த அரசியல் சூழ்ச்சி முன்வைக்கப்படுகின்றது. இது புலிகளில் இருந்து திரொக்கியத்தின் நவீன கண்டுபிடிப்பு. அதாவது ஜனநாயகத்தை மீட்டால் தான், மற்றைய போராட்டங்கள் தொடங்கமுடியும் என்பது, போராடுவதையே மறுப்பதாகும். இதனால் முதலில் ஜனநாயகத்தை மீட்க, புலிகள் அல்லாத எல்லாவிதமான சக்திகளுடனும் இணங்கிப் போகும் ஐக்கியத்தின் அடிப்படையில், ஒரு அரசியல் விபச்சாரத்தை பரஸ்பரம் உள்ளடக்கமாக கொள்கின்றனர். இதைத் தாண்டி இதற்குள் வேறு அரசியல் கிடையாது. புலியெதிர்ப்பு அரசியலின் முழுமையும் இதில் காணப்படுகின்றது. அதாவது ஈராக் மக்களின் ஜனநாயகத்தை மறுத்த சாதாம்குசைனை வீழ்த்தி, அதற்கு பதிலாக கொலைக்கார அமெரிக்க கைக்கூலிக் கும்பல் ஈராக் மக்களை கொன்று குவிப்பதைத் தான் இன்று புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் கோருகின்றது. அன்னிய தலையீட்டில் இந்த கூலிக் கும்பலாக இருக்க தயாரான ஒரு அரசியல் நிலையில் தான், இலங்கையில் அன்னிய தலையீடுக்கான எதார்த்தமான ஒரு சூழலில் அதை ஆதரித்து கொக்கரிக்கின்றனர். நாங்கள் இதை எதிர்த்து நிற்கின்றோம். தமிழ் மக்களின் பிரதான எதிரி சிங்கள பேரினவாத அரசும், ஏகாதிபத்தியமுமே என்கின்றோம். இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையிலான இணக்கம் காணப்படவே முடியாத அரசியல் வேறுபாட்டில் ஒன்று.

 

நான் புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பிவந்த பின்னாக, பல்கலைக்கழக மாணவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக புலிகள் எனது உயிருக்கு பல்கலைக்கழக மேடையில் வைத்து உத்தரவாதம் வழங்கவேண்டி நிhப்பந்தம் எற்பட்டது. அப்போது நான் தீடிரென மேடையில் ஏறி பேச முற்பட்ட போது, அவர்கள் வெளியேறிச் சென்றனர். அந்த மேடைப் பேச்சே முதலாவது எனது கன்னிப் பேச்சாக இருந்தபோதும், அதில் நான் எதிரியாக புலிகளை குற்றம் சாட்டவில்லை. மாறாக அரசையும், நான் தப்பிய பின்பாக இலங்கையை ஆக்கிரமித்து இருந்த இந்திய இரணுவத்தையுமே எதிரியாக காட்டி உரையாற்றினேன். பார்க்க உரை.

 

http://tamilcircle.net/general/general-34.htm


இதன் பின்பாக இந்திய புலிகள் மோதல் நிகழ்ந்த பின்பாக இந்திய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக பலர் தயங்கி நிற்க, 6.6.1988 இல் முதலாவது மக்கள் போராட்டத்தை யாழ் நகர் நோக்கி தலைமை தாங்கி பல்கலைக்கழகம் ஊடாக நடத்தியிருந்தேன். இந்த போராட்டம் நடத்தப்படவேண்டும் என, பல்கலைக்கழக மேடையில் துணிச்சலாக பலர் தயங்கி பின்வாங்கிய நிலையில், அறைகூவல் விடுத்து தலைமை தாங்கினேன்;. நாங்கள் மக்களின் நலனுடன் எப்போதும் இணைந்து நிற்கமுடிந்தது. இது மட்டும்தான் மாற்று அரசியல் மட்டுமின்றி மாற்றுப் பாதையுமாகும்.

நாங்கள் போராட்டங்களை தனத்தனியாக பிரிக்கவில்லை. போராட்டங்கள் அப்படி பிரிவதில்லை. ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது பன்மைத்துவத்தை உள்ளடக்கிய போராட்டம் என்றே பார்க்கின்றோம். இதை அந்த மக்கள் மட்டும் தான் செய்யமுடியும் என்று பார்க்கின்றோம்;. எந்தப் பெரிய பாசிச கட்டமைப்பாக இருந்தாலும், அந்த மக்கள் தான் தமது பன்மைத்துவ விடுதலையை உள்ளடக்கிய ஜனநாயகத்தை கோரி போராடமுடியும்;. இதுவே எமது இனப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட 25க்கு மேற்பட்ட அரசியல் போராட்ட குழுக்களின் மையமான அரசியல் வழிமுறையாக இருந்தது. இதைத் தான் புலிகளும் கொண்டிருந்தனர்.

 

"தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு ..அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றனர் "தேசிய விடுதலை எனும் பொழுது ...ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மானத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் மேலும் விளக்கும் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடன், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்.. " ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கும் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்கு முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமழீழ சமூக வடிவமானது ஒரு முதிhச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை.

 

முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. ..வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு.. பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுரூவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்கமுறைகளையும் ஒழித்தக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" இப்படி புலிகளின் அரசியல் அறிக்கை நீண்டு செல்லுகின்றது.


இப்படித் தான் அனைத்து இயக்கமும் சொன்னது. நாங்கள் இதைத் தான் கோருகின்றோம். இப்படி சொன்னவர்கள், இதை நடைமுறைப்படுத்தக் கோரியவர்களை தேடித்தேடிக் கொன்றனர். ஆயுதம் ஏந்தியிராத இவர்களை படுகொலை செய்து, தமது சொந்த இலட்சியங்களையே முதலில் புதைகுழிக்கு அனுப்பினர். இப்படித் தான் இந்த இலட்சியங்கள் சமூகத்தில் இருந்தே ஒழித்துக் கட்டப்பட்டது. இதை புலிகள் பெருமளவில் செய்தனர் என்றால், மற்றைய இயக்கங்களும் இதைத் தான் போட்டிபோட்டு செய்தன. இவர்களை இலங்கை இராணுவம் கொல்லவில்லை. இது ஒரு விசித்திரமான அரசியல் உண்மை. இந்த அடிப்படையில் தான் இன்று புலியெதிர்ப்பு அணியினரும் இயங்குகின்றனர். புதைகுழிக்கு மக்கள் சார்பு கோட்பாடுகளை அனுப்பிய பின் இன்று வக்கரிக்கின்றனர். மக்கள் தமக்கான விடுதலையை தாமே பெறமுடியுமே ஒழிய, மற்றவர்களால் ஒரு நாளும் அதைப் பெற்றுத் தரமுடியாது. இதை அவர்கள் மறுதலிக்கின்றனர்.

 

இன்று புலிகள் ஜனநாயகத்தின் விரோதிகளாக, பாசிசத்தின் கூறுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைத்துள்ள சர்வாதிகார முறைமை என்பது எதார்த்தத்தில் காணப்படுகின்றது. இதை அவர்கள் உருவாக்கிய முறைமையின் பின்னால் ஒரு அரசியல் உள்ளது. இந்த அரசியல் என்பது மக்களின் சில அடிப்படையான ஜனநாயக போராட்டத்துடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது. இதை புலியெதிர்ப்பு அணியினர் மறுதலிக்கின்றனர். மக்களின் போராட்டத்தின் அரசியல் உள்ளடகத்தை புலிகள் எப்படி தமது சொந்த நலனுக்கு இசைவாக பயன்படுத்தி, இன்றைய நிலையை தமக்கு சார்பாக கட்டமைத்துள்ளனர். இதை சரியான சக்திகள் அரசியல் ரீதியாக புரிந்து பயன்படுத்த முனையாத வரை, புலிகளுக்கு மாற்றாக மக்களின் அதிகாரம் என்பது சாத்தியமற்றது.

 

மக்கள் மட்டும் தான் தமக்கு தேவையான மாற்று அரசியல் வழியை தேர்ந்தெடுக்க முடியும். இதை நாம் நிராகரித்தால், மக்களின் அடிப்படையான நியாயமான அரசியல் போராட்டத்தை மறுப்பவர்களாகிவிடுவோம். அப்படி மறுத்த அரசியல் வழிமுறைகள் எப்படி தலைகுத்துகரணமாக நின்று ஆடினாலும், அது மக்களுக்கான ஜனநாயகத்தை பெற்றுத்தராது. புலிகள் பூதம் என்றால், அதைவிட மிகப் பெரிய பூதம் அன்னியன் கைக்கூலி வழிகளில் வந்து புகுந்துகொள்ளும். மக்கள் தான் தமது சொந்த ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கவும், அதற்கான அரசியல் போராடத்தையும் முன்னெடுக்க முடியும். இதற்கு வெளியில் நாம் தனித்துவமாக செயல்படமுடியாது.


இது ஒரு அரசியல் வழிமுறை. இதையே நாங்கள் கோருகின்றோம். எமது கருத்துகள் எப்போதும்; இந்த எல்லையில் நின்று, மக்களின் சரியான போராட்டத்தை உயர்த்தி நிற்கின்றது. இதை எப்படி புலிகள் தவறான தமது சொந்த நலனில் நின்று சிதைக்கின்றனர் என்று அடிப்படையில் புலிகளை விமர்சிக்கின்றோம். இதை அடிப்படையில் புலியெதிர்ப்பு அணியினரையும் விமர்சிக்கின்றோம். இதனால் தான் எமக்கு பதிலளிக்க ஒருவராலும் முடிவதில்லை. மக்களின் நலன் தான், அனைத்து செயலையும் விட முதன்மையானது. மக்களின் உயிருள்ள நலன்களுடன் பின்னிப்பிணைந்து நிற்கும் வரை, எமது சரியான கருத்தை யாராலும் மறுதலிக்கமுடியாது. இது ஒரு அரசியல் உண்மை. இந்த போராட்டத்தில் உறுதியாக நிற்பதன் மூலம், கருத்தியல் ரீதியாக வெற்றி பெற்று வருகின்றோம். கருத்தியல் ரீதியான வெற்றி என்பது, அவர்கள் எமது கருத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளனர் என்பதல்ல. மாறாக கருத்தின் நியாயத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் பொது சூழல் உருவாகியுள்ளது.

 

மறுதளத்தில் நடைமுறை ரீதியாக வெற்றி பெறமுடியாமல் உள்ளோம்;. அதாவது கருத்தியல் ரீதியாக எமது சரியான நிலையை அங்கீகரிக்க நிர்பந்தித்தவர்கள் கூட, அதை அவர்கள் ஒரு சமூகக் கோட்பாடாக தேர்ந்தெடுக்கவில்லை. பல்வேறு கதம்ப கொள்கைகளையே கொண்டுள்ளனர். இது ஒரு சிக்கலான மற்றொரு தனி விவாதம்.

 

தேனீ பற்றி குறிப்பில் ".. "புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக"; கெதிரான போரைச் செய்யும் ஒரு ஊடகமாகவும், புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கான போரை உடைத்து மாற்றுக் கருத்தாளர்களை, அவர்களின் கருத்துக்களைத் தேனீயே கடந்த பல வருடமாக வெளிக்கொணரச் செய்ததுண்மை." என்ற வாதம் மிகவும் தவறானது.

 

முந்தைய தேனீ சஞ்சிகையும், இலக்கியச் சந்திப்பும், பின்னால் இணையமும் முன்வைத்த கருத்துகள் தான், இன்றைய மாற்றுக் கருத்து தளத்தை உருவாக்கியது என்ற அரசியல் முடிவே தவறானவை. இலக்கியச் சந்திப்புக்கு எதிரான எனது தொடர்ச்சியான போராட்டம், எப்போதும் அது மறுத்து வந்த கருத்துச் சுதந்திரத்தின் மறுப்புக்கு எதிரானதாகவே இருந்தது. சில பிரமுகர்களைச் சார்ந்தும், சில அதிகார உதிரிகளைச் சார்ந்தும், இலக்கியச் சந்திப்பு சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப துதிபாடியே செயல்பட்டது.

 

இலக்கியச் சந்திப்பு தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டக் கோரிக்கைகளை எதையும் அரசியல் ரீதியாக முன்வைக்கவில்லை. இலக்கியச் சந்திப்பை உருவாக்கியவர்களே, அதன் போக்கில் அதிருப்தியுற்று விலகிச் சென்றனர். அரசியல் ரீதியாக துதிபாடி, சில உதிரி அதிகாரம் வார்க்கத்தின் சதிகள் உள்ளடங்கிய ஆளுமையில், பிரமுகர்களின் தயவில் சீரழிந்த அந்த புதைகுழியில் அது இன்று புதைந்து போனது. இங்கு மாற்று அரசியல் என்ற பெயரில் பெண்கைளைக் கூட பாலியல் ரீதியாக பயன்படுத்தினர். தற்போது யாழ் விரிவரையாளர் எதை தனது அதிகாரம் மற்றும் பணம் போன்றவற்றைக் கொண்டு செய்தாரோ, அதையே தமது குறுகிய அரசியல் மேலாண்மையைக் கொண்டு பெண்களை கூட சித்தாந்த ரீதியாக வசப்படுத்தி தமது ஆணாதிக்க பாலியல் தேவைக்கு கூட பயன்படுத்தினர். ஆனால் இதைப்பற்றி இந்த அரசியல் கனவான்கள் வாய்திறப்பதில்லை. இதில் தேனீ போன்றவர்கள் கூட விதிவிலக்கல்ல.

 

உண்மையில் புலிகள் தமிழ் மக்களின் வாழ்வின் உயிர்துடிப்புள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தது போன்றே, இவர்களும் அதையே வௌ;வேறு துறையில் செய்தனர். இரண்டு பகுதியும் எதிர்எதிர் அணியில் இருந்து செய்ததெல்லாம் ஒன்றே. தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார நலனுக்கு எதிராக, கோட்பாட்டு தளத்தில், நடைமுறை தளத்தில் இயங்கியதே.

 

இதன் பின் தேனீ திடீரென காணமல் போய் இருந்தது. பின்னால் இணையமாக வருகின்றனர். இணைத்தின் வருகையும், அதன் விரிவான வீச்சான பயன்பாடும் மிக குறுகிய காலத்துக்கு உட்பட்டதே. இங்கு கருத்துகளை முன்வைக்கும் இலகுவான தொழில் நுட்பத்தை பயன்படுத்திய ஒரு அறிவியல் தளம், பரந்த தளத்தில் இட்டுச் சென்றது. இதை தேனீ போன்றவர்கள் எடுத்துக் கொண்டது என்பதால், தமிழ்மக்கள் மத்தியில் மாற்றுக் கருத்துத் தளத்தை வெற்றிபெறச் செய்ததாக கூறுவதே அரசியல் அபத்தம். இங்கு இரண்டு கேள்வி இதில் இதற்கு பதிலளிக்கும்.

 

1.அவர்கள் முன்வைத்த மாற்றுக் கருத்து என்ன?


2.தேனீ போன்றவர்கள் மாற்றுக் கருத்து தளத்தை உருவாக்கியது என்பது. அதாவது இதை மாற்று அரசியலாக பார்ப்பது.

 

மாற்றுக் கருத்துத் தளத்தை தேனீ போன்றவர்கள் உருவாக்கியது என்றால், அந்த மாற்றுக் கருத்துகள் தான் என்ன? அந்த அரசியல் தான் என்ன? அதன் நோக்கம் தான் என்ன? இதை அடைய முன்வைக்கும் வழிமுறைகள் தான் என்ன?

 

இவ் இணையம் சிறுசஞ்சிகையில் எழுதிய சிலரின் கட்டுரைகளைப் போட்டது. அதுவே அரசியல் கதம்பமானதாக இருந்தது. அரசியல் கட்டுரைகள் பெரும்பாலனவை மக்களின் சமூக பொருளாதார நலனுடன் தொடர்பற்றதாக, புலிக்கு எதிரானதாக மட்டும் தேர்ந்தெடுத்தாக இருந்தது. உண்மையில் இதன் மூலம் மக்கள் சார்ந்த கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வந்தனர். அவர்கள் செய்ததெல்லாம்
1.புலிகளுக்கு எதிரான கட்டுரைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டது.



2.புலிகளின் உரிமைகோரா செய்திகளை வெளிக் கொண்டு வந்தது.

 

3.புலிகள் பற்றி ஆதாரமற்ற தூற்றுதல்களை உள்ளடங்கிய செய்தி மற்றும் கட்டுரைகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. மஞ்சள் பத்திரிகைகள் போன்று தலைப்பிட்டு செயல்படுகின்றது.

 

4.புலிக்கு எதிரான சர்வதேச அறிக்கைகளையும், செய்திகளையும் தேடியெடுத்த வெளியிட்டது.

 

தேனீ போன்றவர்கள் எதைச் செய்யவில்லை என்றால், மக்கள் நலன் சார்ந்த கருத்துகளை தேடி எடுத்து போடுவதை திட்டவட்டமாக மறுத்துவந்தது. இது ஒரு ஆச்சரியமான சூக்குமான அரசியல் உண்மை.


இதுவே தேனீ போன்றவர்களின் அரசியல் இலக்காக இருந்தது. இதைத்தான் தேனீ இணையத்தளம் செய்கின்றது. இதையே இன்று பலரும் செய்கின்றனர். இதை நீங்கள் நுட்பமாக பார்த்தால் புளாட் இணையத்தளம், ஈ.பி.டி.பி இணையத்தளம், மற்றும் அவர்களின் பத்திரிகையான தினமுரசு எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே செய்கின்றனர். சில வேறுபாடு மட்டும் உண்டு.

 

ஈ.பி.டி.பி அப்பட்டமாகவே அரசு மற்றும் ஏகாதிபத்தியத்துடன் கூடிக்குலாவியபடி இதைச் செய்கின்றது. தேனீ இதை சூக்குமமாக ஒளித்துவைத்தபடி கோட்பாட்டளவிலும்;, நடைமுறையிலும் செய்கின்றனர். அடுத்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் அளவு தேனீயை விட ஈ.பி.டி.பி இணையத்தில் குறைவு. தேனீ ஆதாரமற்ற செய்திகளை, அவதூற்றையும் கூட அரசியலாக மஞ்சள் பத்திரிகையின் போக்கில் முன்வைக்கின்றனர்.

 

புலிகள் பற்றி செய்திகளைத் தாண்டி, அதன் உண்மைத் தன்மை மற்றும் பொய் தன்மைகள் என்ற இரு தளத்தில் இயங்குகின்றனர். இது எந்த விதத்திலும் மாற்றுக் கருத்துகள் அல்ல. மாற்று என்பது திட்டவட்டமாக வேறு. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற அனைத்தும் மாற்று அல்ல. இவை புலிகளின் கருத்தை ஒத்த மற்றொன்றேயாகும்.

 

இந்த இணையத் தளங்களின் செயல்பாடுதான் மாற்று அரசியலாக காண்பது. பல புலிகள் அல்லாத தளங்களை இதற்குள் வரையறுப்பது. எப்படி சில பத்து இயக்கங்கள் தோன்றியதோ, அதைப் போல் சில பத்து சிறு சஞ்சிகைகள் கூட எமது சமூகத்தில் காணப்பட்டது. இவை எவையும் புலிகளுடன் உடன்பட்டவையல்ல. இணையத்தளம் உலகளாவிய ஒரு ஊடகமாக மாறிய போது, அதிலும் இது காணப்படுவது இயல்பாகவே எழுந்தது. இதன் ஒரு அங்கம் தான் இன்றைய இணையங்கள்;. இந்த தொழில் நுட்பம் கருத்துகளை பரந்த தளத்துக்கு எடுத்துச்சென்றது. கண்ணுக்கு தெரியாத பார்வையாளனின் எல்லையை விரிவாக்கியது. இனம் தெரியாத நபர்கள் இதை நடத்தும் வாய்ப்பையும் வழங்கியது. இதனால் இது பெருகியது.

 

ஆனால் தமிழ் சமூகத்தின் மாற்றுக் கருத்துத்தளம், முந்தைய வரலாற்றுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சி கண்டுள்ளது. சமூக அக்கறையுள்ள வெளிப்படுத்தல், இணையத்தில் மிக மோசமாகவே அரசியல் ரீதியாகவே தரம் தாழ்ந்துபோனது. முன்பு பல விமர்சனங்கள் இருந்தபோது, சஞ்சிகைகள் சமூகத்தைப் பற்றி கொண்டிருந்த கருத்துகள் படிப்படியாக சீரழிந்து வந்தன. இது இணையத்தில் முற்றாக சிதைந்து, சமூகநலன் அல்லாத கருத்துகளை முன்தள்ளி வருகின்றது. இதில் புலி அல்லாதோரின் தளங்கள், புலியெதிர்ப்பு கருத்துகளாக மட்டும் சிராழிந்து, இறுதியாக அதன் கோட்பாடு மிக மோசமானதாக சீராழிந்து, அன்னியனை வரவலைக்கும் அரசியலாக வெளிவருகின்றது.

 

உலகளாவில் இணையம் ஒரு ஊடாகமாக வளர்ச்சியுற்ற காலத்தில் தான், அமைதி சமாதானம் என்ற ஒரு அரசியல் நாடகம் அரங்கேறுகின்றது. யுத்தமற்ற இந்தச் சூழல் புலியெதிhப்பு இணையத்தின் உள்ளடக்கத்தை மெருகூட்டியது. யுத்தம் நடந்தால் இன்றைய பல செய்திகள் செய்தியாகவே வெளிவரமுடியாத வகையில் அவை யுத்த உள்ளடக்கமாகிவிடும்.

 

சூழலும், சந்தர்ப்பங்களும், காலத்தின் போக்கும் புலியெதிர்ப்பு இணையத்தை வளப்படுத்தின. இதில் கண்ணுக்கு தெரியாத இணையமும், எழுத்தாளர்களும் உள்ளவரை, புலிக்கு எதிரான செய்திகள் வலுப்பெற்றன அவ்வளவே.


இந்த நிலையில் புலிக்கு எதிரான மாற்றுக் கருத்துத் தளத்தையும், மாற்று செய்தியை புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் தந்துவிடவில்லை. இது சிறப்பாக செய்திக்கும் பொருந்தும்;. செய்தி என்பது வெறும் செய்தியாக மட்டும் இருந்தால் அது ஒருவகை. இது குறித்த சூழலின் ஒரு எதிர்வினையாக தொகுத்தபோது, வெளிப்படுத்திய அரசியல் கூட மக்களின் மாற்றுச் செய்தியாக அமையவில்லை. புலிகளைப் போன்று மாற்று ஊதுகுழலாக, மக்களை முட்டாளாக்கும் மலட்டுச் செய்திகளை திடட்மிட்டே உற்பத்தி செய்தனர்.

 

தேனீ போன்ற இணையங்கள் முதல் புலியெதிர்ப்பு தளங்களிடம் ஒரு அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்பின் அவர்கள் சொந்தமாகவே நிர்வாணமாகிவிடுவர். புலியின் இன்றைய நிலைக்கு மாற்றாக, எப்படி ஒரு மாற்று சக்தியை உருவாக்கப் போகின்றீhகள் என்று கேட்டால், அனைத்தும் சந்திக்கு வந்துவிடுகின்றது. மக்கள் மட்டும்தான் மாற்று சக்தியை உருவாக்கும் வரலாற்றைக் கொண்டவர்கள். மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை ஏற்க இவர்கள் மறுக்கின்றனர். அவர்கள் தமது குருட்டுக் கண்ணால் இதை புலிக் கோரிக்கை என்கின்றனர். மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை, புலிக் கோரிக்கையாக முத்திரை குத்தி தூற்றுகின்றனர். அல்லது இதை புலிகளை அழித்த பின் தாம் பெற்றுத்தரும் ஜனநாயகத்தில் பெற வேண்டியவை என்கின்றனர்.


புலிக்கு மாற்றை அவர்கள் மக்கள் அல்லாத அன்னிய சக்திகளிடம் கோருகின்றனர். இதை நேரடியாகவும், மறைமுகமாவும் சூக்குமாகவும் முன்வைக்கின்றனர். இதை முன்வைக்கும் பலரிடையே ஒரு விமர்சனமற்ற ஒரு வழிப்பாதை கொண்டே நகர்கின்றனர். அன்னிய சக்திகளை நம்பும் புலியெதிர்ப்பு அரசியல், எப்படி மக்களுக்கான மாற்றாக இருக்கமுடியும்.

 

புலிகளின் அடாவடித்தனங்கள், மற்றும் மக்களுக்கு எதிரான கணிசமான சம்பவங்களை புலியெதிர்ப்பு இணையத் தளங்கள் கொண்டு வருகின்றன என்பதால் நாம் அவற்றைப் போற்ற முடியாது. இவை உள்நோக்குடன் மட்டும் வெளியிடுகின்றன. இதில் மக்கள் நலன் எப்படி வெளிப்படும். இதைக் கொண்டு இதை மக்கள் நலன் சார்ந்தாக கூறுவது மக்களை மந்தைகளாக, மற்றறொரு மக்கள் விரோத சக்தியின் பின் வழிகாட்டுவதே நிகழும்.


புலிகள் பற்றி பலவேறு சம்பவங்களை செஞ்சிலுவைச் சங்கம் முதல் சில பத்து சர்வதேச அமைப்புகள் வரை வெளியிடுகின்றன. இதைப் போன்று இலங்கை அரசு கூடத் தான் கொண்டு வருகின்றன. புலிகளைப் பற்றிய செய்திகளை கொண்டுவருவதால், இவற்றை நாம் அரசியல் ரீதியாக ஆதரிக்க முடியாது. இவர்களின்; தகவல்களை நாம் உண்மை மற்றும் பொய்மைக்குள் பகுத்தாராய்ந்து எடுப்பது வேறு. அரசியல் ரீதியாக போற்றுவது வேறு. அமெரிக்கா சி.ஐ.ஏ கூட புலிக்கு எதிரான வகையில் அம்பலப்படுத்துகின்றது.

 

ஐரோப்பியய+னியன் கூட இதைச் செய்கின்றது. இந்திய பிராந்திய விஸ்தரிப்புவாதிகள் கூட இதைச் செய்கின்றது. இதைத் தான் தேனீ போன்ற புலியெதிர்ப்பு இணையங்களும் செய்கின்றன. ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசுவரை புலி பற்றி வெளியீடும் அறிக்கைளை, செய்திகளை முதன்மை கொடுத்து புலியெதிர்ப்பு இணையங்கள் பிரசுரிக்கின்றன. அவர்கள் புதிய பூதமாக மாறுகின்றனர் என்பதை மூடிமறைக்கின்றனர்.

 

இந்த உள்ளடக்கத்துக்குள் இவர்களுக்கு இடையில் வேறுபாடு இல்லை. அதை அவர்களும் மறுப்பதில்லை. அதையே அவர்கள் மாற்று சக்தியாக நம்புகின்றனர். இதைத் தான் மக்களுக்கு மாற்றுப் பாதையாக காட்டமுனைகின்றனர். மக்களுக்காக நேர்மையாக குரல் கொடுக்கும் யாரும் இதை அங்கீகரிக்கமுடியாது.

 

பூதத்தின் மாமி உடன் உறவு கொள்வதை லெனின் கூறியதாக கூறினீர்கள். இது எந்தச் சந்தர்ப்பத்தில், யாரைப் ப+தமாகவும், யாரை மாமியாகவும் கொண்டார் என்பது வரலாற்று சம்பவத்துடன் தான் சரியாக பார்க்கமுடியும்;. இதுபற்றி எனக்கு குறிப்பாக தெரியாது என்பதால், துல்லியமாக இதைப்பற்றி எடுத்து பேசமுடியாதுள்ளளேன்.

 

ஆனால் அவர் நீங்கள் ஒப்பிட்டதுடன் நிச்சயமாக ஒப்பீட்டு இருக்கவே மாட்டார். ஏகாதிபத்தியங்கள் சோவியத்தை முதலாம் உலக யுத்தமுடிவில் கூட்டாக சில பத்து நாடுகள் ஆக்கிரமித்த போது, ஜெர்மனியுடன் அவர் கூடவில்லை. பல இழப்புடன் ஒரு வெற்றிகரமான சமாதானம் தான் செய்தார். நாங்கள் முதலில் மக்களுடன் கூடி நிற்காதவரை, எமது மாமியாருடன் கூட்டு என்பது அர்த்தமற்றது. லெனின் மக்களுடன் நின்று பேசினார். நாங்கள் அப்படியா இல்லையே. நீங்கள் கூறும் மாமியார் ஏகாதிபத்திய தலையீட்டு கோட்பாட்டில் தாலாட்டு பெற்றுவரும் மற்றொரு மாபெரும் பூதமாகும். இது வரலாற்றால் சரியாகவே உறுதி செய்யப்படும்.

11.09.2005

Last Updated on Friday, 18 April 2008 19:41