Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலியெதிர்ப்பினூடாக ஒடுக்கப்பட்ட சாதிய மூச்சுகளையே ஒடுக்க அழைக்கின்றனர்

புலியெதிர்ப்பினூடாக ஒடுக்கப்பட்ட சாதிய மூச்சுகளையே ஒடுக்க அழைக்கின்றனர்

  • PDF

தேனீ என்ற புலியெதிர்ப்பு இணையத்தில் 'தேசியம் என்றால் அது நான் தான்!" என்ற பெயரில், பிரபாகரனின் கற்பனைப் பேட்டி ஒன்றை தனது அரசியல் உள்ளடகத்தில் உளறியபடி இக்கும்பல் வெளியிட்டுள்ளது. இந்த பேட்டி யாழ் மேலாதிக்க சாதிய சன்னதங்களுடன்,

 ஜனநாயக கட்டவுட்டுடன் கொப்பளித்தது. இதை சுகன் சரியாகவே 'வெள்ளாள ஜனநாயகம்" என்று குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். ஆதிக்க சாதித்தடிப்புக் கொண்ட அந்த புனைபெயர் ஜனநாயகப் பேர்வழி, மீண்டும் தேனீயில் புலம்பியுள்ளது. சாதிய திமிரெடுத்த அந்த அலுக்கோசு 'என்னை எவரும் மன்னிக்க வேண்டாம்!" என்று தனது உயர்சாதிய உருட்டிப் பிரட்டும் திமிர் புத்தியை மறுபடியும் காட்டியுள்ளது.

 

புலியெதிர்ப்பை பிரித்துப் போட்டால், அதில் ஒன்று உயர் சாதிய மேலாதிக்கம் தான். இதை அதற்கு பின்னால் காவடியெடுப்போர் அரோகரா போட்டே பாதுகாக்கின்றனர். புலியெதிர்ப்பு அடிப்படையில் யாழ் மேலாதிக்கம் தான். சொந்த தனிப்பட்ட பாதிப்பு சார்ந்து பிரதேசவாதம் பேசிய கருணாவுக்கு, புலியெதிர்ப்பு கும்பல் சாமரை வீசினாலும் சரி வழிபட்டாலும் சரி, யாழ் மேலாதிக்க சாதிய உணர்வை அவர்களின் அரசியல் இழப்பதில்லை. இது போல் யாழ் மேலாதிக்க சமூகத்தின் அனைத்துக் கூறையும் உள்ளடங்கியதே புலியெதிர்ப்பு அரசியல். இதை யாரும் மறுத்து நிறுவ முடியாது. புலிகளை அழிப்பதன் மூலம் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல், சாதிய ஒழிப்பையோ மற்றய சமூக ஒடுக்குமுறையையோ களைந்து விடாது. அவர்கள் புலிகளிடம் அப்படி இந்த யாழ் மேலாதிக்கத்தை கையேந்தி, பாதுகாக்கவே விரும்புகின்றனர். இதுவே உண்மை.

 

ரீ.பீ.சீ கும்பலோ, தேனீயோ சாதி ஒழிப்பு பற்றி எந்த அக்கறையுமற்றது. அதை பாதுகாக்கின்ற கும்பல் தான் அது. இந்தக் கும்பலின் கூப்பாடு என்பது புலியை எப்படியாவது எந்த வழியிலாவது இழிவுபடுத்துவது தான். அதற்காக சாதிய மேலாதிக்கத்தையும் கூட எடுத்துக் கொண்டு வக்கரிப்பது தான். புலியை ஒழிக்க ஏகாதிபத்தியத்தின் காலை படுத்துக் கிடந்து நக்குவது போல், இலங்கை அரசின் மடியில் ஏறி உட்கார்ந்து உபதேசம் செய்வது போல், சாதியின் படிநிலையின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற முனைகின்றனர். தமது சொந்த சமூக இழிவுகளைக் கொண்டு, புலியை இழிவுபடுத்த முனைப்புக் கொள்கின்றனர். தாம் வாழும் சமூகத்தின் சமூக இழிவுகளை எதிர்த்து போராட முடியாது அதை பாதுகாக்கும் நாய்கள், புலிகளின் இழிவைப் பற்றிக் குலைக்கின்றனர். நாங்கள் மீண்டும் தெளிவாகவே கேட்கின்றோம், புலிக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? சமூகத்தில் காணப்படும் ஒடுக்குமுறைகள் பற்றி புலிகளின் நிலைக்கும், உங்கள் நிலைக்கும் இடையில் என்ன வேறுபாடு? அரசியல் ஆய்வுக் குஞ்சுகளே, பட்டத்தை மட்டும் சூட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி நக்க வேண்டாம். ஊரையும் உலகத்தையும் உங்கள் கண்ணை மூடி ஏமாற்ற வேண்டாம். இதற்குள் புலியை இழிவுபடுத்த ஒரு கற்பனைப் பேட்டி வேறு.

 

புலிகள் அரசியல் ரீதியாகவே இழிந்து கிடக்கின்ற நிலையில், அந்த அரசியலை விமர்சிக்க அரசியல் துப்பில்லை. அதே அரசியலைத் தான் இந்தக் கும்பல் கொண்டுள்ளதால், கற்பனையாக தனிநபர் இழிவுகள் முதன்மை பெறுகின்றது. தேனீ ஆசிரியரின் மாற்றுக் கருத்து பற்றி கற்பனை பேட்டி போட்டால் எப்படி இருக்கும். அவர் வார்த்தையில் கூறினால் ' வேறு இணையத்தளங்களில் பிரசுரமாகியிருக்கிறது. இதன் காரணமாக தேனீ அக்கட்டுரையை பிரசுரம் செய்யமாட்டாது என்பதை அறியத்தருகிறோம்." என்று கருத்துச் சுதந்திரத்துக்கே புலிஎதிர்ப்பு வரைவிலக்கணம் வழங்கி புலுடாவிட முடிகின்றது. தேனீ இந்தக் கொள்கையை தனது இணையத்தின் கட்டுரை முழுமைக்கும் கொண்டுள்ளதா எனின், கிடையவே கிடையாது. புலிகள் என்ன இதற்கு விதிவிலக்கா! பிறகு ஏன் புலியைப்பற்றி அலட்டுகிறீர்கள். கற்பனையான பேட்டி வேறு. உங்கள் வண்டவாளங்களையே நீங்கள் பேட்டியெடுத்துப் போட்டுப் பாருங்கள். உங்கள் குருவும், வழிகாட்டியுமான ரீ.பீ.சீ ராம்ராஜ் ஒரு சமூக கிரிமினலாக, புலிகளின் தலையீடு இன்றி கம்பி எண்ணுகின்றானே, அந்த பொறுக்கி பேர் வழிபற்றி ஒரு பேட்டி, ஒரு செய்தி நேர்மையாக போடுங்களேன். ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லை என்ற கயவாளித்தனமே, புலியெதிர்ப்பு நக்குத்தனமாக இங்கு கொப்பளிக்கின்றது.

 

இந்தக் கும்பல் தான் சாதியத்தை புலியெதிர்ப்புக்கு பயன்படுத்துகின்றது. அதாவது அரசியல் அற்றுப் போன புலியெதிர்ப்பு, இயல்பாகவே சாதிய மேலாண்மையை அடிப்படையாக கொண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளிளை இழிவுபடுத்தி, ஜனநாயகத்தை இழிவாடி ஜனநாயகப்படுத்துகின்றனராம். இந்தக் கும்பல் அரசியலற்ற சாதிய வக்கிரம் கொப்பளிக்க, பன்றியைப் போல் எப்படி சாக்கடையில் புரண்டெழுகின்றது எனப் பார்ப்போம்.

 

'புலிகளின் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டபோது நடந்த சம்பவங்கள் அவரது நினைவுக்கு வந்து அவரை ஆத்திரமூட்டுகின்றன.

 

அவர் காலையில் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டபோது குழந்தையன் எதிரே வந்திருந்தான். புலிக்குறவனின் தந்தையின் காலத்திலிருந்து அவர்களுக்கு தலைமுடிவெட்டி வந்தவன் குழந்தையன். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவனது பிள்ளைகள் இருவர் புலிகளில் சேர்ந்ததைத் தொடர்ந்து குழந்தையன் தனது பரம்பரைத் தொழிலைக் கைவிட்டுவிட்டான். புலிக்குறவனும் ~சவக்குரல்| பத்திரிகையில் நிருபராக நுழைந்து கொழும்புக்குச் சென்றதனால் குழந்தையனை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அவருக்கு ஏற்படவில்லை. குழந்தையனின் பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததைத் தொடர்ந்து குழந்தையனுக்கு ஊரில் மரியாதை கூடியிருந்தது புலிக்குறவனுக்கு நீண்ட காலமாகவே எரிச்சலாக இருந்தது. புலிக்குறவன் பெரும்பாலும் கொழும்பிலேயே இருந்திருந்தாலும் அவரது மனைவியும் ஆறு பிள்ளைகளும் ஊரிலேயே இருந்தார்கள். மனைவி அவரிற்குக் கடிதங்கள் எழுதும்போது இடைக்கிடையே குழந்தையனைப் பற்றி கோள்சொல்லி அவரது எரிச்சலை அதிகரித்திருந்தாள். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான். பிக்அப்பிலை எல்லாம் போறான். பெடியள் பெரிய நடப்பிலை துவக்குகளோடை திரியிறாங்கள்" என அவரது மனைவி எழுதியிருந்த குற்றச்சாட்டுகளும் ஒவ்வொன்றாக அவரது நினைவுக்கு வந்தன." என்ன நினைவுகள். சாதிய நினைவுகள். எப்படி நாம் நமது காலுக்கு கீழ் அடக்கியாண்ட இந்த இழிந்த சாதிகள், நாசமறுத்த புலிகளால் இப்படி திரியுதுகள் என்ற சாதித் திமிரே கெக்கலிக்கின்றது.

 

புலியெதிர்ப்பின் சாதித் தடிப்பு. வரக் கூடாத இடத்தில், புலியெதிர்ப்பாக வக்கரித்து வருகின்றது. இதில் 'குழந்தையன்" என்பதே யாழ் மேலாதிக்கம் வலிந்து இழிந்த சாதி பிரிவுகளுக்கு வைக்கும் சாதியப் பெயர் தான். 'பரம்பரைத் தொழிலைக் கைவிட்டுவிட்ட" சாதிய அங்கலாய்ப்பு. ' குழந்தையனுக்கு ஊரில மரியாதை கூடியிருந்த" என்ற சாதிய எரிச்சல். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான்" என்ற அடக்குமுறை வெறிகொண்ட சாதியம் கொப்பளிக்கின்றது. கைகட்டி சேவகம் செய்த 'இழிந்த நாய்கள" இப்படி திமிரெடுத்து திரிவது கண்ட சாதியச் சினம், எரிச்சலாக வெட்காரமாக கொப்பளிக்கின்றது. யாழ் மேலாண்மை பயன்படுத்தும் உயர்தர வாழ்வை பறைசாற்றும் 'பிக்அப்பிலை எல்லாம் போறான்"கள் என்ற சாதிய திமிரெடுத்த தினவெடுப்பு புலம்பலாக வருகின்றது.

 

பாட்டாளி வர்க்க புரட்சி நடக்கும் போது அங்கு சாதி ஒழிப்பு நடக்கும். அப்போது இந்த மேல்தட்டு உயர்சாதிய வர்க்கம், இப்படித் தான் அதை கேவலப்படுத்தி பழைய தங்கள் சாதிய சொர்க்கத்தைக் கோரும். சாதியை பாதுகாக்கும் புலிக்கு எதிராகவே, புலியெதிர்ப்பு வக்கிரம் சாதியத்யையும் புலிக்கு எதிராக மாற்றி அதன் மேலாண்மையை தனது கையில் எடுக்கின்றது. இதை அழகாகவே குறித்த சாதியமான் எடுத்துள்ளார்.

 

இந்து மதம் ஒழுகிய, சாதியம் விதித்த குடிமைத் தொழில் செய்யும் குழந்தையன் பற்றிய பார்வை, புலியெதிர்ப்பின் வெட்டுமுகம் தான். ரீ.பீ.சீ திடீர் தயாரிப்பாக வந்து, ரீ.பீ.சீ யையே கைப்பற்றிய ஜெயதேவனின் வாழ்வு, சாதிய இந்துமதத்தின் புரோகிதக் கும்பலாக ஒரு சாதிய கோயிலைக் கட்டி, அங்கும் ஜனநாயக அரசியல் விபச்சாரம் செய்கின்றார். இந்துக் கோயில் ஆச்சாரங்கள் அனைத்தும் சாதிய அடிப்படையிலானதே. பிறப்பால் சாதியாக பிறந்த பார்ப்பான் தாழ்ந்த சாதிகளுக்கு வழிகாட்டுகின்றான். சாதியில் பார்ப்பானாக பிறந்தவன் எமக்கு சாதிக் கடவுளைக் காட்டிப் ப+சை செய்கின்றான். அந்த கடவுளின் சாதிய ஒழுங்கை பாதுகாக்கும் ஜெயதேவன் அன்ட் விவேகானந்தன் கும்பல் தான் புலியெதிர்ப்பின் தலைமைக் குருமாராக உள்ளனர்.

 

இந்துமதத்தின் ஜனநாயகம் எப்படிப்பட்டது. எனது ஒரு சில கட்டுரையில் இருந்து.

1.மனுவுக்கும், கௌடில்யர் காலத்துக்கும் இடையிலான ஆணாதிக்க வளர்ச்சியை ஒப்பிடல்

2.இந்து ஆணாதிக்க பார்ப்பனியத்தில், சாதி வடிவில் இறுகிய குடும்பத் தன்மைகள்

3.ஆணாதிக்க இந்து மதமும் பெண்ணும்

4.இந்து மதத்தில் ஆண் பெண்ணின் வக்கரித்த உறவுகள்

 

இவர்கள் தான் பாசிச புலியை ஒழித்து, சாதிய ஜனநாயகத்தை நிலைநாட்ட முனைகின்றனர். இந்தியா முதல் இலங்கை வரை சென்று மக்களின் எதிரிகளை தொட்டுக் கும்பிட்டு, பிரசாதம் வாங்கி உண்ணும் இந்த மக்கள் விரோத ஒட்டூண்ணிகளின் ஜனநாயகமோ புல்லரிக்க வைக்கின்றது. இந்த புல்லுரூவி வர்க்கம் பேசும் ஜனநாயகத்தை, தமிழ் மக்களின் முதுகில் சுமத்திதிவிடவே ஐயர்மார் முனைகின்றனர். ஐயா நீங்கள் போற்றும் இந்து மதமே ஜனநாயக விரோதமானது. அதை பாதுகாத்தபடி, ஜனநாயகத்தை மீட்பதாக தம்பட்டம் அடிப்பது எதற்காக? பிரிட்டிஸ் அரசின் துதிபாடிகளாக இருந்தபடி, அவர்களின் கால் தூசை நக்கிக் கொண்டு தமிழ் மக்களை மொட்டையடிக்கவே விரும்புகின்றனர்.

 

உங்கள் கும்பலே இப்படி ஊரறிய இருக்க, நீங்கள் சொல்லுகின்றீர்கள் நாங்கள் அப்படி வக்கரிப்பதில்லை என்கின்றீர்கள். 'குழந்தையன் ~பிக்அப்|பில் போவதை புலிக்குறவனின் மனைவி பார்த்து பொருமுவதாக கற்பிதம் செய்யப்பட்டதும், தேசிய தலைவரின் ஆயுத அரசியலால் சாதிய பிரச்சினை காலாவதியாகிப் போய்விடவில்லை என்று காட்டுவதற்கே. பேட்டி காணச் சென்றவரன்றி, பேட்டியளித்தவரும் பெரும்பாலான கேள்விகள் கேட்பவராக காட்டப்பட்டதும் ~புலி|குறவனை (புலிகளின் உறவுகளை) அம்பலப்படுத்துவதற்கே." ஆகாகா என்ன அருமையான வாதம். நிதர்சனம் டொட் கொம் உங்களிடம் கையேந்தி பிச்சை எடுக்க வேண்டும். சுத்துமாத்துக்கே பெயர் போனவர்களின் அரசியல் இருமை இங்கு வெளிப்படுகின்றது. கருத்துச் சுதந்திரம் பற்றி தேனீ ஆசிரியரின் நவீன கண்டுபிடிப்பு போல், இது உலகப் புகழ் பெற்றது.

 

மனைவியின் பெயரில் கற்பிக்கின்றாராம். என்ன உளறல். அப்படியாயின் இது நீங்கள் பாதுகாக்கும், உங்கள் யாழ் மேலாதிக்க சமூகத்தின் ஒரு உண்மையில்லையா? முரண்பாடாக எதற்கு உளறுகின்றீர்கள்? புலிகள் அமைப்பில் இது நீடிக்கின்றது என்றால், உங்கள் புலியெதிர்ப்பில் நீடிக்காதோ? எப்படி?

 

உண்மையில் புலிகளையும், புலித் தலைமையையும் அம்பலப்படுத்த முனைபவர் எதனுடாக பயணிக்கின்றார் என்றால், ஆதிக்க சாதிய மேலாண்மைக் கூடாகவே. புலித்தலைமையை அம்பலப்படுத்த இன்னுமொரு சமூக ஒடுக்குமுறை உதவுகின்றது என்ற அரசியல் உள்ளடக்கம் இங்கு மறுபடியும் வெட்டவெளிச்சமாகின்றது. இதேபோன்று தான் ஏகாதிபத்தியத்தின் கால்களின் கீழ் மண்டியிட்டு தவழுகின்றார்கள். இந்த புலியெதிர்ப்பு அரசியல் தான், ஜனநாயகம் என்ற பெயரில் சமூக முரண்பாடுகளை தீர்க்க மறுத்து எதிர்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றது. இதுவே புலியெதிர்ப்பு கும்பலுக்கும் எமக்குமான அடிப்படை அரசியல் முரண்பாடாகும். எமது விமர்சனம் இதற்குள் தான் அமைகின்றது. இதுவே புலியுடனான எமது முரண்பாடும் கூட. புலிகள் ஜனநாயகத்தை ஏன் மறுக்கின்றார்கள்? புலிகளுக்கும் மக்களுக்குமான முரண்பாடு என்ன? இதை அறிவுப+ர்வமாக கேட்டுத் தெளிவுறும் போது, எமது விமர்சனத்தின் உள்ளடக்கமே தெளிவாக சரியாக இருப்பதை உறுதி செய்யும். புலிகள் என் ஜனநாயகத்தை மறுக்கின்றனரோ அந்தக் காரணத்தை புலியெதிர்ப்பு கும்பல் மறுப்பதால் தான், ஜனநாயகத்தை திரித்து எதிர்புரட்சிகரமாக மாற்றி சாதியமாகவும் கொப்பளிக்கின்றது.

 

ஜனநாயகம் என்பது சமூக ஒடுக்குமுறை அனைத்தையும் களைவதை அடிப்படையாக கொண்டது. இதைக் களையாத ஜனநாயகம் என்பதில் உண்மைகள் எதுவும் இல்லை. இதைக் களையாத தேசியம் என்பதும் போலியானது. இவைகளை புலிகள் களைய மறுப்பதால் ஏற்படும் முரண்பாட்டை பாசிச நடத்தைகள் மூலம் கட்டுப்படுத்த முனைகின்றனர். இதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்கின்றது. இவர்களின் புலியெதிர்ப்பு அரசியல் வங்குரோத்தால், அரசியல் ரீதியாக தலைவரிடம் பேட்டி காணமுடியாது போகின்றது. புலியெதிர்ப்பு தான், இவர்களின் உச்சபட்ச அரசியல். இவர்கள் தலைவரிடம் சாதியை எப்படி ஒழிப்பீர்கள் என்று கேட்ட முடியாது. அதுவே உங்களிடமும் கிடையாது. ஆணாதிக்கத்தை எப்படி ஒழிப்பீர்கள் என்று கேட்க முடியாது. அதுவும் உங்களிடம் கிடையாது.

 

தேசியம் என்றால் என்ன என்று உங்களால் கேட்ட முடிந்த போதும், பதில் சொன்ன நீங்கள் அதற்கு மாற்று என்ன என்று கேட்டால் பதில் சொல்லமுடியாது. புலியெதிர்ப்பு அணி தேசியத்தை ஒழிக்க வேண்டும் என்கின்றது. நீங்கள் தேசியத்தை புரிந்த விதமே, அங்கு பதிலாக வருகின்றது. தேசியத்தை புலியாக, புலித்தலைவராக புரிந்து அதை ஒழிக்கவே கோருகின்றீர்கள். புலிகள் தேசியத்தை எப்படி புரிந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் எப்படி புரிந்துள்ளீர்களோ, அப்படியே அதை பதிலாகச் சொல்லி அதை ஒழிக்க கோருகின்றீர்கள். நல்ல வேடிக்கைதான். 'தேசியம் என்றால் அது நான் தான்!" என்ற பிரபாகரன் கூறுவதாக கூறுவது தேசியம் பற்றி உங்கள் நிலைப்பாடாகும். தலைவரைத் தாண்டி உங்களாலும் சிந்திக்க முடியாது என்ற உங்கள் இழிவை இந்த பேட்டி எடுத்துக் காட்டுகின்றது. புலிகளுக்கு மாற்றாக மக்கள் நலன் கொண்ட தேசியத்தை, புலியெதிர்ப்புக் கும்பலால் முன்வைக்க முடியாது. உண்மையில் புலித் தலைவர் நினைப்பதாக நீங்கள் கூறும் தேசியத்தைத் தாண்டி, உங்களால் மாற்றுத் தேசியத்தை வைக்கமுடியுமா? அதை முன்னிறுத்தி புலியெதிர்ப்பு அரசியல் செய்ய முடியுமா? முடியாது.?

 

பேரினவாதத்தை எதிர்த்து நீங்கள் அசையமறுப்பதன் உள்ளடக்கம் இது தான். வெள்ளாடு போல் ஒடியோடிக் கடிக்க மட்டுமே செய்வீர்கள். 25.06.2006 அன்று புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ யில் தேனீ ஆசிரியர், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வைக்க வேண்டும் என்று ஓடியோடிக் கடிக்கின்றார். எம்மிடம் இருந்து அக்கருத்தை பொறுக்கி மேயும் இவர்கள், அதை அரசிடம் முன்னிலைப்படுத்தி பிரதானப்படுத்தி போராட மறுக்கும் இவர்கள், தமிழ் மக்களுக்கு எப்படி வழிகாட்ட முனைகின்றனர். இலங்கை அரசே தமிழ் மக்களின் பிரதான முதன்மை எதிரி என்பதை மறுத்து, அன்றே ரீ.பீ.சீயில் முன்னைய கருத்துக்கு முரண்பாடாகவே புலம்ப முடிகின்றது. பெயர் குறிப்பிடாது எம்மைத் தாக்கும் அவர், இலங்கை அரசே பிரதான எதிரி என்றால் புலியின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சென்று வேலை செய்யாமல் இங்கு ஐரோப்பாவில் ஏன் இருக்கின்றனர் என்று பொருமுகின்றார். ஐயா புண்ணியவானே அரசு பிரதான எதிரியில்லை என்றால், நீங்கள் புலிக் கட்டுப்பாடு அல்லாத அரசு கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தேனீயை நடத்தலாமே. ஊருக்கு உபதேசம் எனக்கில்லை என்ற பழமொழி தான் இங்கு பொருந்துகின்றது.

 

இதே நாளில் டி.சே.தமிழனால் தமிழ்மணத்தில் 'இணையத்துப் பிசாசு எனக்கு இரண்டு சாத்துப் போட்ட கதை" என்ற தலைப்பில் (இக்கட்டுரை பின்னால் அகற்றப்பட்டுவிட்டது.) எழுதிய போது, அந்தப் பிசாசு (பிசாசு என்று என்னைக் கூறுகின்றார்) இலங்கையில் சென்று இதைச் செய்யலாமே என்று கூறுகின்றது. புலி, புலியெதிர்ப்பு என அனைவரும் ஒற்றுமையாக ஒன்றையே செய்ய முனைகின்றனர். விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ள வக்கற்று, அதை இலங்கையில் செய்யக் கோருகின்றனர். இதன் மூலம் விமர்சனம் செய்யக் கூடிய சூழலை மறுதலிக்கவே இவர்கள் மனதார விரும்புகின்றனர். இதன் மூலம் தமது பொய்மையையும், இருமையையும் விமர்சனமின்றி பாதுகாக்க விரும்புகின்றனர்.

 

இதேபோல் 25.06.2006 அன்று ரீ.பீ.சீயில் ஜெகநாதன் என்ற புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய தூசு துடைக்கும் கற்றுக்குட்டி அன்று புலம்பத்தவறவில்லை. தேடகம் பற்றி தமது அரசியல் வம்புத்தனத்தில், அன்றே தேடகம் புலிக்கு ஆதரவாக செயற்பட்டது என்று புலியெதிர்ப்பு கனடா குஞ்சு ஒன்று உளறியது. உடனே ஜெகநாதன் இங்கு தூண்டில் மனிதம் போன்றவையும் புலிக்கு ஆதரவாக செயற்பட்டது என்றார். தம் போன்ற புலியெதிர்ப்புக் கும்பலின் நடத்தைகளை முடக்கியவர்கள் என்றார். உண்மைதான். அன்று கொலைகார இயக்கங்களின் மக்கள் விரோதத்தை எதிர்த்து போராடியபோது பலர் கொல்லப்பட்ட நிலையில், அதில் தப்பியவர்களே தூண்டில் மற்றும் மனிதம் போன்றவற்றை ஆரம்பித்தவர்கள். அவர்களின் போராட்டத்தை கண்டு தான் ஜெகநாதன் இப்படிக் குமுறி வெடிக்கின்றார்.

 

இந்த சஞ்சிகைள் மீதான எமது அரசியல் விமர்சனங்கள் பல நாம் முன்பே எழுதியுள்ளோம். ஆனால் அவர்கள் மனிதத்தை நேசித்தவர்கள். மனிதத்தை முன்னிலைப்படுத்தி பின்னால் படிப்படியாக சீரழிந்தவர்கள். மனிதம் பற்றி அவர்களின் நிலையையோ, தேடகத்தை கொச்சைப் படுத்துவதையும் விபச்சாரம் செய்வதையோ நாம் அனுமதிக்க முடியாது. கடந்தகால தேடகம் பற்றிய தேனீயின் அவதூற்றில், நிதர்சனத்துக்கு நிகராக வக்கரித்து புலியெதிர்ப்புக் கும்பல் காவடியெடுப்பது அம்பலமாகின்றது. அதை சுகன் தெளிவாகவே தனது பதிவொன்றில் அம்பலம் செய்கின்றார். 'கனடா தேடகத்தில் நடந்ததென்ன? என்றொரு கட்டுரை தேனீயில் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு வரி வருகிறது... 'தண்ணி ப்புளு பிலிம் சரக்கு ...மற்றவன் பெண்டாட்டி இவையெல்லாம் தேடகத்திற்கு" என்று வரும். இவை கனடாவில் மாற்றுக் கருத்துக்காகப் போராடிய உழைத்த தோழர்களின் முயற்சிகளை கொச்சைப்படுத்தல் இல்லையா? அவர்களின் ஆரம்பகால நடவடிக்கைகளின் மேல் மலத்தை அள்ளி வீசவில்லையா? நிதர்சனம் சேதுவிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? தேடகம் இயங்கி வந்த மண்டபத்துக்கு வாடகை செலுத்துவதற்காகவே வேலைக்குப் போய் வந்து சம்பளப் பணத்தில் வாடகையை நீண்ட காலமாகவே செலுத்தி வந்த தோழர் குமரனை தேனீ கட்டுரையாளர் அறியமாட்டாரா? இப்படியான நேரங்களில் யாரைக் கொண்டு போய் யாரிடம் விற்கிறோம் என்ற புரிதல் தேவை. பக்குவம் தேவை. நமது தோழர்கள் அவர்கள்."

 

சுகன் சுட்டிக் காட்டியது போல் நீங்கள் செய்யும் அரசியல் அவதூறுகள் எதுவும், மக்களின் உண்மைக்காக அவர்களின் வாழ்வுக்காக போராடிய வரலாற்றுக்கு முன்னால் ஒருநாளும் எடுபடாது. இன்று தேடகத்தின் நிலை பற்றி, இன்னமும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடந்தகாலத்தை கொச்சைப்படுத்தும் இவர்கள் யார்? முன்பு உண்மையாக மக்களின் ஜனநாயகத்துக்காக போரடியவர்களை கொன்ற போது, அதற்கு பக்க துணையாக நின்றவர்களும் அதை ஆதரித்தவர்களும் தான், இன்று கணிசமான புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளாக உள்ளனர். புலியெதிர்ப்பின் பின்னுள்ள பலர் அப்பாவிகள். அவர்களை அமர்த்தி வைத்து புலியெதிர்ப்புக் கும்பல் தீத்த முனைகின்றது. மாற்றுக் கருத்துகளை அவர்கள் படிக்காத வண்ணம் தீவிரமான அக்கறையுடன் அதை ஓடுக்குகின்றனர். மக்கள் கருத்தை அவர்கள் தெரிந்து கொள்ளும் போது, இந்த அப்பாவிகள் உங்களைவிட்டே விலகிவிடுவர்.

 

இந்த நிலையில் நீங்கள் உளறுவதும், புலம்பவதும் நடுச் சந்தியில் நிர்வாணமாகின்றது. இப்படி நீங்கள் இருக்கக் கூடியதாகவே, புலிகளின் தலைவர் உளறுவதாக காட்டுவதன் அர்த்தம் என்ன? உண்மையில் நீங்கள் அரசியலற்ற வெற்றிடத்தில் உளறுவதைக் காட்டுகின்றது. நீங்கள் போற்றும் பிரிட்டிஸ் பிரதமர் பிளையரும், அமெரிக்கா ஜனாதிபதி புஸ்சும் கூடத்தான் உளறுகின்றனர். அல்லது நீங்கள் போற்றும் ஜே.வி.பி, இன்றைய ஜனாதிபதி ராஜபக்சாவும் கூடத்தான் மக்களை ஏமாற்றி உளறுகின்றார்கள். பயங்கரவாதம் பற்றி நீங்களும் அவர்களும் சேர்ந்து உளறவில்லையா? பயங்கரவாதத்தையே அடிப்படையாகக் கொண்ட இந்த ஜனநாயகம், அதைக் கொண்டு மக்களையே அடக்கியாளும் இந்த பயங்கரவாத அமைப்பை பூசி மெழுகி, பயங்கரவாதம் பற்றி கூட்டாக அரை மக்குகளாகவே உளறுகின்றீர்களே இது உங்களுக்கு தெரிவதில்லையா.

 

உதாரணமாக 22.06.2006 புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ கும்பல் நடத்திய புலியெதிர்ப்பு அரசியல் விவாதத்தில் கார்த்திக் (அவரை நான் சொந்தப் பெயரிலும் அறிவேன்) வைத்த, யாழ் மேலாதிக்க சாதிய அமைப்பு பற்றிய கருத்தை, அடுத்து வந்த அருள்நேசன் (பெயர் சரி என்று நம்புகின்றேன் தவறு என்றால் மன்னிக்கவும்) அதற்கு எதிராக கதைத்து புலியெதிர்ப்பை சரியாக வரையறுத்துக் காட்ட முனைந்தார். இடதுசாரி வேஷம் போட்டு அரசியல் ஆய்வு நடத்தும் சிவலிங்கம், அதைத் திருத்தி தமது சொந்த அரசியல் மோசடியை நியாயப்படுத்த முனைந்தார். அடுத்து வந்தவரும் அதையே செய்ய முனைந்தார். கோமாளித்தனமாக கூத்தாடியாக தம்மை நியாயப்படுத்தி உலகத்தையே ஏமாற்ற முனைகின்றனர். கோட்பாடும் கொள்கையுமற்ற புலியெதிர்ப்புக் கோட்பாடு, உண்மையில் அருள்நேசனால் வைக்கப்பட்ட உயர்சாதி யாழ் மேலாதிக்க கருத்துத் தளம் தான். அதாவது மேலாதிக்கம் பெற்று இருக்கின்ற சமூக போக்குகு தான் புலியெதிர்ப்பின் மாற்றீடு என்கின்றார். புலிகளின் தலைவர் உளறுகின்றாரோ இல்லையோ, புலியெதிர்புக் கும்பல் ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற உளறுகின்றது. தமக்கு என்று எந்த கொள்கையுமற்ற கூலிக் கும்பல் தான், சாதி ஒழிப்பும் புலியெதிர்ப்பின் ஒரு அங்கம் என்று நிலைமைக்கு சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப நடித்துக்காட்ட முனைகின்றனர்.

 

புலிகள் என்ற இயக்கம் இயல்பான யாழ் மேலாதிக்க சாதிய இயக்கம் தான். இந்த புலியை ஒழிக்க விரும்பும் ஏகாதிபத்திய கைக்கூலிகள். ஏகாதிபத்தியத்துக்காக மாடாய் விசுவாசமாக வாலாட்டி உழைக்கும் இவர்கள், இயல்பான ஆதிக்கம் பெற்ற யாழ் மேலாதிக்கத்தையே தாங்கி நிற்கின்றனர். இதை மறுத்து யாரும் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது. புலித் தலைவரை பேட்டி கண்டு கிண்டலடிக்க விரும்பிய புலியெதிர்ப்பு நபர், இந்த சாதிய மேலாதிக்கத்தை பயன்படுத்துவதில் கூட விதிவிலக்காக இருக்கவில்லை. இங்கு குழந்தையன் தமிழ்செல்வனின் தந்தையாக காட்டப்படுகின்றது. இந்தச் சாதிய வக்கிரம், புலி எதிர்ப்பு அரசியலை பலப்படுத்துகின்றது. சாதியத்தின் அடிப்படையாக கிராமப்புற நிலப்பிரத்துவ அடிமை ஒழுங்கு குலைவதைக் கண்டு, பேட்டி கண்டவரும் (கட்டுரையாளர் தான் அவர்) அவரின் மனைவியும் குமுறுவது படுபிற்போக்கானது. கிராமப்புற சாதிய ஒழுங்குகள் சிதைந்து போவது இங்கு முற்போக்கானது. அதை இந்த பேட்டி ஊடாகவும் மீண்டும் புலியெதிர்ப்பு மறுதலிக்கின்றது. ஒடுக்கபட்ட சாதி நபர்கள் ஆயுதம் ஏந்தியதால், அவர்களின் மதிப்பு ஊரில் ('குழந்தையனுக்கு ஊரில் மரியாதை") உயருகின்றது என்ற கருத்தும், அதற்கு எதிராக இதை எழுத்தியவர்pன் எரிச்சலும் ('புலிக்குறவனுக்கு நீண்ட காலமாகவே எரிச்சலாக இருந்தது") அப்பட்டமாக மனைவியின் (இங்கு ஒரு பெண்ணின் பெயரால்) பெயரால் (' குழந்தையனைப்பற்றி கோள்சொல்லி அவரது எரிச்சலை அதிகரித்திருந்தாள்") கூறி, அதை சாதியத்தின் மொழியில் கூறுவது அம்பலமாகின்றது. சாதிய தடிப்பின் இறுமாப்பை, வளைந்து கொடுக்க மறுக்கும் சாதியத் திமிரை, புலியெதிர்ப்பு அடிப்படையாக கொண்டதை மீண்டும் இது உறுதி செய்து காட்டுகின்றது.

 

பார்ப்பன இந்து சாதியக் கோயிலை வைத்துள்ள புலியெதிர்ப்பு தலைமைப் ப+சாரியான ஜெயதேவனின் அண்ணன் பயல் கூட, இப்படித் தான் புலியை ஆய்வு செய்து விமர்சித்தார். புலியின் இன்றைய நிலைக்கு இந்த ஆதிக்க சாதி வெறியன் இயக்கத்தில் உள்ள இழிந்த சாதிகளான பள்ளுப்பறைகளும், அம்பட்டன் போன்றோருமே காரணம் என்கின்றார். குறித்த தேனீ உயர்சாதிய நிருபர், பரம்பரைத் தொழிலை கைவிட்டமையை எரிச்சலுடன் நோக்குவதும், குமைவதன் மூலம், புலிகள் அம்பட்டரின் குடிமைத் தொழிலை வீடுதோறும் சென்று செய்வதை தடை செய்ததை எதிர்த்து இது வெளிவருகின்றது. இங்கு புலிகள் ஏன் செய்தார்கள் என்பதைவிடுத்து, அவர்கள் மீண்டும் வெள்ளாள வீடுகள் தோறும் சென்று பரம்பரைத் தொழிலை செய்ய வேண்டும் என்று புலிக்கு எதிராக புலியெதிர்ப்பு படுபிற்போக்காக தன்னை வெளிப்படுத்தி அரசியல் செய்கின்றது. புலியெதிர்ப்பு விரும்புவது என்ன. அதை அவர்கள் சொல்லிவிடுகின்றனர். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான். பிக்அப்பிலை எல்லாம் போறான்." இதை கண்டு புலியெதிர்ப்புக் குஞ்சு குமுறுகின்றது. இந்த புலிக்கு பதிலாக புலியெதிர்ப்பு எதைக் கோருகின்றது. ரோட்டில் கண்டால் அடிமை குடிமைகளாக கைகட்டி செல்ல வேண்டும். காலில் செருப்பு அணியாது அல்லது தம்மைக் கண்டால் அணிந்ததை கையில் தூக்கிச் செல்ல வேண்டும் என்ற புலியெதிர்ப்புக் கொக்கரிப்பு இதில் கொஞ்சிவிளையாடுகின்றது.

 

இதைத்தான் 'இப்போது குழந்தையனை கண்டதும் அவருக்கு எரிச்சலே மூண்டது. ~அம்பட்டன் குறுக்கை வந்திட்டான். இனி போற விசயம் அவ்வளவுதான்| என மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், குழந்தையனின் பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருப்பதால் அவர் வாய் திறக்கவில்லை. ~இந்த மூதேவியின்ரை முகத்திலை முழிக்கப்படாது| என நினைத்துக் கொண்டு குழந்தையனைக் கடந்து போக சையிக்கிளில் ஏறி பெடலில் காலை வைத்து அழுத்தினார்." சாதியம் இப்படி புலியெதிர்ப்பாக முகிழ்கின்றது. இவர்தான் புலியில் குழந்தைப் போராளி பற்றி ஏகாதிபத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் நினைக்கின்றார். தலைவரின் தேசிய சிந்தனை பற்றியும் சிந்திக்க முடிகின்றது. இங்கு அவரின் சிந்தனை என்பது வாழ்வும் சாதியம். தேசியம் பற்றியது புலியெதிர்ப்புக் கும்பலின் கோட்பாடாகும்.

 

இதனால் தான் '..வரும் வழி முழுவதும் குழந்தையனையும் அவனது சமூகத்தையும் மனதுக்குள் திட்டிக்கொண்டே வந்தார். 'அப்பாடி எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சிரோனும்" என நல்லூர் முருகனை மனதுக்குள் வேண்டிக் கொண்டார்." உயர்சாதிய கோயில் துணை நிற்க, இழிந்த சாதிகளை திட்டி தீர்த்தபடி கும்பிடுகிறார். ஏன் புலியெதிர்ப்பை அரங்கேற்ற தனக்கு துணையாக நல்லூர் சாதிக் கடவுள் உதவ வேண்டும் என்று இழிந்த சாதிகளைத் திட்டி போற வழியில் நல்வழிகாட்ட உயர்சாதிக் கடவுளை வேண்டிக் கொள்கின்றார். சாதி குறைந்த 'மூதேவியின்ரை முகத்திலை" முழித்திட்டனே கடவுளே, '~அம்பட்டன் குறுக்கை வந்திட்டான். இனி போற விசயம் அவ்வளவுதான்" என்று உயர் சாதி புலியெதிர்ப்பு பேய் தன்னனையும் தனது புலியெதிர்ப்புக் கும்பலையும் உலகுக்கு மறுபடியும் ஒருமுறை நிறுவிக்காட்டியுள்ளது.

பி.இரயாகரன்
28.06.2006

Last Updated on Friday, 18 April 2008 20:33